ரத்த மகுடம்-39பிரமாண்டமான சரித்திரத் தொடர்

நாபியைச் சுற்றிலும் இருந்த ரோமங்கள் வீறுகொண்டு எழுந்தன! சொற்களை உதிர்க்காமல் சிலையோடு சிலையாக சிவகாமி நின்றாள். அடங்கியிருந்த சுவாசம் பெருமூச்சுகளாக வெளிப்பட்டதையும் அதற்கு ஏற்ப ஸ்தனங்கள் எழுந்து தாழ்ந்ததையும் கரிகாலன் அந்த இருளிலும் கவனித்தான்.பளபளத்த அவன் கண்கள் எதைக் காண்கின்றன என்பதை அறிந்திருந்த சிவகாமி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்ச்சிகளில் தத்தளித்தாள்!

‘‘கரிகாலரே..!’’ தொண்டையைக் கனைத்தான் காபாலிகன்.‘‘என்ன..?’’ திரும்பிப் பார்க்காமல் குரல் கொடுத்தான்.‘‘அந்தப் பக்கமாக காலடி ஓசை கேட்கிறது! யாரென்று நாங்கள் பார்த்துவிட்டு வருகிறோம்!’’ சொன்ன காபாலிகன் வீரர்களுக்கு சைகை செய்துவிட்டு அவர்களைக் கடந்து சென்றான்!தங்களைப் பார்த்து நகைக்கிறானோ..? கணத்தில் சிவகாமிக்குத் தோன்றியது.

அது சரிதான் என்பதற்கு அடையாளமாக காபாலிகன் முணுமுணுத்தான். ‘‘விரைவில் முடித்துவிடுங்கள்..!’’‘முடித்து..?’ சிவகாமிக்கு தூக்கிவாரிப் போட்டது. கண்களும் கனலைக் கக்கின.‘‘அவன் உரையாடலைக் குறிப்பிட்டான்! நீ எதை நினைத்தாய்..?!’’ கேட்டபடியே அவள் கழுத்தில் கரிகாலன் தன் முகத்தைப் பதித்தான்!

என்னவென்று சொல்வாள்..? அந்தச் சூழலில் எந்த சொற்களை உச்சரித்தாலும் அது வேறு பொருளைத்தான் தரும். தமிழ் மொழி சுவை மிகுந்தது மட்டுமல்ல... சங்கடம் தருவதும் கூட!அசையாமல் நின்றாள். அசைவு ஏற்படுத்த விரும்பினான்!அவளை அணைத்தபடியே அரைச்சுற்று திரும்பினான். இப்போது அவன் சுரங்கத்தின் சுவரில் சாய்ந்திருந்தான். அவன் மேல் அவள் பரவியிருந்தாள். இல்லை, பரப்பியிருந்தான்!

விழித்துக்கொண்ட அவளது புலன்களின் துடிப்பை அவன் தேகம் உணர்ந்தது; அதற்கு ஏற்ற மறுமொழியை அவன் நரம்புகள் அவளுக்கு அளித்தன!
வீரர்களுடன் சென்ற காபாலிகனின் பாத ஒலி மெல்ல மெல்ல அடங்கியது. அடங்கியதா அல்லது அதை உணரும் சக்தி தன் செவிக்கு இல்லையா..?
சிவகாமிக்கு பதில் தெரியவில்லை. அவளுக்குள் பெருக்கெடுத்த ஊற்று நீரின் ஒலியே செவிப்பறையைக் கிழித்தது! கரிகாலனின் தேகம் அவள் உணர்ச்சியை எதிரொலித்தது!

ஏதும் பேசாமல் மவுனமாக இருவரும் சாய்ந்திருந்தாலும் அவர்கள் நெஞ்சங்களில் எழுந்து மோதிய உணர்ச்சி அலைகள் மட்டும் சிறிதும் மவுனம் சாதிக்காமல் பேரிரைச்சலாக எழுந்து அவர்கள் உடலில் ஊடுருவிச் சென்றன! பரஸ்பரம் ஒருவர் உடலிலிருந்து மற்றவர் அங்கங்களுக்குப் பாய்ந்தது! என்றாலும் சிவகாமியின் அழகிய இடையில் தவழ்ந்து அணைத்துக் கொண்டிருந்த கரிகாலனின் இடக்கரம் மேலே செல்ல தைரியமின்றி முதலில் பதித்த இடத்திலேயே தடைப்பட்டு நின்றது.

