இரும்புத்திரை



தகவல், பணத்தைத் திருடும் கொள்ளைக் கும்பலின் முகமூடியைக் கிழிப்பதே ‘இரும்புத்திரை’. கோபமே குணமாகக் கொண்டு திரியும் இந்தியன் ஆர்மி  மேஜர் விஷால். அவரை சாந்தப்படுத்த சிகிச்சைக்கு அனுப்புகிறார்கள். அங்கே சமந்தா இருக்கிறார். தங்கையின் திருமணத்திற்காக விஷால் வங்கியில்  கடன் வாங்கப் போக, அந்தப் பணம் அனைத்தும் சுருட்டப்படுகிறது. பிறகு விஷாலைக் கொண்டு வங்கிகளின் அரசியல், முகநூல் முதல் ஆதார் வரை  நடக்கும் தகவல் திருட்டுக்கள், மக்களின் அப்பாவித்தனத்தை உஷார்படுத்தும் நிதர்சன உண்மைகளையும் பேச முயற்சித்திருக்கிறார் அறிமுக  இயக்குநர் பி.எஸ்.மித்திரன்.

புதிய களம், கணிக்க முடியாத திரைக்கதையில் பல இடங்கள் புதுசு. குணமாக இருக்கும்போதும், கோபமாக வரும்போதும் விஷால் வித்தியாசம். ஒட்ட  வெட்டிய முடி, பிரச்னைகள் வந்த பிறகு சந்தோஷம் இல்லாத முகம், குற்றவாளியை நெருங்க முடியாமல் ஏற்படும் அவதி என மனம் அள்ளுகிறார்.  இஷ்டத்துக்கு கடன் வாங்கிச் செல்லும் அப்பாவிடம் ‘உங்களை அடிச்சிடுவேன்னு பயமாக இருக்குப்பா...’ என நடுங்கும் குரலில் ஆரம்பிக்கிறது  விஷாலின் நடிப்பு. ‘இப்படித்தான், நீங்கள் உஷாராகாவிட்டால் கடவுளாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது...’ என ஆவேசத்துடன் நடப்பு அரசியலும்  பேசுகிறார்.

மக்களுக்கு உபயோகப்படுகிற ஏராள, தாராள தகவல்களைச் சொல்லிப் போகிற விதத்திற்காகவும், ‘தெரிஞ்சுக்கோ, முழிச்சுக்கோ’ என சமூக அக்கறை  தெளிக்கும் இடங்களுக்காகவும் இயக்குநருக்கு பூங்கொத்து! ஆஹா..! அந்த சமந்தா... படத்தில் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கக்கூடாதா என தேட  வைச்சிட்டிங்களே பிரதர்! ஆழப் புன்னகையும், அதையே மெல்லிய இதழில் கொண்டு வரும் சூட்சுமமும், கொஞ்சல் பேச்சுமாக... ஆசம் சமந்தா!  ‘Information is Wealth’ என்ற ஒற்றை வார்த்தையில் சப்தமில்லாமல் பெரிய மனிதனாகவும் நடமாடும் அர்ஜுன் சூப்பர் செலக்‌ஷன்!

முகத்தில் எந்த குரோதத்தையும் வடியவிடாமல், மக்களின் அறியாமையைப் பலமாக்கிக் கொள்ளும் திறன் திகைக்க வைக்கிறது. அடுக்கடுக்காக  அவரின் இலக்குகளைச் சொல்லிப் போவதும், வங்கிகளின் உள்குத்தை வரிசையில் கொண்டு வரும் அத்தியாயங்களும் அசத்தல்! இதற்காக விஷாலின்  கேரக்டரை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வரும் முன்பாதியை கொஞ்சம் பொறுமையாக பொறுத்தருள வேண்டியிருக்கிறது. ரோபோ சங்கர், காளி  வெங்கட், டெல்லி கணேஷ் என துணை பாத்திரங்களில் பொருத்தமான வார்த்தெடுப்பு.

கொஞ்ச நேரமே அந்த கிராமத்துக் காட்சிகள் வந்தாலும், படத்தின் அடுத்த கட்டத்துக்கு நல்லபடியாக உதவு கின்றன. யுவனின் பின்னணி இசை  உண்மையிலேயே அதிரடி. ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு, கிராமம், நகரம் என எந்த ஆங்கிளிலும் பளிச் ஸ்கோப் பிடிக்கிறது. சூப்பர் ஹீரோ  என்றாலும் ‘நம்மில் ஒருவன்’ என நம் கஷ்டங்களோடு மக்களின் ஆதார விஷயங்களில் அடையாளம் சொல்வதால், விழிப்புணர்வுக்கு வழிகாட்டுவதால்,  ‘இரும்புத்திரை’யை விரும்பி ரசிக்கலாம்.


குங்குமம் விமர்சனக்குழு