நியூஸ் வியூஸ்



#NoMo Jobs!

இப்போதைய ஆண்ட்ராய்ட் தலைமுறை இளைஞர்களுக்கு சத்தியமாக அந்த சூழல் தெரியாது. ஆனால், 50 + ஆட்களுக்கு நினைவிருக்கக்கூடும். ஏனெனில் எழுபதுகளின் இறுதி, எண்பதுகளின் தொடக்கக் காலக்கட்டம் அது. ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘நிழல்கள்’, ‘பட்டம் பறக்கட்டும்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ மாதிரி சினிமாக்கள் வந்த காலம் அது.

படித்துவிட்டு வேலை கிடைக்காத இளைஞர்களின் கதைகள் அப்போது அவ்வளவு இருந்தன. நாடகம், சிறுகதை, நாவல், சினிமா, டிவி என்று எல்லா கதை சொல்லும் வடிவங்களுமே பட்டதாரிகளின் அவலங்களைப் பேசிக்கொண்டிருந்தன.ஒரு படத்தின் கிளைமேக்ஸில் பட்டதாரி ஹீரோ, தான் படித்து வாங்கிய பட்டத்தால் எந்தப் பயனும் இல்லையென்று, பட்டச் சான்றிதழையே பட்டமாக்கி பறக்கவிடுவார்!மீண்டும் அந்த காலக்கட்டத்துக்கு போய்விட்டோமோ என்று அச்சம் வருகிறது.

பின்னே?
தலைமைச் செயலகத்தின் துப்புரவுப் பணிக்கு பட்டதாரிகளில் தொடங்கி டாக்டரேட் வாங்கியவர்கள் வரை சகலரும் விண்ணப்பிக்கிறார்களே?
நாடு முழுக்க வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்கு இச்செய்தி ஒரு சோறு பதம்.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் வேறு வயிற்றில் புளியைக் கரைக்கிறது.இந்தியாவில் ஒரு கோடியே 86 லட்சம் பேருக்கு வேலை இல்லையாம். இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக மேலும் 30 லட்சம் பேர் இந்த எண்ணிக்கையில் சேருவார்கள் என்று பகீர் ஜோசியம் வேறு சொல்கிறது.

டிஜிட்டல் இந்தியா பிறக்கும் என்று வாக்குறுதி கொடுத்த அரசு, கடைசியில் ஜாப்லெஸ் இந்தியாவைத்தான் உருவாக்கியிருக்கிறது.வேலைவாய்ப்பு நிலைமையில் 1970களின் தொடக்க நிலைக்கு போய்விட்டோம் என்று  தலையில் அடித்துக் கொள்கிறது நேஷனல் சாம்பிள் சர்வே அலுவலகம் (NSSO).

முன்னதாக இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு அமைப்பு (CMIE), 2017ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டுமே சுமார் 15 லட்சம் பேருக்கு வேலை போனது என்கிற தகவலைத் தெரிவித்திருந்தது.இதிலிருந்து தெரிவது என்னவென்றால், ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்கிற அறிவிப்பால், ரிசர்வ் வங்கிக்கு கருப்புப் பணம் பல்லாயிரம் கோடி வந்து சேர்ந்ததோ இல்லையோ, கோடிக்கணக்கானோர் வேலை இழந்ததற்கு அது ஒரு காரணமாக இருந்திருக்கிறது!

தேசிய புள்ளியியல் ஆணையம் (National Statistical Commission), இந்த வேலையில்லாக் கொடுமையைப் பற்றி எடுத்திருக்கும் புள்ளிவிவரங்களை, பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில் வெளியிட அரசு மறுத்திருக்கிறது. மக்களுக்கு வெளிப்படையாக  இருக்கவேண்டிய தாங்களே பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் மன உளைச்சல் தாங்காமல் அந்த ஆணையத்தின் இரு உறுப்பினர்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டார்கள்.

இந்த  சர்வே ஜூலை 2017ல் தொடங்கி ஜூன் 2018க்குள் எடுக்கப்பட்டதாம். அரசு இந்த  புள்ளிவிவரத்தை அப்படியே அமுக்கப் பார்க்க, ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’  பத்திரிகை எப்படியோ கைப்பற்றி மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி விட்டது.நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் இதை மறுக்கவில்லை. ஆனால், “இது  முழுமையான தகவல் இல்லை. மார்ச் மாத வாக்கில் துல்லியமான தகவல்  சொல்கிறோம்...” என்கிறார்.

