ரத்த மகுடம்-41



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

யவன நாட்டுப் புரவிகள் எப்படி நாவாய்களில் ஏறும்போதும் இறங்கும்போதும் தங்கள் பாதங்களையும் உடலையும் கச்சிதமாக குறுக்கிக் கொள்ளுமோ அப்படித்தான் சிவகாமியும் கயிற்றைப் பிடித்தபடி சிறைக்குள் இறங்கினாள்.சந்தேகமேயில்லாமல் அவள் அசுவ சாஸ்திரிதான்!
சட்டென்று மண்டியிட்டு தன் சிரசை அந்தத் துவாரத்தின் மீது பதித்து சுரங்கத்துக்குள் ஒளி வருவதைத் தடுத்தான். இதன்மூலம் சிறைக்குள் நடப்பதை அவனால் கவனிக்கவும் முடிந்தது; சிவகாமியை மேலிருந்து அணு அணுவாக ரசிக்கவும் முடிந்தது.

கற்பாறையின் மேல் அமர்ந்திருந்த தன் தந்தையின் சிந்தனையோட்டம் பல்வேறு திசைகளிலும் அலைந்துகொண்டிருப்பதை கரிகாலனால் உணர முடிந்தது. இல்லையெனில் இந்நேரம் சிறைக்கு மேல் துவாரம் தோன்றியதையும், ஒரு பெண் - மருமகள் என்று சொல்ல வேண்டுமோ?! - கயிற்றைப் பிடித்தபடி உள்ளே இறங்குவதையும் பார்த்திருப்பாரே!

தந்தைக்கு எந்தவித சமிக்ஞையையும் கரிகாலன் தரவில்லை. சிவகாமி என்ன செய்யப் போகிறாள் என்பதிலேயே அவனது ஆர்வம் குவிந்தது. தேவையெனில் சுரங்கத்தில் குதிக்கத் தயாராக இருந்தான்.தன் கால் விரல்களைக் கொண்டு கயிற்றை இறுகப் பற்றியபடியும் அதற்கு ஏற்ப தன் கரங்களை உயர்த்தி மேல்நோக்கி அதே கயிற்றைப் பிடித்தபடியும் நிதானமாக சிவகாமி இறங்கினாள். வலது கால் கீழேயும் இடது கால் சற்றே மடிந்து அதன் மேலும் பதிந்திருந்தது. கரங்கள் இப்படி மேல் கீழ் என்ற அளவுகளைத் தவிர்த்துவிட்டு இணைந்த பிடிமானமாக கயிற்றைப் பற்றி இருந்தன.

இதனால் இறங்கும்போது அக்கயிறானது அவளது இரு ஸ்தனங்களுக்கும் நடுவே பதிந்து ஒவ்வொன்றின் கூர்மையையும் வெளிச்சமிட்டுக் காட்டியது! இதனால் நகர்ந்த கச்சையின் மேற்புறம் பிறைகளின் அளவை குறைத்தும் அதிகரித்தும் காட்டியது!கயிற்றில் கால் விரல்களை ஊன்றியிருந்த விதத்தினால் இரு பின்னெழுச்சிகளில் ஒன்று தாழ்ந்தும் மற்றொன்று உயர்ந்தும் முன்பக்கம் எந்தளவுக்கு கயிறானது அழுத்துகிறது என்பதை கரிகாலனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தன!

‘பாவம் வலிக்கும்... பிறகு அந்த இடங்களைத் தடவி ஒத்தடம் கொடுக்க வேண்டும்!’ தனக்குள் கரிகாலன் முடிவு செய்யவும் சிவகாமியின் பாதங்கள் தரையைத் தொடவும் சரியாக இருந்தது.இத்தனைக்கும் அவள் குதிக்கவில்லை; வெளியே காவலுக்கு நிற்கும் வீரர்கள் எச்சரிக்கை அடையும்படி ஓசையும் எழுப்பவில்லை.என்றாலும் சிந்தனை வசப்பட்டு கற்பாறையின் மீது அமர்ந்திருந்த கரிகாலனின் தந்தைக்கு அவள் பாதம் பதிந்த விதத்தில் கிளம்பிய சிறு ஒலியே சட்டென சுதாரிக்கப் போதுமானதாக இருந்தது.

