புற்றுநோயாளிகளுக்கான ஸ்பெஷல் கேக்!



மருத்துவ முறையில் பேக்கரி ஐட்டங்களை தயாரிக்கும் சென்னை இளைஞர்

கேன்சர், ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை நோய்... என உடல் ரீதியான பிரச்னைகளுக்கு உணவே மருந்து என மாற்று வழிகளாக ஆர்கானிக் உணவுப்பழக்கங்களைக் கொண்டு வந்துவிட்டோம். அரிசி இட்லி சாப்பிடக் கூடாது என்ற நிலையில் கேழ்வரகு இட்லி, சிறுதானிய இட்லி என ஆரம்பித்து அனைத்திலும் மாற்றங்கள் வந்துவிட்டன.

ஆனால், இன்னமும் இந்த கேக், சாக்லெட், பிரௌனி உள்ளிட்ட பேக்கரி ஐட்டங்களில் மட்டும் அந்த மாற்றம் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. பிறந்த நாளுக்கு கேக் வெட்டினாலும் மேற்சொன்ன நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் அதை வெறுமனே பார்க்கத்தான் முடியும் என்ற நிலை. என்னதான் சர்க்கரையில்லா அல்லது மாற்று இனிப்பு வஸ்து கேக் என்றாலும் கூட சுவை மிகக் குறைவாகவே இருக்கும்.

இதற்கெல்லாம் தீர்வு என்ன என்று கேட்பவர்களுக்கான பதில்தான் செந்தில்! சென்னையைச் சேர்ந்த இவர் ‘மாற்று’ ஒன்றை கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார். ‘‘பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னைலதான். பயோ டெக்னாலஜி படிச்சேன். பிறகு கேன்சர் தொடர்பான மாஸ்டர் படிப்பு. அப்புறம் பெங்களூருல சீனியர் மூளை கேன்சர் ஆராய்ச்சியாளரா வேலை செய்தேன். அங்க இருந்து ஆஸ்திரேலியா. அதே வேலை. பிறகு டீச்சிங், ஆராய்ச்சி.

எனக்கு சின்ன வயசுல இருந்தே சமைக்கப் பிடிக்கும். ஆனா, கேக் மேக்கிங் ரொம்ப புதுசு. ஆஸ்திரேலியாவுல கார்டன் பல்கலைக்கழகத்துல ஒரு ஃபிரண்ட்ஸ் மீட் நடந்தப்ப சும்மா செஞ்சு பார்க்கலாம்னு செய்த கேக், அங்க செம ஹிட். வேலை, ஆராய்ச்சினு நாட்கள் கடந்தப்பவும் உள்ளூற அந்த கேக் திட்டம் மனசுல இருந்துட்டே இருந்துச்சு. இந்தியா வந்ததும் முழுமூச்சா இந்த ஹோம் பேக் திட்டத்தை செயல்படுத்தினேன்.

உணவே மருந்து. இதுதான் என்னுடைய அடிப்படை. அதுல கில்ட் - ஃப்ரீ (Guilt - Free) கான்செப்ட் எடுத்துக்கிட்டேன். அதாவது எதையெல்லாம் சாப்பிட நாம ரொம்ப சங்கடமா அல்லது தவறா நினைப்போமோ அதுக்கெல்லாம் மாற்றா ஆரோக்கியமான வழி என்னனு ஆராய்ச்சி செய்தேன்.
உதாரணத்துக்கு சர்க்கரைக்கு என்ன மாற்று... மைதாவுக்கு மாற்றா என்ன மாவு சேர்க்கலாம்... மஞ்சள் நிறத்துக்கு ஃபுட் கலர் பயன்படுத்தாம இயற்கையான மஞ்சளே கலந்து கேக் செய்தா என்ன... இப்படியெல்லாம் யோசிச்சேன்...’’ என்று சொல்லும் செந்தில், சர்க்கரையில் மட்டுமே இனிப்பு இருப்பதாக நாம் நினைப்பது தவறு என்கிறார்.

‘‘அரிசி, பழங்கள்னு பல பொருட்கள்ல இனிப்பு இருக்கு. அதே மாதிரி கொழுப்பை முற்றிலுமா தவிர்க்கக் கூடாது. ஒரு சிலர் ‘நான் பருமனா இருக்கேன். எனக்கு கொழுப்பே இல்லாத உணவு வேணும்’னு கேப்பாங்க. அப்படி சாப்பிடக் கூடாது. நல்ல கொழுப்பு கண்டிப்பா உடலுக்குத் தேவை. அதை நிராகரிச்சா நிச்சயம் மூளை சார்ந்த பிரச்னைகள் உருவாகும்.

இதையெல்லாம் மனசுல வெச்சு எந்த அளவுல கொழுப்பு  இருக்கணும், எந்த கால அளவுல சர்க்கரை இருக்கணும்னு எல்லாம் ஆராய்ச்சி செஞ்சு ஸ்டடி பண்ணினேன். குறிப்பா கேன்சர் நோய்க்கு!புற்றுநோய்ல பலவகைகள் இருக்கு. ஒவ்வொரு கேன்சருக்கும் ஒவ்வொருவிதமா நாம சாப்பிடற மருந்துகள் உணவுகள்லயே இருக்கு!

உதாரணத்துக்கு கிரீன் டீ, மஞ்சள், தக்காளி, பூண்டு, பட்டாணியை எல்லாம் கேன்சருக்கு பொதுவான மருந்து - உணவுகளா சொல்வாங்க. இதையெல்லாம் சேர்த்து கேக் தயாரிக்கறேன்!தவிர ஒருசில கேன்சருக்கு சில சிறப்பான மருந்துகளே இருக்கு. புராஸ்டேட் கேன்சருக்கு கொண்டக் கடலை, ஆளி விதை, நல்லெண்ணை, பிஸ்தா, மாதிரியான உணவுப் பொருட்கள், இயற்கையான மருந்துகள். இதையெல்லாம் கேக்குல தேவையான அளவுல மூலப்பொருட்களா சேர்க்கறேன்...’’ என்ற செந்தில், பொதுவாக சொல்வதை வைத்து இப்பொருட்களை சேர்ப்பதில்லை என்கிறார்.

‘‘கேன்சர் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், தேசிய கேன்சர் ஆராய்ச்சி மையம், உணவுக் கட்டுப்பாட்டு வாரியம், அமெரிக்க கேன்சர் சொசைட்டி, மயோ கிளினிக்... இப்படி பல இடங்களிலும் தகுந்த ஆராய்ச்சிகளுக்கும், லேப் பரிசோதனைகளுக்கும் அப்புறம்தான் இந்த கேக்குகளை பேக்கரிகளுக்கு கொடுக்கறேன்.நாங்க தயாரிக்கிற கேக்குகள், சாக்லெட்டை எல்லாம் சர்க்கரை நோயாளிகள், கேன்சரால் பாதிக்கப்பட்டவங்க மட்டுமில்ல... உடல் பருமன், ரத்த அழுத்தம், கல்லீரல் கொழுப்புப் பிரச்னை, சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ளவங்களும் சாப்பிடலாம்.

ஆன்லைன்ல ‘ஹோல்சம் ராப்சோடி’(Wholesome Rhapsody)னு  தேடினா எங்க சைட் வரும். ஆர்டர் செய்துக்கலாம்...’’ என்ற செந்திலின் அடுத்த திட்டம் தினந்தோறும் சாப்பிடும் வகையில் மருத்துவ உணவு! லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், செந்திலின் வயது 33தான்!   
                                           

ஷாலினி நியூட்டன்