காரணம், அரங்கேறிய விசித்திர சம்பவங்கள்தான். அதனாலேயே தன் உள்ளத்தை எல்லாம் கொள்ளை கொண்ட சிவகாமி சுரங்கம் அளித்த காரிருளில் தனியே கையில் சிக்கிக் கிடந்த அந்த நேரத்தில் கூட, அவளைத் தழுவத் துணிவில்லாதபடி கிடந்தான்... பொருமினான்.
இந்தப் பொருமலை சருமத்தின் வழியே உணர்ந்த சிவகாமியும் கொந்தளிக்கவே செய்தாள்.

கரிகாலனின் கரம் இடையில் அணைத்தது ஆதரவாக இருந்தாலும் அத்தனை காதலையும் இன்பத்தையும் அனுபவிக்க முடியாதபடி இடையே பாய்ந்தன, அவனைப் பற்றி அவள் நெஞ்சிலும் ஆழப்பதிந்துவிட்ட நிகழ்வுகள்; வினாக்கள். அவ்வளவு சொல்லியும் இன்னமும் தன்னை நம்பவில்லையே..! ‘நீயாக சொல்லும்வரை உன்னைப் பற்றிய ரகசியத்தை நானாக அறிய மாட்டேன்...’ என்று சொல்லிவிட்டு தேடித் தேடி தன்னைப்பற்றித் தெரிந்துகொள்ள ஏன் முற்பட வேண்டும்..?

பூத்த வினா அவளை அசைய வைத்தது. அந்த அசைவு ஓரிடத்தில் இடித்து நின்றது. இடித்த பொருள் அவன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஓலைச்சுவடிகள்!சட்டென இருவரும் நடப்புக்கு வந்தார்கள். அக்கணத்தில் இருவர் மனங்களிலும் தாண்டவமாடியது வெறுப்பு என்னும் உணர்ச்சிதான். கரிகாலன் உள்ளத்தில் ஏற்பட்டது சூழ்நிலை அவளுக்கு எதிராக இருப்பதால் ஏற்பட்ட வெறுப்பு; இவ்வளவுக்கு இடம்கொடுத்து நெருக்கமானபின்பும் தன்னை இன்னும் நம்பாமல் சந்தேகத்தின் சாயையுடனேயே அணுகுகிறானே என்ற குமுறலில் தன்மீதே சிவகாமிக்கு வெறுப்பு.இரண்டுவித வெறுப்புக்கும் ஆளான இருவரும் ஒரேசமயத்தில் பெருமூச்சு விட்டார்கள்.

காபாலிகன் திரும்பி வருவதற்குள் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிடலாம் என முடிவெடுத்து ‘‘சிவகாமி...’’ என்றழைத்தான் கரிகாலன்.அவள் உள்ளம் பலவித உணர்ச்சிகளுக்கு இலக்காகி நின்றதால் பதிலேதும் சொல்லாமல் மவுனமாக நின்றதுடன் தன் இடையிலிருந்த கரிகாலனின் கரங்களையும் மெல்ல விலக்கினாள்.

இச்செயலில் இருந்தே அவள் உள்ளத்தில் மூண்டெழுந்த கோபத்தை ஊகித்துக்கொண்ட கரிகாலன், அவளை வழிக்குக் கொண்டு வர வேறொரு தந்திரத்தைக் கையாள முயன்றான்.‘‘உன்னை எப்படிக் கண்டறிந்தேன் என்று கேட்கவில்லையே?’’‘‘அதற்கு அவசியமில்லை...’’ என்றபடி புரண்டாள். அவன்மீதுதான்!‘‘அவசியமில்லையா..?’’ கரிகாலன் ஆச்சர்யப்பட்டான்.‘‘இல்லை...’’ அழுத்தமாகச் சொன்னாள்.‘‘ஏன்..?’’

‘‘நிழலின் கால் நிழல் அறியும்!’’
‘‘அதாவது..?’’
‘‘உங்களை விட்டு நான் விலகுவதுமில்லை...’’

‘‘...உன்னைக் கைவிடுவதுமில்லை!’’ அவள் ஆரம்பித்த வாக்கியத்தை கரிகாலன் முடித்ததுடன் அவளை இறுக்கவும் செய்தான். அத்துடன் அவள் கேசத்தைக் கொத்தாகப் பிடித்து வதனத்தை உயர்த்தி நயனங்களை உற்றுப் பார்த்தான்.‘‘தேடியது கிடைத்ததா..?’’ அசையாமல் கிண்டலாகக் கேட்டாள்.