சட்டென தன் தலையை உயர்த்தினார்.இனம்புரியாத நிம்மதியை இச்செய்கை கரிகாலனுக்கு அளித்தது. ஆபத்தான நிலையிலும் அப்படியொன்றும் அவர் தன்வசத்தை இழக்கவில்லை... எச்சரிக்கையுடனேயே இருக்கிறார் என்பதை உணர்ந்ததால் பாரம் நீங்கிய மனநிலையுடன் அடுத்து நடப்பதை கவனிக்கலானான்.கற்பாறையிலிருந்து எழுந்த அவன் தந்தை தன் கரங்களை உயர்த்தி சோம்பல் முறித்தார்!

மேலிருந்து கவனித்துக் கொண்டிருந்த கரிகாலன் மட்டுமல்ல... சிறைக்குள் இறங்கியிருந்த சிவகாமியும் இதைக் கண்டு ஆச்சர்யப்பட்டாள்.
கவனித்தும் கவனிக்காததுபோல் அவள் பக்கம் திரும்பிய கரிகாலனின் தந்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை அவளை ஆராய்ந்தார்.
இனம் புரியாத உணர்வு அவளுக்குள் ஊடுருவியது. தன்னையும் அறியாமல் குனிந்து அவரது பாதத்தைத் தொட்டு வணங்கினாள்.
‘‘எழுந்திரு மருமகளே!’’

கணீரென்று ஒலித்த அவரது குரல் சிவகாமியை மட்டுமல்ல, மேலிருந்து நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கரிகாலனையும் அதிர்ச்சியடைய வைத்தது.‘‘என்ன... தாங்கள்...’’ வார்த்தைகள் வராமல் சிவகாமி தடுமாறினாள்.புன்னகையுடன் நெருங்கி அவள் தலையைக் கோதினார். ‘‘தனக்கு ஏற்ற அசுவத்தைத்தான் என் மகன் தேர்ந்தெடுத்திருக்கிறான்!’’‘‘நான்... நான்...’’‘‘சிவகாமி! எங்கள் வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரிய பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மரின் வளர்ப்பு மகள்! ரகசியமாக இருந்தவள் இப்போதுதான் வெளிப்பட்டிருக்கிறாய்!’’

அவர் சொல்லச் சொல்ல சிவகாமியின் நயனங்கள் அகன்று விரிந்தன. ‘‘அப்படியொன்றும் நான் முக்கியமானவள் அல்ல. அப்படியிருந்தும் என்னை நீங்கள் அறிந்து வைத்திருப்பது நான் செய்த பாக்கியம்...’’‘‘பாக்கியசாலி நாங்கள்தான். எங்களைப் போலவே நீயும் அல்லவா பல்லவ நாட்டுக்காக உயிரைப் பணயம் வைத்திருக்கிறாய்..! அப்படிப்பட்ட உன்னைக் குறித்து நாங்கள் எப்படி அறியாமல் இருக்க முடியும்!’’ கேட்டதுமே சிவகாமியின் கண்கள் கலங்கிவிட்டன. அவர் காணக் கூடாது என்பதற்காக அவசரமாகத் தலைகுனிந்தாள்.

அவளது அசைவில் இருந்தே எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவர் அவள் வதனத்தை உயர்த்தினார்.கண்களுக்குள் ததும்பிக் கொண்டிருந்த நீர், கரை உடைத்து அவள் கன்னத்தில் வழிந்தது.‘‘அழாதே சிவகாமி! என் மகன் உன்னைப் புரிந்துகொள்வான்!’’எவ்வளவு அடக்கியும் சிவகாமியால் பீறிட்ட கேவலை அடக்க முடியவில்லை.சட்டென்று அவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டார்.

