தலபுராணம்



ஹிக்கின்பாதம்ஸ்!

புத்தகங்கள் என்றும் காலத்தால் அழியாத களஞ்சியம் என்பார்கள். இது புத்தக விற்பனைக் கடைகளுக்குப் பொருந்திப் போகுமா? தெரியாது. ஆனால், இன்றைய பெருநகர் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் ஹிக்கின்பாதம்ஸ் கடைக்கு நிச்சயம் பொருந்தும்.ஏனெனில், இப்போது இந்தப் புத்தகக் கடை 175வது வருடத்தைத் தொட்டிருக்கிறது!

கடந்த 1844ம் வருடம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஏபெல் ஜோஷ்வா ஹிக்கின்பாதம் என்பவரால் தொடங்கப்பட்ட கடை இது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், முறையான டிக்கெட்டும், ஆவணங்களும் இல்லாததால் மெட்ராஸ் துறைமுகத்தில் கப்பல் கேப்டனால் கீழே இறக்கிவிடப்பட்டவர்
ஹிக்கின்பாதம்!

அப்படிப்பட்டவர் ஆரம்பித்த கடையைத்தான் பின்னாளில் வேல்ஸ் இளவரசர் முதல் மெட்ராஸ் மாகாண கவர்னர்கள் வரை பலரும் புகழ்ந்து பாராட்டினர். கொண்டாடித் தீர்த்தனர்.எதற்காக ஹிக்கின்பாதம் கிழக்கிந்தியாவுக்குச் செல்லும் கப்பலில் ஏறினார் என்பது புரியாத புதிர்தான்.

மிகுந்த புத்தகப் பிரியரான இவர் ஒரு நூலகரும் கூட. அதனாலேயே இங்கே இறக்கிவிடப்பட்டவருக்கு புத்தகக் கடையில் எளிதாக வேலை கிடைத்துவிட்டது.
மெட்ராஸில் புராடெஸ்டன்ட் மிஷனரிகள் நடத்திய வெஸ்லியன் புத்தகக்கடையில்தான் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார் ஹிக்கின்பாதம். ஆரம்பத்தில் பைபிளை ராணுவ வீரர்களிடம் விற்கும் பணியை மேற்கொண்டார்.

ஒருகட்டத்தில், விற்பனைக் குறைவால் வெஸ்லியன் புத்தகக் கடையை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், கடையை விற்கும் நிலை. அப்போது மிஷனரிகளிடம் பேசி, புத்தகக் கடையை அவரே விலைக்கு வாங்கிக் கொண்டார். கடைக்கு தன்னுடைய பெயரைச் சூட்டி நடத்தலானார்.

இப்படியாகவே, இன்றைய அண்ணா சாலை எனப்படும் அன்றைய மவுண்ட் ரோட்டில் ஹிக்கின்பாதம்ஸ் கடை உதயமானது. சிறிய முதலீட்டில் தனிஒருவராகக் கடையை நடத்தி வந்தார். கடைக்கு அவரே முதலாளி. அவரே விற்பனையாளர்.இலக்கியமாகட்டும், அறிவியலாகட்டும் அல்லது ெராமான்டிக் நாவல்களாகட்டும், எல்லா நூல்களும் இங்கே கிடைக்கும்படி செய்தார். அத்துடன் உலகின் வெவ்வேறு மொழிகளில் வெளியாகும் புத்தகங்களும் இங்கே கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார்.

இதனால், மெட்ராஸில் இருந்த ஆங்கிலேயர்களும், மற்ற நாட்டினரும் ஹிக்கின்பாதம்ஸ் கடையேறி தங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இத்துடன் புத்தகம் ஆர்டர் செய்தால் தருவித்துக் கொடுக்கும் வணிகத்தையும் மேற்ெகாண்டார்.

1857ல் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்து சிப்பாய் கலகம் நடந்தது. இதனால், கம்பெனியின் நிர்வாகம் கலைக்கப்பட்டு பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் இந்திய அரசு சென்றது. இந்திய அரசுச் சட்டமும் இயற்றப்பட்டது.அப்போது ராணி விக்டோரியா வெளியிட்ட பிரகடனத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சிட்டு மெட்ராஸ் மாகாணம் முழுவதும் விநியோகித்தது ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடை! இதன் வழியாக பதிப்பகத் துறைக்குள்ளும் நுழைந்தது.

1860களில் அச்சிடுதல், வெளியிடுதல், விற்பனை செய்தல் என மூன்று துறைகளிலும் கோலோச்சியது இந்நிறுவனம்.இதற்கிடையே மெட்ராஸ் மாகாண கவர்னராக இருந்த சர் சார்லஸ் ட்ரெவெல்யனும் ஹிக்கின்பாதம்ஸ் கடையில் பல்வேறு புத்தகங்களை வாங்கினார். இதைப்பற்றி தன்னுடைய மைத்துனரான லார்டு மெக்காலேவுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘காணக் கிடைக்காத இந்த அழகான மெட்ராஸ் வாழ்க்கையில் எனக்குப் பிடித்த ஹிக்கின்பாதம்ஸ் கடை மவுண்ட் ரோட்டில் இருக்கிறது.

