பேரன்பு



ஒவ்வொரு குழந்தையின் பிறப்பிலும் ஓர் இசைக்குறிப்பு தோன்றுகிறது... ஒரு மேகம் உருவாகிறது... ஒரு நட்சத்திரம் பிறக்கிறது... சொர்க்கத்தில் ஒரு ஜன்னல் திறக்கிறது என்பார்கள். அப்படி ஒன்றையும் தன் குழந்தையின் பிறப்பில் பார்க்க இயலாத ஒரு தகப்பனின் வாழ்க்கையில் மகள் பயணப்படும் கதை. இனி இப்படியான குழந்தைகளைப் பார்க்கும்பொழுதெல்லாம் நெஞ்சம் பதறவைக்கும் ‘பேரன்பு’.

மானுடத்தின் தேவையான பேரன்பை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளும் கதையை எடுக்கத் துணிந்த அழகிற்கே ராமிற்கு தமிழ் சினிமா தலை வணங்கும். ஊழ்வினையா? விதியா? விதிக்கப்பட்டதா? இப்படியெல்லாம் போகவேண்டாம். மூளை முடக்குவாதத்தில் பாதிக்கப்பட்ட பிரிய மகளிடமிருந்து ப்ரியம் பெற்று, செலுத்தி போராடுகிற கதை. பேரன்பு அழைப்பு அல்ல. பெறக்கூடியது, உணரவும் கூடியது என்ற படிப்பை வேர்கள் பரவிச் சொன்ன வகையில் ராமிற்கு வந்தனம்.

அம்மா சலித்து ஒதுங்கிப்போன, அப்பாவும் தாமதித்து ஏற்றுக்கொண்ட பெண் குழந்தையின் அத்தியாயங்கள் தன்னந்தனியான வீட்டில் தொடங்குகின்றன. அவர்கள் அங்கே இருப்பதற்கான அத்தனை சூழலும் நமக்கு அடுத்தடுத்து புரிந்துவிடுகிறது.

மம்முட்டி தன் நடிப்புலக அனுபவத்தின் சாரத்தை தருகிறார். எப்போதும் அவர் முகத்தில் ஆழப்படிந்திருக்கும் விரக்தியும், மகளின் சில கணநேர விருப்ப மாறுபாடுகளில், அந்த விரக்தி விடைபெறுவதுமாக நிலைநின்றிருப்பது அழகு.

படம் முழுக்க அவ்வளவு நுணுக்கங்கள். தன் மகள் பருவத்தின் பிடிக்குள் வந்துவிட்டதை உணரும் தருணம்... குழப்பமும், பயமும், பதற்றமும், அரற்றி தவிக்கும் இடமெல்லாம், மம்முட்டி மனசை அள்ளுகிறார்.

ஒரு வார்த்தை பேசமுடியாமல் கண்கள் இரண்டால் மட்டுமே பேசுகிறார் சாதனா. அந்தப்பார்வையிலேயே வெறுப்பு, அன்பு, வேதனை, இயலாமை என அனைத்தையும் பிரதிபலிப்பது... வெல்டன் சாதனா!அஞ்சலி, அமைதியாக வீட்டின் உள்ளே நுழைந்து, ஆக்ரமிக்கிறார். திருநங்கை அஞ்சலிஅமீர் அபூர்வ ரகம். அவரையும் ஞாபகத்திலிருந்து பிரிக்க முடியவில்லை.

இயற்கையே பிரதானமாக இருக்கும் இடத்தில் தேனி ஈஸ்வரின் காமிரா நெருக்க உணர்வைத் அள்ளித்தருகிறது. பிறகு உள்ளே போய் வேதனையையும், அன்பையும், இடர்களையும் நேர்த்தியாக பகிர்ந்து கொள்கிறது.

இவ்வளவு காலம் மறைந்திருந்த யுவன் ஷங்கர்ராஜா பின்னணியில் முன்னணிக்கு வருகிறார். சில தருணங்களில் யுவனும், ஈஸ்வரும் சேர்ந்து வேறு எல்லையில் நிற்கிறார்கள். ‘பூ’ ராமு, சண்முகராஜன், கொஞ்ச நேரமே வந்தாலும் சமுத்திரக்கனி என பலரும் படைப்பில் எழுந்து நிற்கிறார்கள்.

வைரமுத்து, கருணாகரனின் பாடல்களில் கூர்மையும் பொருளும் தெறிக்கின்றன. விரட்டிச் செல்லாத அமைதியில் சூரியபிரதமனின் எடிட்டிங் நிறைவு.
சினிமாவை அன்பிற்காகவும் கருணை வேண்டியும் பயன்படுத்துவது பெரும் ஆறுதல்.  

குங்குமம் விமர்சனக் குழு