முழு அரசியல் சினிமா!
‘நோட்டா’ பாய்ச்சலுக்கு ரெடி. திருவிழா முடித்த சாமி மாதிரி அமைதியாக உட்கார்ந்திருக்கிறார் ‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் ஷங்கர்.  ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற இரண்டே வார்த்தைகளில் பரபரப்பாகி விட்ட விஜய் தேவரகொண்டா - இப்போது ஆனந்த் ஷங்கரின் கஸ்டடியில்!  ஆப்பிள் போனில் விஜய் - மெஹ்ரீன் போட்டோ காட்டி ரியாக்‌ஷன் பார்த்து திருப்தியாகிறார்.

போட்டோஸ் செம டேஸ்ட்டா இருக்கு...


தேங்க்ஸ்! படத்தையும் அதே ரசனையோடு உருவாக்கியிருக்கோம். விஜய்யை ஆந்திர மக்கள் போற்றிக் கொண்டாடுகிறார்கள். இங்கேயும்  ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீத கோவிந்தத்’தை கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. நிச்சயம் ஒரு பெரிய ரவுண்ட் வருவார். இது பொலிடிக்கல் டிராமா,  த்ரில்லர். தைரியமா சொல்லியிருக்கோம். இந்த வகை சினிமா இங்கே வந்து ரொம்ப நாளாச்சு. உள்ளே இறங்கிப்போய் செய்திருக்கோம்.  படம் பார்த்திட்டு ஒரிஜினல் அரசியல் படம்னு மக்கள் சொல்லணும்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன். அரசியல் சினிமான்னா கல்யாண  குணங்களோட நல்லவனா, வல்லவனா, நாட்டையே சுத்திகரிப்பு செய்கிறவனாக ஒருத்தனை எதிர்பார்ப்பாங்க. இதில் பொறுப்பே இல்லாத,  ஜாலியான, எது குறித்தும் கவலைப்படாத ஒருத்தன் அரசியலில் குதிக்கும்போது என்னவாகும்னு சொல்லியிருக்கோம்.

விஜய்யின் நடிப்பு, அர்ப்பணிப்பும் உழைப்பும் சேர்ந்தது. தீவிர காதல் நாயகனாக அறியப்படும்போது இந்தப் படத்தில் அவருக்கான வேறு  ஸ்கோப் அறிந்து இறங்கினார். சொன்ன விதத்தில் புதுசாகவும், ஸ்டைலாகவும், அர்த்தபூர்வமாகவும் அமையணும்னு பாடுபட்டிருக்கோம். மனசில் வைச்சிருந்த கதைக்கு விஜய் தேவரகொண்டாதான் மாற்று இல்லாமல் இருந்தார். எனக்கான இடத்தை மறுபடியும் நிறுத்தி  வைச்சுக்கணும். விஜய்க்கு இங்கே ஒரு பெரிய இடத்தைத் தரணும். புரடியூசர் ஞானவேல் ராஜாவுக்கு ஹிட் தரணும். இத்தனையும்  அமையும் என்று நம்புகிறேன். எனர்ஜியும், இளமையும் நிரம்பிய டீம் அமைஞ்சது மேஜிக். மாயாஜாலங்கள் சாத்தியம்னு நம்புறேன்!

இதம் இதமா... இதழ் இதழா... முத்தம் கொடுப்பார்னு பார்த்தா விஜய்யை அரசியல் சினிமாவிற்கு கொண்டு வந்துட்டீங்க...


குறிப்பாக பெண்களிடம் அவருக்கு இருக்குற க்ரேஸ் என்னனு ஊருக்கே தெரியும். அது ஒண்ணும் ரகசியமில்லை. ஒரு டைரக்டரா எனக்கு  வேற வேற படங்கள் பண்ணணும்னு ஆசையிருக்கும்போது, அவருக்கும் வேற மாதிரி படங்கள் செய்யணும்னு ஆசைஇருக்காதா? டீசரைப்  பார்த்திட்டு கிடைச்ச வரவேற்பு பிரமிப்பு. இதில் சூப்பர் நடிகர்னு விஜய் பேர் வாங்கிவிடுவார். அந்தப் பெயருக்குத்தான் அவர் ஆசைப்பட்டு  இந்தப் படத்திற்குள் வந்தார். அவருக்குத் தமிழ் தெரியாது. ஆனால், உணர்ந்துகிட்டு அதில் ஈடுபாட்டோடு நடிக்கிறதைப் பார்க்கவே  ஆனந்தமா இருக்கும்.

