பகவான்-15



ஓஷோவுக்கு மகாத்மா காந்தியோடு என்ன பிரச்னை?

காந்தியை மிகச்சிறந்த மனிதர் என்றே ஓஷோ மதிப்பிட்டார்.மதவெறியன் ஒருவனால் மகாத்மா மாய்க்கப்பட்டபோது, இளைஞனாக இருந்த ஓஷோ துக்கம் தாளாமல் கதறியதே, காந்தி மீது அவருக்கு இருந்த அன்புக்குச் சான்று.
ஆனால் - காந்தியின் கூட்டுப் பிரார்த்தனை முறைகளெல்லாம் ஓஷோவுக்கு கேலியாகப் பட்டன. தியானம் குறித்து காந்திக்கு எவ்வித புரிதலும் இல்லாமல், எப்படி ஆசிரமம் நடத்தினார், அதில் சீடர்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்திருப்பார் என்றெல்லாம் ஆச்சரியப்பட்டார்.

மேலும் காந்திக்கு இந்து மதம் தவிர்த்து, மற்ற எந்த மதம் பற்றிய வாசிப்புமில்லை. அப்படியிருக்கையில் அவருடைய ஞானம் எப்படி முழுமையானதாக இருந்திருக்க முடியும் என்கிற கேள்வி அவருக்குள் இருந்தது.“பகவத்கீதையை தன் தாய் என்று மகாத்மா குறிப்பிடுகிறார். ஏன் குரான் அவருடைய மாமாவாக இல்லை, ஏன் பைபிள் அவருக்கு சித்தியாகவோ, அத்தையாகவோ இல்லை..?” என்றெல்லாம் காந்தியின் ஆன்மீகத்தை ஏகத்துக்கும் கிண்டலடித்தார்.

ஒரு மதம் சார்ந்த கருத்துகளை மட்டுமே பேசிக் கொண்டிருந்ததால்தான் காந்தியால் இந்து - முஸ்லீம் ஒற்றுமையை ஏற்படுத்த முடியவில்லை என்கிற கருத்து ஓஷோவுக்கு இருந்திருக்கிறது. எனவேதான் காந்தியை இந்துக்களும் சரி, இஸ்லாமியர்களும் சரி... முழுமையாக நம்பவில்லை என்றார்.

ராட்டை சுற்றுவது, கிராமிய இந்தியா போன்ற மகாத்மாவின் கொள்கைகளையும் அவர் மிகவும் பழமைவாதமாகவே பார்த்தார். காந்தியால் வறுமை புனிதப்படுத்தப்பட்டதையும், எளிமை போற்றப்பட்டதையும், ஓஷோ முற்றிலுமாக நிராகரித்தார். வறுமையை ஒழித்திருக்க வேண்டும், மக்கள் வசதியாக வாழவேண்டும். அதற்கே காந்தி வழிகாட்டியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மரபாக வந்துகொண்டிருக்கிறது என்கிற காரணத்தாலேயே காந்தி, எவ்விதக் கேள்வியுமின்றி பழமைவாதத்தை ஏற்றுக் கொண்டார். அறிவியல் வளர்ச்சியால் உருவான நவீன தொழில்நுட்ப மாற்றங்களை, அவை மக்களின் அன்றாட வாழ்வில் செலுத்தக்கூடிய தாக்கங்களை உணரவில்லை. இதனால், அவரை பின்தொடர்ந்த கோடிக்கணக்கான மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.

இவ்வாறெல்லாம் காந்தி குறித்த எதிர்மறையான கருத்துகள் ஓஷோவிடம் இருந்தது. அவை தர்க்கபூர்வமான வகையில் விவாதிக்கப்படவே இல்லை. மாறாக, முரட்டுத்தனமாக ஓஷோவின் வாையஅடைக்க முற்பட்டனர் காந்தி அபிமானிகள்.குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், காந்தி பிறந்த மண்ணான குஜராத்தான் ஓஷோவுக்கு எதிராகக் கொந்தளித்தது.

