தல புராணம்இசையும் மெட்ராஸும்

தென்னிந்திய இசை வரைபடத்தில் மெட்ராஸுக்கென தனித்துவமான அடையாளம் உண்டு. குறிப்பாக, கர்நாடக இசையில் தழைத்தோங்கிய பல இசைக் கலைஞர்களும், அறிஞர்களும், இசையமைப்பாளர்களும் இங்கு வாழ்ந்துள்ளனர்.
ஆனால், மெட்ராஸ் ஒரு நகரின் தலைநகராகவோ, சமஸ்தானமாகவோ, ஜமீனாவோ இருக்கவில்லை! ஏனெனில் அந்தக் காலத்தில் அரசவைகளும், ஜமீன்களும்தான் இசை வளர்த்த இடங்களாக இருந்தன. அரசர்களும், ஜமீன்தார்களுமே இசையை ஊக்குவித்து வந்தனர்.

இசை வரலாற்றில் தஞ்சாவூர் முக்கிய இடம் வகிக்கக் காரணம் முந்நூறு ஆண்டுகளாக அதை ஆண்ட நாயக்கர்களும், மராட்டியர்களும் உண்மையான கலைப் பிரியர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்ததே! அந்த வகையில் மெட்ராஸ் இசைக்கான இடமாக இருக்கவில்லை என்றாலும்கூட இசையறிஞர்கள் வந்து தங்கும் இடமாகவும் இசை மையமாகவும் திகழ்ந்துள்ளது. இசையில் பரிசுகளை வெல்ல வடக்கிலிருந்து தஞ்சை நோக்கிச் செல்லும் பல்வேறு வித்வான்கள் இங்கே தங்கிச் சென்றுள்ளனர்.

‘‘புகழ்பெற்ற பாடகர் பூலோக சப சுட்டி பொப்பிலி கேசவய்யா மெட்ராஸ் வரும்போது காலை நேரத்தில் இப்போதைய நேப்பியர் பாலத்தின் அருகே ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்து கஷ்டமான சாதகங்களை மேற்கொண்டுள்ளார்...’’ என 1939ம் வருடம் வெளியான ‘The Madras Tercentenary Commemoration Volume’ நூலில் குறிப்பிடுகிறார் மெட்ராஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி.

தவிர, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் கோயில்களுக்குச் சென்று பல்வேறு இசை மேதைகள் அங்குள்ள இறைவனைப் போற்றி பாடல்கள் இயற்றியுள்ளனர். 18ம் நூற்றாண்டில் மெட்ராஸில் வந்து குடியேறிய முதல் இசை அறிஞர் பைதல குருமூர்த்தி சாஸ்திரி ஆவார். புரந்தரதாசருக்குப் பின் தோன்றிய மிகச் சிறந்த இசை அறிஞர் இவர்.

பின்னர், 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மெட்ராஸில் வாழ்ந்தவர் இசை மேதை வீணை குப்பய்யர். பிறந்தது திருவொற்றியூர் என்றாலும் மெட்ராஸ் முத்தியால்பேட்டையில் வசித்தார்.தியாகராஜ சுவாமியின் நேரடி சீடரான இவர் கிருதிகள், கீர்த்தனைகள், வர்ணங்கள் மற்றும் தில்லானாக்கள் இயற்றுவதில் மிகச் சிறந்த ஞானம் பெற்றிருந்தார்.

‘‘தியாகராஜ சுவாமிகள் திருப்பதிக்கும், காஞ்சிபுரத்திற்கும் புனிதயாத்திரை மேற்கொண்ட போது குப்பய்யரின் வேண்டுகோளுக்கு இணங்க மெட்ராஸ் வந்தார்.இங்கே பந்தர் தெருவில் (பிராட்வேயில் உள்ளது) கோவூர் சுந்தரேச முதலியாருக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருந்தார். இங்குதான் தேவகாந்தாரி ராகத்ைத ஆறுநாட்கள் தொடர்ந்து பாடினார் தியாகராஜர். இந்த ராகத்தில் நீண்டநேரம் ஆலாபனை செய்வது கடினம்.