தாய்க் கோழியிடம் அடைக்கலம் தேடும் குஞ்சைப் போல் அவர் மார்பில் ஒன்றினாள்.மேலிருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கரிகாலன் இனம் புரியாத உணர்வில் தத்தளித்தான். அதை அதிகப்படுத்துவது போலவே அவன் தந்தையின் பேச்சு அடுத்தடுத்து அமைந்தது.  ‘‘இப்படியொரு மகள் பல்லவ மன்னருக்கு இருப்பதை முன்பே கரிகாலனிடம் தெரியப்படுத்தி இருக்க வேண்டும்.

சமயம் வரும்போது சொல்லலாம் என நினைத்து காலம் கடத்தியது தவறாகி விட்டது. அதனால்தான் எதிர்பாராத வகையில் நீங்கள் இருவரும் மல்லைக் கடற்கரையில் சந்தித்து அதன்பிறகு வனத்துக்குப் பயணப்பட்டு அங்கிருந்து காஞ்சிக்கு வந்து சேர்ந்து... அதற்குள் இருவருக்கும் இடையில் முரண்பாடுகளும் அன்பும் அதிகரித்து...’’

வாக்கியத்தை அவர் முடிக்கும் முன்பே பிரமை தட்டிய முகத்துடன் சிவகாமி விலகினாள். ‘‘தங்களுக்கு எல்லாம் தெரியுமா..?’’
‘‘ஏன்... சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் மட்டும்தான் ஒற்றர்கள் வழியே அனைத்தையும் அறிவார் என்று நினைத்தாயா..?’’
‘‘அப்படியில்லை...’’

‘‘மறைந்திருக்கும் பல்லவ இளவலைக் காண என் மகன் உன்னுடன் சென்றிருக்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டபிறகும் என்னால் எப்படி சும்மா இருக்கமுடியும்? கரிகாலனின் உயிரை விட பல்லவ இளவரசர் ராஜசிம்மர் எங்களுக்கு முக்கியமல்லவா..? அப்படியிருக்க உங்கள் நடமாட்டத்தை கண்காணிக்காமலா இருப்போம்..? சோழர்கள் இன்று வலு குன்றியிருக்கலாம். ஆனாலும் தன் குணத்தை புலி இழப்பதில்லை சிவகாமி!’’
அவள் உடல் சிலிர்த்தது. ‘‘தங்களைப் போன்றவர்கள் தந்தைக்கு அணுக்கமாக இருப்பது நாங்கள் செய்த புண்ணியம்...’’

‘‘இல்லையம்மா... புண்ணியம் செய்திருப்பது தமிழக மக்கள்தான். இல்லாவிட்டால் பரமேஸ்வரவர்மர் போன்ற சிவனேச செல்வர் நமக்கு மன்னராகக் கிடைத்திருப்பாரா...’’ சொன்ன கரிகாலனின் தந்தை அவளது முகத்தை உயர்த்தினார். ‘‘மேலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறானா..?’’
சிவகாமிக்குத் தூக்கி வாரிப்போட்டது. ‘‘யா...ர்..?’’‘‘என் மகன்தான்!’’‘‘அவர்... அவர்...’’‘‘சுரங்கத்திலிருந்து நம்மிருவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்!’’‘‘அருகில் இருந்து பார்த்ததுபோல் எப்படி எல்லாவற்றையும் சொல்கிறீர்கள்..?’’