அப்போது குஜராத் அரசு, ஆசிரமம் அமைப்பதற்காக ஓஷோவுக்கு 600 ஏக்கர் நிலம் கொடுக்க முன்வந்திருந்தது. அங்கே மிகப்பெரிய தியான மையம் நிறுவுவதற்கான ஏற்பாடுகளை ஓஷோ செய்துகொண்டிருந்தார்.காந்தி குறித்த அவருடைய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு, குஜராத் அரசாங்கம் பின்வாங்கியது. ஓஷோவுக்கு நிலம் தரமுடியாது என்று மறுத்தது. அதற்காக ஓஷோ, தன்னுடைய கருத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை.

தேசப்பிதாவை மட்டுமல்ல, தேசத்தை செதுக்கிய சிற்பியான நேருவையும் ஓஷோ விட்டுவைக்கவில்லை.நேரு நடைமுறைப்படுத்திய சோஷலிசத்தால் பலனில்லை என்றார். இத்தனைக்கும் இவரும் சோஷலிசத்தின் ஆதரவாளர்தான்.முதலாளித்துவத்துக்குத் தான் சோஷலிசம் மருந்து. இந்தியாவில்தான் முதலாளித்துவமே இல்லையே? (இவையெல்லாம் 60களின் பிற்பகுதியில் நடந்தவை). அப்படியிருக்க நோயில்லாமலேயே மருந்து கொடுத்துக் கொண்டிருப்பது வீண் என்று விமர்சித்தார் ஓஷோ.

வளர்ந்த நாடுகளுக்குத் தான் சோஷலிசம் தேவை, வறுமையிலிருக்கும் இந்தியாவில் சோஷலிசத்தை அமல்படுத்தினால், மக்களிடையே முன்னேற்றம் ஏற்படாது. இந்தியாவில் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து, பிரயோகிக்க வேண்டிய பிரம்மாஸ்திரம் சோஷலிசம் என்றார் ஓஷோ.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஓஷோ சொன்ன அந்தக் கருத்துகள் சரியா, தவறா என்று இன்றைய பொருளாதார வல்லுனர்கள்தான் விவாதிக்க வேண்டும். நாம் ஓஷோவின் கதைக்குப் போவோம்.

காந்தி, நேரு குறித்தெல்லாம் அடிக்கடி இதுபோல சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருந்ததால் அவரை வெளிநாட்டு  உளவாளி என்று தேசியவாதிகள் முத்திரை குத்தத் தொடங்கினார்கள்.ஓஷோ, அரசியலுக்கு வர திட்டமிட்டிருக்கிறார்; ஆட்சியைப் பிடிக்க முயலுகிறார் என்றெல்லாம் மக்கள் மத்தியில் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கட்சி அறிவிப்பை ஓஷோ வெளியிடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் புதிய தியானமுறை ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்தார்.அதுநாள் வரை relax meditation என்கிற தியானத்தையே ஓஷோ போதித்து வந்தார். தன்னுடைய புதிய தியான முறையை dynamic meditation என்று குறிப்பிட்டார்.

பொதுவாக ஓஷோ தியானம் கற்பிக்கும்போது, “மெதுமெதுவாக ரிலாக்ஸ் ஆகுங்கள்...” என்றுதான் ஆரம்பிப்பார். அவருக்கு அது சுலபம். எத்தகைய நெருக்கடியான சூழல்களிலும், அவர் நினைத்தால் ரிலாக்ஸ் ஆகிவிடுவார்.ஆனால் -பல்வேறு வாழ்வியல் சிக்கல்களில் உழன்றுகொண்டிருப்பவர்களால் எப்படி ரிலாக்ஸ் ஆக முடியும்?எனவேதான் ரிலாக்ஸ் தியானமுறைக்கு நேரெதிரான டைனமிக் தியான முறையைக் கண்டறிந்து அறிமுகப்படுத்த நினைத்தார். இரு முறையிலுமே பலன் ஒன்றுதான் என்றாலும் இரண்டாவது முறையைச் செயல்படுத்துவது மக்களுக்கு சுலபமாக இருக்கக்கூடும் என்று யூகித்தார்.1970ம் ஆண்டு. மும்பை மாநகரில் மூன்று நாள் தியான முகாம் நடத்தினார்.

