காட்ஃபாதர்-போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா-58

சிஐஏவின் சென்ட்ரா ஸ்பைக் உளவுப்படை களமிறங்கியபிறகு முன்னெப்போதைக் காட்டிலும் படுமோசமான நெருக்கடிகளை போதை கார்டெல்கள்  எதிர்கொண்டன.

பாப்லோவுக்கு ஸ்கெட்ச் போடுவதில்தான் அவர்கள் கூடுதல் ஆர்வம் செலுத்தினார்கள். இவர் அடிக்கடி தொடர்பு கொள்ளும் பத்து பேர் யார் யாரென்று  பட்டியலிட்டார்கள். அந்த பத்து பேர் மீது இருபத்து நாலு மணி நேரமும் தீவிர கண்காணிப்பு இருந்தது. அவர்களது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது.  தாங்கள் கண்காணிக்கப் படுகிறோம் என்கிற சந்தேகம் வந்ததுமே, அவர்கள் பாப்லோ எஸ்கோபாரிடம் முறையிட்டார்கள். ஏனோ தெரியவில்லை,  பாப்லோ, இந்தப் பிரச்சினையை அவ்வளவு சீரியஸாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

எப்போதும் போல அந்த பத்து பேருக்கு தொலைபேசுவது, குறிப்பிட்ட இடைவெளியில் சந்திப்பு நிகழ்த்துவது என்று இருந்தார். இதனால், சில முறை  பாப்லோவை மிகத்துல்லியமாக சென்ட்ரா ஸ்பைக் நெருங்க முடிந்தது. நான்கைந்து சந்தர்ப்பங்களில் தப்பிய பாப்லோ, அதன் பிறகே தன்னுடைய  தொலைத்தொடர்பு முறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சந்திப்புகளைக் குறைத்துக்கொண்டார். தகவல்களை நம்பிக்கைக்குரிய கூரியர்கள்  மூலம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். சிஐஏவின் சென்ட்ரா ஸ்பைக் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் 1990ஆம் ஆண்டு கொலம்பியா, சர்ச் ப்ளாக்  என்கிற பெயரில் ஒரு அதிநவீன கண்காணிப்பு அமைப்பைத் தொடங்கியது.

இந்த அமைப்பில் நன்கு பயிற்சி பெற்ற எழுநூறுக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் இருந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் அமெரிக்க ராணுவம் நேரடிப்  பயிற்சி வழங்கியது. மற்ற கார்டெல்காரர்களை விட்டு விட்டு பாப்லோவை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்பதில்தான் சர்ச் ப்ளாக் ஆர்வம்  காட்டியது. இதையடுத்து பாப்லோவும், தன்னுடைய கார்டெல் ராணுவத்தை ஆயுதரீதியாக பலப்படுத்த ஆரம்பித்தார். ஐரோப்பாவிலும், ஆசியாவிலும்  இருந்து வெடிகுண்டு ஸ்பெஷலிஸ்டுகளை வரவழைத்தார். சர்ச் ப்ளாக் போலீஸார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடக்க ஆரம்பித்தது. கொத்து கொத்தாக  மரணிக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து இந்த சர்ச் ப்ளாக் திட்டத்தையே நிறுத்திவிடும் முடிவுக்கு வந்தது கொலம்பியா. ஆனால், அமெரிக்கா விடாப்பிடியாக இந்த முயற்சியைத்  தொடரவேண்டும் என்று வற்புறுத்தியது. வேறு வழியில்லாமல் நிறைய இளைஞர்களை வேலைக்கு எடுத்து, அமெரிக்காவில் பயிற்சி கொடுத்து சர்ச்  ப்ளாக்கை பலப்படுத்தினர். பாப்லோவுக்கு கொலம்பியா பயப்படுகிறது என்று தெரிந்ததுமே, சக கார்டெல்காரர்கள் மீண்டும் எஸ்கோபாரின் தலைமையை  ஏற்றனர். கொலம்பிய நகரங்கள் எங்கும் வெடிகுண்டுகள் ஆங்காங்கே வெடித்துச் சிதற ஆரம்பித்தன. போதைக் கடத்தல்காரர்களுக்கு எதிராகத்  தீர்ப்பளித்த நீதிபதிகளின் கார்களில் டைம்பாம் பொருத்தப்பட்டு வெடித்தன.

கொலம்பிய அரசுக்கும், அமெரிக்காவுக்கும் ஆதரவாக எழுதிய ஊடகங்களின் அலுவலகங்கள் குண்டுவெடிப்பில் சிதிலமாயின. கண்ணில் தெரியும் ஒரு  போலீஸ்காரனையும் உயிரோடு விடக்கூடாது என்று கர்ஜித்தார் பாப்லோ எஸ்கோபார். போலீஸார், யூனிஃபார்மோடு தெருவில் நடமாடவே  அச்சப்பட்டனர். இதையடுத்து போலீஸ் வேலையிலிருந்து சொல்லிக் கொள்ளாமல் கணிசமானோர் ஓட ஆரம்பித்தனர். தங்களுக்கும் கார்டெல்  களுக்கும் இடையிலான இந்தப் போரில் பொதுமக்களை எவ்விதத்திலும் காக்க முடியாமல் அரசாங்கம் திணறியது. இருபுறமும் பாய்ந்துகொண்டிருந்த  துப்பாக்கிக் குண்டுகளில் சிக்கி உயிரை விட்ட அப்பாவிகளே ஆயிரக்கணக்கில் இருந்தனர்.