‘‘கரிகாலன் என் மகனம்மா! அவனைத் தூக்கி வளர்த்தவன். யுத்தக் கலைகளைக் கற்றுக் கொடுத்தவன். நான் சிறைப்பட்டதை அறிந்தபிறகும் என்னை மீட்காமல் அவனால் எப்படியிருக்க முடியும்? காபாலிகன் சொன்னதுமே காஞ்சிக்கு வந்தவன், ராமபுண்ய வல்லபரின் கட்டுப்பாட்டில் தன் பெரிய தாயார் இருப்பதைக் கண்டபிறகு ஆபத்தின் அளவைப் புரிந்துகொண்டிருப்பான். என்னை மீட்கவும் முயற்சி எடுப்பான் என்று தெரியும்...’’
‘‘அப்படியானால் எங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்களா..?’’

‘‘ஆமாம்! சுரங்கத்தின் வழியே மேலிருந்து கயிறு வழியாக இறங்குவீர்கள் என்று தெரியும். என்ன... கரிகாலன் இறங்குவான் என்று நினைத்தேன்... மாறாக என் மருமகள் வந்து நிற்கிறாள்!’’‘‘தெரிந்தும் ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தீர்கள்..?’’
‘‘மேலிருந்து உன்னை அவன் ரசித்துக் கொண்டிருக்கிறான்!
நான் ஏன் இடையூறாக இருக்க வேண்டும்!’’

சிவகாமியின் கன்னங்கள் சிவந்தன! புத்திக்கூர்மையும் விஷமத்தனமும் கரிகாலனுக்கு எங்கிருந்து வந்தன என்பது தெளிவாகப் புரிந்தது! ‘‘அ..வ..ரை... அ...ழை..க்..கி..றே..ன்!’’ முணுமுணுத்தபடி தன் தலையை உயர்த்த முற்பட்டாள்.அதற்குள் தடதடவென காலடி ஓசைகள் கேட்டன.

உடலின் அணுக்கள் எல்லாம் விழிப்படைய எச்சரிக்கையுடன் நின்றாள்.உருவிய வாட்களுடன் சாளுக்கிய வீரர்கள் சிறைக்குள் நுழைந்தார்கள். தன் கண்களால் அவர்களை அளவெடுத்தாள். வந்திருப்பவர்கள் மூவர்தான். ஆனால், சிறைக்கு வெளியே பத்து பேராவது இருப்பார்கள்!மேலிருந்து கரிகாலன் கவனித்துக் கொண்டிருக்கிறான்... தேவைப்படும்போது நிச்சயம் உதவுவான்... இந்த உணர்வே அவளுக்கு அசாத்திய பலத்தை அளித்தது.

தவிர, காபாலிகனுடன் வந்த பல்லவ வீரர்கள் வேறு சிறைச்சாலையில் இருக்கிறார்கள்... அப்படித்தானே காபாலிகன் சொன்னான்..? ஆக, சாளுக்கியர்களை சமாளிப்பதும் கரிகாலனின் தந்தையை மீட்பதும் எளிதுதான்... என்ன, கொஞ்சம் போக்குக் காட்ட வேண்டும்...
தன் வலது காலை உயர்த்தி தரையில் அரைவட்டம் கிழித்தவள், சட்டென கரிகாலனின் தந்தையைத் தன் பக்கம் இழுத்தாள். இடுப்பிலிருந்து குறுவாளை எடுத்து அவர் கழுத்தில் வைத்தாள்.

‘‘யாரும் அசையாதீர்கள்... பிறகு எந்தக் காரணத்துக்காக இவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறீர்களோ... அது நடக்காமலேயே போய்விடும்..!’’சிவகாமி என்ன செய்ய நினைக்கிறாள் என்பதை ஊகித்த கரிகாலன், செயலில் இறங்க முடிவு செய்து சிறைக்குள் இறங்க முற்பட்டான்.

ஆனால், முடியவில்லை.காரணம், ‘‘தவறு செய்துவிட்டாயே கரிகாலா!’’ என அவனுக்குப் பின்னால் சுரங்கத்திலிருந்து ஒலித்த குரல்தான்.அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர், சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்