இது சாமி 2 இல்ல... சாமி ஸ்கொயர்டு!



விக்ரமின் ‘சாமி’ வெளிவந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘சாமி - 2’ தயாராகிறது! முதல் பாகத்தில் மாஸ் ஹிட் அடித்த ‘திருநெல்வேலி  அல்வாடா... திருச்சி மலைக்கோட்டைடா...’ ஓபனிங் பாடல் உட்பட திருநெல்வேலியின் மேஜர் ஏரியா அனைத்தையும் காரைக்குடியில்தான் செட்  அமைத்து அப்போது படமாக்கியிருந்தனர்.

இப்போது மீண்டும் அதே காரைக்குடி யில், அதே லொகேஷன், அதே மார்க்கெட் செட், அதே ஹரி - விக்ரம் - தினேஷ் மாஸ்டர் காம்பினேஷனில்  ‘டர்ர்ர்னக்கா... டர்ர்ர்னக்கா...’ பாடல் ஷூட் பரபரக்கிறது. ‘‘லொகேஷன் பழசுனாலும், அனுபவம் புதுசு. அதே இடத்தை ரீ கிரியேட் பண்ற ஐடியாவே  சுவாரஸ்யமா இருந்துச்சு. சினிமாவில் இருக்கறதே பெரிய வரம். அதுலயும் இதுமாதிரி அமையறது கிரேட் மொமண்ட். அப்ப ‘சாமி’க்காக அந்த ஓபனிங்  பாடலை காரைக்குடில ஓப்பன் ஏரியால செட் போட்டு எடுத்தோம். அந்த இடம் இப்ப வரை ஃபேமஸா இருக்கு!

மறுபடியும் அதே இடத்துல அதே செட் போட்டு பாடல் எடுக்கலாம்னு விக்ரம் சார், தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் சார், தினேஷ் மாஸ்டர்கிட்ட  சொன்னதும் சந்தோஷமானாங்க...’’ புன்னகைக்கிறார் மாஸ் படங்களின் ஸ்பீட் திரைக்கதை ஆசிரியரும் டைரக்டருமான ஹரி. காரைக்குடி நகர சிவன்  கோயில் வீதி அதிகாலை ஆறரைக்கே பரபரப்பாக காட்சி தருகிறது. ஸ்பாட்டில் ஆரி, ரெட் கேமராக்கள்; ஹெலிகேம், ஜிம்மிஜிப்... என அத்தனையும்  தயார் நிலையில் இருந்தன. ஹீரோ விக்ரம், சூரி, க்ரேன் மனோகர் உட்பட அனைவரும் ஃபுல் மேக்கப் வித் காஸ்ட்யூமில் ஆஜர்.

தியாகி மந்திரமூர்த்தி சிலை செட் அருகே க்ரூப் டான்சர்களுக்கு பாடலுக்கான மூவ்மென்ட்ஸை விளக்கிக் கொண்டிருந்தார் தினேஷ் மாஸ்டர். ‘‘சாங்  சரணம் play...’’ என அவர் குரல் கொடுத்ததும், ‘டர்ர்ர்னக்கா...’வை அதிர வைத்தார் நாக்ரா ஆபரேட்டர். டான்சர்களின் ரிகர்சலைக் கவனித்துக்  கொண்டிருந்தார் விக்ரம். ‘‘சரணம் cut...’’ என மாஸ்டர் குரல் கொடுத்ததும் பாடல் நின்றது. விக்ரமின் அருகே சென்ற தினேஷ் மாஸ்டர், ‘‘சார்,  முதல்ல க்ரூப் டான்சர்ஸ் ஸ்டெப்ஸ் இருக்கும். நெக்ஸ்ட் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ஸ் முன்னாடி வந்து நிப்பாங்க.

அவங்க ஆடி முடிச்சதும் நீங்க என்ட்ரி ஆகுறீங்க. செல்ஃபி பீட் வர்றப்ப ஒரு செகண்ட் ஃப்ரீஸ் ஆகி நிற்கறீங்க. அப்புறம் இந்த மூவ்மென்ட் ப்ளான்  பண்ணிக்கலாமா?’’ என்றபடி விகரமிடம் ஆடிக் காண்பித்துவிட்டு சூரி பக்கம் மாஸ்டர் திரும்பினார். ‘‘நேத்து உங்க கைல இருந்த வொயிட் கலர்  போனை வாங்கிக்குங்க...’’ என்றதும் ‘‘டம்மி போனை கொடுத்திருக்காங்க மாஸ்டர்...’’ என சீரியசாக சூரி சொன்னார். அவ்வளவுதான். அந்த இடமே  ‘ஆதித்யா’ சேனலானது! பாடலுக்கான டான்ஸ் ரிகர்சல் முடிந்ததும் ‘திருநெல்வேலி முனிசிபாலிடி காமராஜர் மார்க்கெட்’ செட் அருகே ஷூட்  தொடங்கியது.

பாடலின் நான்கு வரிகளுக்கான ஷூட் முடிந்தபோது நேரம் காலை 10.30. ஷாட் முடித்துவிட்டு வந்த விக்ரமின் கண்கள் டைரக்டரைத் தேடின.  ‘‘ஹரிசார் எங்க?’’ என்று அவர் விசாரிக்கவும் ஸ்பாட்டில் இயக்குநர் என்ட்ரி ஆகவும் சரியாக இருந்தது. ‘‘என்னாச்சு..? எப்பவும் முதல் ஆளா  ஸ்பாட்டுக்கு வந்துடுவீங்களே..?’’ விக்ரமின் கேள்விக்கு ஹரி புன்னகைத்தார். ‘‘நேத்து ஷூட் முடிஞ்சதும் கார்ல மதுரை ஏர்போர்ட் போனேன்.  அங்கேந்து சென்னை. நம்ம மியூசிக் டைரக்டர் டிஎஸ்பி முடிச்சு வைச்சிருந்த ரீ ரிக்கார்டிங்கை பார்த்து கரெக்‌ஷன் சொல்லிட்டு மறுபடியும் ஃப்ளைட்  பிடிச்சு இங்க வந்தேன்!’’ ஹரி சொல்லச் சொல்ல விக்ரமின் கண்கள் விரிந்தன.