‘‘வேண்டிய அளவுக்கு!’’
‘‘அது என்ன என்று அறியலாமா..?’’
‘‘அறியவேண்டியவள் அறிந்துதானே ஆகவேண்டும்..?!’’
‘‘எனில் சொல்வதுதானே..?’’
‘‘என்னை விட்டு விலகுவதில்லை என்றாய்...’’
‘‘ஆம்...’’‘‘இதன் பொருள் என்னவென்று தெரியுமா..?’’

‘‘பின்தொடர்வேன் என்று அர்த்தம்! அதனால்தானே சுரங்கம் வழியாக நீங்கள் வருவீர்கள் என்று ஊகித்து காஞ்சிக்கு வெளியே சென்று சுரங்கத்தின் அந்தப்பக்க வழியாக நுழைந்தேன்! நான் சென்றதை உப்பரிகையின் வழியே நீங்களும்தானே கண்டீர்கள்...’’
புருவத்தை உயர்த்திய சிவகாமி, அவன் குறுக்கிட முற்படுவதை அறிந்து, தானே பேச்சைத் தொடர்ந்தாள். ‘‘எப்படி சுரங்கத்தின் வழியே நான் வெளியேறுவேன் என்று கணக்கிட்டாய் என்றுதானே கேட்க வருகிறீர்கள்..?’’

இமைக்காமல் அவளையே கரிகாலன் புன்னகையுடன் பார்த்தான்.
‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்தான் குறிப்பால் உணர்த்தினார்!’’வாய்விட்டுச் சிரித்தான் கரிகாலன்.‘‘ஏன்... நம்பவில்லையா..? பாலகன் சொன்னால் நம்புகிறீர்கள்! காபாலிகன் சொன்னால் பாலகன் நம்புகிறான்! நான் சொன்னால் மட்டும் ஏன் சிரிக்கிறீர்கள்..?’’பதிலேதும் சொல்லாமல் அவள் அதரங்களைத் தன் உதட்டால் மூடினான். சிவகாமி விலகவுமில்லை... பதிலுக்கு ஒத்துழைக்கவும் இல்லை. இணைந்து அவளை வினையாற்றும்படி அவனும் செய்யவில்லை!

உமிழ்நீரைப் பருகாமல் அதரங்களை மட்டும் தன் உதட்டால் ஒற்றிவிட்டு விலக்கினான்! ‘‘சிற்ப சாஸ்திரம் கற்றிருக்கிறாயா..?’’
‘‘அதையும்! குறிப்பாக சார்வாகனர்களின் சிற்ப சாஸ்திரத்தை! இல்லாவிட்டால் உடன் இருந்தே பல்லவர்களை வீழ்த்த எப்படி திட்டமிட முடியும்..?’’
‘‘அதைத்தான் நான் நம்பவில்லையே?’’

‘‘நம்புகிறேன் நீங்கள் சொல்வதை!’’ என்றபடியே அவன்மேல் அசைந்தாள். அவன் இடுப்பில் இருந்த ஓலைச் சுவடிகளைத் தன் சரீரத்தால் அசைய வைத்தாள்!‘‘இந்தச் சுவடிகள் எதற்குத் தெரியுமா..?’’‘‘பூஜை செய்ய!’’‘‘ஆம்... பூஜை செய்யத்தான். சுவடிகளால் உன்னை! அதற்கு நீ திரையை விலக்கி வெளியே வரவேண்டும்!’’‘‘நமக்குள் திரை இருக்கிறதா என்ன..?’’ சிவகாமி நகைத்தாள்.
‘‘புறத்தில் அல்ல..!’’

‘‘பின்... அகத்திலா..?’’
‘‘ஆம்! என்னைவிட்டு விலகுவதில்லை என்று சொல்லிவிட்டு ஒன்றாமல் இருக்கிறாயே!’’
சிவகாமி இமைகளை மூடினாள். எப்படிப்பட்ட வீரனும் அசடனாகும் தருணம் காதல் மொழியைப் பேசும்போதுதான். பெண்ணும் இதற்கு விதிவிலக்கல்ல. இலக்கை எட்ட காய்களை நகர்த்தும் விதமாக தொடர்பே இல்லாமல், அதேசமயம் இருவருக்கு மட்டுமே புரியும் அர்த்தத்துடன் காதல் வயப்பட்டவர்களால் மட்டுமே உரையாட முடியும்!

