மதுரை வீதியிலிருந்து ஜனாதிபதி மாளிகை வரை...பத்மஸ்ரீ விருது பெறும் முதல் திருநங்கை

திருநங்கைகள் என்றாலே ‘இப்படித்தான் இருப்பார்கள்’ என்று இருந்த காலத்தில் ‘இப்படியும் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள்’ என்று உலகிற்கு உணர்த்தியவர் நர்த்தகி நடராஜ். பரதநாட்டிய உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்து, பாரம்பரிய வர்ணங்களை ஆடுவதில் பெயர் பெற்று, இன்று இந்திய குடியரசுத்தலைவர் கையால் ‘பத்ம’ விருதைப் பெறப் போகிறார் என்பது சாதாரண சாதனையல்ல.

மதுரை வீதியிலிருந்து தன்னந்தனி ஆளாகக் கிளம்பி வந்து இன்று இளைய தலைமுறைக்குப் பாடமாகிவிட்ட நர்த்தகியிடம் பேசுவது மாறுபட்ட அனுபவம். இத்தனை வருட போராட்ட வாழ்வுக்குக் கிடைத்த பரிசாக எடுத்துக்கலாமா?

கண்டிப்பாக. முப்பது ஆண்டுகளாக என் நடனத்துறையில் மட்டுமல்ல, என் வாழ்விலும் போராட்டம்தானே! எனக்கு எப்போது உணர்வு வந்ததோ அப்போதிலிருந்து போராட்டம் ஆரம்பித்துவிட்டது. மனதில் குழப்பமான உணர்வு, எனக்குள்ளே பெண்மை, என் நடனம் என்று மூன்று விஷயங்கள் என்னை ஆக்கிரமித்தது.

அந்த வலிகளுக்கும், வேதனைகளுக்கும் கிடைத்த பரிசு இது. நான் வடித்த கண்ணீர் எல்லாம் அப்படியே மாணிக்கமா, ஸ்படிக லிங்கமா மாறிவிட்டது. அவ்வளவுதான். சிவனுக்கும், பெருமாளுக்கும் நன்றி. ஆரம்பத்தில் உறவினர், சமூகம் யாரும் ஏற்கவில்லை. நான் மட்டும் உறுதியாக இருந்தேன். இளம் வயதில் என்னை நாட்டியப் பள்ளியில் சேர்த்துவிடச் சொன்னபோது அது மோசமான காரியமாகப் பார்க்கப்பட்டது. அது என்னை பெண்மையாக ஆக்கிவிடுமோ என்று வீட்டிலுள்ளவர்களுக்கு பீதியானது.

எனக்குள் பெண்மை ஆராதிக்கும்போது அதுவே முரண்பாடாகப் பார்க்கப்பட்டது. இதில் எனக்கு ஒரு கட்டத்தில் தெளிவு பிறந்தது. என் ஆன்மா ‘பெண்மை’க்கு ஏங்கியது. அது அவர்களுக்குப் புரியவில்லை!இந்தக் குழப்பத்தினால் நீங்கள் ஒருநாள் வீட்டிலிருந்து துரத்தப்பட்டீர்களா?ஆமாம். துரத்தப்பட்டேன் அல்லது ஒதுங்கிப்போனேன் என்றும் சொல்லலாம்.

 நான் திருடவில்லை. பொய் சொல்லவில்லை. அப்படியிருக்கும் போது மற்றவர்கள் மனதிற்குப் பிடித்த மாதிரி நான் எதற்கு இயங்கவேண்டும்? என் ஆன்மாவை நான் ஏன் உங்களுக்கு அடகு வைக்கவேண்டும்?  மதுரை அனுப்பானடியிலிருந்து ஒரு சுபயோக தினத்தில் - அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி - என் வாழ்வுக்கு விடைகாண நானே கிளம்பிவிட்டேன்.

அப்போது 12 வயது இருக்கலாம். என்னோடு கூடப்பிறந்தவர்கள் 10 பேர்கள். அவ்வளவு பெரிய குடும்பத்திலிருந்து தன்னந்தனியாக எல்லாத்தையும் அறுத்துப்போட்டுவிட்டு நெஞ்சில் துணிவை மட்டும் துறக்காமல் வீதிக்கு வந்து நண்பர்கள் வீட்டில் தங்கினேன். அவர்களே என் ஆரம்ப கால வாழ்வுக்கு அஸ்திவாரம். ப்ளஸ் டூ வரை இப்படித்தான் நாடோடி போல பலர் வீட்டில் தங்கிப் படித்தேன்.

