DHFL நிறுவனம் + மோடி அரசு = ஒரு லட்சம் கோடி ஊழல்!



இந்திய வங்கிகளுக்கு பட்டை நாமம்!

இந்தியா முழுதும் இந்த ஊழல்தான் ஹாட் டாபிக். ஒன்றல்ல இரண்டல்ல ஒரு லட்சம் கோடி ஆட்டையைப் போட்டிருக்கிறார்கள் DHFL நிறுவனத்தின் நிர்வாகிகள்! அதுவும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு பிஸ்கோத்து காசு பத்தொன்பதரைக் கோடியை நன்கொடையாகக் கொடுத்து இதைச் செய்திருக்கிறார்கள்!

இந்திய வரலாற்றில் மகத்தான ஊழல் இது என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள். ஒரு வடிவேலு ஜோக்கில் தோண்டாத கிணற்றுக்கு லோன் கொடுத்ததைப் போல, எந்தத் தொழிலும் செய்யாத போலி நிறுவனங்களுக்கு அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளும் கோடி கோடியாக அள்ளிக்கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு விவசாயி பயிர்க் கடனைக் கட்டவில்லை என்றால் தாதாக்களை அனுப்பி மிரட்டி தற்கொலை செய்ய வைக்கும் இந்த வங்கிகள், கோட், சூட் போட்ட இந்தத் திருடர்களுக்கு மட்டும் பட்டுக் கம்பள வரவேற்புக் கொடுத்து அனுப்பிவைப்பதுதான் கொடுமை.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருவது திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட். வீடு கட்டுவதற்கான நிதியுதவியைச் செய்துவரும் வங்கியல்லாத நிதி நிறுவனம் இது. இந்திய அளவில் மூன்றாவது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யம்.
இது போன்ற நிறுவனங்களை NBFC (Non Banking Financial Corporation) என்பார்கள். இந்த நிறுவனங்கள் நேரடி வங்கித் தொழில்களில் ஈடுபடுவதில்லை. ஆனால், வங்கிகள் போல வாடிக்கையாளர்களின் தேவைக்காக நிதியுதவி செய்யும்.

இந்த திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் 1984ல் ராஜேஷ் குமார் வத்வான் என்பவரால் தொடங்கப்பட்டது. குறிகிய காலத்தில் கிட்டத்தட்ட வட இந்தியா முழுதுமே அசுர வேகத்தில் வளர்ந்து ஆலமரமாக நின்றது. இந்நிறுவனத்தின் அதிபர்களான கபில் வத்வான், அருணா வத்வான், தீரஜ் வத்வான் ஆகியோர்தான் இந்த மாபெரும் ஊழலின் பிதாமகர்கள் என்கிறார்கள்.

சரி, நடந்தது என்ன?
சுமார் நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட கம்பெனிகளை போலியாக உருவாக்கி, ஒவ்வொரு கம்பெனியின் பெயரிலும் பல்லாயிரம் கோடிகளை கடனாகக் கொடுத்திருக்கிறது DHFL நிறுவனம். அது ஏன் இப்படிக் கொடுக்க வேண்டும்? தங்கள் சொந்த நிறுவனத்திலிருந்து ஒரு போலி நிறுவனத்துக்கு கடன் கொடுத்தால் நஷ்டம் அந்த நிறுவனத்துக்குத்தான் இல்லையா?

ஆனால், இதைச் செய்திருக்கிறது அந்நிறுவனம்! ஏன் தெரியுமா? தங்களுக்குத்தான் இந்தியாவின் முக்கியமான அரசு வங்கிகள் முதல் தனியார் வங்கிகள் வரை அனைத்தும் கோடி கோடியாகக் கடன் தருகிறதே, பிறகு அவர்களுக்கு என்ன கவலை?!இந்திய வங்கிகள் மட்டுமல்ல, உலகம் முழுதும் உள்ள அந்நிய வங்கிகளிடமும் தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள். இந்த வங்கிகளிடம் கோடி கோடியாக கடன் வாங்கி, அதை தாங்களே உருவாக்கிய போலி நிறுவனங்களுக்குக் கடனாகக் கடத்தி, மொத்த பணத்தையும் ஆட்டையைப் போட்டிருக்கிறார்கள்!

இதை எப்படி இத்தனை வங்கிகள் அனுமதித்தன? ஏன் யாருக்கும் ஒரு சிறிய சந்தேகம்கூட எழவில்லை? கேள்விகள் எழலாம்.கட்டிங்! இதுதான் அனைத்துக் கேள்விகளுக்குமான விடை. சுளையாக ஒரு தொகையைக் கட்டிங் கொடுத்தால் யார்தான் வாயைத் திறப்பார்கள். மீறித் திறந்தால் அவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ‘கவனித்துக்’ கொள்வார்கள்.  

பொதுவாக, ஒரு நிறுவனம் வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்றால் கடனுக்கு இணையான அசையும் மற்றும் அசையா சொத்துக்களைப் பிணையாகத் தர வேண்டும். சில சமயங்களில் அந்தப் பிணைத் தொகை போதவில்லை என்றால் நிறுவனத்தின் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்கள் தங்களுடைய சொந்த சொத்துக்களையும் பிணையாகத் தருவார்கள்.

