பகலில் ஆபீஸ் பாய்... இரவில் ஸ்டூடியோ செக்யூரிட்டி!லைப் டிராவல்

இயக்குநர் பாண்டிராஜ்

தமிழகத்தின் எங்கோ ஒரு கடைக்குட்டி கிராமத்தில் பிறந்தவர்; ஜீரோ நாலேஜுடன் சினிமாவிற்குள் வந்து சாதித்தவர்; தான் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே மூன்று தேசிய விருதுகள் அள்ளியவர்; தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் தங்க யானை விருதை வாங்கி தமிழ் சினிமா உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர்... என இயக்குநர் கம் தயாரிப்பாளர் பாண்டிராஜ் பற்றிச் சொல்ல நிறையவே இருக்கிறது.
சென்ற ஆண்டு வெளியான படங்களில் பெரும் வசூலைக் குவித்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில், இவரது ‘கடைக்குட்டி சிங்க’மும் ஒன்று!

நாங்க விவசாயக் குடும்பம். புதுக்கோட்டை பக்கத்துல விராச்சிலை கிராமத்துலதான் பிறந்து வளர்ந்தேன். ஒரு அண்ணன். ஒரு அக்கா. எங்க ஊர்ல ஒரு தியேட்டர் கூட கிடையாது. வீட்லயும் சினிமா பார்க்க விடமாட்டாங்க.  திருவிழா நடக்கிறப்ப திரைகட்டி ஒரு பக்திப் படமும், வேற எதாவது ஒரு படமும் போடுவாங்க. அப்பக்கூட எங்க கண் விழிச்சு படம் பார்த்தா படிப்பு கெட்டுடுமோன்னு ஒரு படம் பார்க்கத்தான் அப்பா அனு
மதிப்பார்.

நல்ல பிள்ளை மாதிரி வீட்ல இருந்தாலும் ஸ்கூல்ல நான் சேட்ட சிகாமணி! டிராமா, பேச்சுப் போட்டிகள்ல வாலன்டரியா பெயரைக் கொடுத்து கலந்துக்குவேன். முதல் பேச்சுப்் போட்டில பேசிக்கிட்டே இருந்தப்ப பாதில அடுத்து பேச வேண்டியதை மறந்துட்டேன்! ஆனா, டிராமால பெயர் வாங்கினேன்.

ஏழாவது படிக்கிறப்ப க்ளாஸ்ல சினிமா கதைகள் சொல்ல ஆரம்பிச்சேன். எங்க அம்மா மிகப்பெரிய கதைசொல்லி. அதனாலயே எனக்கும் இயல்பா கதைகள் சொல்ல வந்துடுச்சுனு நினைக்கறேன். ஸ்கூல் போற வழில சித்தி விநாயகானு ஒரு தியேட்டர். அங்க பாரதிராஜா சார், பாக்யராஜ் சார் படங்கள் பார்த்து சினிமா ஆசை வந்தது. நம்ம படமும் அதே தியேட்டர்ல ரிலீஸ் ஆகணும்னு விரும்பினேன்.

ப்ளஸ் 2 முடிச்சதும் ‘ஏதாவது வேலைல இவனை சேர்த்துவிட்டா வாழ்க்கைல செட்டிலாகிடுவான்’னு அப்பா நினைச்சார். அதே மாதிரி தஞ்சாவூர்ல ‘காசி எலக்ட்ரிகல்’ கடைல சேர்த்துவிட்டார். ஏழெட்டு மாசம் அங்க வேலை பார்த்தேன். மனசு ஒட்டலை. நின்னுட்டேன்.

உடனே சேலம், தாதகாப்பட்டில இருந்த ‘முத்து மெடிக்கல்ஸ்’ல சேர்த்து விட்டாங்க. அது என் உறவினரோட கடை. அங்க கிருஷ்ணன்னு ஒரு நண்பன் கிடைச்சான். அவன் ஒரு சினிமா தகவல் களஞ்சியம். சேலத்துல தியேட்டர்ஸ் அதிகமா இருந்ததால அவன் கூட சேர்ந்து நிறைய படங்கள் பார்த்தேன். அந்த டைம்ல எனக்கு மஞ்சக்காமாலை வந்து ஆளையே உருக்கிடுச்சு. ஊருக்குத் திரும்பி உடலைத் தேத்தினேன். அப்புறம் திருச்சி துவாக்குடிமலைல இருந்த அண்ணனோட சைக்கிள் கடைல வேலைக்குப் போனேன்.

அப்ப, வீட்ல என் ஜாதகத்தை எடுத்துட்டுப் போய் ஜோசியரை பார்த்திருக்காங்க. அவர், ‘எனக்கு இரும்புத் தொழில்தான் ராசி’னு சொல்ல... சைக்கிளும் இரும்புதானேனு அப்பா சந்தோஷப்பட்டார்! எனக்கு பக்குனு ஆகிடுச்சு. அம்மாகிட்ட ‘ஒரு வருஷத்துல இயக்குநராகி ஜெயிச்சுக் காட்டறேன்’னு சபதம் போட்டு சென்னைக்கு வந்தேன். ஓடி வரலை! சொல்லிட்டுதான் வந்தேன். அவங்க 650 ரூபா கொடுத்தாங்க.

