ஒரே நேரத்தில் 5 சீரியல்களுக்கு டயலாக்! : அசுர உழைப்பைப் பற்றி சொல்கிறார் பா.ராகவன்பத்திரிகையாளர், எழுத்தாளர், வசனகர்த்தா என எழுத்து சார்ந்தே பயணிப்பவர் பா.ராகவன். கைதட்டல் வசனங்கள் வாங்கிய  ‘கெட்டிமேளம்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘முத்தாரம்’, ‘முந்தானைமுடிச்சு’, ‘செல்லமே’, ‘தேவதை’, ‘கல்யாணபரிசு’ இப்போது‘வாணிராணி’,  ‘கல்யாணபரிசு 2’ ஆகிய தொடர்களுக்கு டயலாக் எழுதியவர், எழுதுபவர்.பெரியதிரையில் ‘கனகவேல் காக்க’, ‘தம்பிவெட்டோத்தி சுந்தரம்’  என இரு படங்களுக்கும் டயலாக் எழுதியவர் இவர்தான்.சென்னை குரோம்பேட்டையிலுள்ள பா.ராகவனின் வீட்டுக்குச் சென்றால்,  நூலகத்துக்குள் நுழைந்த எஃபெக்ட் கிடைக்கிறது.

‘‘இந்திய சீரியல்கள்ல முதன்முதல்ல 1700 எபிசோடுகள் தொடற ஒரே மெகா தொடர் ‘வாணி ராணி’தான். சீஸன் ஒண்ணு, சீஸன்  ரெண்டுனு பல சீஸன்கள்ல இதைவிட அதிக எபிசோடுகள் வந்திருக்கலாம். ஆனா, ஒரே சிங்கிள் த்ரெட்ல... ஒரே கதைல இவ்வளவு  எபிசோடுகள் தாண்டுகிற ஒரே தொடர் ‘வாணி ராணி’தான்.இந்த 1700 எபிசோடுகளுக்கும் வசனம் எழுதியிருக்கேன்; எழுதிட்டும் வரேன்!  ‘வாணி ராணி’ ஆரம்பிச்சப்பவே ‘கல்யாண பரிசு’க்கு எழுத ஆரம்பிச்சிட்டேன். அதுவும் 1390 எபிசோடு முடிஞ்சு இப்ப அடுத்த சீஸன்  போயிட்டிருக்கு.

ஆக, பல வருஷங்களா ஒரே ஸ்கிரீன் ப்ளே ரைட்டரோடு ஒரு வசனகர்த்தா பயணப்படுவது நிச்சயம் சாதனைதான்...’’ அடக்கமாகப் பேசும்  பா.ராகவன், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்.‘‘பூர்வீகம் மாயவரம் பக்கம் குத்தாலம். அப்பா ஆர்.பார்த்தசாரதி, ஸ்கூல் வாத்தியாரா  இருந்து முதன்மை கல்வி அதிகாரியா உயர்ந்து ஓய்வு பெற்றவர். அம்மா, ரமாமணி, இல்லத்தரசி. எனக்கு ரெண்டு தம்பிங்க. அப்பா  நல்லாசிரியர். அதனால பணி மாறுதல் இருந்துகிட்டே இருக்கும். அவர் சிவகங்கை மாவட்ட சி.இ.ஓ.வாக இருந்து ஓய்வு பெற்றப்ப அவர்  வாழ்நாள் சேமிப்பு வெறும் ரூ.50 ஆயிரம்தான்.