அதுவரையிலான தியான வகுப்புகளில் கலந்துகொண்டவர்கள், இந்த புதிய வகுப்பில் பெரும் வித்தியாசத்தை உணர்ந்தார்கள். தியானம் என்பது குறித்து ஏற்படுத்தப்பட்டிருந்த அத்தனை புனித மதிப்பீடுகளையும் ஓஷோ உடைத்திருந்தார்.தியானம் செய்பவர்கள் எல்லாவித செயல்பாடுகளையும் (உடல் மட்டுமின்றி மனதையும் கட்டுப்படுத்த வேண்டும்) நிறுத்தி அமைதியாக வேண்டும் என்பதே அடிப்படை.

டைனமிக் தியான வழிமுறையில் அமைதிக்கு எதிரான அத்தனை முயற்சிகளிலும் ஈடுபடச் சொன்னார் ஓஷோ. பாடத்தெரிந்தவர்கள், உரக்கப் பாடலாம். இறைவனைத்தான் பாடவேண்டும் என்பதில்லை. சினிமாப்பாட்டு கூட பாடலாம். ஆடத்தெரிந்தவர்கள், கால் வலிக்குமளவுக்கு டிஸ்கோ, பிரேக் டான்ஸ், பரதநாட்டியம் என்று எதுவேண்டுமானாலும் ஆடலாம். அவரவருக்குப் பிடித்ததை உடல் மற்றும் மனம் முழுக்க ஈடுபடும்படி செய்து, அதில் களைப்படையச் செய்வார் ஓஷோ.

இவ்வாறாக அனைத்து சக்தியையும் ஒன்றுதிரட்டி உழைத்துக் களைக்கும்போது உடலுக்கும், மனதுக்கும் செயலற்ற ஓர் அமைதி கிட்டும். அந்த அமைதியை நீட்டித்து இறையுணர்வை உணரச் செய்வதே டைனமிக் தியானம். இதில் இந்திய தியானமுறைகளை மட்டுமின்றி மனப்பயிற்சியான யோகா, இஸ்லாமிய சூஃபி முறை, திபெத்திய பவுத்தமுறை போன்றவற்றின் கூறுகளையும் கலந்தார்.

ரிலாக்ஸ் ஆகி தியானம் செய்யும் முறையைக் காட்டிலும், இந்தப் புதிய டைனமிக் தியானமுறைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக அன்றைய ஹிப்பி கலாசாரத் தாக்கத்திலிருந்த இளைஞர்களை, பெரும் கொண்டாட்டத்துக்குப் பின்னான நீண்ட அமைதி என்கிற இம்முறை பெரிதும் ஈர்த்தது.தொழில் நகரமான மும்பையில் மக்களுக்கு மனச்சோர்வுக்கு குறைவேது?

தொழிலாளர்கள், முதலாளிகள், அரசியல்வாதிகள் என்று அனைத்துத் தரப்பினரும் டைனமிக் தியானம் கற்றுக்கொள்ள ஓஷோவிடம் வந்தனர். பொதுவாக தியானம் போன்ற ஆன்மீகச் செயல்பாடுகள் அப்போது மத அடிப்படைவாதிகளிடமே இருந்தது. இவருடைய தியான வகுப்புகளில் மதம் / சாதிப் பாகுபாடு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓஷோவின் தியானக் கூட்டங்களிலும், கருத்தரங்கங்களிலும் கலந்துகொள்வது என்பது சமூகத்தில் அந்தஸ்தாக மதிக்கப்பட்டது. ஒருவனுக்கு ஓஷோவைத் தெரியும் என்பதே பெருமை என்று கருதக்கூடிய நிலை உருவானது.ஓஷோ, நிரந்தமாகவே மும்பையில் தங்கவேண்டும் என்று கோரப்பட்டார்.அதுவுமின்றி, ஓஷோவை குருவாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்தவர்கள், தங்களுக்கென்று ஓர் அங்கீகாரத்தைத் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

இப்படித்தான் புதிய சன்னியாசிகள் இயக்கத்தை ஓஷோ தோற்றுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அரசியல் கட்சி தொடங்குவாரோ என்று பதறிக் கொண்டிருந்தவர்களுக்கு, இவர் சந்நியாசிகள் இயக்கத்தைத்தான் தொடங்கினார் என்பது பெரும் ஆறுதலாகவும் அமைந்தது!

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்