ரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர்



கே.என்.சிவராமன்-2

‘‘சிவகாமி...’’ மனதுக்குள் உச்சரித்த கரிகாலனின் மனதில் பல்வேறு உருவங்கள் அலைக்கழித்தன. இமைகளை மூடி சில கணங்கள் நின்றவன்  சட்டென்று வல்லபனை ஏறிட்டான். ‘‘தன் பாட்டியைப் போலவே இவளும் ஏதோ சபதம் செய்திருப்பதாகச் சொன்னாயே..?’’ ‘‘அப்படித்தான் பல்லவ  இளவல் என்னிடம் குறிப்பிட்டார்...’’ ‘‘என்ன சபதம்?’’ ‘‘தெரியாது. அதுகுறித்து அவர் எதுவும் சொல்லவில்லை.

ஒருவேளை நீங்களே அறிந்துகொள்ள வேண்டுமென அவர் நினைத்திருக்கலாம். ஆனால், ஒன்று...’’ ‘‘என்ன?’’ ‘‘உங்கள் வழியாக இந்த சிவகாமியின்  சபதம் நிறைவேற வேண்டும் என்றே, தான் விரும்புவதாகத் தெரிவித்தார்...’’‘‘எப்போது?’’ ‘‘ஆறு திங்களுக்கு முன் அவரைக் கடைசியாகச்  சந்தித்தபோது...’’கரிகாலன் யோசனையில் ஆழ்ந்தான். ‘‘சபதத்தை நினைத்தால் மனம் இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறது...’’ மெல்ல வல்லபன்  முணுமுணுத்தான். ‘‘ஏன்?’’ ‘‘திரவுபதியின் சபதம் கெளரவர்களை அழித்தது. கண்ணகியின் கோபம் மதுரையை சாம்பலாக்கியது. நரசிம்மவர்ம பல்லவர்  காலத்தில் சிவகாமி அம்மையாரின் சபதம் சாளுக்கிய தேசத்தையே அழித்தது.

அந்தப் போரில் நாம் வெற்றி பெற்றோம். அதேசமயம் சாளுக்கியர்களுக்கு சமமாக யுத்தத்தால் நாமும் அதிகம் இழந்தோம். பயிர்கள் நாசமாகின.  கடைநிலை கைவினைக் கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். கால்நடைகளை, மேய்ச்சல் நிலங்களைப் பறிகொடுத்த பூர்வகுடிகள்  இன்னமும் அவற்றைத் திரும்பப் பெறவில்லை. இப்போது இந்த சிவகாமி தன் பங்குக்கு ஏதோ சபதம் செய்திருக்கிறார். இதனால் என்ன விளைவுகள்  ஏற்படப் போகிறதோ..?’’ ‘‘அச்சப்படுகிறாயா வல்லபா..?’’ ‘‘இல்லை. இப்போதிருக்கும் நிலையை எண்ணினேன்...’’ ‘‘அதற்கென்ன..?’’ ‘‘கரிகாலரே... அமைச்சர்  பிரதானிகள் நம் மன்னரிடம் உரையாடும்போது நானும் அங்கிருந்தேன்...’’ ‘‘ம்...’’ ‘‘பல்லவ நாடு மழையை நம்பி இருக்கும் பூமி என்பது தங்களுக்கே  தெரியும்.

சில ஆண்டுகளாக மழை பொய்த்து வருகிறது. வசூலிக்கும் வரிகளில் ஒரு பகுதியை பஞ்ச நிவாரணத்துக்கு ஒதுக்குவதால் அதை அவ்வப்போது  மக்களுக்கு பகிர்ந்தளித்து ஓரளவு சமாளிக்கிறோம். வரும் ஐப்பசி, கார்த்திகையில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள்.  அது மட்டும் நடக்கவில்லையென்றால் வரும் ஆண்டை எதிர்கொள்வது இயலாத காரியம் என்கிறார்கள் அமைச்சர் பிரதானிகள்...’’ சொன்ன வல்லபன்  அருகில் வந்து கரிகாலனின் கைகளைப் பிடித்தான். ‘‘என்ன வல்லபா..?’’ ‘‘ஒரு வேண்டுகோள். பல்லவ நாடு இப்போதிருக்கும் நிலையை தங்களுக்கு  சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள இரண்டாம் புலிகேசி யின் மகனும் சாளுக்கிய மன்னருமான விக்கிரமாதித்தர் திட்டமிட்டிருப்பதாக செய்தி  கிடைத்திருக்கிறது.

