சர்வம் தாளமயம்இசைக்கருவியை உருவாக்கியவனே, அதில் வித்தை கற்று முன்னெடுப்பதே ‘சர்வம் தாளமயம்’.மிகவும் சராசரி வாழ்க்கை வாழ்ந்துகொண்டு மிருதங்கம் செய்து, அதை பராமரித்தும் வருகிறார் குமரவேல். அவரது மகன் ஜி.வி.பிரகாஷ். ஒரு நடிகரின் ரசிகனாக இருப்பதைத் தவிர வேறு எதையும் உருப்படியாகச் செய்யாத மகன்.

யதேச்சையாக மிருதங்கத்தை வித்வான் நெடுமுடிவேணுவிற்கு சபாவிலேயே கொண்டு போய் தர, எதிரே கூடின கூட்டத்தையும், மிருதங்கத்தில் வேணு போடுகிற விரல் ஆட்டத்தையும் பார்த்து தானே மிருதங்க வித்வான் ஆக ஆசைப்படுகிறார். பிறகான சமயங்களில் அவரது சாதி, சூழல்களால் அவரை அந்த இடத்திற்கு வர விடாமல் தடுக்க முயற்சி நடக்கிறது. எல்லாம் கடந்து ஜி.வி.பிரகாஷ், தான் நினைத்ததை சாதித்தாரா என்பதே மீதிக்கதை.

நம்ப முடியாது. ஆனாலும் உண்மை. மிருதங்கம் கற்கத் துடிக்கும் பீட்டர் ஜான்சனாக அவ்வளவு அழகாக உயிர் தருகிறார் ஜி.வி.பிரகாஷ். விளையாட்டாக முதல்நாள், மேடையில் மிருதங்கம் வாசிக்கப்படும் விதத்தை கவனிக்கிற துறுதுறுப்பு, ஆச்சரியம், உற்சாகம் அத்தனையும் அந்த சிறு கண்களில் அப்படியே பிரகாசிக்கிறது. நடித்து, நடித்து பழக்கம் கைவந்து அருமையான இடத்தில் வந்து நிற்கிறார்.

டைரக்டர் ராஜிவ்மேனனுக்கு கம்பேக் வெல்கம். மிக மிக எளிமையான ட்ரீட்மென்ட். ஆனால், அவ்வளவு வலிமையான உணர்வுகளைப் புகுத்திய விதத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். இசையுலகில் இருக்கிற பல விவாதத்திற்கான விஷயங்களை உண்மைக்கு நெருக்கமாக

ஊர்வலம் விட்டிருக்கிறார்.

ஜி.வி.யின் அப்பாவாக குமரவேல் அருமையான வார்ப்பு. கால்களை உயர்த்தி கூட்டி வைத்து, மிருதங்கம் வேலை பார்க்கும் இடமெல்லாம் அவ்வளவு துல்லியம். ஒவ்வொரு தடவையும், முகத்தில் அமைதியுடன் சத்தமின்றி பேசிவிட்டு நம்மையும் யோசிக்க வைக்கிறார் நெடுமுடிவேணு. துளி மிகை இல்லாத நடிப்பு அவருக்கு காலம் காலமாக வழி வந்திருக்கிறது.

குருவிடமே இருந்து குடைச்சல் தருபவராக வினித். இப்போது அனுபவத்திலும், வயதிலும் முதிர்ச்சியுடன் கூடிய தேர்ச்சி. காதலியாக அபர்ணா அலுங்காத, நலுங்காத நடிப்பு! சிக்கில் குருச்சரண், உன்னி, னிவாஸ் கேரக்டர்களாகவே இயற்கைத்தன்மை.

பாடல்களிலும், பின்னணியிலும் ஆகச்சிறந்த உயிர்ப்பு தருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அவருக்கான இடங்களில் அதிகபட்சம் உழைத்திருப்பது கண்கூடு. சக
பயணியாகவே பயணிக்கிறது ரவியாதவின் கேமிரா. விஜய் ரசிகர்களின் குத்தாட்டத்தில் சேர்ந்து ஆடும் காமிரா, சீரியஸ் ஆன நெடுமுடிவேணுவிடம் பவ்வியம் கொள்கிறது.

எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் எடுத்துக் கொண்டு பேசுகிறது படம். இசையை பின்னணியாக வைத்து கதைப்பின்னலும், நடுநடுவே தலைநீட்டும் மிருதங்க வடிவங்கள் அத்தனையும் உத்தமம்.  சகலருக்குமான நல்ல தாளம்.

குங்குமம் விமர்சனக் குழு