சாக்ரடீஸ், பிளாட்டோ, யூரிபிடிஸ், அரிஸ்டோபேன்ஸ், பிந்தர், ஹொரேஸ், பெட்ராக், டாசோ, காமாயென்ஸ், கால்டெர்ன் மற்றும் ரேசின் ஆகியோரின் அழகான படைப்புகளை இங்கே பார்த்தேன். அற்புதமான பிரஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹுகோவின் சமீபத்திய பதிப்பை வாங்கினேன். ஜெர்மன் எழுத்தாளர்களான ஷில்லர் மற்றும் கோத்தேவின் நூல்களையும் பெற்றேன். தீவிர புத்தகக் காதலர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் இடம் இது...’’ எனப் புகழ்ந்துள்ளார்.

1869ம் வருடம் ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல, ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனத்தின் வணிகத்திற்கும் சிறந்ததாக அமைந்தது. காரணம், இந்த வருடம்தான் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது. அதுவரை ஆப்ரிக்காவைச் சுற்றி இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்த ஐரோப்பியர்கள் இதன்பிறகு சூயஸ் கால்வாய் வழியாக வரத் தொடங்கினர்.

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வர முன்பு மூன்று மாத காலம் பிடித்தது. இப்போது வெறும் மூன்று வாரங்களில் வந்து சேர்ந்தனர். இப்படி வரும் கப்பல்களில் ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடைக்குத் தேவையான சரக்குகளும் பெரிய மரப்பெட்டிகளில் வந்தன.இதில், அப்போது ஐரோப்பாவில் வெளியாகி சிறந்த விற்பனையை எட்டிய நூல்களும், டாப் லிஸ்ட் புத்தகங்களும் இருக்கும். இதனால், ஹிக்கின்பாதம்ஸின் விற்பனை பரபரத்தது.

1876ம் வருடம் வேல்ஸ் இளவரசர் இந்திய மாகாணங்களுக்கு விஜயம் செய்திருந்தார். இவரே பின்னாளில் ஏழாம் எட்வர்ட் அரசர் என அழைக்கப்பட்டவர். ராயபுரம் ரயில் நிலையம் வந்த எட்வர்ட் அரசர் ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனத்தினரை வரவழைத்து படிப்பதற்கு புத்தகங்கள் பெற்றுக் கொண்டார்.தொடர்ந்து அரசருக்கான பிரத்யேக புத்தக விற்பனையாளராக நியமிக்கப்பட்டது இந்நிறுவனம். அதற்காக எட்வர்ட்  அரசர்அளித்த சான்றிதழை இன்றுவரை பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறது ஹிக்கின்பாதம்ஸ்.

தொடர்ந்து இந்நிறுவனம் உணவு சம்பந்தமான ரெசிபிகள் தயாரிப்பது பற்றிய நூல்களை வெளியிட்டு பெண்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. முதன் முதலாக 1884ம் வருடம் மிளகு ரசம் மற்றும் மசாலா தூள் தயாரிப்பது பற்றி ஒரு நூல் வெளியிட்டது. அது மக்களிடம் பரவலான கவனத்தைப் பெற்றது.

அதுமட்டுமில்லாமல் பெண்கள் இந்த ரெசிபி புத்தகங்களை ஆர்வமாக வாங்கினர். பின்னர், Wyvern என்பவர் எழுதிய, ‘Sweet dishes: a little treatise on confectionary and entremets sucres’ என்ற நூலையும், இதே எழுத்தாளர் எழுதிய ‘Culinary jottings of Madras’ நூலையும் வெளியிட்டது.
இது அன்று இந்திய அச்சு மற்றும் வெளியீட்டு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.

இதன்பிறகு, ஹிக்கின்பாதம் 1888 , 1889ம் வருடங்களில் மெட்ராஸின் ஷெரீப்பாக நியமிக்கப்பட்டார். நீதி நிர்வாகத்திலும், அமைதியை நிலைநாட்டுவதிலும் முக்கியப் பங்கு கொண்டது ஷெரீப்பின் பதவி. இந்தப் பதவி நகரின் முக்கியமான பிரமுகர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. ஹிக்கின்பாதம் நகரின் முக்கியமான பிரமுகராக இருந்தார் என்பதை இதன்மூலம் அறியலாம்.