‘‘நீங்க ஸ்பீடுனு தெரியும் சார்... அதுக்காக இப்படியா? டெடிகேஷன்ல உங்களை மிஞ்ச ஆளில்லை...’’ ‘‘அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்... ஒரு அஞ்சு  நிமிஷம். ஷாட் ரெடி பண்ணிடறேன். நீங்க கேரவன்ல வெயிட் பண்ணுங்க...’’ என்றபடி நம் பக்கம் திரும்பினார். ‘‘சாரி... உங்களை வரச் சொல்லிட்டு  ஸ்பாட்ல இல்லாம போயிட்டேன். டிபன் சாப்பிட்டீங்களா? இப்ப வெயிலுக்கு இதமா மோர் குடிங்க...’’ என்று ஹரி சொல்லி முடிக்கவும் நமக்கு ஜில்  மோரும் அவருக்கு பால், சர்க்கரை கலக்காத கறுப்பு காபியும் வந்தன. ‘‘அடிக்கடி இதைத்தான் குடிப்பேன்.

எனர்ஜி ட்ரிங்!’’ என்றவர் தன் உதவியாளர்கள் பக்கம் திரும்பினார். ‘‘ஆர்ட் டிபார்ட்மென்ட் பாலாஜி, சண்முகம்கிட்ட ஃபைட் சீனுக்கான டம்மி அருவா,  டம்மி ஆயுதங்கள் ரெடியானு கேளுங்க...’’ என்றவர் ஹெலிகேம் டெக்னீஷியன் பக்கம் திரும்பி எடுக்கப்போகும் காட்சியில் எத்தனை முறை  ஹெலிகேம் வானில் வட்டமிட வேண்டும்... ஏரியல் வியூவில் யார் யார் கவராக வேண்டும் என விளக்கினார். பின்னர் ‘‘ஜிம்மிஜிப் ரெடியா?  சிக்ஸ்டீன்ல வைச்சா சரியா இருக்குமா... இல்ல... 25 வைச்சா கோபுரம் டாப் வரை போயிடலாம்...’’ என லென்ஸ் விஷயங்களை க்ளியர் செய்துவிட்டு  ‘‘மைக்...’’ என கர்ஜித்தார்!

அடுத்த நொடி நான்கு மைக்குகள் அவர் முன் வந்தன. ஒழுங்காக வேலை செய்யும் மைக்கை எடுத்தபடி மானிட்டர் முன் அமர்ந்தார். தன்  குழந்தைகளுடன் அங்கு வந்த உள்ளூர் பெண்மணி அவருடன் செல்ஃபி எடுக்க விரும்ப... புன்னகையுடன் போஸ் கொடுத்துவிட்டு ஒளிப்பதிவாளர்  வெங்கடேஷ் பக்கம் திரும்பினார். ‘‘சார், ரெட் கேமராவை கொஞ்சம் ஃபோகஸ் பண்ணுங்க. லெஃப்ட்ல கேர்ள்ஸ் கட் ஆகறாங்க. மாஸ்டர்... ஷாட்  பார்த்துக்குங்க...’’ என்றபடி நம்மைப் பார்த்துச் சிரித்தார். ‘‘ரீ கிரியேட் பண்றது சந்தோஷமா இருக்கு.

முதல் படத்துல இருந்து காரைக்குடி வந்துட்டிருக்கேன். இதுவும் எனக்கு திருநெல்வேலி மாதிரிதான். அத்தனை பேரும் தெரிஞ்சவங்களா ஆகிட்டாங்க.  இந்தப் படத்தை ‘சாமி2’னு சொல்றதை விட, ‘சாமி ஸ்கொயர்டு’னு அழைக்கறதுதான் சரியா இருக்கும். ஏன்னா, ‘சாமி’க்கு பக்கத்துல 2 வராது.  முந்தைய படத்தை விட பல படிகள் மேல இருக்க உழைச்சுட்டு இருக்கோம். விக்ரம் சாருக்கு கமர்ஷியல் மட்டும் பத்தாது. அவர் நடிப்புக்கும் தீனி  போடணும். அதுக்கான நேரம் இப்பதான் வந்திருக்கு.

இந்தப் படத்தோட புரொட்யூசர் ஷிபு சார் ‘சாமி’யோட கேரள விநியோகஸ்தர்! அந்த சென்டிமென்ட்ல தானே தயாரிக்க முன்வந்தார். படத்துல கீர்த்தி  சுரேஷ், பாபிசிம்ஹா, சூரினு நிறைய பேர் இருக்காங்க. ஒவ்வொரு ஃப்ரேமிலும் பிரமாண்டம் தெரியும். ‘சிங்கம்’ மாதிரி ஒரு எனர்ஜி இருக்கும். தில்லி,  ராஜஸ்தான், ஜெய்சால்மர், விசாகப்பட்டினம்னு ஷூட் முடிச்சிருக்கோம். ஒரு பாடலை ஐரோப்பால எடுக்கற திட்டம் இருக்கு. இப்ப எடுக்கறது ஓபனிங்  பாட்டு இல்ல! அது இதை விட மாஸா இருக்கும்...’’ என்று சொல்லிவிட்டு ஷூட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆறுச்சாமியின் அதகளம்  ஆரம்பித்தது!


காரைக்குடியிலிருந்து மை.பாரதிராஜா