சென்னைல நான் கால் வைச்சதும் செம மழை! தொப்பலா நனைஞ்சாலும் வானமே நம்மை வரவேற்குதுனு மனசுல பட்டாம்பூச்சி பறந்துச்சு! இப்ப என் போன் புக்குல மூவாயிரம் நான்காயிரம் கான்டாக்ட்ஸ் இருக்கு. அன்னைக்கு சென்னைல எனக்குத் தெரிஞ்ச ஒரே நண்பன் வெள்ளச்சாமிதான்.அவன் போரூர்ல இருந்தான்.

அட்ரஸ், பேரை தப்பா எழுதி வைச்சிருந்தேன்! அதனால மழைல ஒருநாள் முழுக்க அலைஞ்சு போரூர் போய்ச் சேர்ந்தேன். வெள்ளச்சாமி ஒரு ஃபைனான்ஸ் கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தான். அங்க பணப்புழக்கம் அதிகமா இருந்ததால ‘ஆபீசுல யாரும் தங்கக் கூடாது’னு அந்த முதலாளி என்னை விரட்டிட்டார்.

அன்னைக்கு நைட்டே எங்க தங்கறதுனு தெரியாம நின்னேன். நண்பனால எதுவும் செய்ய முடியாத நிலை. இரவு முழுக்க சென்னையை சுத்திச் சுத்தி வந்தேன்.மறுநாள் வெள்ளச்சாமி மூலமா இன்னொரு நண்பனான அருணாச்சலத்தை போய் பார்த்தேன். இவன் சொந்தமா ஹோட்டல் வைச்சிருந்தான். அவன்கிட்ட வேலை கேட்டேன். ‘ஒழுங்கா ஊர் போய்ச் சேரு’னு சொல்லிட்டான்.

விரக்தியோடு ஊர் திரும்பினேன். மறுபடியும் அண்ணனோட சைக்கிள் கடைல வேலை. மனசு முழுக்க சினிமா ஆசை. கொஞ்ச நாள்ல திரும்பவும் சென்னை வந்தேன். இந்த முறை நேரா விஜயகாந்த் சார் ஆபீஸுக்கு போனேன். ஒரு டைரக்டரை சந்திச்சுதான் வாய்ப்பு கேட்கணும்னு கூட அப்ப எனக்குத் தெரியாது!

விஜயகாந்த் சார் ஆபீஸ்ல இருந்த செக்யூரிட்டி என்மேல பரிதாபப்பட்டார். ‘சினிமா ஸ்டூடியோல வேலை கேட்டுப் பாரு. அங்கதான் சினிமாக்காரங்க வந்து போவாங்க’னு தகவல் சொன்னார். உடனே ஏவி.எம். ஸ்டூடியோ போனேன். என் நல்ல நேரம் அங்க செக்யூரிட்டிக்கு வேகன்ட் இருந்தது. 8 மணிநேரத்துக்கு 29 ரூபா 50 பைசா தினச்சம்பளம். ஆனா, அவங்க ரூல்ஸ்ல முக்கியமானது, ஷூட்டிங் நடக்கற இடத்துக்கு போகக்கூடாது... சினிமாக்காரங்ககிட்ட வாய்ப்பு கேட்கக்கூடாது!

சரின்னு சொன்னேன். ‘உனக்கு தங்க இடமிருக்கா’னு கேட்டாங்க. இல்லைனு உண்மைய சொன்னா எங்க வேலை கிடைக்காதோனு பயந்து ‘இருக்கு’னு சொல்லிட்டேன்! ஆனாலும் என் புத்தி அப்ப வேலை செஞ்சதால நைட் டியூட்டி கேட்டு வாங்கினேன். அப்பதானே வெளிய ரூம் எடுத்து தங்கற பிரச்னை இருக்காது!

அப்ப அங்கே ‘சம்சாரம் அது மின்சாரம்’ செட் இருந்தது. அதுல பெரும்பாலும் பகல்லதான் ஷூட்டிங் நடக்கும். அதனால நைட் ஷூட் இல்லாதப்ப செக்யூரிட்டி அங்க தூங்கிக்கலாம்னு ஒரு வசதி இருந்தது. இதுக்காகவே ‘சம்சாரம் அது மின்சாரம்’ செட்டுல டூட்டி போடச் சொல்லி கேட்டு வாங்குவேன்!

ஒருநாள் பாக்யராஜ் சார் டிரைவர் சீனிவாசன் பழக்கமானார். நான் அசிஸ்டென்ட்டா சேர விரும்பற விஷயத்தை அவரோட மச்சான் ராம் சார்கிட்ட சொன்னார். பாக்யராஜ் சார்கிட்ட அசிஸ்டென்ட் ஒர்க் காலி இல்லைனு தெரிஞ்சதும் என்னை ஆபீஸ்பையனா சேர்த்து விட்டார். இப்ப பகல்ல ஆபீஸ் பையன்.

