நேருவை விட பாகவதருக்கு கூட்டம் அதிகம்!



எம்.கே.டி ரசிகர் சொல்லும் சீக்ரெட்

தமிழ்த் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். தனது கந்தர்வ குரலால் தமிழக மக்களைக் கட்டிப்போட்டவர். இசையுலகின் பொக்கிஷமாகத் திகழ்ந்த அவரைப்பற்றிய விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார் டி.வி.பாலகிருஷ்ணன்.

‘எம்.கே.டி : இசையும் வாழ்க்கையும்’ என்ற  புத்தகத்தையும், பாகவதர் பாடிய 120 பாடல்கள் அடங்கிய  சி.டி.யையும் அண்மையில் வெளியிட்டு அவரது ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்துள்ளார். 80 வயதிலும் அன்றைய நிகழ்வுகளைப் பிசகு இல்லாமல் அசைபோடுகிறார்.
‘‘சொந்த ஊர் மதுரை. அப்பா கஸ்டம்ஸ்ல இருந்தார். அம்மாவும், தாத்தாவும் நல்லா பாடுவாங்க. அவங்களுக்கு ராகங்கள் எல்லாம் அத்துப்படி. ஒரு நாள் தாத்தா என்னை பாகவதர் நடிச்ச ‘அசோக்குமார்’ படத்துக்குக் கூட்டிட்டுப் போனார்.

அப்ப எனக்கு நாலு வயசு. ‘என்னமா பாடுறான்… இந்தப் பாட்டு கல்யாணி ராகம்… இந்தப் பாட்டு பைரவி ராகம்...’ என்று படம் பார்க்கும்போது தாத்தா சொல்லிக்கொண்டே இருந்தார். எனக்கு அந்த வயசுல ராகம் எல்லாம் எப்படித் தெரியும்? நானும் மண்டையை ஆட்டிப்பேன்.
ஆனால், பாகவதரின் குரலில் ஏதோவொரு மாயம் இருந்துச்சு. அது எனக்குப் பிடித்துப்போய்விட்டது.

வளர வளர அவர் நடித்த ஒவ்வொரு படத்தையும் பார்க்க ஆரம்பிச்சேன். பாகவதர் பாடிய பாடல்களின் ராகமும் பிடிபட ஆரம்பிச்சது. யாராவது ஒரு பாடலைப் பாடினால் அது பாகவதர் பாடிய இந்த இராகத்தில் இருக்குதுன்னு சொல்ற அளவுக்கு பாகவதர் பற்று எனக்குள் வளர்ந்துவிட்டது...’’என நெகிழ்கிற பாலகிருஷ்ணன் ஐந்து வயதிலிருந்து பாகவதரின் படங்களைத் தேடித் தேடிப் பார்த்திருக்கிறார்.

‘‘பாகவதரின் படங்களைப் பார்க்க ஒரு மோன நிலை வேண்டும். விசிலும் கூச்சலும் போட்டால் அவற்றை ரசிக்க முடியாது. காரணம், அவர் புகழ்பெற்றதே பாடல்களுக்காகத்தான். பாடல் ஒலிக்கும்போது தியேட்டரே மயான அமைதியில் இருக்கும். ரசிகர்கள் மயக்க நிலைக்குத் தள்ளப்படுவார்கள். தியேட்டரில் பாகவதரின் ரசிகர்கள் மெளன சாமியார்கள் போலவே இருப்பார்கள். அவரின் பாடல்களில் மயங்கியும், அவர் உருவம், அழகு, வசீகரத்துக்காகவும் தனிக்கூட்டமே இருந்தது. அதுவும் பெண்களிடம் ஒரு கிரேஸ் இருந்தது.

