செயற்கை சுவாசத்துக்கு எளிய கருவி… காப்பாற்றப்படும் நிமோனியா சிசுக்கள்!



பங்களாதேஷ் டாக்டரின் சாதனை!

ஒரு குட்டி ஃபிளாஷ்பேக்கோடு இந்தக் கட்டுரையைத் தொடங்குவோம். அது 1996ம் ஆண்டு. பங்களாதேஷின் ஷில்ஹெட் மாநகரத்தின் புகழ் பெற்ற ஒஸ்மானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்னிரவு நேரம்.

அன்று காலைதான் இளம் மருத்துவராகப் பொறுப்பேற்ற முகமது ஜொபையர் சிஸ்டியின் மனம் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நான்கு பச்சிளம் சிசுக்கள் உயிருக்குப் போராடினால் எந்த டாக்டருக்குத்தான் நிம்மதி இருக்கும்?

டாக்டர் சிஸ்டிக்கு இக்குழந்தைகளுக்கு என்ன சிகிச்சை தரவேண்டும் என்று தெரியும். செயற்கை சுவாசம்தான் இதற்கு ஒரே தீர்வு.

சாதாரண ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ஃபேஸ்மாஸ்க் போதாது. அது மற்ற நோயாளிகளுக்குத்தான் உதவும். நிமோனியா போன்ற கடுமையான நுரையீரல் தொற்றால் சுவாசிக்கவே அவதிப்படுபவர்களுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சைதான் சிறந்த தீர்வு.

ஆனால், ஓர் அரசு மருத்துவமனைக்கு அதுவெல்லாம் எட்டாக் கனி. ஒரு வெண்டிலேட்டர் இயந்திரம் சுமார் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். எளிய மருத்துவமனைகளால் இவ்வளவு முதலீடு செய்து வாங்க இயலாது. எனவே, எல்லோருக்கும் சாதாரண மாஸ்க் சிகிச்சைதான்.

அந்தத் துயரமான இரவில் அதிர்ஷ்டமற்ற அந்த நான்கு பிஞ்சுகளும் இளம் மருத்துவர் சிஸ்டியின் கண் முன்பாகவே பரிதாபமாக இறந்தன.

இந்தச் சம்பவம் சிஸ்டியின் மனதை உலுக்கிவிட்டது. ‘நமக்கு என்ன சிகிச்சை தரவேண்டும் என்பது தெரியும். மறுபுறமோ அந்த சிகிச்சைக்காகத் தவித்துக்கொண்டிருக்கின்றன இளம் பிஞ்சுகள். ஆனால், தேவையான உபகரணமோ எட்டாத உயரத்தில் இருக்கிறது.

வெறும் பணம்தான் விலைமதிப்பற்ற மானுட உயிர்களைத் தீர்மானிக்கிறதா? அப்படியானால் நான் மருத்துவர் என்பதற்கு என்ன பொருள்? இந்தக் குழந்தைகளுக்காக என்னால் எதுவுமே செய்ய முடியாவிட்டால் நான் குழந்தை நல மருத்துவர் எனச் சொல்லிக்கொள்வதே அவமானம் அல்லவா?’ பலவாறாக சிந்தித்துக்கொண்டிருந்தார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனைக் கல்லூரியில் தனது எம்டி படிப்பை முடித்த சிஸ்டி அங்குதான் இந்த வெண்டிலேட்டர் கருவி எப்படி இயங்குகிறது என்பதையும் நன்கு புரிந்துகொண்டார். மேற்படிப்பு முடிந்து
பங்களாதேஷ் திரும்பியதும் முதல் வேலையாக வெண்டிலேட்டர் கருவியின் உதவி இல்லாமலேயே எளிய முறையில் நிமோனியா குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி என்கிற ஆய்வில் இறங்கினார்.

இரவு பகல் பாராத கடுமையான ஆய்வு ஒருபுறம், வழக்கமான மருத்துவ சேவை மறுபுறம் எனத் தொடர்ந்த நாட்களுக்குப் பிறகு ஒரு வித்தியாசமான கருவியை உருவாக்கினார் சிஸ்டி. இதை CPAP Ventilator என்கிறார்கள். அதாவது, Continuous Positive Air Pressure எனும் சீரான காற்றழுத்தத் தொழில்நுட்பம். சாதாரண ஷாம்பு பாட்டிலைக் கொண்டு இந்தக் கருவியை வடிவமைத்திருக்கிறார் டாக்டர் சிஸ்டி. இந்தக் கருவியின் விலை எவ்வளவு தெரியுமா? லட்சங்கள் அல்ல. வெறும் அறுபது ரூபாய்.

ஆமாம்! இதன்பின் இயங்குவது சாதாரண இயற்பியல் தொழில்நுட்பம்தான். நிமோனியாவால் மூச்சுவிட சிரமப்படும் குழந்தைகளின் முகத்தில் சுவாசக் குழாய் பொருத்தப்படுகிறது. மூக்கின் ஒரு துளையிலிருந்து வெளியேறும் காற்று உள்ள குழாயின் முனை நீர் நிரம்பிய சாதாரண பிளாஸ்டிக் பாட்டிலில் பொருத்தப்படுகிறது. வெளியேறும் காற்று நீர் நிறைந்த பாட்டிலில் குமிழிகளை ஏற்படுத்த, அங்கு காற்றழுத்தம் மாறுபட்டு குழந்தைக்குத் தேவையான காற்றை ஆக்சிஜன் சிலிண்டர் இன்னொரு நாசி மூலம் தருகிறது.

