நடிகையர் திலகம்



தமிழகமும் சேர்ந்து போற்றிய ‘நடிகையர் திலகம்’ சாவித்திரியின் கதை. பெரிதும் உண்மை சார்ந்து இருப்பதால், அதன் அழகும், பெருமையும், சாந்த  சொரூபமும் கூடுதல் ப்ளஸ். நடிப்பில் உச்சம் தொட்ட சாவித்திரியின் வாழ்க்கையை ஆழ அகலமாகப் பேசுகிறது படம். ஒரு நடிகையின் வாழ்க்கை  எளிமையானதோ சுவாரஸ்யமானதோ அல்ல. சவால்களும், வேதனையும், புரிந்து கொள்ளாமையும், காதலும் ததும்பியது என்பதை இயக்குநர் நாக்  அஸ்வின் காட்டிய அழகும், கனிவு ததும்பும் அணுகலும் அற்புத வகை.

சாவித்திரியின் வாழ்க்கையும், ஜெமினியுடனான அவர் காதலும், அந்த காதல் நிமித்தமான சம்பவங்களுமே ‘நடிகையர் திலகம்’. சாவித்திரியாக கீர்த்தி  சுரேஷுக்கு இந்தப் படம் தனித்துவ அடையாளம். சாவித்திரியைப் போலவே சிறிதளவு அன்பு பரிமாற்றத்திற்குக் கூட ஏங்கிய இடத்தையும், கலகலப்பு,  ஈகை குணத்தையும், மனிதர்களை நம்பிய வகையையும் காட்சிப்படுத்தியிருந்த இடங்களில் கீர்த்தியின் கொடி பறக்கிறது. துல்கரின் ‘ஜெமினி’ கேரக்டர்  இன்னும் கடினமானது. கொஞ்சம் பிசகினாலும் ஹீரோ நிலையிலிருந்து விலகிவிடுகிற இடங்கள் அனேகம்.

எல்லாவற்றையும் நம்மைப் புரிந்துகொள்ளச் செய்து விட்டு விலகி நின்று பார்க்கிறார் இயக்குநர். அதற்கு  துல்கர் தந்தது செழுமை நடிப்பு. என்ன  செய்வது, மனசு தளர்ந்திருந்தால் அந்த ஜெமினி புன்னகைக்கு அடிமையாகிவிட வேண்டியதுதான். ‘அம்மாடி’ன்னா சும்மாவா! கீர்த்தியின் பலமே இந்தப்  படம். விட்டுக்  கொடுத்திருக்கிறார் துல்கர். கொஞ்ச நேரமே மின்னல் போல வந்து போனாலும் பிரகாஷ்ராஜ் அசரடிக்கிறார். ராஜேந்திர பிரசாத்,  பானுப்ரியா, நாகசைதன்யா, மோகன்பாபு என எல்லோருமே அண்டர் ப்ளே! கதையைக் கொண்டு செலுத்தும் சமந்தாவின் ஆரம்பம் எரிச்சல் போல்  தோன்றினாலும், பிற்பகுதியில் அபாரம்.

வீட்டுக்கு அடங்கி இருக்கும்போதும், அந்த கிறிஸ்துவ விஜய் தேவரகொண்டாவைக் காதலிக்கும்போதும் சின்னச் சின்ன குறும்புகளில், பதற்றங்களில்,  நிஜக் கதைக்கு இடையே பூத்தூவல். மிக்கி ஜே மேயரின் இசையில் ‘தந்தாய், தந்தாய்’ பாடல் தேன். கேட்கக் கேட்க மனம் கரைகிறது. படத்தின்  ஆன்மாவைச் சுமந்திருப்பதில் ஒளிப்பதிவாளர் டானியுடன் சேர்ந்து அநாயாசமாகக் கடந்திருக்கிறார் இயக்குநர். தமிழில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர்,  இயக்குநர் பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் சாவித்திரி கோலோச்சிய கதையையும் இணைத்திருக்கலாம். கண்ணியமும்,  கரிசனமும், கனிவும் கொண்ட சுயசரிதைப் படைப்பு.  


குங்குமம் விமர்சனக்குழு