கருணாசின் கதை!ஆர்.எஸ்.அந்தணன்

வெடுக்குன்னு பேசிட்டாரே லொடுக்கு? நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் சமீபத்தில் பேசிய ஒரு மேடைப் பேச்சு பெரும்  விவாதப் பொருளாகிவிட்டது. அது குறித்துதான் இப்படி அதிர்ச்சியாகிறது ஊர் உலகம். ஒரு பாட்டுக்காரன் எப்படி வேட்டைக்காரன்  அளவுக்கு கோபம் கொண்டார்? கருணாசின் வளர்ச்சியை பாலாவுக்கு முன், பாலாவுக்குப் பின் என்று தான் பிரிக்கவேண்டும். சற்றே  அயோத்திக்குப்பம் வீரமணியை நினைவு படுத்துகிற முக அமைப்பு கொண்டவர் கருணாஸ். அதே அளவுக்கு கோபத்திலும் குறைச்சல்  இல்லாத மனுஷன்.

கல்லூரியில் நடக்கும் கைகலப்புகளில் கருணாசின் கை ஓங்கியே இருக்கும். தனக்கிருக்கிற இமேஜையே ப்ளஸ் ஆக்கிக் கொள்வது தனி  சாமர்த்தியம். அதுவும் வெங்கலக் குரலும், அதனோடு கலந்த இசை ஞானமும் அவருக்கு பிறவியிலேயே இருந்தது. மாநிலக் கல்லூரியில்  படித்துக் கொண்டிருந்த கருணாஸ், அந்த நாட்களில் மேடை கிடைக்கும்போதெல்லாம் ‘ராப்’ பாடல்களைப் பாட ஆரம்பித்தார். அதற்கப்புறம்  ஓர் இசைக்குழுவை ஆரம்பித்து பாடகன் அவதாரம் எடுத்தவருக்கு அதுவே பல படிக்கட்டுகளை அறிமுகப்படுத்தி வைத்தது. முதல் கட்டு -  கால்கட்டு!யெஸ்... அந்த இசைக்குழுவில் பாட வந்தவர்தான் இவரது காதல் மனைவி கிரேஸ். ‘மேஸ்ட்ரோ’ இசைக்குழு இருவருக்குமான  வானம் ஆனது. சிறகடித்தார்கள். விரட்டி விரட்டி காதலித்த கருணாஸ், பிறகு அவரையே கரம் பிடித்தார்.

புளியந்தோப்பு அந்தோணி, புஷ்பவனம் குப்புசாமி போல ஆடியோ கேசட் ஒன்றையும் வெளியிட்டார் அவர். கேசட் உறையில் உடல்  முழுக்க வேப்பிலை கட்டிக் கொண்டு கையில் உடுக்கையுடன் நிற்பார் கருணாஸ். அந்த மாரியாத்தா  பாடல்... தெறி மாஸ். ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு தங்கச் சங்கிலி எப்படி ஓர் அடையாளமோ, அப்படி ஓர் அடையாளத்தை தனக்கென அமைத்துக் கொண்ட  கருணாஸ், முக்கால் மொட்டையும், கழுத்துநிறைய மணிகளும், கை மணிக்கட்டு நிறைய கயிறுகளுமாக சட்டென ‘லுக்’க வைப்பார்.
அப்படி ஒருமுறை டைரக்டர் பாலாவும் இவரை லுக்க, அன்று மாறியது கருணாசின் ரூட்! கருணாசின் மாரியாத்தா பாடல் கேசட்டில்  இருந்த உருவம்தான் பாலாவைக் கவர்ந்தது. 2001ல் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் கருணாசுக்கு காமெடி ரோல். அடுத்தடுத்து வாய்ப்புகள்  குவிய ஆரம்பித்தன.