‘ஹரிதாஸ்’ 142 வாரங்கள் ஓடியது. அவரின் படங்கள் எல்லாமே ஹவுஸ் ஃபுல்லாகத்தான் ஓடும். ‘ஹரிதாஸை’ப் போல அவரது முந்தைய படங்களும் பல தீபாவளிகளைக் காணாவிட்டாலும் ஒரு தீபாவளியையாவது கண்ட படங்களே...’’ என்றவர் சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

‘‘1947ல் சிறையிலிருந்து விடுதலையானபின்சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் பாகவதர் பாடிக்கொண்டிருந்தார். அப்போது டிக்கெட் வாங்கி உள்ளே போகும் அளவுக்கு எனக்கு வசதியில்லை. வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அவரின் குரலும் முகமும் ஒரு வசீகரத்தைக் கொடுத்தது. முதன் முதலாக ‘அசோக்குமார்’ படம் பார்த்த ஞாபகத்தை அந்தக் கச்சேரி கிளறிவிட்டது.

இதன் பிறகு அவர் எங்கே கச்சேரி செய்தாலும் முதல் ஆளாக போய் நிற்பேன். அவரது படங்கள் எங்கே ரீ ரிலீஸ் செய்தாலும் முதல் ஆளாகப் போய் பார்ப்பேன். 1952ல் பாகவதர் அடையாறு பக்கத்தில் வசித்து வந்தார். நானும் சில நண்பர்களும் கிரிக்கெட் மட்டையோடு பாகவதரின் வீட்டுக்குப் போனோம். அப்போது அவரது வீட்டில் சில சினிமா நபர்கள் இருந்ததாக நினைவு.

பாகவதர் குளித்துக்கொண்டிருக்கிறார் என்று தகவல் வந்தது. சில மணித்துளிகளில் அவர் குளித்த தலையைத் துடைத்துக்கொண்டே வெளியே வந்தார். உதவியாளர் நாங்கள் வந்திருப்பதை அவருக்கு தெரிவித்திருக்கிறார். எங்களை வந்து பார்த்தபாகவதர் ‘என்ன வேண்டும்..?’ என்று கேட்டார். ‘கிரிக்கெட் பால் வாங்க பணமில்லை... கொஞ்சம் பணமிருந்தால் விளையாட வசதியாயிருக்கும்...’ என்றோம்.

தன் ஜிப்பா பையிலிருந்து பத்து ரூபாய் எடுத்து எங்களிடம் கொடுத்தார். இதற்கிடையே ஒரு நண்பன் என்னைக் காட்டி ‘இவன் உங்களின் தீவிர ரசிகன்...’ என்று போட்டுக் கொடுத்தான். ‘அப்படியா...’ என்றவர் என்னைப் பாடச் சொன்னார்.

நானும் ஒரு பாடலைப் பாடிக் காண்பித்தேன். ‘நன்றாக இருக்கிறது... பாட பயிற்சி எடுத்துக்கொள்...’ என்று அட்வைஸ் செய்தார்...’’ பசுமையான நாட்களை நினைவுகூர்ந்த பாலகிருஷ்ணன், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாகவதரின் சிறை வாழ்க்கையையும், வெளியே வந்த பிறகு அவருக்கு நேர்ந்ததையும் பகிர்ந்தார்.

‘‘‘ஹரிதாஸு’க்குப் பிறகு பல தயாரிப்பு நிறுவனங்கள் அவரின் வீடு தேடி வந்து பணத்தைக் கொட்டின. ஆனால், ‘ஹரிதாஸு’க்குப் பிறகு அவர் சிறையில் இருக்கவேண்டிய நிலை. அட்வான்ஸ் கொடுத்த நிறுவனங்கள் சிறையில் போய் அவரின் சட்டையைப் பிடிக்க ஆரம்பித்தன.  

‘வதன்’, ‘நம்பியாண்டார் நம்பி’, ‘ராஜயோகி’, ‘மோகினித்தீவு’, ‘பக்தமேதா’ போன்ற பல படங்கள் பூஜையோடு நின்றுவிட்டன. தயாரிப்பாளர்கள் அவரின் கழுத்தை நெரிக்க, தன் தம்பியைக் கூப்பிட்டு சொத்துகளை விற்று கடன்களைத் திருப்பிச் செலுத்தினார்.