பெரும் படையைத் திரட்டி வருகிறாராம். எப்போது வேண்டுமானாலும் போர் முரசு கொட்டப்படலாம். எனவே, இந்த சிவகாமியின் சபதம் என்னவென்று  அறிந்து, முடிந்தவரை அதை நிறைவேற்றுவதைத் தள்ளிப் போடுங்கள்...’’ சொல்லிவிட்டு விறுவிறுவென்று சிவகாமியை நோக்கி வல்லபன் சென்றான்.  இதற்குள், நாட்கணக்கில் மரக்கலங்களில் பயணித்த மயக்கம் நீங்க புரவிகளும் கடற்கரை மணலில் ஓடிப் புரண்டு இயல்புக்குத் திரும்பியிருந்தன.  ‘‘அனைத்துமே நல்ல சாதிக் குதிரைகள்தான். யார் யாருக்கு எதை எதை அளிக்கலாம் என்பதை வீரர்களிடம் தெரிவித்திருக்கிறேன்...’’ என்ற சிவகாமி,  தள்ளி நின்ற கரிகாலனை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்ந்தாள்.‘‘உங்களுக்காகக் காத்திருப்பவர் அவர்தான்.

பெயர் கரிகாலர்...’’ தலையசைத்துவிட்டு, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனை நோக்கி மணலில் கால்கள் புதைய சிவகாமி நடந்தாள்.  முதல் பார்வையிலேயே கரிகாலன் மீது அவளுக்கு மரியாதை வந்தது. காரணம், அவன் கண்கள். அவளது பார்வையை மட்டும்தான் அது  எதிர்கொண்டிருந்தது. மற்றபடி உடலின் வேறு அங்கங்களை அது ஆராயவில்லை. இத்தனைக்கும் புரவிகளுக்கு சமமாக அவள் ஓடி முடித்துவிட்டுத்  திரும்பியிருக்கிறாள். எனவே அப்போதும் பெருமூச்சுகள் வெளியேறிக் கொண்டிருந்தன. அதற்கு அறிகுறியாக அவளது ஸ்தனங்களும் உயர்வதும்  தாழ்வதுமாக இருந்தன. அணிந்திருந்தது மார் கச்சைதான்.

ஆனால், அது நீராட்டத்தின்போது அணிபவை. புரவிகளுடன் கடற்கரையில் ஓடவேண்டும் என்பதாலும், சமயத்தில் கடலிலும் மூழ்கி  எழவேண்டியிருக்கும் என்பதாலும், வழக்கமாக வெளியே செல்லும்போது உடுத்தும் கச்சையைத் தவிர்த்திருந்தாள். எனவே, மறைய வேண்டிய இடங்கள்  மறைந்தும் மறையாமல் ஸ்தனங்களின் அளவைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. இடுப்பில் உடுத்தியிருந்ததும் மெல்லிய ஆடைதான். ஆனால்,  வெண்மைக்கு பதில் சற்றே சிவப்பு சாயம் ஏறியவை. இப்படி வேண்டும் என நெசவாளர்களிடம் நெய்யச் சொல்லியிருந்தாள். இந்த மெல்லிய உடையும்  காலம்காலமாக மல்லை வாழ் பெண்கள் கடலாடும்போது அணிபவைதான்.

அதனால்தானே தொண்டைமான் இளந்திரையன் காலத்தில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் தனது பெரும்பாணாற்றுப் படையில், மல்லை  மாதரசிகளின் ஆடைகளைக்  கொன்றையின் மெல்லிய கொம்புகளிலே தவழும் பனித்திரைக்கு ஒப்பிட்டிருந்தார்! அப்படிப்பட்ட மெல்லிய ஆடையையே  அன்று சிவகாமி அணிந்திருந்தாள். அப்படியிருந்தும் கரிகாலனின் கண்கள் அவளை மொய்க்கவில்லை. மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்  வாய்ந்தவனைத்தான் புலவர் தண்டி அனுப்பியிருக்கிறார். நிம்மதியுடன் அவனை நெருங்கியவள், ‘‘செ-லி  நா- லோ-செங்-கியா  பா-தோ-பா-மோ” என  தனித்தனிச் சொற்களாக அவனுக்கு மட்டும் கேட்கும்படி அழுத்திச் சொன்னாள்! கரிகாலனின் கண்கள் விரிந்தன.

