உன்னால் வேகமாக நடக்க முடியாது என்றார்கள் மருத்துவர்கள்!மாரத்தானில் சாதனை புரிந்த மா.சுப்பிரமணியன்

இன்னமும் பனி விலகாத விடியற்காலையில் பனியன் - ஷார்ட்ஸ் அணிந்து ஓடிக்கொண்டிருக்கிற அவரை சென்னை அறியும். அவர், முன்னாள் மேயரும் இந்நாள் சைதை எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன்.
வியர்வைத்துளிகள் திரண்டு வழிய, செமத்தியான ‘சிக்’ உடம்புடன் மனிதர் ஹாட் அண்ட் ஸ்மார்ட். ஐந்து ஆண்டுகளில் 100 மாரத்தான்களை முடித்து சாதனை படைத்திருக்கிறார்! அதன் சிரமம் அறிந்தவர்கள் அவரை ஆராதிக்கிறார்கள். அறுபதைத் தொடுகிறவர்களுக்கு இதெல்லாம் பெரும் சாதனை.

எப்படி சாத்தியமாயிற்று..? அவரே சொல்கிறார்...ஒரு யதேச்சையான உடல் பரிசோதனையில் எனக்கு சர்க்கரை நோய் இருப்பதை 1995ம்ஆண்டுதான் சொன்னார்கள். கட்டுக்குள் இருக்க நடைப்பயிற்சி அவசியம் என்றார்கள். நான் அப்படிச் செய்ய ஆரம்பித்துவிட்டேன். இரண்டு நாள் நடந்துவிட்டு, அதற்கடுத்த நாள் நாம் நேரம் இல்லையென சொல்லிவிடுவோம்.

அதில் உண்மையில்லை. நாம் 24 மணிநேரமும் வேலையில் இருப்பதில்லை. அதை உணர்ந்திருந்ததால் எனது நடைப்பயிற்சியில் தொய்வில்லை. ஒரு பாராட்டு விழாவிற்குச் சென்ற பயணத்தில் விபத்தாகி, கால்மூட்டு உடைந்துவிட்டது. கால் எலும்புகள் அறுவை சிகிச்சையில் சேர்க்கப்பட்டன. இனி வேகமாக நடக்கவோ, ஓடுவதோ கடினமாக இருக்கும். அப்படி முயற்சிக்கக் கூடாது என்றார்கள்.

ஒரு கட்டத்தில் நடக்கிற முயற்சியை அடுத்து ஓடுவதற்கு தீர்மானித்தேன். 2014ம் ஆண்டுதான் புதுவையில் முதல் மாரத்தான் போட்டியில் பங்கேற்றேன். இந்தப்போட்டியில் முதல் மூன்று இடங்கள்தான் வெற்றி என்ற நிலையெல்லாம் இல்லை. பொதுவாக மாரத்தான் போட்டிகள் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை முன்னிருத்தித்தான் நடக்கும்.

இரண்டாவது மாரத்தான் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. கடுமையான பயிற்சி,  அளவான சத்தான உணவு, இவற்றுடன் அமைதியான உறக்கமும் இணைந்தால் மாரத்தான் போட்டி எளிதான வெற்றியில் முடியும்.

புற்றுநோய்க்கான விழிப்புணர்வு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு என்ற கவனம் தேவைப்படும் என்பதால் அதன் காரணகாரியங்களை முகநூலில் பதிவு செய்துவிடுவேன். அதைப்பார்த்தும் பலர் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டுவிடுகிறார்கள்.

சர்க்கரை நோயைக் காரணம் காட்டி நான் திகைத்து நின்றுவிடவில்லை. சில மருத்துவர்கள் மயக்கம் அடையலாம் என்று சொன்னார்கள். நான் உடலை என் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன்.

அதற்கான எல்லா முயற்சியும் எடுத்துக்கொண்டேன்.இந்தியன் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் புத்தகத்தில் எனது சாதனையை பதிவு செய்தார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, மூட்டு அறுவை சிகிச்சை முடித்து, 57 வயது தாண்டி இந்தச் சாதனை நிச்சயம் பாராட்டுக்குரியது எனச் சொல்லியிருந்தார்கள்.

இப்படியான போட்டிகளுக்கு நடுவில் நிறைய சுவாரஸ்யங்கள் நடந்திருக்கின்றன. மும்பையைச் சேர்ந்த 59 வயது ஜேயாயாஸ் சவுகான் ஒன்பது வருடங்களாக மாரத்தான் போட்டிகளில் ஓடிவருகிறார். என்னைப் பற்றி இணையத்தில் படித்திருக்கிறார். ஒரு தடவை புனேயில் உள்ள மலைப்பகுதியில் மாரத்தான் ஓடியபோது யதேச்சையாக பக்கத்தில் வந்தவரிடம் பேசிக்கொண்டே ஓடினேன்.

