காவல் தற்கொலை படை!
நியூஸ் வியூஸ்
வீரத்திலும், அறிவிலும் ஸ்காட்லாந்துயார்டு போலீசாருக்கு இணையாக ஒரு காலத்தில் பேசப்பட்ட தமிழ்நாடு காவல்துறையில் இன்னுமொரு தற்கொலை. சென்னை அசோக் நகர் காவலர் பயிற்சிப் பள்ளியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலரான 28 வயது பாலமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவரது தந்தை விஜயராகவனிடம், உயர் போலீஸ் அதிகாரிகள் கடுமையாக வேலை வாங்குவதாக சில நாட்களாகவே சொல்லி வந்திருக்கிறார்.
வேலை பிடிக்காத காரணத்தால் முன்னறிவிப்பு இன்றி விடுப்பு எடுத்திருக்கிறார். இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட உயரதிகாரிகள் கடுமையாகத் திட்டியதாகவும், அதன் பிறகே பாலமுருகன் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் டிஜிபி அலுவலகத்திலேயே இரண்டு கான்ஸ்டபிள்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அவர்களும் மேலதிகாரிகளின் டார்ச்சர் என்றே காரணம் சொன்னார்கள்.
அதே மார்ச் மாதம் பணிப்பளு காரணமாக சென்னையில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் காவல் நிலையத்திலேயே துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற அவலச் செய்திகளை அடிக்கடி வாசித்துக் கொண்டே இருக்கிறோம். என்னதான் நடக்கிறது தமிழக காவல்துறையில்? பணியில் இருக்கும்போது மரணமடையும் காவலர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகவே இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே சுமார் 300 காவலர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
இந்தக் காலக்கட்டத்தில் பல்வேறு காரணங்களால் மரணமடைந்த காவலர்களின் எண்ணிக்கையில் இது பத்து சதவிகிதம் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்பு காவலர் ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பு எடுத்திருந்த கணக்கீட்டின்படி, அடிமட்ட காவல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலானோருக்கு தற்கொலை எண்ணம் அடிக்கடி தலை தூக்கு கிறது என்று கவலையோடு சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. சப் இன்ஸ்பெக்டர் போன்ற பணிகளில் இருப்பவர்களிலேயே கூட முப்பது சதவிகிதமானவர்கள் இதுபோன்ற மனநிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டது.
இந்தக் கொடுமையான சூழலுக்கு என்னென்ன காரணங்கள்? குடும்பக் கடமைகளைச் சரிவர மேற்கொள்ள முடியாமை, குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாத நிலை, போதிய ஓய்வின்மை, தாங்கவே முடியாத பணிச்சுமை, மேல் அதிகாரிகள் தரும் தேவையற்ற நெருக்கடி, அமைதியான சூழலின்றி மனரீதியான பாதிப்பு, செய்யும் பணிக்கு அங்கீகாரமே இல்லாத நிலை, உடல்நிலையை சரிவர பராமரிக்க முடியாமை, பணியில் எப்போதுமே உடல்ரீதியான அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் நிலைமை, பணிப்பளு பகிர்ந்து கொடுக்கப்படாமை, பொதுமக்களிடம் காவலருக்கு மரியாதையின்மை... என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
விரும்பி போலீஸ் வேலைக்கு வரக்கூடிய இளைஞன், மிகக்குறுகிய காலத்திலேயே வேலையை வெறுக்கக்கூடிய மனநிலைக்கு ஆளாகிறான். அதிலும் உயரதிகாரிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ‘ஆர்டர்லி’யாக பணிபுரியக்கூடிய கொடுமையைக் காட்டிலும் பெரிய கொடுமை வேறில்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்ட ஆர்டர்லி முறை, இப்போதும் சட்டத்துக்குப் புறம்பாக நடைமுறையில் இருப்பது சமீபத்திய சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. இதெல்லாம் அரசுக்கு நன்றாகவே தெரியும். என்றாலும் மேற்குறிப்பிட்ட எந்த ஒரு காரணத்தையும் அவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.
சட்டமன்றத்திலேயே இது குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியபோது, “போலீசார் தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை முடிவை எடுக்கிறார்கள்...” என்று முதல்வர் சொல்கிறார். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தப் பிரச்னையில் அரசுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த பெஞ்ச், காவலருக்கான அவலமான பணிச்சூழல் குறித்த தன் கவலையைப் பகிர்ந்து கொண்டது. மேலும், அவர்களது பணிச்சுமையைக் குறைப்பது, மனநல ஆலோசனை, உயரதிகாரிகளால் ஏற்படக்கூடிய நெருக்கடியைத் தவிர்ப்பது போன்றவை குறித்து சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து உருப்படியான திட்டங்களை உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டது.
காவலர்களின் நலனை உத்தேசித்து, தங்களுக்குள்ளாக சங்கம் அமைத்துக் கொள்வதற்கான உரிமையை அரசு அவர்களுக்குத் தரவில்லை. அதுபோல சங்கம் அமைத்தால், எதிர்காலத்தில் சம்பள உயர்வு மற்றும் சலுகைகளுக்காக வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவார்களோ என்று அச்சம். அத்தியாவசியப் பணியான காவல்துறை, வேலை நிறுத்தம் செய்தால் மாநிலமே ஸ்தம்பித்து விடும் என்றால் அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைத் தருவதற்கு அரசுதானே பொறுப்பேற்க வேண்டும்?
காவலர்களின் தற்கொலைக்குக் காரணங்கள் என்று இங்கே பட்டியலிடப்பட்டதை இல்லவே இல்லை என்று அரசும், காவல்துறை உயரதிகாரிகளும் மறுக்கலாம். கீழ்க்கண்ட சில எளிமையான கேள்விகளுக்கு மட்டும் அவர்கள் மனச்சாட்சியோடு விடையளிக்கட்டும். மற்ற துறையில் இருக்கும் பணியாளர்களைப் போல் எந்தஒரு காவலராவது எட்டு மணி நேரம் மட்டுமே உழைக்கக் கூடிய சூழல் தமிழகத்தில் இருக்கிறதா? அவர்களுக்கு முறையான வார ஓய்வு வழங்கப்படுகிறதா? காவலர்களின் தனிப்பட்ட சுக துக்கங்களுக்கு அதிகாரிகள் கெடுபிடியின்றி விடுமுறை கொடுக்கிறார்களா?
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகளோடு ஒப்பிடுகையில் காவல்துறையினருக்கு நியாயமான ஊதியம்தான் வழங்கப்படுகிறதா? விஐபிகளுக்கான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்களின் இயற்கை உந்துதல், மாதவிடாய் போன்ற பிரச்னைகளுக்கு காவல்துறை ஏதேனும் ஏற்பாடு செய்கிறதா? உயரதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்காக கான்ஸ்டபிள்கள் பணிக்கு அமர்த்தப்படுவதே இல்லையா? இன்னும் ஏராளமான கேள்வி கள் இருக்கின்றன. அனைத்துக்கும் விடை தெரிந்தும் மவுனமாக இருக்கிறார்கள் என்னும்போது வினாவை மட்டும் எழுப்பி என்ன பயன்?
யுவகிருஷ்ணா
|