அந்தக் காலத்திலேயே டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டேன். அரவாணிக்கு யார் ஆட்டம் சொல்லித் தருவார்கள்? சினிமா பாட்டு போட்டு நானே அதற்கு பொருத்தமா ஆடுவேன். எம்.எல்.வி. அம்மா பிரபலப்படுத்திய ‘ஆடல் காணீரோ...’மற்றும், ‘அழகான பொண்ணுதான்...’ போன்று நடனத்தை மையமாக வைத்து இயற்றப்பட்ட பாடல்களுக்கு ஜோராக ஆடுவேன்.

நாட்டிய ஆசான் தஞ்சை கே.பி.கிட்டப்பா பிள்ளையிடம் எப்போது சேர்ந்தீர்கள்?
அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. 1984ம் வருடம் தஞ்சாவூரில் அவரிடம் சேர்ந்தேன். சொல்லப்போனால் அவரிடம் எப்படியாவது சேர்ந்துவிடுவது என்பது என் வெகு நாள் கனவு. காரணம், சுதாராணி ரகுபதி, ஹேமமாலினி, யாமினி கிருஷ்ணமூர்த்தி, வைஜெயந்தி மாலா போன்ற ஜாம்பவான்களை உருவாக்கியவர் அவர்.

என்னை எப்படி எடுத்துப்பார்? அவர் அவ்வளவு பெரிய மேதை என்பதை நான் உணராத நேரம். என்னிடம் கொஞ்சம் பேசிவிட்டு ‘பார்க்கலாம்’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஒரு வருடம் காக்க வைத்தார்! அப்புறம் என் கண்களிலேயே கண்டுபிடித்துவிட்டார் இவள் பரதத்திற்கு ஏற்ற பெண் என! குரு காணிக்கை செலுத்த வேண்டாமா? இரண்டு தடவை இந்திய அரசின் ஸ்காலர்ஷிப் வாங்கி, அதைத்தான் அவரிடம் தந்தேன்!

சென்னைக்கு எப்படி வந்தீர்கள்?கிட்டப்பா பிள்ளையிடம் கற்றுக்கொண்டபின் திரும்ப மதுரைக்கே போய்விட்டேன். வருமானத்திற்கு வழி பார்க்க, பல ஊர்களில் ஆடினேன். அப்படி ஒரு முறை நவராத்திரி சமயத்தில் கோவையில் ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

பிரபல நாட்டியக் கலைஞர் ஷோபனா ரமேஷ் அங்கு வந்துள்ளது எனக்குத் தெரியாது. அவரைப் பார்த்ததும் இல்லை! மறுநாள் நான் தங்கியிருந்த ரூமைக் கண்டுபிடித்து வந்து கதவைத் தட்டினார்! நான் பயந்துபோய் லேசாக கதவைத் திறக்கிறேன். ‘வம்பு பண்ணும் ஆட்களோ’ என்று பயந்து எப்பவுமே நாங்கள் ஜாக்கிரதையாக இருப்போம்.

ரொம்ப யோசித்து அவரை உள்ளே விட்டோம். ஷோபனா சொன்ன ஒரே வார்த்தை, ‘உன் டான்ஸைப் பார்த்து பிரமித்துவிட்டேன். நீ பேசாமல்  கிளம்பி சென்னைக்கு வா. நீ சாதிக்கப் பிறந்தவள்!’ என்றார்.அவர் பேச்சில் உண்மை தெரிந்தது. அடுத்த சில நாட்களில் - அதாவது 2001ம் வருடம் டிசம்பரில் - சென்னை வந்துட்டோம். சொன்னபடி எங்களுக்கு வீடு பிடித்துக் கொடுத்து, கேஸ் இணைப்பு வாங்கித்தந்து... ஷோபனா மட்டும் கூப்பிடவில்லை என்றால் நாங்கள் சென்னை வந்திருக்க வாய்ப்பு இல்லை.

இதில் ‘நாங்கள்’ என்று சொல்வது சக்தியையும் சேர்த்து. நான் எப்போது என் வீட்டை விட்டுக் கிளம்பினேனோ அப்போதே என் உயிர்த் தோழியும் கிளம்பி வந்துவிட்டாள். எனக்கு தாயாக, தோழியாக, கண்டிப்பான தந்தையாக, ஆலோசகராக இந்த நிமிடம் வரை சக்திதான் இருக்கிறாள். அவள் கொஞ்ச நேரம் வெளியே போய்விட்டால்கூட தவித்துப் போய்விடுவேன்.

இப்போவாவது உங்கள் குடும்பத்தினர் வாழ்த்து சொன்னார்களா?
அம்மா, அப்பா, அண்ணன் இப்போது இல்லை. மற்ற எல்லாரும் மதுரையில்தான் இருக்கிறார்கள். ஒவ்வொருத்தராக ஆனந்தக் கண்ணீருடன், பேச முடியாமல் திக்கித் திணறி வாழ்த்துச் சொன்னார்கள்.