ஒரு காட்சியில் ‘சடசட’னு பேசற மாதிரி மூணு பக்க டயலாக் இருந்தது. அதற்கு அவருக்கு இருக்கிற கஷ்டத்தை உணர்ந்து கால்ஷீட்டில்  இரண்டு நாள் ஒதுக்கி வைச்சிருந்தோம். ஆனா, அஞ்சு நிமிஷத்திலே மனப்பாடம் பண்ணி, நடிப்போட அடிச்சுத் தள்ளிட்டுப் போயிட்டார்.  ஆச்சர்யம் தாங்கமுடியலை. அப்படி தடதடனு  வொர்க்-அவுட் பண்ணிட்டு வந்து நின்னதற்குப் பெயர்தான் சினிமா மீதான அவரது  தாகம்.ஒரு கமர்ஷியல் படம் என்றால் அஞ்சு பாட்டு, அஞ்சு ஃபைட்னு இதுக்கே ஒண்ணரை மணி நேரம் போயிடும். மீதி ஒரு மணி  நேரத்தில் ஒரு கதையைச் சொல்லியாக வேண்டிய நெருக்கடியிருக்கும். இதற்கு அவசியமில்லாமல் காத்திரமாக முழு அரசியல் கதையைச்  சொல்லமுடிஞ்சது.

விஜய் சீஸன் ஆகிட்டார். மெஹ்ரீன் எப்படி..?


அங்கே அவங்க பெரிய ஹீரோயின். பிரமாதமாக செய்திருக்கார். விஜய்யின் நேர்த்தியான ஸ்டைலுக்கு என்ன மாதிரி ஹீரோயின்  வேணுமோ அந்த மாதிரி அவருக்கான இடங்கள் படத்தில் நிச்சயமாக இருக்கு. அரசியல் பற்றி அவதானித்து எழுதுகிறவராக சத்யராஜ்  வருகிறார். கதையைக் கேட்டபிறகு ரொம்ப பிடித்துப்போய் ‘ஓகே’ சொல்லிவிட்டார். அவருடைய அரசியல் தடாலடி வசனங்கள், நக்கல்  எல்லாம் பேசப்படும். அப்புறம் என் தாத்தா கோமல் சுவாமிநாதன் பற்றி நினைவு கூர்ந்தார். அவர் முதன் முதலாக தாத்தா கொடுத்த  சம்பளத்தை ஃப்ரேம் போட்டு வைத்திருப்பதைச் சொன்னார். அதே சமயம் படத்தின் ஆழத்தில் இறங்கி அவர் வேலை செய்ததை நான்  என்றைக்கும் மறக்க முடியாது.

அதே மாதிரி நாசருக்கு முக்கிய கதாபாத்திரம். அவரது பெரிய அனுபவத்தை கண்கூடாகப் பார்த்தேன். நடிப்பில் தேர்ந்த சில  இளைஞர்களை இதில் நடிக்க வைத்திருக்கிறேன். சாம் சி.எஸ், இசை. ஒளிப்பதி வாளர் ரவி கே.சந்திரனின் மகன் சந்தானகிருஷ்ணன்  இதில் கேமராமேனா அறிமுகமாகிறார். அவர் ஏற்கனவே இந்தியில் அதிரடி ஹிட்டான ‘பாஹி 2’ செய்திருக்கிறார். முன்பு ரவி கே.சந்திரன்  படப்பிடிப்புக்காக அமெரிக்கா வந்திருந்தபோது மகனையும் அழைத்து வந்திருந்தார்.

அங்கே படித்துக்கொண்டிருந்த நான்தான் அவருக்கு  அமெரிக்காவைச் சுற்றிக் காட்டினேன். இப்போது அவரே என் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆகிவிட்டார். என் ஆசான் ஏ.ஆர்.முருகதாஸ்  இதில் கேமியோ ரோலில் டைரக்டராகவே வருகிறார். கற்றுக் கொடுத்தவரையே டைரக்ட் செய்த அனுபவமும் மகிழ்ச்சியானது. கதையம்சம்  நிரம்பியிருப்பதால் இதில் சுவாரஸ்யங்களை எதிர்பார்க்கலாம்!   

-நா.கதிர்வேலன்