இதுதான் அந்தத் தொழில்நுட்பம். சிஸ்டியின் இந்த சாதனை மகத்தானது. பல லட்சம் ரூபாய்கள் செலவழித்து வெண்டிலேட்டர் கருவிகளை வாங்க முடியாத எளிய மருத்துவமனைகளுக்கு இந்தக் கருவி பெரும் வரப்பிரசாதம் என்கிறார்கள். இன்று, பங்களாதேஷின் மருத்துவமனைகளில் நிமோனியாவால் ஏற்படும் குழந்தைகளின் மரணம் சுமார் எழுபத்தைந்து சதவீதத்துக்கு மேல் குறைந்திருக்கிறது என்கிறார்கள்.

கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு நிமோனியாவின் கொடுங்கரங்களிலிருந்து காப்பாற்றப்பட்ட குழந்தைகள் மட்டும் பல நூறு பேர். இன்று ஆரோக்கியமாக இருக்கும் அந்தக் குழந்தைகள் சுவாசிக்கும் காற்றில் இருப்பது ஆக்சிஜன் மட்டும் அல்ல; சிஸ்டியின் மகத்தான மானுட நேயமும்தான்.
சிஸ்டியின் இந்தக் கண்டுபிடிப்பு பங்களாதேஷ் மட்டும் அல்ல, இந்தியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு மிகவும் இன்றியமையாதது என்கிறார்கள் மருத்துவர்கள். இப்போது, எத்தியோப்பிய அரசு இந்தக் கருவியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைத் தங்கள் மருத்துவமனைகளில் பொருத்த வரும்படி சிஸ்டிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

‘‘இந்தக் கருவியை உலகம் முழுதும் கொண்டு செல்வதுதான் என் நோக்கம். நல்ல தரமான மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆனால், எல்லோருக்கும் இப்படியான மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வாய்ப்பு கிடைப்பதில்லை.
வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிப்பவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் அதிகமாக இருக்கிறார்கள். அசுத்தமான வாழிடச் சூழ்நிலையே நிமோனியா போன்ற நுரையீரல் தொற்றுகளை அதிகமாக உருவாக்குகின்றது.

மறுபுறம், இதற்கான சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு இருப்பதில்லை. அதிலும் பச்சிளம் குழந்தைகள் இதனால் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். மரணம்கூட சம்பவிக்கிறது. இந்த எளிய சுவாசிக்கும் கருவி இக்குழந்தைகளின் உயிரைக் காக்கும். செலவு மிகவும் குறைவு என்பதால் எல்லோராலும் இதனை வாங்க முடியும். எனவே, இதனை உலகம் முழுதும் எடுத்துச் செல்வதுதான் என் நோக்கம்...’’ என்கிறார் டாக்டர் சிஸ்டி.

சர்வதேச அளவிலான மருத்துவ அமைப்புகள் இந்தக் கருவியை ஏற்றுக்கொள்ளும்போது இதற்கான கவனம் கிடைக்கும். ஆனால், முழுக்கவும் பணத்தால் இயக்கப்படும் மருத்துவம் போன்ற துறைகள் இன்று சேவை என்பதைவிடவும் தொழில் என்பதாக மாறியிருக்கும் சூழலில் இதற்கான வாய்ப்பு எவ்வளவு இருக்கும் என்பதைச் சொல்வதற்கில்லை. டாக்டர் சிஸ்டியின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.

காவு வாங்கும் நிமோனியா

நிமோனியா என்பது நுரையீரல் தொற்றுகளில் ஒன்று. உலக அளவில் ஏற்படும் குழந்தைகளின் மரணங்களில் சுமார் பதினாறு சதவீதம் நிமோனியாவால் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் உலக அளவில் சுமார் ஏழு லட்சம் குழந்தைகளுக்கு மேல் நிமோனியாவால் இறக்கிறார்கள். அதில் பாதிக்கு மேற்பட்ட குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவை என்று சொல்கிறது உலக சுகாதார மையம்.

வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் போன்ற பல்வேறு நுண்ணுயிர்கள் நிமோனியா உருவாகக் காரணமாக உள்ளன. பொதுவாக நிமோனியா உயிரைப் பாதிக்கும் அளவு கடுமையான நோய் கிடையாது என்றாலும் குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்கள் இந்நோயால் பாதிக்கப்படும்போது உயிரிழப்புக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

தீவிர சிகிச்சை கொடுத்தால் அன்றி மீண்டு வருவது கடினம் என்னும் அளவு அவர்களைப் பாதிக்கக்கூடியது. எப்போதும் புகைந்துகொண்டே இருக்கும் சுற்றுச் சூழலில் நிமோனியா எளிதில் உருவாகும். அதேபோல், புகைபிடிப்பவர்களுக்கும் நிமோனியா எளிதில் உருவாகும். எனவே, சுற்றுச் சூழலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இளங்கோ கிருஷ்ணன்