1891ம் வருடம் ஹிக்கின்பாதம் காலமானார். பின்னர், அவரின் மகன் சி.ஹெச்.ஹிக்கின்பாதம் நிறுவனத்தை ஏற்று நடத்தத் தொடங்கினார். இவர், தென்னிந்திய ரயில்வே யுடன் ஒப்பந்தம் போட்டு ரயில்நிலையங்களில் கடைகளை விரித்தார். இப்போதும் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட தென்னகத்தின் முக்கிய ரயில்நிலையங்களில் ஹிக்கின்பாதம்ஸ் கடைகள் இருப்பதைப் பார்க்கலாம்.

இந்நிலையில் பெங்களூர் கன்டோன்மென்ட் பகுதியில் ஒரு கட்டடத்தை இந்நிறுவனம் கட்டியது. இந்தக் கட்டடத்திற்கு 1905ம் வருடம் ஹிக்கின்பாதம்ஸ் கிளை வந்தது. இன்றுவரை பெங்களூரில் இந்தக் கிளை செயல்பட்டு வருகிறது.பின்னர், 1920களின் பிற்பகுதியில் சி.ஹெச்.ஹிக்கின்பாதம் ஓய்வு பெற்றார். இதற்கிடையே 1921ம் வருடம் ஜான் ஆக்‌ஷாட் ராபின்சன் என்பவர் ‘மெட்ராஸ் டைம்ஸ்’ பத்திரிகையை வாங்கினார். ஆரம்பக் காலத்தில் இந்தப் பத்திரிகையை ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனமே வெளியிட்டு வந்தது.

இத்துடன் இந்தியாவின் முதல் மாலைப் பத்திரிகையான ‘தி மெயில்’  தினசரியையும் வாங்கினார் ராபின்சன். இரண்டையும் இணைத்து ‘அசோஷியேட்டட் பிரின்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இதில், ‘தி மெயில்’ பத்திரிகை மட்டும் தொடர்ந்து வெளிவந்தது. இதனுடன் ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனத்தையும் இணைத்து அதன் பிரின்டிங் பணியை மேற்கொண்டார்.

‘ஹிக்கின்பாதம்ஸ்’, ‘அசோஷியேட்டட் பிரின்டர்ஸ்’, ‘மெட்ராஸ் மெயில்’ என்று எல்லாமும் சேர்ந்து ‘அசோஷியேட்டட் பப்ளிஷர்ஸ்’ என அழைக்கப்பட்டது.இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு உதவியது ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனம். எட்வர்ட் மூர் எழுதிய ‘The Hindu Pantheon’, அடால்ப் ஹிட்லரின் சுயசரிதை நூலான ‘Mein kampf’ போன்ற நூல்களை விற்று, அதில் வந்த வருமானத்தை வீரர்களுக்குச் செலவிட செஞ்சிலுவைச் சங்கத்திடம் கொடையாக அளித்தது.

பின்னர், 1945ம் வருடம் ‘அசோஷியேட்டட் பப்ளிஷர்ஸ்’ நிறுவனங்கள் அனைத்தும் தமிழரான எஸ்.அனந்தராமகிருஷ்ணன் தலைமையிலான அமால்கமேஷன்ஸ் குரூப்பிடம் விற்கப்பட்டன. அன்றிலிருந்து இன்றுவரை இந்தக் குரூப்பே ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறது.இன்று, ஹிக்கின்பாதம்ஸ் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா எனப் பல இடங்களில் தன்னுடைய கிளைகளைவிரித்திருக்கிறது. தவிர, சுமார் 45 ரயில்நிலையங்களில் அதன் கடைகள் உள்ளன.

ெசன்னையில் பரந்து விரிந்திருக்கும் இந்தக் கடையில் லட்சக்கணக்கான  நூல்கள் கையாளப்படுகின்றன. தவிர, தனிப்பிரதியாக ‘தி மெயில்’ பத்திரிகையையும் கொண்டு வருகின்றனர்.தமிழ், ஆங்கிலம் என அனைத்து பதிப்பகத்தினருடனும் கைகோர்த்து எல்லா நூல்களும் இங்கே கிடைக்கும்படி செய்துள்ளனர். தவிர தமிழ் புத்தக ஆர்வலர்களுக்கென இருந்த பிரிவை மேலும் விரிவுபடுத்தியுள்ளனர்.  

ஒருகாலத்தில் அரசுத் துறைகளுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் புத்தகங்களை சப்ளை செய்யும் அதிகாரபூர்வ முகவராக இருந்து வந்தது ஹிக்கின்பாதம்ஸ். தவிர, கன்னிமாரா நூலத்திற்கும் நூல்களை சப்ளை செய்யும் ஒரே நிறுவனமாகவும் விளங்கியது.இப்போது சில அரசுத் துறைகளுக்கும், தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறது.ஆன்லைன் விற்பனை விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும் தனித்துவமான  தனது விற்பனையை காலம் கடந்தும் தொடர்ந்து வருகிறது ஹிக்கின்பாதம்ஸ்!

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்

ராஜா