COFFEE TABLE



கடல்கன்னி

கோலாகலமாக நடந்துகொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவின் ஹாட் டாபிக், தீபிகா படுகோனின் செக்ஸி காஸ்ட்யூம்தான்! ஸ்லீவ்லெஸ்  கடல்கன்னி போல் அசத்தும் அந்த காஸ்ட்யூமை வடிவமைத்தவர் ஜுஹைர் முரத். மணப்பெண்களுக்கான ஆடைகளின் டிசைனர் இவர்.  ‘‘கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் தீபிகா நடந்து வந்தபோது, நிஜ தேவதையே வந்து நின்றது போல் இருந்தது...’’ என வியந்த ஜுஹைர், தான் கண்ட  காட்சியை அப்படியே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட, ஒரு மணி நேரத்தில் ஐம்பதாயிரம் லைக்குகளைத் தாண்டிவிட்டது தீபிகாவின் நியூ லுக்!

பளபள பார்பி!

‘‘நம்ம வீட்டுச் செல்லங்கள், பார்பி பொம்மையின் முகத்தில் ஸ்கெட்ச் கொண்டு கிறுக்கி இருந்தாலோ அல்லது அந்த பொம்மையின் சில்க்கி ஹேர்  சிக்குப் பிடித்து தலை சீவ முடியாமல் இருந்தாலோ... கவலைப்பட வேண்டாம். அதை புதுசு போல மாற்றிடலாம்...’’ என்கிறது ஒரு வீடியோ.  ஃபேஸ்புக்கின் ‘5-Minute Craft’ பக்கத்தில் இதுபோன்ற பயனுள்ள வீடியோக்கள் ஏராளமாக உள்ளன. அதில் ‘No one is ever too old for dolls’  என்ற அந்த வீடியோவை 48 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கியுள்ளனர்.

வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!

ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது ‘Vivo X21 UD’. குறைந்த எடையுடன் எல்லோரையும் ஈர்க்கும்விதமாக  அழகாக இதை வடிமைத்திருக்கிறார்கள். 6.28 இன்ச் டிஸ்பிளே, 6 ஜிபி ரேம், 12 எம்பி செல்ஃபி கேமரா, 128ஜிபி ஸ்டோரேஜ், 3200mAh பேட்டரி திறன்  மற்றும் ஃபிங்கர்பிரின்ட் லாக்கிங் சிஸ்டத்துடன் மே 29ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது இந்த ஸ்மார்ட்போன். விலை ரூ.37,100.

கடனில் முன்னிலை!

‘‘பர்சனல் லோன் வாங்குவதில் தென்னிந்தியா முன்னிலை...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது ரிசர்வ் வங்கி. இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா முறையே  முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கிறது. ‘‘மற்ற கடன்களைவிட பர்சனல் லோனுக்கான வட்டி விகிதம் அதிகம். ஆனாலும் தென்னிந்திய மக்கள்  வட்டி கட்ட சலிக்காமல் கடன் வாங்குவது ஆச்சர்யமளிக்கிறது...’’ என்கிற ரிசர்வ் வங்கி, ‘‘அதே தென்னிந்தியாதான் பணத்தைச் சேமிப்பதில் இரண்டாம்  நிலையில் உள்ளது...’’ என்று அதிசயிக்கிறது! ‘‘ஒருவேளை கடன் வாங்கி சேமிக்கிறார்களா..?’’ என்று நீங்கள் சந்தேகிக்கலாம். ஆனால், ‘‘கடனுக்கும்  சேமிப்புக்கும் எந்த முடிச்சும் இல்லை...’’ என்கிறது ரிசர்வ் வங்கி.

ஐஸ்க்ரீம் கரடி!

கனடாவைச் சேர்ந்த டக் போஸ் ஒரு விலங்குப் பிரியர். அல்பெர்ட்டா மாகாணத்தில் மிருகக் காட்சிச் சாலை ஒன்றை நடத்தி வருகிறார். தனது  செல்லக் கரடியை காரில் ஏற்றிக்கொண்டு நகரத்துக்குள் உலாவுவது அவரது வாடிக்கை. அன்றும் வழக்கம்போல கரடியுடன் ஊர் சுற்றப் போனவர்,  சும்மா இருக்காமல் கரடிக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார்.  இந்தச் சம்பவத்தை நினைவுப் பெட்டகத்தில் சேகரிக்க  வீடியோவாகவும் பதிவு செய்துவிட்டார். அந்த வீடியோ லீக் ஆகிவிட, விலங்குகள் நல வாரியம் அவரின் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறது! இனி  தனியார் மிருகக் காட்சிச் சாலை நடத்த கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரப் போவதாக கனடா அறிவித்திருக்கிறது.

குங்குமம் டீம்