இந்தப் பணத்துல சென்னை குரோம்பேட்டைல சின்னதா ஒரு வீடு கட்டினார். நாங்க சென்னைக்கு வந்தது இப்படித்தான். நான் பிறந்து  வளர்ந்ததும் சென்னைலதான். இங்கயே ஏழெட்டு ஸ்கூல்கள்ல படிச்சேன். 10வது முடிச்சதும் தொழில்கல்விக்கு எதிர்காலம் இருக்குனு  அப்பா நினைச்சதால என்னை தரமணி பாலிடெக்னிக்குல மெக்கானிக்கல் என்ஜீனியரிங் சேர்த்துவிட்டார். கிளாஸுக்கு போன பிறகுதான்  ‘இது எனக்கான படிப்பு இல்ல’னு புரிஞ்சது! எங்க கல்லூரிக்கு பக்கத்துல திரைப்படக் கல்லூரியும் இருந்தது. அதுல சேர்ந்திருக்கலாமேனு  தோணிச்சு. அப்பா மேல சின்னதா வருத்தமும் வந்தது.

அடிக்கடி திரைப்படக் கல்லூரி வாசல்ல போய் நிப்பேன். அங்க நிறைய நண்பர்கள் அறிமுகமானாங்க. ‘உலக சினிமா’ வார்த்தையை  அங்கதான் கேள்விப்பட்டேன். சத்யஜித்ரே அறிமுகமாவதற்கு முன்பே அகிரா குரோசவா தெரிஞ்சவராகிட்டார்!’’ வாய்நிறைய சிரித்த  பா.ராகவன், லா.ச.ராமாமிர்தத்தின் ‘ஜனனி’ படித்துவிட்டு எழுத்தாளராக விரும்பியிருக்கிறார். ‘‘அப்படியே லயிச்சுப் போயிட்டேன்.  தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ படிச்சதும் கண்டிப்பா ரைட்டர் ஆகியே தீரணும்னு முடிவு பண்ணிட்டேன். தினமும் கதை எழுதி  ‘குமுதம்’ இதழுக்கு அனுப்பி வைப்பேன். ஆனா அதுல ஒரு கதை கூட பப்ளிஷ் ஆகல. ‘புத்தக வாசிப்பு இல்லாம எழுத்து சுத்தமாகாது’னு  அப்ப புரிஞ்சுக்கலை.

ஏறக்குறைய இந்த நேரத்துலதான் வேலையும் தேட ஆரம்பிச்சேன். மூணு வருஷ போராட்டம். ‘குமுதம்’, ‘கல்கி’ ஆபீஸ்கள்ல வேலை  கேட்டு அலைஞ்சு திரிஞ்ச அனுபவங்களும் உண்டு. அப்புறம் ‘அமுதசுரபி’ல உதவி ஆசிரியர் வேலை கிடைச்சது. மாசம் நானூறு  ரூபாசம்பளம். ஆபீஸ் பிராட்வேல இருந்தது. தெனமும் ட்ரெயின்ல ட்ராவல். என் நல்ல நேரம், ரயில்ல எழுத்தாளர் மா.வே.சிவகுமார் சார்  நட்பு கிடைச்சது. இந்த அறிமுகம் மட்டும் கிடைக்காமப் போயிருந்தா ஒரு ரைட்டரா நீங்க இப்ப பேட்டி எடுக்கற அளவுக்கு வந்திருக்க  மாட்டேன்! அசோகமித்ரன்ல இருந்து அத்தனை பேரையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைச்சவர் அவர்தான்...’’ நெகிழும் பா.ராகவன், இதன்  பின்னர் ‘கல்கி’, ‘குமுதம்’ பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறார்.

‘‘‘மொகஞ்சதாரோ’னு ஒரு சிறுகதை எழுதி ‘கல்கி’க்கு அனுப்பினேன். உடனே பிரசுரமாச்சு. அதைப் படிச்சிட்டு அங்க வேலைக்கு  கூப்பிட்டாங்க. அங்கதான் இளங்கோவன் சாரை முதன்முதல்ல பார்த்தேன். பத்திரிகைத்துறைல எனக்கு குரு அவர்தான். பிழையில்லாம  எழுதறதுல தொடங்கி துல்லியமா எழுதறது வரை எல்லாமே அவர்கிட்ட கத்துக்கிட்டதுதான். பெரிய பயிற்சிக்களமா ‘கல்கி’ எனக்குப் பாதை  அமைச்சுக் கொடுத்தது. ‘மூவர்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டேன். ‘கல்கி’ல வேலை பார்த்தப்பதான் ரம்யா கூட திருமணமாச்சு. எட்டு  வருஷங்களுக்கு அப்புறம் ‘குமுதத்’துல வேலை கிடைச்சது. அங்க ‘குமுதம் ஜங்ஷன்’ மாதம் இருமுறை பத்திரிகைக்கு எடிட்டரா  இருந்தேன்.