நைட்ல செக்யூரிட்டி. தூக்கமே இல்லாம தீயா வேலை பார்த்திட்டிருந்தேன். ‘பாக்யா’ ஆபீஸ்லதான் அவரது சினிமா கம்பெனியும் இருந்தது. என் வேலை நேரம் போக, சாரோட மகன் சோனு (சாந்தனு) கிரிக்கெட் விளையாட போகும் போது அவரோட பந்து வீசி விளையாடுவேன்!

சாரை இம்ப்ரஸ் பண்றதுக்காகவே ‘வி.சி.பாண்டிராஜா’ங்கற பெயர்ல கவிதைகள் எழுத ஆரம்பிச்சேன். எழுதின 35 கவிதைகள்ல 20 பிரசுரிக்க ஓகே ஆச்சு. பாக்யராஜ் சாரே ஆச்சரியப்பட்டு, என்னைக் கூப்பிட்டுப் பேசினார். அப்பதான் அவருக்கு நான் அசிஸ்டென்ட்டா சேர வந்த விஷயம் தெரிஞ்சது.

ஆபீஸ் பையனா இருந்த எனக்கு எடிட்டோரியல்ல சிறுகதை, கவிதைகளைத் தேர்வு செய்யற வேலையைக் கொடுத்தார். அங்க நண்பர்கள் மதன், பாபு சார் மூலமா புத்தகங்கள் மீதான ஈர்ப்பும், தெலுங்கு மலையாளப் படங்களின் அறிமுகமும் கிடைச்சது. ராம் சார் தயவால ‘பாக்யா’லயே தங்கினேன். ஏவி.எம்ல பார்த்து வந்த செக்யூரிட்டி வேலையை உதறினேன்.

பாக்யராஜ் சார்கிட்ட  அசிஸ்டென்ட்டா சேர ஏற்கனவே நாலஞ்சு பேர் வெயிட்டிங்ல இருந்ததால வெளில டிரை பண்ண ஆரம்பிச்சேன். ‘பாக்யா’ல பிரசுரமான என் கவிதை, கதைகளை எடுத்துகிட்டு இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார் சார், சேரன் சார், ‘கண்ணெதிரே தோன்றினாள்’ ரவிச்சந்திரன் சார்னு மூணு பேரையும் போய்ப் பார்த்தேன்.

சேரன் சார் வீட்ல நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அங்க அசோசிேயட்டா இருந்த ஜெகன் அண்ணன் (‘புதியகீதை’ இயக்குநர்) நட்பு கிடைச்சது. ‘கடைக்குட்டி’ல கூட என் கூட இருந்தார். நல்லது கெட்டதுனு சகலத்தையும் அண்ணன்கிட்ட இப்பவும் ஷேர் செய்வேன்.
அப்படிப்பட்ட ஜெகன் அண்ணன் சேரன் சார்கிட்ட சேர உதவினார். அங்க சண்முகராஜ், உமாபதி, தாயுமானவன், நடிகர் ராமகிருஷ்ணன், ‘உயிர்’ சாமிநாதன், சிம்புதேவன், சக்தினு நண்பர்கள் கிடைச்சாங்க. முதன்முதலா உலக சினிமா, ஹாலிவுட் சினிமாவை எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தினது இவங்கதான்.

‘பாண்டவர் பூமி’ டிஸ்கஷன்ல தங்கர்பச்சான் சார் நட்பு கிடைச்சது. நானும் விவசாயம் பத்தி பேசினதால என்மேல பிரியமானார். அவர்கிட்டயும் ஒர்க் பண்ணினேன். ஷங்கர் சார் தயாரிப்புல சிம்புதேவன் ‘இம்சை அரசன்’ இயக்க கமிட் ஆனதும் என்னைக் கூப்பிட்டார். இணை இயக்குநரா அதுல ஒர்க் பண்ணினேன்.

ஒன்பது வருஷங்கள் உதவி இயக்குநரா இருந்தபிறகு படம் இயக்கற தைரியம் வந்தது. ‘பசங்க’ கதையை 20 தயாரிப்பாளர்கள் கிட்டயாவது சொல்லியிருப்பேன். ஷங்கர் சார் தயாரிக்க முன்வந்தார். சில காரணங்களால முடியாமப் போச்சு.

அப்புறம் சசிகுமார் சார் கிடைச்சார்! இதோ உங்க முன்னாடி இப்ப நான் பேசிட்டு இருக்கேன். எனக்கு உதவின அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ஏதோ ஒருவகைல திருப்பி உதவின சந்தோஷம் இருக்கு. நண்பன் வெள்ளச்சாமி இப்ப என் புரொடக்‌ஷன்ஸை கவனிக்கிறார்!

மை.பாரதிராஜா