செ-லி  என்றால் . நா-லோ-செங்-கியா என்றால் நரசிம்ம. பா-தோ-பா-மோ என்றால்  போத்தவர்மன். மொத்தமாகச் சேர்த்தால் நரசிம்ம  போத்தவர்மன். இரண்டாம் நரசிம்மவர்மரான ராஜசிம்மனை சீனர்கள் இப்படித்தான் அழைத்தார்கள்*. இதையேதான் சங்கேதச் சொல்லாக ரகசியங்களைப்  பரிமாறிக் கொள்ளவும், பரஸ்பர நம்பிக்கையுடன் பணியாற்றவும் பல்லவ நலம் விரும்பிகள் தங்களுக்குள் உபயோகித்தார்கள். அப்படிப்பட்ட சொல்லை  இந்த சிவகாமி உச்சரிக்கிறாள் என்றால்... இவள் நம்பிக்கைக்கு உரியவள்தான். ‘‘சொல்லுங்கள்...’’ சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கரிகாலன்  விஷயத்துக்கு வந்தான். ‘‘இளவரசரைச் சந்திக்க வேண்டும்..!’’ ‘‘என்ன விஷயமாக?’’ ‘‘அதை அவரிடம்தான் சொல்ல முடியும்.

இளவரசர் இருக்கும் இடம் உங்களுக்கு மட்டுமே தெரியும். அங்கு என்னை அழைத்துச் செல்லுங்கள். இது புலவர் தண்டியின் உத்தரவு!’’ சிவகாமி  இப்படிச் சொல்லி முடித்ததும், தனக்கு நேராக நின்று கொண்டிருந்த அவளது தோளைப் பிடித்து கரிகாலன் விலக்கினான். ‘என்ன...’ என்று கேட்க  முற்பட்டவளின் வாயைப் பொத்தி கண்களால் ஓரிடத்தைக் காண்பித்தான். கடற்கரையை ஒட்டியிருந்த தோப்பிலிருந்து மூவர் யாருக்கும் சந்தேகம்  வராதபடி கடலில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். வைகாசி மாத சுக்கில பட்ச சதுர்த்தி என்பதால் இரவின் ஐந்தாம் நாழிகையிலும் பிறை நிலவு  வெள்ளிப் பாளங்களாகக் கடலில் ஜொலித்துக் கொண்டிருந்தது. மூவருமே தங்கள் முகத்தை வஸ்திரங்களால் மூடியிருந்தார்கள்.

எனினும் அவர்கள் இடுப்பிலிருந்த வாளின் நுனி, கிடைத்த ஒளியிலும் ஒளிர்ந்தது. ‘‘இவ்வளவு விரைவில் இதை எதிர்பார்க்கவில்லை...’’  முணுமுணுத்த கரிகாலன் தன் வலக்கரத்தை சிவகாமியின் இடுப்பில் சுற்றினான். ‘‘கடலாடும் காதை என மற்றவர்கள் நினைக்கட்டும்...’’ என அவள்  செவியில் முணுமுணுத்துவிட்டு, கடலை நோக்கி அவளை இழுத்தபடி நடந்தான். இடுப்பில் தவழ்ந்த விரல்கள் அத்துமீறாததாலும், கண்முன்னே  தெரிந்த காட்சி ஆபத்துக்கு அறிகுறியாக இருந்ததாலும் தன் பங்குக்கு சிவகாமியும் ஒத்துழைத்தாள். அரைவட்டமாக அர்த்த சந்திர வடிவத்திலிருந்த  நீராடு கட்டத்தின் கரையோரத்தை நெருங்கிய கரிகாலன், இடைவெளி விட்டு நின்றிருந்த பெரும் தூண்களில் ஒன்றை தனது இடது கையால்  அணைத்தான்.

