தாவரங்கள் மீது நடைபெறும் தாககுதல்கள் !ஹோம் அக்ரி 26

மன்னர் மன்னன்


நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் மூலிகைச் செடிகளும், இயல்பாக வளரும் வேறு தாவரங்களும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களுக்கு  எளிதில் ஆளாவதில்லை. நாம் தினசரி பார்க்கும் துளசி, குப்பைமேனி, வேம்பு, புல் வகைகள், மற்ற மர வகைகள் ஏதும் நோய்  தாக்குதலாலோ, ஊட்டச்சத்து குறைபாட்டாலோ, புழு பூச்சி தாக்குதலாலோ மடிந்துபோவதில்லை. பின் ஏன் நம் காய்கறிச் செடிகளும்,  தானியப்பயிறுகளும், அழகுச்செடிகளும் இவைகளால் பாதிக்கப்படவேண்டும்?

இயல்பான மனித இடையூறு இல்லாமள்ள் பரிணாம வளர்ச்சி அடைந்த வகைகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள  முடிந்தவையாக இருக்கின்றன. உற்பத்தியை அதிகப்படுத்தவோ மற்ற காரணங்களுக்காகவோ வெவ்வேறு இயல்புடைய ஒரே வித  செடிகளைக் கலந்து புதிய வீரிய ரகங்களை உருவாக்கும்போது அவை பல்லாயிரம் வருடங்களாக தகவமைத்துக் கொண்ட எதிர்ப்பு  சக்திகளை இழக்க வாய்ப்பிருக்கிறது. ஆக, உற்பத்தியை பெருக்க ரகங்களைக் கலப்பது  - மரபணு மாற்றம் அல்ல - உணவு உற்பத்தி  காரணங்களுக்காக சரியானதாக இருந்தாலும் தனித்துவம் கொண்ட பாரம்பரிய ரகங்களையும் காப்பது அவசியம் என்பதை உணர வேண்டும். புது ரகங்கள் நமக்குப் பல ஆதாயங்களை தந்தாலும் அவை அழிந்தபின் பாரம்பரிய ரகங்களின் குணங்களைத் திரும்பப் பெறுவது இயலாமல்  போகும். பல்வேறு நிறுவனங்களும், பல நாடுகளின் அரசுகளும் இந்த விதை பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கின்றன.

அந்த வகையில் நாமும் நம் பாரம்பரியப் பயிர்கள், ஆடு மாடுகள், கோழி, நாய் உள்ளிட்ட உயிரினங்களை முடிந்த அளவுக்கு பாதுகாக்க  முயற்சிக்க வேண்டும். முன்னரே பார்த்தபடி தாவரங்கள் புழு பூச்சிகளாலும், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை இவைகளாலுமே பாதிக்கப்படு  கின்றன. ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மிருகங்களால் ஏற்படும் பாதிப்புகளை நம்மால் தவிர்க்க முடியாது என்பதால் அவைபற்றிய  கவலை அவசியமில்லை. நமக்கும் தாவரங்களுக்கு வரும் நோய்களுக்கும் அவற்றின் மருத்துவத்துக்கும் சில ஒற்றுமைகளும் பல  வேறுபாடுகளும் இருக்கின்றன. இவைகளை அறிவது இடர்ப்பாடுகளை அணுக உதவியாக இருக்கும்.

தாவரங்களுக்கு வரக்கூடிய நோய்களின் எண்ணிக்கையும், தாக்கக்கூடிய பூச்சிகளின் எண்ணிக்கையும் மனிதர்களுக்கு வருவதைக் காட்டிலும்  குறைவுதான். இவைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். மனிதனுக்கு 4448 வியாதிகள் இருப்பதாக சித்த வைத்தியம் கூறுகிறதுபெரும்பாலான வைரஸ்களும், பாக்டீரியாக்களும் குறிப்பிட்ட பயிர்களைத்தான் தாக்குகின்றன. இந்தப் பயிரை, இந்த ரகத்தை, இந்த  பாக்டீரியா, வைரஸ்தான் தாக்கும் என்பது நாம் முன்பே அறிந்தவைதான். போலவே பெரும்பாலான வீரிய ஒட்டு ரகங்களில் எந்த  நாட்கணக்கில் எந்த இடர்ப்பாடு வரும் என்பதும் கணக்கிடக் கூடியதுதான். இத்தாக்குதல் இல்லாமல், தானே எதிர்த்து வெல்லும் ரகங்கள்  குறைவு.  