மெட்ராஸ் வரும்வழியில் திருவொற்றியூரில் குப்பய்யரின் வீட்டில் தங்கி அவரின் குலதெய்வமான வேணுகோபால சுவாமியைப் பற்றியும் புகழ்ந்து பாடல் பாடினார்...’’ என தியாகராஜ சுவாமிகள் மெட்ராஸ் வந்ததையையும் குறிப்பிடுகிறார் பி.சாம்பமூர்த்தி.  இவரின் சீடரான வீணை குப்பய்யர் சித்ரா பவுர்ணமியையும், விநாயக சதுர்த்தியையும் தனது வீட்டில் சிறப்பாகக் கொண்டாடுவார். அந்நேரங்களில் தென்னிந்தியாவின் முன்னணி இசைக் கலைஞர்கள் இவர் வீட்டிற்கு வந்து கச்சேரி செய்வார்கள்.

கான சக்கரவர்த்தி குப்பய்யர் மற்றும் அவரின் நெருங்கிய இசை மேதைகளின் முன் பாடும் வாய்ப்பு அன்று மிகப் பெரிய கவுரவத்தை அளித்தது.  இவரைப் போல 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மெட்ராஸில் வாழ்ந்தவர் தச்சூர் சிங்காராச்சார்லு. இவரது காலத்திலேயே மெட்ராஸில் இசை புதிய அத்தியாயத்துக்கான இடத்தைப் பிடித்தது. இவரின் சகோதரர் சின்ன சிங்காராச்சார்யுலு. இவர் இசை பயிலுவதற்கான பாடப் புத்தகங்களை வரிசையாக வெளியிட்டார்.

அப்போது இந்த இரு இசை மேதைகளும் ஜார்ஜ் டவுனிலுள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் இருந்த சவுந்தர்ய மஹால் அருகே வசித்து வந்தனர்.
இவர்கள் ஒவ்வொரு வருடமும் ராம நவமி விழாவின் போது ராம மன்றத்தில் நடத்திய கச்சேரியைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர்.அன்று மெட்ராஸுக்கு வந்து பெயரெடுக்க நினைக்கும் புதிய இசைக் கலைஞர்கள் முதலில் இந்த சகோதர்கள் முன் பாடி பாராட்டுதலைப் பெற வேண்டும். அந்தளவிற்கு இசை சக்கரவர்த்திகளாகத் திகழ்ந்தனர்.

இதன்பிறகு, 20ம் நூற்றாண்டில் பல முன்னணி இசைக் கலைஞர்கள் மெட்ராஸிலே வாழ்ந்து வரலாயினர். தவிர, மெட்ராஸ் பக்தி இசைக்கான மையமாகவும் திகழ்ந்தது. இதற்காக நகரில் எண்ணற்ற பஜனை மன்றங்கள் இயங்கி வந்தன. அந்தக் காலத்தில் இசைக் கச்சேரிகள் நடத்த தனியாக சபாக்கள் இருக்கவில்லை. மன்றங்கள், வீடுகள் மற்றும் பொதுவெளிகளிலேயே நடந்து வந்தன. பின்னரே நிறைய சபாக்கள் தோன்றின. அதில் முக்கியமானவை ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபாவும், மியூசிக் அகாடமியும் ஆகும்.

ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா:

கர்நாடக இசையைப் பரப்ப 1900ம் வருடம் ஏற்படுத்தப்பட்ட முதல் சபா இதுதான். திருவல்லிக்கேணியிலுள்ள இதை ஸ்ரீமன்னி திருமலாச்சாரியார் தொடங்கினார். இவர், 1896ம் வருடமே இப்படியொரு சபா தேவையெனக் கருதி சங்கீத வித்வத் சபா என்ற பெயரில் ஆரம்பித்தார். இதுவே, நான்காண்டுகளில் ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபாவென பதிவு பெற்றது.

