சாவித்திரியாக மாறியது எப்படி?
ரகசியத்தை உடைக்கிறார் கீர்த்தி சுரேஷ்
நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கோலோச்சுகிறார் நம் ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி. அமெரிக்காவிலும் 1.5 மில்லியன் டாலர் கலெக்ஷனை அள்ளியதில் கீர்த்தி சுரேஷின் முகமெல்லாம் தவுசண்ட் வாட்ஸ் பூரிப்பு.
சாவித்திரியாகவே வாழ்ந்த கீர்த்திக்கு இப்போது சக நடிகைகளான சமந்தா, காஜல் அகர்வால் என பலரும் ‘Mind blowing and gutsy performance’ என ஃப்ரெஷ் பொக்கே நீட்டுகிறார்கள். இன்னொருபுறம், மோகன்லாலில் இருந்து ஜூனியர் என்டிஆர் வரை டாப் ஹீரோக்களும் கீர்த்தியைக் கொண்டாடுகிறார்கள். எட்டுத் திக்கிலிருந்தும் ‘keep rocking’ வாழ்த்துகளால் நெகிழ்ந்து மகிழ்கிறார் கீர்த்தி சுரேஷ். ‘‘‘சாவித்திரியம்மாவோட பயோகிராஃபியை படமா பண்றேன். நீங்கதான் சாவித்திரியம்மாவா நடிக்கப் போறீங்க’னு இயக்குநர் நாக் அஸ்வின் சொன்னதும் கொஞ்சம் ஷாக்கிங்கா இருந்தது.
அவங்கள மாதிரி நடிக்க முடியுமானு நிறையவே தயங்கினேன். அவங்க லைஃப்ல நல்லது கெட்டது ரெண்டும் நடந்திருக்கு. அதையெல்லாம் சொன்னா மக்கள் ஏத்துப்பாங்களானு யோசிச்சேன். இதைப் பார்த்த இயக்குநர், ‘முழுக்கதையையும் கேட்டுட்டு முடிவு பண்ணுங்க’னு சொன்னார். அவங்க சின்ன வயசு பத்தி கேட்டதும் நிச்சயம் என்னால நடிக்க முடியும்னு நம்பிக்கை வந்தது. மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்தப்ப கான்ஃபிடன்ட் அதிகரிச்சது...’’ முகமெல்லாம் மலர பேச ஆரம்பிக்கிறார் கீர்த்தி. ‘‘சாவித்திரியம்மா படங்களைத் தேடித்தேடி பார்த்தேன்.
டைரக்டரும், அவங்களோட பெஸ்ட் சீன்ஸ், பெஸ்ட் பெர்ஃபாமென்ஸ், அவங்க எப்படி அழுவாங்க... எப்படி சிரிப்பாங்கனு ரெஃபரன்ஸ் கொடுத்து அந்தந்த காட்சிகளை பார்க்கச் சொன்னார். நான் சாவித்திரியா நடிக்கறது தெரிஞ்சதும் விஜயசாமுண்டீஸ்வரி மேம் சந்தோஷமா வந்து வாழ்த்தினாங்க. நிஜ வாழ்க்கைல அவங்க அம்மாவோட மேனரிசம் எப்படி இருக்கும்... வீட்ல எல்லார்கிட்டேயும் எப்படி பழகுவாங்கனு டிப்ஸ் கொடுத்தாங்க...’’ என்ற கீர்த்தி இந்தப் படத்துக்காக அதிகம் சிரமப்பட்டிருக்கிறார். ‘‘படப்பிடிப்புக்கு முன்னாடி நிறைய ஹோம் ஒர்க் தேவைப்பட்டுச்சு.
சாவித்திரியம்மா எல்லாருக்கும் தெரிஞ்சவங்க. அதனால ஜஸ்ட் லைக் தட் நடிச்சுட முடியாது. அவங்க லுக்கை கொண்டு வர ரொம்பவே சிரமப்பட்டோம். மேக்கப்புக்கே மூணு மணிநேரமாகும். அவங்களை மாதிரியே கண், உதடு, ஹேர்ஸ்டைல்னு நுட்பமா சரிபார்த்து அதை மேக்கப்ல கொண்டு வந்தாங்க. சாவித்திரியம்மா என்னை விட குண்டாக இருப்பாங்க. இதுக்காகவும் ஸ்பெஷல் மேக்கப் பண்ணினாங்க. அந்த டைம்ல என்னால யார்கிட்டயும் அதிகமா பேச முடியாது. சரியா சாப்பிட முடியாது. தினமும் ஏழு மணி நேரம் ஷூட்டிங் போகும். என் கேரியர்ல முதன்முறையா இந்தப் படத்துக்காகத்தான் அதிகமான காஸ்ட்யூம்ஸ் யூஸ் பண்ணினேன்.
மொத்தம் 120க்கும் மேல உடைகள் இருக்கும். பத்து மாச ஷூட்டிங்குல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் கிடைச்சது. ‘மாயா பஜார்’ல கடோத்கஜன் பாட்டு வரும் போது கிட்டத்தட்ட 40 டேக்ஸ் வரை வாங்கினேன். அதே மாதிரி ஜெமினி கணேசன் சாரா நடிச்ச துல்கர் கூட காம்பினேஷன் வர்றப்ப எல்லாம் போட்டி போட்டு நடிக்க வேண்டியிருந்தது. அப்படி ஒரு பெர்ஃபாமர் அவர். படத்தோட டீசர் வெளியானப்ப ‘படத்துல நிறைய லுக்ஸ் பண்ணியிருக்கோமே... ஏன் இந்த லுக்கை மட்டும் வெளியிட்டாங்க’னு தோணுச்சு. ஆக்சுவலா எனக்கு ஜட்ஜ் பண்ணத் தெரியலை. டீசருக்கு குவிஞ்ச பாராட்டுகளை எல்லாம் பார்த்தபிறகுதான் உண்மை புரிஞ்சுது.
இப்ப படம் பார்த்துட்டு எல்லாரும் வாழ்த்தும்போது சந்தோஷமா இருக்கு...’’ நெகிழும் கீர்த்தி, தனக்கு டோலிவுட், கோலிவுட் என இரு திரையுலகுமே பிடிக்கும் என்கிறார். ‘‘மலையாளத்துல அறிமுகமானேன். தமிழ்ல பிரேக் கிடைச்சது. ‘மகா நடி’க்கு (தமிழில் ‘நடிகையர் திலகம்’) பிறகு தெலுங்குல தலைமேல தூக்கி வைச்சுக் கொண்டாடறாங்க. எனக்கு எல்லா மொழி திரையுலகும் க்ளோஸ் டூ ஹார்ட்தான். எங்கப்பா அடிக்கடி ‘உன் படம்னு இல்ல... யார் நடிச்ச படமா இருந்தாலும் நீ தியேட்டர்ல போய்தான் பார்க்கணும்’னு சொல்வார். இப்ப வரை அதை ஃபாலோ பண்றேன்!’’ என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
மை.பாரதிராஜா
|