அப்புறம் ‘கிழக்கு பதிப்பக’த்தில் நிறுவன ஆசிரியரா ஒன்பது வருஷங்கள் பணி. கிட்டத்தட்ட 55 புத்தகங்கள் இதுவரை எழுதிட்டேன்.  ‘டாலர் தேசம்’ எனக்கு பெரிய திருப்புமுனையா அமைஞ்சது...’’ சொல்லிக் கொண்டே வந்த பா.ராகவனின் பேச்சு மெசேஜ் ரிங்டோனால்  தடைப்பட்டது. எடுத்துப் பார்த்தவர் மலர்ந்தார். ‘‘என் பொண்ணு பாரதி அனுப்பியிருக்கா. பக்கத்து ரூம்லதான் இருக்கா. ஃபைவ் மினிட்ஸ்  பேசலாமா... ஃப்ரீயானு கேட்கறா! இப்படி ஒரு மகள் அமைஞ்சது என் பாக்கியம்...’’ தழுதழுத்தவரின் பேச்சு சின்னத்திரை பக்கம்  திரும்பியது.

‘‘வேலையை உதறிட்டு, ஃப்ரீலான்சரா எழுதி சம்பாதிக்கலாம்னு தீர்மானிச்சதும் சுத்தி இருந்தவங்க பயமுறுத்தினாங்க. அப்ப எனக்கு  தைரியம் கொடுத்தது என் மனைவிதான். நண்பர் நரசிம்மன் மூலமா சின்னத்திரை இயக்குநர் விக்கிரமாதித்தன் நட்பு கிடைச்சு அவரோட  முதல் சீரியலான ‘கெட்டிமேளம்’ல வசனம் எழுதினேன். அதன்மூலம் முரளிராமன் சார் நட்பு கிடைச்சது. இப்ப வரை எனக்கு வழிகாட்டும்  சக்தியா அவர் இருக்கார். அந்தத் தொடருக்கு திரைக்கதையமைச்ச முத்துசெல்வன் எனக்கு பக்கபலமா இருந்தார்.

ஒருநாள் காலை விக்கிரமாதித்தனோட இரண்டாவது சீரியலான ‘உதிரிப்பூக்களு’க்கு எழுத அட்வான்ஸ் வாங்கிட்டு வெளியே வந்தேன்.  விஷன் டைம்ஸ் ஆபீஸ்ல இருந்து சித்திக் கூப்பிட்டார். கைல அட்வான்ஸை அள்ளிக் கொடுத்து ‘முத்தாரம்’ சீரியலுக்கு எழுதச் சொன்னார்!  என் மேல நான் வைச்சிருந்த நம்பிக்கையை விட சித்திக் பாய் என் மீது வைச்சிருக்கும் நம்பிக்கை அதிகம். எனக்கு அவர் சித்திக் பாய்  இல்ல... சித்திக் தாய். ஒரே நாள்ல ரெண்டு சீரியலுக்கு எழுத வைச்சார். அவரோட ராசி, இப்ப வரை சிங்கிள் ப்ராஜெக்ட்டுக்கு நான் ஒர்க்  பண்ணவே இல்ல!