முதல் ஐந்தாண்டுகள் திருமலாச்சாரியாரின் வீட்டிலே நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. 1959ம் வருடமே தற்போதைய இடத்திற்கு வந்தது. ‘‘1962ம் வருடம் திறந்தவெளி அரங்கு கட்டப்பட்டது. அழகிய அரங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் இப்போதைய அரங்கம் 1980ல்தான் கட்டப்பட்டது...’’ என ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் சொல்கிறார் ஆய்வாளர் எஸ்.முத்தையா.

மெட்ராஸ் மியூசிக் அகாடமி:
கர்நாடக சங்கீதத்தைப் பரப்புவதற்காகத் தொடங்கப்பட்ட மற்றொரு சங்கீத அமைப்பு மெட்ராஸ் மியூசிக் அகாடமி.1927ம் வருடம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு டாக்டர் முக்தர் அகமது அன்சாரி தலைமையில் கூடியது. சுதந்திரப் போராட்டம் பற்றிப் பேசிய இந்நிகழ்விற்கும், மியூசிக் அகாடமிக்கும் சம்பந்தம் இருக்கிறது.

ஆம். இதனுடனே சங்கீத கலந்தாய்வு கூட்டமும் நடந்தது. தீரர் சத்தியமூர்த்தி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் அரசியல் போராட்டத்துடன் நிலத்தின் கலாச்சார பாரம்பரியமான உள்நாட்டு சங்கீதத்தைக் காப்பதிலும் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.இதுவே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானமாக இயற்றப்பட்டு 1928ம் வருடம் மெட்ராஸ் மியூசிக் அகாடமி தோற்றுவிக்க அடிகோலியது.

அகாடமிக்கான நிர்வாகக் கமிட்டி, தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் என எல்லாம் முடிவான பிறகு 1928ம் வருடம் ஆகஸ்ட் 18ம் தேதி எஸ்பிளனேட்டில் இருந்த ஒய்.எம்.ஐ.ஏ அரங்கில் சி.பி.ராமஸ்வாமி ஐயரால் முறையாக மியூசிக் அகாடமி தொடங்கப்பட்டது. இதன் நிறுவனத் தலைவராக டாக்டர் யு.ராமாராவ் இருந்தார்.

ஆரம்பத்தில் அகாடமி அலுவலகம் தம்புச் செட்டி தெருவில் டாக்டர் யு.ராமாராவ் நடத்தி வந்த மருத்துவமனையுடன் இணைந்திருந்தது. பின்னர், பிலிப்ஸ் தெரு, தம்புச் செட்டி தெரு, ராயப்பேட்டை எனப் பல்வேறு இடங்களுக்கு மாறி நிறைவாக 1946ம் வருடம் மௌபரீஸ் சாலை (இப்போதைய டி.டி.கே.சாலை) இடத்திற்கு வந்து சேர்ந்தது.

1955ம் வருடம் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் அரங்கத்திற்கு இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு அடிக்கல் நாட்ட, ஏழு வருடங்கள் கழித்து அரங்கம் திறக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆரம்ப நாட்களில் இந்த அகாடமியின் நிகழ்ச்சிகள் ரிப்பன் பில்டிங்கின் பின்னால் பந்தல் அமைத்தும், ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் வளாகத்திலும், மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் ஹாலிலும், பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியிலும் நடந்து வந்தன.

1929ல்,  ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் இசை தொடர்பான ஒரு கலந்தாய்வு மாநாடு நடத்தப்பட வேண்டுமென முடிவானது. அதுவே நாளடைவில் டிசம்பர் இசைத் திருவிழாவாக உருவெடுத்து உலகின் மிகப்பெரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக மாறியது. முதலில் இசைக் கச்சேரிகள் மட்டுமே நடத்திய மியூசிக் அகாடமி 1931ம் வருடத்திலிருந்து பரத நாட்டியத்தையும் அரங்கேற்றியது.

தேவதாசிகளால் நிகழ்த்தப்பட்ட பாரம்பரியமான சதிராட்டக் கலை அழியும் நிலையில் இருந்தது. இதனால், மியூசிக் அகாடமியின் நிபுணர் குழு இதைப் பாதுகாக்கும் பொருட்டு கல்யாணி மகள்கள் என்றழைக்கப்பட்ட ராஜலட்சுமி, ஜீவரத்தினம் என்ற இரண்டு சதிராட்ட நடனப் பெண்களை மேடையேற்றியது.