அவர், ‘எனது ரோல் மாடல் சென்னையைச் சேர்ந்த மா.சுப்பிரமணியன்!’ என்றார். ‘நீங்கள் அவரைப் பார்த்திருக்கிறீர்களா...’ எனக் கேட்டேன். ‘இல்லையே நண்பா...’ என்றார். ‘அப்படியாயின் நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை. மா.சுப்பிரமணியன் நானேதான்!’ என்றேன். அவரின் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. கைகுலுக்கி, சந்தோஷமாக புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

கார்கிலில் நடந்த இன்ெனாரு மாரத்தான் மறக்க முடியாதது. வீரமரணம் அடைந்த வாரிசுகளுக்கு உதவ நடந்தது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடிகளுக்கு மேலான உயர்ந்த பனிமலைகளுக்கு அடியிலான ஓட்டம் அது. ஆபத்துகள் நிறைந்தது, மூச்சுத்திணறல், கடுங்குளிர் என்று பயமுறுத்தினாலும் மறக்க முடியாத பயணம் அது.

பயணங்களால் வாழ்க்கை அழகுறுகிறது என்பதை உணர்ந்த இடம் அது. இனி உன்னால் வேகமாக நடக்க முடியாது என்ற மருத்துவர்களின் முடிவை மாற்றிக் காட்டியிருக்கிறேன். நாற்பது வயதில் பார்வையை இழந்துவிட்டு மற்றவர்கள் உதவியோடு 14 ஆண்டுகளில் 90க்கும் மேல் மாரத்தான் ஓடியிருக்கிற பஞ்சாப் முதியவர், செயற்கை கால் பொருத்தி டெல்லியில் ஓடிய அஸ்வின், புதுவையில் ஒற்றைக்காலுடன் ஓடிய சந்தன் என எல்லோரும் எனது ஆதர்சமானவர்கள்.

எனது மாரத்தான் ஓட்டங்கள் ஆஸ்திரேலியா, கத்தார், இத்தாலி, இங்கிலாந்து, கம்போடியா, நார்வே, ஆஸ்திரியா, கிரீஸ், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் நடந்திருக்கிறது. இந்தியாவில் பரந்துபட்ட பல பகுதிகளில் எனது மாரத்தான் ஓட்டங்கள் நடந்திருக்கின்றன. கொல்கத்தாவில் நடந்த மாரத்தானில் சச்சின் டெண்டுல்கர் என்னைச் சந்தித்து பாராட்டினார். முழுநேர அரசியல்வாதியாக இருந்துகொண்டு,
இத்தகைய பணி அபூர்வமானது என்றார்.

மறைந்த தலைவர் கலைஞர் எனது மாரத்தான் ஓட்டங்களை ரொம்பவும் ரசிப்பார். அவருக்கு உடலைப் பாதுகாப்பதின் அவசியம் புரியும். அவரது இத்தனை காலப் பணிக்கு அவரது நடைப்பயிற்சியும், யோகாவும் எவ்வளவு பயன்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.

இப்போது என் துரித பயணங்களையும் தலைவர் தளபதியிடம் சொல்லிவிடுவேன். எனது 100வது மாரத்தானின்போது அவர் அறிக்கை வெளியிட்டு என்னைப் பாராட்டி தொண்டர்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்வது பற்றி எழுதினார்.அரசியலில் இருந்தால், அல்லது வேறு பணிகள் செய்தால் உடல்நலத்தில் கவனம் செலுத்தக்கூடாது என்றில்லை. உடற்பயிற்சியை எத்தனை மணி நேரம் செய்கிறோம் என்பது முக்கியமில்லை.

எவ்வளவு நாள் தவறாது செய்கிறோம் என்பது முக்கியம். நான் நன்றாகச் சாப்பிடுவேன். அசைவ உணவுப் பிரியன்கூட. ஆனால் பயிற்சிகள் செய்யும்போது, கலோரிகள் எரிந்துவிட்டால் போதுமானது. நல்ல உணவு, சரியான பயிற்சி இரண்டும் இருந்தால் நலம் விளையும்.

நல்ல உடற்பயிற்சிக்குப்பிறகு உறங்கச் சென்றால் ஐந்து நிமிடத்தில் தூக்கம் தானாக வரும். புத்துணர்ச்சியோடு இருக்க ஏதேதோ விளம்பரங்கள் வருகின்றன. ஆனால், அதெல்லாம் விஷயமே இல்லை. அடிப்படையான பயிற்சி போதும். எனது சாதனைகளை நான் திட்டமிட்டுச் செய்ததில்லை. இரண்டு ஆண்டுகளில் 21.1 கி.மீ. தூர 25 மாரத்தான் போட்டிகளில் ஓடி India Book of Records இல் இடம் கிடைத்தபிறகுதான் என் சாதனையே எனக்குத் தெரிந்தது!          

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்