மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!



தலைப்பை படித்ததுமே உங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நினைவு வந்தால் நீங்களும் இசைப்பிரியர் என்று அர்த்தம்! ஏனெனில் தொண்ணூறுகளில்  திரையுலகில் புயலென நுழைந்த அவர் இந்தியாவை ‘சின்னச் சின்ன ஆசை...’ என பாட வைத்ததை யாராலும் மறந்திருக்க முடியாது.

பெரும் ஆர்க்கெஸ்ட்ரா உழைத்திருக்கிறதோ என பலரையும் ஆச்சர்யப்பட வைத்து தேசியவிருது வாங்கிய பாட்டு அது. ஆனால், பல்லாயிரம்  இதயங்களையும் கொள்ளை கொண்ட இசையை வழங்க ரஹ்மானுக்கு உதவியது சிந்தஸைசர் என்னும் எலக்ட்ரிகல் கருவிதான்! கீபோர்டு மூலம் சிந்தஸைசரை இயக்கினால் பியானோ, புல்லாங்குழல்... போன்ற இசைக்கருவிகளின் ஒலியை பாடலில் கொண்டு வரமுடியும். 1960ம்  ஆண்டு பாப் இசை வழியே பிரபலம் பெற்று ராக், மெட்டல் என பலவகையிலும் விரிவான சிந்தஸைசர் பின்னாளில் மெல்ல புகழை இழந்தது.

இப்போது பல்வேறு இசை ஆல்பக் கலைஞர்கள் மூலம் மீண்டும் சிந்தஸைசர் இசை உலகில் ரீஎன்ட்ரியாகியுள்ளது! ‘‘அப்பாவிடம் கார் வாங்கித்தர  கடன் கேட்டு அடம்பிடித்தேன். அதில் சிந்தஸைசரின் ட்ரம்ஸ் இசையைக் கேட்கவே அவ்வளவு பிடிவாதம்...’’ என்னும் ஹிமான்சு பாண்டே ‘யுனைடெட்  மெஷின்ஸ்’ என்ற பெயரில் சிந்தஸைசரில் இசைக்குறிப்புகளை எழுதி டிஜேவாக மும்பையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். நாட்டில் முக்கியமான  பல்வேறு சிந்தஸைசர்களை பெரும் கலெக்‌ஷனாக - சொத்தாக - சேர்த்து வைத்துள்ளார்.

படுக்கையறை, சுவர், பெட்டின் கீழ் என அனைத்து இடங்களிலும் சிந்தஸைசர் மட்டுமே. ‘‘பழைய சிந்தஸைசர்களை இபே தளங்களில் அலசி ஆராய்ந்து  வாங்குவதே என் வேலை. அப்பா எனக்கு தரும் பணத்தை சேமித்து டிரெஸ், சினிமா என செலவழிக்காமல் ஒவ்வொரு ரூபாயையும் சிந்தஸைசர்  வாங்கவே செலவழித்தேன். இதுவே என் சொத்து...’’ புன்னகைக்கிறார் பாண்டே. பாண்டே என்றில்லை... பலரும் இப்போது புகழ் மங்கிப்போன அனலாக்  சிந்தஸைசர் மீது பித்துப் பிடித்து அலைகிறார்கள். காரணம், பல்வேறு இசைக்கருவிகளை இதில் சோதனை முறையில் நினைத்தபடி இசைக்கலாம்  என்பதே!

கொல்கத்தாவைச் சேர்ந்த ஆதித்யா நந்தவனா, சிந்தஸைசர் ஃபார்ம் நடத்திவரும் வருண் தேசாய் ஆகியோர் சிந்தஸைர்களை புதிதாகவும் உருவாக்கி  வருவது இதில் முக்கியமானது. ‘‘காரில் எஞ்சினைக் கழற்றி மாற்றி விமானமாக மாற்றுவது போன்ற முயற்சி இது...’’ என்று புன்னகைக்கிறார் ஆதித்யா.  மென்பொருள் மற்றும் இணையதள நிறுவனம் நடத்திவரும் ரிச்சர்ட் ப்ரூக்ஸ் மற்றும் வானித் பொதுவல் ஆகியோரின் முக்கிய அடையாளம் மாடுலர்  சிந்தஸைசர்களை உருவாக்கி வரும் நிறுவனத்தையும் தொடங்கியிருப்பதுதான்!

இவர்களில் ஆதித்யா, பாண்டே இருவரும் சிந்தஸைசர் ஆர்வலர்களுக்கான சந்திப்புகளை இந்திய நகரங்களில் உருவாக்கி வருகின்றனர். இதில்  வருண்தேசாய் நடத்தும் சிந்த்ஃபார்ம், சிந்தஸைசர் உருவாக்கம் மற்றும் பயிற்சிகளை முன்னணி கலைஞர்கள் வழிகாட்டுதலில் ஆண்டுதோறும்  பல்வேறு துறையிலுள்ளவர்களுக்கு வழங்கிவருகிறது.

சிந்தஸைசரை இசைக்க என்ன தேவை?

‘‘இசைக்கலைஞரின் இசையைக் கேட்பதோடு அவர் என்ன செய்கிறார் என்பதை அறியும் ஆர்வம் இருந்தால் போதும். பாடுபட்டு சேர்த்த தொன்மையான  சிந்தஸைசர்களை தொழில் முதலீட்டுக்காக பலர் விற்றுவிடும் அவலமும் நடைபெறுகிறது...’’ என வருத்தப்படுகிறார் ஆதித்யா. உயிரிவேதியியல்  பொறியாளரான இவர் தன் குடும்பத்தொழிலைக் கவனித்தபடி, கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சிந்தஸைசர் இசைக்கிற கலைஞர். லாஸ்ட் பட் நாட்  லீஸ்ட்... இந்தியாவில் மட்டுமல்ல, சிந்தஸைசர்களை சேமிக்கும் கலாசாரம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கூட இப்போது பரவிவருகிறது.  

சிந்தஸைசர் வரலாறு!

கீபோர்டு மூலம் இயக்கப்படும் எலக்ட்ரிக் இசைக்கருவிதான் சிந்தஸைசர். 1876ம் ஆண்டு எலிசா கிரே என்பவர் முதல் எலக்ட்ரிகல் சிந்தஸைசரை  உருவாக்கினார். புரோகிராம் முறையிலான சிந்தஸைசரை (RCA Mark2) கொலம்பியா பிரின்ஸ்டன் இசை மையம் உருவாக்கியது. இதில் உருவாக்கப்படும் சிக்னல்கள் ஆம்ப்ளிஃபையர், ஸ்பீக்கர்களில் இசையாக வெளிவருகிறது.

பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளைக் கலவையாக சிந்தஸைசரில் உருவாக்கலாம். 1960ம் ஆண்டு தொடங்கி, பாப், ராக், கிளாசிக்கல் தளங்களில்  பரவலான சிந்தஸைசர், 21ம் நூற்றாண்டில் பெரும் புகழ்பெற்றது. 1980ம் ஆண்டு Yamaha DX7 என்னும் டிஜிட்டல் சிந்தஸைசர் பரவலாக  வெற்றிபெற்ற கண்டுபிடிப்பு. EMS VCS3, APR 2600, Doefer A-100, Roland TB-303 ஆகியவை எல்லாம் உலகளவில் புகழ்பெற்ற கிளாசிக்  சிந்தஸைசர்கள்.

ச.அன்பரசு