‘ஒரு காலத்தில் மேன்ஷனில் பட்டினி கிடந்திருக்கிறேன்’ என்று அடிக்கடி தன் பழைய வாழ்க்கையை அசை போட்டுப் பேசுவது  கருணாசுக்குப் பிடித்த ஒன்று. அதனாலேயோ என்னவோ நண்பரும் பத்திரிகையாளருமான முத்துராமலிங்கனுடன் இணைந்து ‘லொடுக்கு  பாண்டி மெஸ்’ என்ற நான் - வெஜ் ஹோட்டலைத் தொடங்கினார். கோழி, ஆடுகளின் சாபமோ என்னவோ, மெஸ்... லாஸ்! கடையை  மூடிவிட்டு சினிமாவில் முழு கவனத்தையும் திருப்பினார் கருணாஸ். வருடத்துக்கு ஆறேழு படங்கள் வந்தன. ஆசைப்பட்ட கார்களை  வாங்கி, அதை 140 மைல் வேகத்தில் ஓட்டுவது கருணாசின் பொழுதுபோக்கு. அவரது காரில் பயணம் செய்கிற நண்பர்கள் அடுத்த முறை  அவரைக் கண்டால் தெறித்து ஓடுவார்கள். அப்படியொரு மரண பயம் காட்டுவார் ட்ரைவிங்கில்.

பிடித்த பொழுதுபோக்கு ஸ்நூக்கர் விளையாட்டும், சீட்டாட்டமும். ஸ்டார் ஹோட்டல்களில் தாக சாந்திக்குப் போனால், அங்கிருக்கும்  ஸ்நூக்கரில் விளையாடுவார். வெற்றி பெற்றுவிட்டால், அங்கு குடித்துக் கொண்டிருக்கும் எல்லாருக்கும் நான்தான் பில் கொடுப்பேன் என்று  லட்சங்களை விட்டெறிவார். இப்படியே ஆடம்பரத்துக்கு அள்ளி இறைத்த கருணாசுக்கு இறைவன் சினிமா மூலமே சித்த வைத்தியம்  செய்தான். ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கி வெளியிட்ட கருணாஸ் அப்படத்தின் மூலம்  கற்றது ஏராளம். படு பயங்கர நஷ்டம். அதற்கப்புறமும் சும்மாயில்லாத கருணாஸ், ‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’,  ‘சந்தாமாமா’, ‘ரகளபுரம்’ எனப் படங்களைத் தயாரித்தார். இப்படங்களிலும் நஷ்டம்.

அண்ணாநகரில் இருந்த வீட்டை விற்று கடனை அடைத்தார். அப்பவும் ஐந்து கோடி கடன் விரட்டியது. எப்படியாவது புதுமையான ஒரு  படத்தைத் தயாரித்து அதில் இளையராஜாவை ஒரு காட்சியில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தவர் முட்டிமோதி  இளையராஜாவைச் சந்தித்தார். எப்படியோ கரைந்து போன இளையராஜா, ஒரு காட்சியில் தோன்றவும் சம்மதித்தார். ஆனால் படம்  தொடங்கப்படவே இல்லை. பல்வேறு காரணங்கள்... இந்த நேரத்தில் ஒரு போட்டோஷாப் கை கொடுத்தது கருணாசுக்கு! அந்த போட்டோ  ஷாப்தான் தன் வாழ்வின் மேஜிக் சாவி என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நாற்காலியில் அமர்ந்திருக்க, அருகில் கை கட்டி பவ்யமாக கருணாஸ் நிற்பது போல ஒரு  போஸ்டரைத் தயாரித்து சென்னை முழுக்க ஒட்டினார். சாதி பலம் சட்டென்று கை கொடுத்தது. மெல்ல மெல்ல நடிகர் கருணாஸ்,  கருணாஸ் தேவர் ஆனார்! 2016 சட்டமன்றத் தேர்தலில் ‘முக்குலத்தோர் புலிப்படை’க்காக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு  திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனார் கருணாஸ் தேவர். கூவத்தூர் புகழ் கருணாஸ் என்று சோஷியல் மீடியாவில்  வறுபடுகிற அளவுக்கு கட்சி வேலை பார்த்தார். அவர் கடைசியாக நடித்த படம் ‘பண்டிகை’! ஆனால், அவரைப்பற்றி கடைசியாக காதில்  விழுந்த எந்த செய்தியிலும் ‘விசேஷம்’ இல்லை!