பெருவுடையார்!
ஜூலை 5, 1946 - மே 15, 2018
எண்பதுகளின் இறுதியில் டீன்ஏஜ் பருவத்தைக் கடந்தவர்களுக்கு சில பெயர்கள் வாழ்நாள் ஆதர்சம். அதில் ஒன்று பாலகுமாரன். பத்தொன்பது வயதில் ‘கணையாழி’யில் பிரசுரமான ஒரு கவிதையுடன் இலக்கிய உலகில் நுழைந்தவர், இன்று அவர் கணக்கில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நெடுங்கதைகள் எனப் பெரியதொரு இலக்கியப் பெருந்திரட்டே உள்ளது.
பாலகுமாரன் கதைகள் ஏன் கொண்டாடப்பட்டன என்பதற்கு காரணங்கள் பல. அதில் முதன்மையானது அவரது எழுத்து நடை. மனதை ஆழ்ந்து தொடரும் அபாரமான மொழி நடை அது. ஆணோ பெண்ணோ அந்தக் கதாபாத்திரத்தின் ஆழ்மன எண்ணங்களைக்கூட நுட்பமாகப் பதிவு செய்தவர் அவர். கணவனின் உடல் அடக்கம் செய்ய எடுத்துச்செல்லப்பட்ட சற்று நேரத்திலேயே பசி எடுப்பதை நினைத்து லஜ்ஜை கொள்ளும் பெண்ணின் சித்திரம் ஒன்று அவர் நாவலில் வரும். இது ஓர் உதாரணம். இப்படி பல நூறு சொல்லலாம்.
எந்த நாவலை எடுத்துக் கொண்டாலும் பாலகுமாரன் அதை எழுதுவதற்காக நிறைய மெனக்கெடுவார். அதை அவரே பல தருணங்களில் சொல்லியும் இருக்கிறார். நாவலின் களம் எது என்பதைத் தீர்மானிக்க நிறைய உழைப்பார். பிறகு, அந்தக் கதைக் களத்துக்கு நேரடியாகச் சென்று அங்கு நடைபெறும் விஷயங்களைக் கூர்ந்து கவனித்த பிறகுதான் பேனாவைக் கையில் எடுப்பார். அவரது நாவல்கள் மிகுந்த உயிரோட்டத்தோடு எதார்த்தமாய் இருக்க இதுதான் காரணம். வேறு வேறு வாழ்க்கைக் களங்களை, தொழில்களை, அதன் சூழலை நாவலாக எழுதிக் காட்டிய வெற்றிகரமான எழுத்தாளர் என்றால் அது பாலகுமாரன்தான்.
‘மெர்க்குரிப்பூக்கள்’ என்றால் ட்ராக்டர் தொழிற்சாலையும் தொழிற்சங்கப் பிரச்னைகளும் நம் கண்முன்னே விரியும். அதுபோலவே, ‘பயணிகள் கவனிக்கவும்’ நாவல் விமான நிலையத்தைக் களமாகக் கொண்டிருக்கும். விமானநிலையத்தில் இயங்கும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான உறவும் பிணக்கும் மானுட மனநிலைகளும் துல்லியமாகப் பதிவாகியிருக்கும். ‘இரும்புக் குதிரைகள்’ என்றால் லாரிக் கம்பெனி. ‘தாயுமானவன்’ நாவலிலும் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று இடம் பெறும்.
அவர் சமீபத்தில் எழுதிய ‘வெள்ளைத் துறைமுகம்’ இரண்டாம் உலகப் போர்க் காலத்தின் துறைமுகம் பற்றி யது. ‘நாயகன்’, ‘பாட்ஷா’, ‘குணா’, ‘புதுப்பேட்டை’, ‘காதல் கொண்டேன்’ என பல முக்கியமான தமிழ்ப் படங்களுக்கு வசனம் எழுதிய பெருமை பாலகுமாரனுக்கு உண்டு. ‘நீங்க நல்லவரா... கெட்டவரா...’; ‘நான் ஒரு தடவை சொன்னா...’ என சாகாவரம் பெற்ற வசனங்கள் அவரது பேனாவில்பிறந்தவைதான். யோகி ராம்சுரத் குமாரை பாலகுமாரன் சந்தித்தது அவர் வாழ்வில் முக்கியமான சம்பவம்.
மெல்ல ஆன்மிகம் நோக்கி நகரத் தொடங்கியவர் ஒரு கட்டத்தில் முழுக்க ஆன்மிகமான நாவல்களை எழுதத் தொடங்கினார். அதனாலேயே ‘எழுத்துச் சித்தர்’ என்ற பெயரும் பெற்றார். ‘அன்பரசு’ போன்ற நாவல்கள் அந்த வகைமையில் தனித்துவமானது. அது போலவே, வரலாற்று நாவல்களிலும் தனி முத்திரை பதித்தார். ‘உடையார்’ தமிழின் மிக முக்கியமான வரலாற்று நாவல்களில் ஒன்று. கல்கியின் ‘பொன்னியின் செல்வ’னுக்கு இணையாகப் போற்றப்படுவது.
வரலாற்று நோக்கில் சொன்னால் அந்த நாவலின் காலகட்டத்தைத் தொடர்ந்து வருவது. அதன் தொடர்ச்சியாகவே ‘கங்கைகொண்ட சோழன்’ நாவலையும் எழுதி முடித்தார். பாலகுமாரனுக்கு, தான் முன்ஜென்மத்தில் சோழ தேசத்தில் பிறந்தவர் என்ற நம்பிக்கை ஆழமாக இருந்தது. அதனால்தான் தன்னால் அந்த வரலாற்றை எல்லாம் துல்லியமாக எழுத முடிகிறது என்று நம்பினார். அது உண்மையோ பொய்யோ, இலக்கிய உலகில் நாவல் என்னும் கலையை ஆண்ட ‘பெருவுடையார்’ அவர் என்பதில் சந்தேகமில்லை.
டெலிபோன் துடைப்பவள்
இன்றைக்குச் செவ்வாய்க்கிழமை நிலா பகலிலே வரும் ஆகவே லேசாய்க் குளிரும் மௌனமாய் நறுமணம் வீசும் வீசவே இளமை விழிக்கும் ஊமையாய் உடலும் மாறும் மாறவே இமைகள் பேசும் திரும்பிய நிலவும் போகும் போகவே இதயம் கேட்கும் ‘என்றைக்குச் செவ்வாய்க்கிழமை?’ (பாலகுமாரனின் முதல் கவிதை)
இடையினங்கள்
கொத்திக் கொண்டு போவதற்கு ஜாதகபக்ஷி வரவில்லை வெட்டிப்பொழுதின் விடிவுக்கும் வேளை வரலை இதுநாளாய். வேலை தேடிக் கால் தேய வெளியே நடக்கத் தலைப்பட்டால் ஈயாய் கண்கள் பலமொய்க்க என்னை உணர்ந்தேன் தெருமலமாய்.
இளங்கோ கிருஷ்ணன்
|