நானும் ரொம்பவும் இமோஷனல் ஆகிவிட்டேன். எல்லோரையும் சீக்கிரம் பார்க்க வேண்டும்!புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து மேலே வந்தபின் தன் சமூகத்தை பலர் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. நீங்கள் சாலையில் சுற்றித் திரியும் திருநங்கைகளுக்கு என்ன செய்தீர்கள்?

என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள்? ‘திருநங்கை’ என்ற பெயரை உண்டாக்கினதே நான்தானே! கலைஞர் ஐயா ஆட்சியில் அதைப் பிரகடனப்படுத்தினார்கள். எங்களவர்கள் அடையாளத்தைக் காட்டவே வெட்கப்பட்டபோது, எம்ஏ, பிஏ பட்டம் மாதிரி பேருக்கு முன்பு பெருமையாகப் போட்டுக்கொண்டோம். இதுவே என் முதல் வேலை.

என் நாட்டியப்பள்ளி ‘வெள்ளி அம்பலம் அறக்கட்டளை’யில் நிறைய திருநங்கைகளுக்கு பல விதங்களில் உதவி செய்கிறோம். எங்கள் பள்ளியின் குறிக்கோளே ‘எதனை எதனால் எதனின்று பெற்றோமோ, அதனை அதற்கே அர்ப்பணித்தல்’ என்பதுதான்! இதற்கு அறங்காவலர்களை நியமித்து, பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தப் போகிறோம். என் காயம், வலி எல்லாவற்றுக்கும் இது மருந்தாக இருக்கும். இதன்மூலம் பல நர்த்தகிகளை, சக்திகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

கும்மி கொட்டி, அப்பாவிகளை அடித்துப் பிடுங்கும் கூட்டம் ஒரு புறமிருக்க, சற்று ஆடம்பரமாக உடுத்திக்கொண்டு சாஃப்ட்வேர் இளைஞர்களை தங்கள் வலையில் வீழ்த்தும் மாடர்ன் திருநங்கைகளும் மலிந்து விட்டார்களே?இது மிகவும் தப்பு. அப்படிச் செய்தால் ஏற்க முடியாது! நான் வாங்கிய விருதுகள்.. சங்கீத நாடக அகடமி விருது, புரஸ்கார் விருது, கலைமாமணி, நிருத்ய சூடாமணி, நிருத்ய ரத்னாகரா... உட்பட இரண்டு டஜன் விருதுகள் அத்தனையும் என் திறமைக்காகக் கிடைத்தது.

தஞ்சை தந்தை பெரியார் - மணியம்மை பல்கலைக்கழகம் எனக்கு ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கியது! இதற்கும் முதல் திருநங்கை நான் என்றால் பத்மஸ்ரீக்கும் முதல் நான்தான்!இப்படி வாழ்வில் பல முதல்களைப் பெற்றுவிட்டேன்! அவ்வளவு ஏன்? ப்ளஸ் ஒன் பொதுத் தமிழ் பாடத்தில் என் வாழ்வும் வருகிறது தெரியுமா? எந்தக் குறை உள்ளவர்களும், அந்தக் குறையையே ஆதாயமாக வைத்துக் கொண்டு முன்னேற நினைப்பது தவறு. இலக்கு இல்லாமல், தன்மானம் இல்லாமல் வாழ நினைத்தால் அதை ஏற்க முடியாது.

வீடு, வாசல் இல்லாமல் சுற்றுகிறோம், யாரும் கேட்க மாட்டார்கள் என்கிறபோது இன்னும் கவனமாக இருக்க வேண்டும்! ‘நாமே ஒரு புதிய சமூகத்தை உருவாக்குவோம்’ என்று நினைப்பவள் நான்!இன்று பரதநாட்டியத்தில் சலங்கை பூஜை அரங்கேற்றம் என்ற பெயரில் நாட்டிய குருக்கள் மாணவிகளிடம் பகல் கொள்ளை அடிப்பதை கவனிக்கிறீர்களா?நிறைய நடப்பது உண்மை.

ஆனால், எல்லோரும் என்று சொல்லமாட்டேன். விரைவில்,
ஏழைப் பெண்களுக்கு நடக்கும் இந்த அநீதியை எதிர்த்துப் போராடவும் இந்த நர்த்தகி தயங்கமாட்டாள்! சலங்கை பூஜைக்கெல்லாம் லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழிக்கச் சொல்வது கொடுமை!

அடுத்து என்ன?
நிறைய பள்ளிக்கூடங்களில் ஆட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன். மாணவர்களிடம் நமது பண்பாடு பற்றிப் பேசி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் எண்ணம்! அதற்காக கிராமங்களுக்கு போகப்போகிறேன். அவர்களிடம்தான் எதிர்கால இந்தியா உள்ளது!   

வி.சந்திரசேகரன்

ஆ.வின்சென்ட் பால்