பொந்து ஒன்றுக்குள் சென்ற அவனது கரம் எதையோ தேடித் துழாவியது. நினைத்தது கிடைத்ததும் கையை வெளியே எடுத்தான். இரு வாள்கள்!  ஒன்றை சிவகாமியிடம் கொடுத்துவிட்டு கடலில் இறங்கினான். முடிந்தளவு இருவரும் வாளை மறைத்துக் கொண்டார்கள். கரையில் இருந்தவர்களுக்கு  எவ்வித சந்தேகமும் ஏற்படவில்லை. காதலர்கள் என நினைத்து தங்கள் பார்வையைத் திருப்பிக் கொண்டார்கள். அர்த்தசேது என்று கொண்டாடப்பட்ட  மல்லைக் கடல், சேதுவைப் போலவே நீண்ட தூரம்  ஆழமில்லாதது. கடலோர நீர்ப்பகுதியும் குளம் போல் சிற்றலைகளை எழுப்பக்  கூடியது.  இடுப்பளவு நீரில் நடந்தார்கள். இருவரின் பார்வை மட்டும் தொலைவில் நகர்ந்து கொண்டிருந்த அந்த மூவரையும் பின்தொடர்ந்தபடியே இருந்தது.

‘‘நம்மைப் போலவே அவர்களும் கழுத்தளவு நீருக்கு வந்துவிட்டார்கள்!’’ சிவகாமி எச்சரித்தாள். ‘‘ஆம். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் நீந்தத்  தொடங்கலாம். இலக்கை அவர்கள் அடைவதற்குள் நாம் தடுத்தாக வேண்டும்...’’ சொன்ன கரிகாலன் அடுத்த கணம் அவளை அணைப்பதுபோல்  அணைத்து விழுவது போல் கடலில் விழுந்தான். அதன் பிறகு இருவரின் தலையும் கடலுக்கு வெளியே தெரியவேயில்லை. அந்த மூவரும் இருந்த  திக்கை நோக்கி நீருக்குள்ளேயே நீந்தினார்கள். ஒரேயொருமுறை மட்டும் தன்னுடன் நீந்தும் சிவகாமியைப் பார்த்தான்.

ஒரு கரத்தில் வாளை ஏந்தியபடி மறுகரத்தால் நீந்திக் கொண்டிருந்தாள். தன்னைப் போலவே அவளும் அசுவசாஸ்திரி மட்டுமல்ல... மச்ச சாஸ்திரியும்  கூட என்பது புரிந்தது. நீரின் அடி ஆழ இருட்டு மெல்ல மெல்லப் பழகியது. இருளும் ஒளிதான். சந்தேகமேயில்லை. வரைகோடு போல் மூன்று  உருவங்கள் சில கணங்களுக்குப் பின் தட்டுப்பட்டன. முழங்கையால் சிவகாமியை இடித்து செய்கை செய்துவிட்டு கரிகாலன் வாளைச் சுழற்ற  ஆரம்பித்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த மூவரும் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பிறகு சுதாரித்து இடுப்பிலிருந்த தங்கள் வாட்களை  உருவினார்கள்.

நிலத்தில் நடப்பது போலவே கடலுக்குள்ளும் வாள் சண்டை உக்கிரமாக நடந்தது. கரிகாலனும் சிவகாமியும் கைகோர்த்திருந்த மூவரையும்  பிரித்தார்கள். நீரின் கனத்தை வாள் வீச்சுகள் கிழித்தன. இருவர் காயம்பட்டு தங்கள் வாட்களை நழுவவிட்டார்கள். எஞ்சியவனின் கழுத்தை பின்னால்  இருந்து கரிகாலன் நெருக்கினான். மூச்சுத் திணறல் ஏற்படவே அனைவரும் கடலுக்கு வெளியே தலையை நீட்டினார்கள். நிலவொளியில், தான்  பிடித்திருந்தவனின் முகத்தைப் பார்த்ததும் கரிகாலன் அதிர்ந்தான்!

(தொடரும்)
ஓவியம்: ஸ்யாம்