இதுவே, முதல் முதலாக அகாடமி நடத்திய நடன நிகழ்ச்சி. அதிலிருந்து அகாடமி ஒவ்வொரு வருடமும் பரத நாட்டியத்தை நடத்தி வருகிறது.செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் தனது இசைப் பயணத்தை 1927ல் மியூசிக் அகாடமி அமையக் காரணமாக இருந்த இசை மாநாட்டில் இருந்தே தொடங்கினார். அவரின் கடைசிக் கச்சேரியும் 2000ம் வருடம் மியூசிக் அகாடமியிலேயே நடந்தது.

தவிர, எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள் போன்ற பல இசை மேதைகளின் கச்சேரிகள் இந்த அகாடமியில் பலமுறை அரங்கேறியுள்ளன.   சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டி.டி.கே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இசை மற்றும் நடனக் கலைஞர்களுக்கு வருடந்தோறும் வழங்கி கௌரவித்து வருகிறது மெட்ராஸ் மியூசிக் அகாடமி.

இசைப் போட்டிகள்...

அன்று மெட்ராஸில் நடந்த இரு இசைப் போட்டிகள் குறித்து பி.சாம்பமூர்த்தி தந்திருக்கும் தகவல்கள் சுவராஸ்யமானவை. முதல் போட்டி 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மகா வைத்தியநாத அய்யருக்கும், வேணு என்பவருக்கும் நடந்தது. வேணு மிகச் சிறந்த பாடகர். தனது குருவான போட்டோகிராப் மாசிலாமணி முதலியாரைப் போல தாள அமைப்பை நன்கு அறிந்தவர். இவர் மகா வைத்தியநாத அய்யரை மெட்ராஸ் வந்து தன்னுடன் போட்டியிடுமாறு அழைத்தார்.

தென்பகுதியின் இசை வல்லுநரான வைத்தியநாத அய்யர் சவாலை ஏற்றார். ஜார்ஜ் டவுன் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவிலிருந்த திருவண்ணாமலை மடத்தில் பல்வேறு இசை ஆர்வலர்களின் முன்னிலையில் போட்டி நடந்தது. நடுவராக மாசிலாமணி முதலியார் இருந்தார். வேணு, முதலில் தன் எதிரியைப் பாடவைத்து பின்னர் நுணுக்கங்கள் நிறைந்த பல்லவியைப் பாடி வெற்றி பெறவேண்டும் என நினைத்திருந்தார்.

ஆனால், வைத்தியநாத அய்யர் தன்னுடன் வந்திருந்த வயலின் கலைஞர் வெங்கோப ராவ் சொற்படி ‘நாராயணகௌளா’ ராகத்தில் பாடினார். அதிர்ச்சியடைந்த வேணுவிற்கு வைத்தியநாத அய்யர் என்ன ராகத்தில் பாடினார் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கடைசியில் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இன்னொரு போட்டி 1906ம் வருடம் கிருஷ்ணன் மற்றும் குப்பன் என்ற இரு நாகஸ்வர கலைஞர்களுக்கு இடையே நடந்தது. இந்தப் போட்டி முத்தியால்பேட்டையில் பவளக்காரத் தெருவிலுள்ள கிருஷ்ணசுவாமி கோயிலில் நடந்தது.

வீணை குப்பய்யரின் மகன் திருவொற்றியூர் தியாகையர் நடுவராக இருந்தார். துபாஷாக இருந்த முகுந்த நாயுடு விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட நாகஸ்வரம் செட் ஒன்றை வென்றவருக்குப் பரிசாக அளிப்பதாகத் தெரிவித்தார். இதனால் போட்டி விறுவிறுப்பானது. நிறைவாக குப்பன் வெற்றி பெற்று பரிசைத் தட்டிச் சென்றார்.

பேராச்சி கண்ணன்

ராஜா