அதாவது, அமைதிப்படை மணிவண்ணன் கணக்காக  இன்னும் ‘சுல்தான்பேட்டை பொட்டியை தொறக்கலை’ மாதிரி பதில் சொல்கிறார்.  2018ன் பிற்பகுதியிலும், 2019ன் தொடக்க மாதங்களிலும் மட்டும் இவர்கள்  கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறார்களா என்ன?காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தன் தேர்தல் அஸ்திரமாக இந்தப் பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார்.

“2017 - 18ஆம் ஆண்டில் மட்டும் ஆறரைக் கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். கடந்த 45 ஆண்டுகளில் இதுவே மிகவும் மோசமான நிலவரம். கடந்த தேர்தலில் வருடத்துக்கு இரண்டு கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதாக வாக்குறுதி கொடுத்துதான் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் ஏற்கனவே வேலையில் இருந்தவர்களும் வேலையில்லாதவர்களாக ஆகியிருக்கிறார்கள்...” என்று ராகுல் சொல்கிறார்.

தேர்தலுக்கு இன்னமும் 100 நாட்கள் கூட இல்லை. 2019, பாராளுமன்றத் தேர்தலில் 13 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் முதன்முறையாக வாக்குரிமை பெற்று வாக்களிக்க இருக்கிறார்கள். கடந்த 2014ல் வாக்களித்த இளைஞர்களையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொண்டோமானால் இந்த எண்ணிக்கை 30 கோடி வாக்குகளாக இருக்கும்.

ஒட்டுமொத்தமாக 85 கோடிப் பேர் வாக்களிக்கப் போகும் தேர்தலில், இளைஞர்களின் வாக்கே அடுத்து நம்மை ஆளப்போகும் கட்சியை நிர்ணயிப்பதில் பிரதான இடம் வகிக்கப் போகிறது.இந்த நூறு நாட்களுக்குள்ளாக என்ன மேஜிக் செய்து, தன் கட்சியை பிரதமரால் கரையேற்ற முடியும்..?தெரியவில்லை. ஒருவேளை மலையைக் கயிறு கட்டி இழுக்கலாம்.
        
நியூயார்க் டைம்ஸ் கிண்டல்!

அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழ், வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த சர்வேக்களை மோடி அரசு வெளியிடாமல், மக்களை ஏமாற்றி தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்று கிண்டல் அடித்திருக்கிறது.இந்தியர்கள் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ள இரண்டு காரணங்களை அந்தக் கட்டுரையில் ‘நியூயார்க் டைம்ஸ்’ குறிப்பிடுகிறது.

ஒன்று, சாதாரண மக்களின் இன்னல்களைப்பற்றிக் கவலைப்படாமல் படுமோசமான முறையில் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை.இரண்டு, வம்படியான முறையில் கொண்டுவரப்பட்ட ஒற்றைமுனை வரி (GST) விதிப்பு திட்டம். இதனால், சிறுவணிகர்கள் நிலைகுலைந்து ஏராளமான பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஒருவேளை இந்த இரு நடவடிக்கைகளையும் எல்லாத் தரப்பையும் ஆராய்ந்து, தேவையான கால அவகாசம் கொடுத்து நடைமுறைக்குக் கொண்டு வந்திருந்தால் கொத்து கொத்தாக லட்சக்கணக்கானோர் வேலையிழந்திருக்க மாட்டார்கள் என்று அப்பத்திரிகை குறிப்பிடுகிறது.

உலக வங்கி சப்பைக்கட்டு!

உலக வங்கியின் தாளத்துக்குத்தான் இந்தியப் பொருளாதாரம் ஆடிக் கொண்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டை நீண்டகாலமாகவே கம்யூனிஸ்டுகள் சொல்லி வருகிறார்கள்.அதற்கேற்ப, இந்திய அரசுக்கு ஏதேனும் பிரச்னையென்றால் அதற்கு சப்பைக்கட்டு கட்டுவதில் பிரதமரைக் காட்டிலும் உலக வங்கியே கூடுதல் ஆர்வம் காட்டிவருகிறது.

சந்தைப் பொருளாதாரத்தில் வேகமாக வளரக்கூடிய நாடாக இந்தியா இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்நாட்டு பொருளாதார உற்பத்தியில் இந்தியாவின் வளர்ச்சிக் குறியீட்டு எண் கணிசமாக உயரும். அவ்வாறு உயரும்போது பல லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுமென்று உலகவங்கி கருத்து தெரிவித்திருக்கிறது.
 

யுவகிருஷ்ணா