ஒரே நாள்ல ரெண்டு சீரியலுக்கு அட்வான்ஸ் வாங்கினேன். ரெண்டுமே ஒரே நாள்ல படப்பிடிப்பு நடந்தது. மறக்கமுடியாத மொமன்ட்.  கொஞ்ச நாள்ல அவரே கூப்பிட்டு ‘முந்தானை முடிச்சு’ எழுதச் சொன்னார். அந்த டைம்ல ராடன்ல இருந்து சுபா வெங்கட் மேம் கூப்பிட்டு  ராதிகா மேடத்தை அறிமுகப்படுத்தினாங்க. மேடம் ‘செல்லமே’க்கு எழுதச் சொன்னாங்க. அடுத்தும் அவங்களே கூப்பிட்டு ‘சிவசங்கரி’யும்  கொடுத்தாங்க.  இப்படி ஒரே நேரத்துல அஞ்சு மெகா தொடர்களுக்கு எழுதிட்டிருந்தேன்! இடைப்பட்ட காலத்துல ‘உதிரிப்பூக்கள்’ல இருந்து  வெளியே வந்துட்டேன். ‘தேவதை’னு இன்னொரு சீரியலுக்கு எழுதிட்டிருந்தேன்.  

இத்தனை தொடர்களை ஒரே நேரத்துல எழுதினாலும் எனக்குனு அசிஸ்டென்ட்ஸ்னு சொல்லிக்க  யாரும் அப்ப கிடையாது. தனி ஆளா  அத்தனைக்கும் எழுதினேன்! இன்னொரு முக்கியமான விஷயம்,  திரைக்கதைஆசிரியரை விட, வசனகர்த்தான்னு பெயர் வாங்கத்தான்  விரும்பறேன்...’’ அழுத்தமாகச் சொல்லும் பா.ராகவனின் ஒர்க்கிங் ஸ்டைல் அலாதியானது. ‘‘ஒரு சீனை பேய் வேகத்துல எழுதினாக்கூட  ஒருமணி நேரமாகும். ஒரு எபிசோடுக்கு ஆறு சீன். அதாவது ஒரு சீரியலுக்கு ஆறுமணி நேரம்... அஞ்சு சீரியலுக்கு முப்பது மணி நேரம்!  ஒரு நாள்ல இருக்கறதோ 24 மணிநேரங்கள்தான். இப்ப நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கு! ஆனா, சீரியலுக்கு எழுதறதை ஜாலியா  நினைக்கறேன். நான் சந்தோஷமா இருக்க சம்பளம் கொடுக்கறாங்க.

கசக்கவா செய்யும்! ஒரு கட்டத்துக்குப் பிறகு என் சவுகரியத்துக்காக சீரியல் எண்ணிக்கையை குறைச்சுட்டேன். இடையே சித்திக் பாய்  கூப்பிட்டு ‘மனதேவரூ’ கன்னட சீரியலுக்கு எழுதும் வாய்ப்பையும் கொடுத்தார். அதை கன்னடத்தில் மொழிபெயர்த்த ரைட்டர் சராக்கி  மஞ்சுவின் நட்பும் கிடைச்சது.  என் வாழ்க்கைல ராதிகா மேடத்துக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். ‘செல்லமே’ எழுதும்போதே  கூப்பிட்டு ‘வாணி ராணி’ எழுதச் சொன்னாங்க. அப்புறம், என் வளர்ச்சியில் அக்கறையுள்ள விஷன் டைம் ராமமூர்த்தி சார் கூப்பிட்டு  ‘கல்யாண பரிசு’ம் அதோட ‘சீஸன் 2’வும் கொடுத்தார்.அடுத்து சேலம் சிவா இயக்கும் ‘கண்மணி’ மெகா தொடருக்கும் எழுதுறேன்...’’  மகிழ்ச்சியாகச் சொல்லும் பா.ராகவன் இப்போது ‘யதி’ நாவலையும் இன்னொரு மெகா புத்தகத்தையும் எழுதி வருகிறார்!   

- மை.பாரதிராஜா
படங்கள் : ஆ.வின்சென்ட பால்