இப்படித்தான் வத்வான் குடும்பத்தார் தங்களுடைய சொந்தப் பிணைகளையும் நிறுவனத்தின் சொத்துக்களையும் கணக்கில் காட்டி வங்கியில் கடன் வாங்கியிருக்கிறார்கள். ரைட். சொத்துதான் வங்கி அடமானத்தில் இருக்கிறதே... பிறகு எப்படி இது ஊழல்..?

நல்ல வினா. இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். DHFL நிறுவனத்தின் மொத்த மதிப்பு இன்றைய தேதியில் 8,790 கோடிகள் மட்டும்தான். ஆனால், இந்த நெட்வொர்த்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வங்கியிலும் பல்லாயிரம் கோடி என ஒரு லட்சம் கோடிக்கு கடன் வாங்கியிருக்கிறார்கள்!இது எப்படி சாத்தியமாயிற்று என்று கேட்பவர்கள் நீரவ் மோடி போன்ற தில்லாலங்கடிகளின் கதையை மனதுக்குள் ரீவைண்ட் செய்வது நல்லது.
 
பண பலமும் அதிகார பலமும் அரசியல் செல்வாக்கும் இருந்துவிட்டால் இங்குள்ள வங்கி அதிகாரிகளை மட்டுமல்ல, எதையுமே விலைக்கு வாங்க முடியும். எந்த சட்டத்தையும் வில்லாக வளைக்க முடியும் என்பதற்கு இந்த ஊழலே ஒரு சோறு பதம்.

நாற்பத்தைந்து போலி நிறுவனங்கள் இந்தப் பணத்தைக் கையாடல் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையான நிறுவனங்கள் வெறும் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்டுள்ளதாக கம்பெனிகளின் பதிவாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

இப்படி ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட கம்பெனிகளுமேகூட எந்தத் தொழிலையும் எந்தத் தருணத்திலும் மேற்கொள்ளவில்லை. ஒரு ரூபாய் கூட வருமானமாக ஈட்டவில்லை. தவிர இந்த நிறுவனங்களின் புரோமோட்டர்களாகவும் இயக்குனர்களாகவும் ஒரு சிலரே  இருக்கிறார்கள்!

பெரும்பாலான நிறுவனங்கள் ஒரே முகவரியிலேயே தொடங்கப்பட்டுள்ளன. அந்த ஒவ்வொன்றுக்கும் ஆடிட்டர்களாக இருக்கும் நிறுவனமும் ஒன்றுதான்! இந்த நிறுவனங்களில் பெரும்பான்மையானவை இப்போது வரை கடந்த ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை, நிதி இருப்பு நிலைக் குறிப்பை (Balance Sheet), ஆண்டு அறிக்கையை (Annual Report) கம்பெனிகள் பதிவாளரிடம் சமர்ப்பிக்கவில்லை!

இவையே இந்த நிறுவனங்கள் போலி என்பதற்கு மிகச் சிறந்த ஆதாரங்கள்.இப்படிப்பட்ட நிறுவனங்களுக்குத்தான் தங்கள் தாய் நிறுவனத்திலிருந்து கோடி கோடியாக கடனை வாரி வழங்கியிருக்கிறார்கள். மறுபுறம் இந்த போலி நிறுவனங்களுக்கு நிதியுதவி தேவை என்று கூறி அரசு மற்றும் தனியார் வங்கிகளில் ஒரு லட்சம் கோடிக்கு கடன் வாங்கியிருக்கிறார்கள்!

அதாவது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து 96,880 கோடியும், வெளிக்கடனாக 2,965 கோடியும், தேசிய வீட்டு வசதிவாரியத்திடம் 2,848 கோடியும், மக்களிடமிருந்து 9,225 கோடியும், மற்றவகைகளில் 13,567 கோடியும் வாங்கிக் குவித்துள்ளார்கள்!

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், ஷெட்யூல்ட் வங்கிகள், தனியார் வங்கிகள் எனப் பாரபட்சம் பார்க்காமல் கைநீட்டியுள்ளார்கள். இப்போது இந்தத் தொகையை எல்லாம் எப்படித் திரும்ப வாங்குவது என்று தெரியாமல் வங்கிகள் விழிபிதுங்கி நிற்கின்றன! அதிகாரத்தின் நிழலில்
அமர்ந்துகொண்டு வருமான வரிச் சட்டம், கம்பெனிகள் சட்டம், அந்நிய செலாவணி சட்டம், வங்கிக் கடன் சட்டம் என எல்லா வகையான சட்டங்களையும் வளைத்துள்ளது இந்தக் குடும்பம்.

இதற்கெல்லாம் பரிசாக அல்லது லஞ்சமாக அல்லது கமிஷனாக மத்திய ஆளுங்கட்சிக்கு ஒரு சொற்ப தொகையை நன்கொடையாகக் கொடுத்துள்ளார்கள். ‘திருடன் கையில் சாவியைக் கொடுத்ததைப் போல நாம் மோடியிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டோம்...’ என்கிறார் ராகுல் காந்தி. பிரதமரோ ஆளும் கட்சியோ இந்த ஊழல் குறித்து இதுவரை வாயே திறக்கவில்லை. தங்களுக்கு இதில் பங்கில்லை என்றால் பகிரங்கமாக மறுக்கலாமே... என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.