இதனால்தான் வெளியே வந்தபிறகு அவருக்கு சினிமா உலகம் கசந்தது. பாகவதர் கடைசி காலத்தில் பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்தார் என்று எல்லாம் பலர் எழுதுகிறார்கள். பாகவதரின் சிறைக்குப் பின்னான வாழ்க்கை தாழ்ந்து போனதே தவிர இவர்கள் சொல்லும்படி இல்லை என்பதே நான் கண்ட உண்மை...’’ என்றவர் பாகவதரைப் பற்றிய சில சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் பட்டியலிட்டார்.

‘‘திருச்சிக்கு ஒருமுறை நேரு வந்திருந்தார். பாகவதர் குடியிருக்கும் தெரு வழியாகத்தான் நேரு போகவேண்டிய சூழ்நிலை. அப்போது காமராஜரும் அவருடன் வருவதாக இருந்தது. ‘நேருவை என் வீட்டுக்கு அழைத்து வரமுடியுமா..?’ என்று காமராஜரிடம் பாகவதர் கேட்டிருக்
கிறார். ‘என்னால் முடியாது... சாமர்த்தியம் இருந்தால் நீங்களே முயற்சிக்கலாம்...’ என்றிருக்கிறார் காமராஜர்.

யோசித்த பாகவதர்,  சிறுவர்களைக் கூட்டி வந்து தன் வீட்டுக்கு முன் தேசிய கீதம் பாட வைத்திருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த நேரு சில நிமிடம் அங்கேயே நின்று அந்தச் சிறுவர்களுக்கு சல்யூட் அடித்திருக்கிறார். உடனே பாகவதர் ஓடிச்சென்று நேருவுடன் காரில் ஏறி புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

‘என்ன நமக்கு இவ்வளவு கூட்டம்...’ என்று காமராஜரிடம் விசாரித்திருக்கிறார் நேரு. ‘இந்தக் கூட்டம் நமக்கில்லை... பாகவதருக்கு!’ என்று காமராஜர் சொன்னதாகச் சொல்வார்கள். இதே மாதிரி பாகவதர் பயணிக்கிற ரயில் 4 அல்லது 5 மணி நேரம் தாமதமாகத்தான் ஊர் போய்ச்சேரும். காரணம், பாகவதர் ரயிலில் வருகிறார் என்றால் மக்கள் தண்டவாளத்தில் போய்படுத்துவிட்டு அவரின் தரிசனம் கிடைத்தபின்தான் ரயிலைப் போகவிடுவார்களாம்...’’ என்ற பாலகிருஷ்ணன் சில கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

‘‘பாகவதர் நடித்த ‘ராஜ முக்தி’, ‘சத்தியசீலன்’, ‘நவீன சாரங்கதாரா’ படங்களைக் காணவில்லை. ‘பவளக்கொடி’ புனேயில் உள்ள ஆவணக் காப்பகத்தில் உள்ளது. இதேபோல அவரின் 50 பாடல்கள் தொலைந்திருக்கலாம்.

மேற்கு உலகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் ஆரம்ப கால படங்களை எல்லாம் பாதுகாத்து வருகிறார்கள். ஆனால், தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான பாகவதரின் படங்களையும் அவரின் சாதனைகளையும் நம்மால் காப்பாற்றக் கூட முடியவில்லை. இதைத் திருத்தி அமைக்கும் போதுதான் தமிழ்த் திரைப்பட உலகம் ஒரு நிஜமான புகழுக்கு உரியதாக மாறும்...’’ ஆதங்கத்துடன் சொல்கிறார் பாலகிருஷ்ணன்.

படங்கள் உதவி: ஞானம்

டி.ரஞ்சித்

ஆர்.சி.எஸ்.