புழு பூச்சிகளிடமிருந்து காக்க முடிந்தாலும், வைரஸ் / பாக்டீரியாவால் நோய் வந்த பிறகு செடிகளைக் காப்பாற்றுவது கடினம். மற்ற  செடிகளுக்குப் பரவாமல் மட்டும்தான் காக்க முடியும். மனிதர்கள் இந்த வகையில் வேறுபட்டவர்கள். வைரஸ் / பாக்டீரியா நோய்களை  எதிர்கொண்டு மருந்துகளால் சரி செய்யும் வல்லமை படைத்தவர்கள். தாவரங்களால் இது முடியாது. தாவரங்கள் மீது நடைபெறும்  பரவலான தாக்குதல்களையும், அவற்றுக்கான தீர்வுகளையும் பார்ப்போம். தாவரங்களுக்கும் நமக்கும் வரக்கூடிய எல்லா பிரச்னைகளுக்கும்,  இடர்ப்பாடுகளுக்கும் ஓர் எளிய தீர்வு இருக்கும் என்பதை மறக்கக் கூடாது.மாவுப்பூச்சி மற்றும் அசுவிணி:

இவை இரண்டும் இலை, தண்டு, காய், பூ ஆகியவற்றின் சாறுகளை உறிஞ்சி வாழ்கின்றன. இதனால் இலைகள் மஞ்சளாகி, செடி பலமிழந்து  உற்பத்தி பாதிக்கிறது. இந்த பூச்சிகள் வெளியிடும் பசை போன்ற ஒரு திரவத்தால் ஈர்க்கப்பட்டு எறும்புகள் வருகின்றன. சில சமயங்களில்  இலைகளின் கீழ்ப்பாகம் முழுவதும் இந்தப் பசையால் கருப்பாகி பின் பூஞ்சை தாக்குதலுக்கும் காரணமாகிறது. இந்தப் பூச்சிகள் வைரஸ்  பரவவும் காரணமாக இருக்கின்றன.இந்த சாறு உறிஞ்சும் பூச்சி களை ஒழிக்க எளிய மற்றும் சிறந்த வழி வேகமாக நீரைப் பீய்ச்சி  அடிப்பதுதான். இப்படிச் செய்யும் போது அவை விழுந்து விடுகின்றன. திரும்பவும் செடிக்குச் செல்வதில்லை. சிறிது வேப்ப  எண்ணெயையோ, துணி துவைக்கும் சோப்புக் கரைசலையோ நீரில் கலந்து தெளிக்கலாம்.

மைதா மாவை இலைகளின் மேல் தெளிப்பதால் மலச்சிக்கல் ஏற்பட்டு இவை இறந்து போகின்றன. அவைகளின் இனப்பெருக்கமும்  தடைபட்டுப் போகும். அல்லது சாம்பல், புழுதியான மண் இவற்றை இலையில் தெளிப்பதும் இவற்றைக் கட்டுப்படுத்தும். இதனால் ஒன்று,  இவைகளால் சாறை உறிஞ்ச முடிவதில்லை; இரண்டு, மீறி அதைச் செய்யும்போது சாம்பலோ / மண்ணோ வாய்ப்பகுதியையும், குடலையும்  அறுத்துவிடுகிறது.அரசாங்க பரிந்துரைப்படி டைமெத்தோயேட் அல்லது டெமெட்டான் என்ற பூச்சி மருந்தை உபயோகிக்க வேண்டும்.  ஆனால், இயற்கை முறைகளி லேயே எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

(வளரும்)