விவரமறிந்த ஆணும் பெண்ணும் பேசும்போது ஏற்படும் இதுமாதிரியான சங்கடங்கள் இறுதியில் மவுனத்தையே விளைவிக்கும்! பற்களால் தன் கீழுதட்டைக் கடித்தாள். இந்த மவுனத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்ட கரிகாலன், கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தான்.‘‘ஒன்றலாமா..?’’

‘‘தாராளமாக! பல்லவர்களின் விசுவாசியும் பல்லவர்களின் துரோகியும் பல்லவ சுரங்கத்தில் ஒன்றலாம்!’’

அவள் பேச்சு கோபமாகத்தான் இருந்தது. ஆனால், குரலில் கோபத்துடன் ஆசையும் கலந்திருந்ததை கரிகாலன் கவனித்தான்.

பெண்களின் இயல்பு அது. அவர்கள் ஆசைக்குக் கோபம் ஒரு மெல்லிய திரை. அதை ஆண் மகன் கிழித்து பலவந்தமாக உள்ளே நுழைய வேண்டும் என்பது அவர்கள் எண்ணம் எழுப்பும் அவா. இந்த பலவந்தத்தில்தானே இருவரும் இன்பத்தைக் காண்கிறார்கள்!
எட்டும் பழத்தை விட எட்டாத பழத்துக்கு இனிப்பு அதிகம்! முயற்சியின் கஷ்டம் அதற்குள்ள மதிப்பை பல மடங்குகளாக அதிகரிக்கிறது! பிணக்கின் தத்துவமே இதுதான்!

இதை உணர்ந்திருந்த கரிகாலன், சாளுக்கிய மன்னரை மறந்தான். தன்னைச் சிறைசெய்யக் காத்திருக்கும் ராமபுண்ய வல்லபரை மறந்தான். தன்னை வெளியேற்ற தன்னையே பணயம் வைத்த பாலகனை மறந்தான்.அவனும் அவளும் அப்போதிருந்தது தனி உலகம்! வேறு யாருமே இல்லாத ஓர் இன்ப உலகம்!இன்னும் கொஞ்ச நேரம் அவகாசம் இருந்திருந்தால் அந்த உலகம் பெரிதும் விரிவடைந்திருக்கும்!

ஆனால், அந்த உலகத்துக்குள் காபாலிகன் தடதடவென்று நுழைந்தான். உண்மையில் எப்படி பூனை போல் அகன்றானோ அப்படித்தான் இப்போதும் திரும்பினான், வீரர்கள் இல்லாமல் தனியாக. என்ன... அவன் சாதாரணமாகத் திரும்பியது அவர்கள் இருவருக்கும் தடதடவென என்றிருந்தது! சிவகாமி சட்டென எழுந்து நின்றாள். கலைந்திருந்த தன் ஆடைகளை திரும்பி நின்று இருளில் சரிப்படுத்தினாள்.

‘‘என்ன..?’’ சீறினான் கரிகாலன்.
‘‘நேரமாயிற்று...’’ சிரிப்பை காபாலிகன் விழுங்கினான்.
‘‘அதற்கு..? இன்னும் முடியவில்லையே!’’
காலால் அவனை சிவகாமி எட்டி உதைத்தாள்!
‘‘அம்மா!’’ என்று அலறினான் கரிகாலன்.
விழுங்காமல் வெடித்துச் சிரித்தான் காபாலிகன்.

‘‘கிளம்பலாம்...’’ அதட்டினாள்.
‘‘எங்கு..?’’ கேட்ட கரிகாலனின் குரலில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.
‘‘காஞ்சிக்கு!’’ சிரித்துக் கொண்டிருந்த காபாலிகனைக் கண்களால் எரித்தபடி சிவகாமி பதில் சொன்னாள்.

‘‘அங்கு எதற்கு..?’’
‘‘பணியை முடிக்க!’’

‘‘என்ன வேலையோ..?’’ எழுந்து நின்று தன் உடைகளை மணல் போகத் தட்டியபடி கரிகாலன் கேட்டான்.அதற்கு சிவகாமி சொன்ன பதில் அவனை மட்டுமல்ல... உடன் இருந்த காபாலிகனையும் அதிரவைத்தது.  ஏனெனில் கரிகாலன் தன் மனதில் திட்டமிட்டிருந்ததை அப்படியே சொற்களாக உதிர்த்தாள்.‘‘காஞ்சி சிறையிலிருக்கும் உங்கள் தந்தையை மீட்க!’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்