பாப்லோவின் உறவுக்காரப் பெண் ஒருத்தி, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். தன்னுடைய அடையாளத்தை மாற்றிக் கொண்டிருந்தாலும் அவளை  அடையாளம் கண்டுகொண்டாள் சக மாணவி ஒருத்தி. ஒருநாள் கல்லூரி உணவு விடுதியில் இவளுடைய முடியைப் பிடித்து மூர்க்கத்தனமாக அடிக்க  ஆரம்பித்தாள் அவள். தான் ஏன் தாக்கப்படுகிறோம் என்று புரியாமல், “ஏன் அடிக்கிறாய், நானென்ன தவறு செய்தேன்?” என்று பரிதாபமாகக் கேட்டாள்  இவள். “உன்னுடைய மாமன் எஸ்கோபாரின் ஆட்கள் போனவாரம் ஃபுட்பால் ஸ்டேடியத்தில் குண்டு போட்டார்களே? அதில் என்னுடைய தாத்தாவும்,  பாட்டியும் இறந்துவிட்டார்கள்.

ஏற்கனவே இந்த பாழாய்ப்போன வன்முறையால் பெற்றோரை இழந்து தவிக்கும் எனக்கு ஆறுதலாக இருந்தவர்கள் அவர்கள் மட்டும்தான். இப்போது  அனாதையாக என்னுடைய எதிர்காலம் என்னாகுமோ என்று பைத்தியம் பிடித்து நடுத்தெருவில் நிற்கிறேன்” என்று சொல்லிவிட்டு குமுறிக் குமுறி அழ  ஆரம்பித்தாள். “அழுவதை நிறுத்து. உனக்கு என்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்வேன். பாப்லோ, எனக்கு உறவுக்காரரே தவிர..  அவருக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் இப்போது எந்தத் தொடர்புமில்லை” என்று பதிலுக்கு இவளும் அழுதாள். இருந்தாலும் போர்க்கோலம் பூண்டு  யார் யாரையோ பிடித்து பாப்லோவை தன் சக மாணவிக்காக நியாயம் கேட்டாள்.

“கொலம்பியாவில் பிறந்ததைத் தவிர்த்து அவள் என்ன பாவம் செய்தாள்? இப்போது அனாதையாக நிற்கிறாளே?” “நடப்பது போர். தீயவர்கள்  மட்டுமின்றி நல்லவர்களும் சாகத்தான் செய்கிறார்கள். இது தவிர்க்க முடியாதது!” “யார் நல்லவர், யார் தீயவர்கள் என்றே எனக்குத் தெரியவில்லை!”  வேறு யாராவது இதுபோல எஸ்கோபார் முன்பாக நின்று பேசியிருந்தால் என்னாகியிருக்கும் என்றே சொல்ல முடியாது. சிறு பெண் என்பதால் பாப்லோ  பொறுமையாக பதிலளித்தார். “அதை வரலாறு தீர்மானிக்கும். நான் என்ன ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டுமென நான் முடிவெடுப்பதில்லை.  அமெரிக்காதான் முடிவெடுக்கிறது.

சிறு பெண்ணான உனக்கு இந்த அரசியலை எல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாது!” “எப்போதுதான் இந்த இரத்த வெறியாட்டம் முடிவுக்கு  வரும்?” “நானோ, கொலம்பியாவோ இதைத் தீர்மானிக்க முடியாது. அமெரிக்காதான் மனசு வைக்க வேண்டும். நான் இன்னும் எத்தனை ஆண்டுகள்  உயிரோடு இருக்கப் போகிறேன் என்று நிச்சயம் எனக்குத் தெரியாது. ஆனால், இறுதி மூச்சுவரை அமெரிக்காவை எதிர்த்துப் போராடுவேன்!”  பாப்லோவிடம் நீதி கேட்ட அந்தப் பெண் பின்னர் சொன்னாள்.

“அன்று அவர் என் கண்களுக்கு ஒரு போராளியாகத்தான் தெரிந்தாரே தவிர, வன்முறையாளனாக அல்ல!” அமெரிக்காவாலும் நினைத்த மாதிரி  பாப்லோவை அடக்க முடியவில்லை. ஏனெனில், கொலம்பியாவின் உயர்மட்டத் துறைகளில் இருந்தவர்கள் பலரும் எஸ்கோபாரோடு பிசினஸ் ரீதியாக  பலமாக பிணைக்கப்பட்டிருந்தார்கள். கொலம்பியாவின் மேல் மட்டத்தில் ஒரே ஒருவர் மட்டும்தான் பாப்லோ எஸ்கோபாரை பரம எதிரியாகக்  கருதினார். அமெரிக்கா காலால் இட்ட பணியை தலையால் முடிக்க எப்போதுமே தயாராக இருந்தார். கொலம்பிய பாதுகாப்புத் துறையின் ஜெனரலாக  இருந்த மைகுவேல் மாஸாதான் அவர்.

ஒட்டுமொத்த போதை கார்டெல்களையும் புல் பூண்டு கூட முளைக்க முடியாத அளவுக்கு குழிதோண்டிப் புதைப்பேன் என்று சபதமிட்டு இரவும்,  பகலுமாக வேட்டை நாய் போல அலைந்து கொண்டிருந்தார். மனிதர், ஒன்றும் அவ்வளவு புனிதமானவரல்ல. இவரும் மறைமுகமாக போதைத் தொழில்  செய்து, கையும் களவுமாக அமெரிக்காவிடம் மாட்டியவர் தான். அமெரிக்கா சொல்படி கேட்காவிட்டால் அந்த கேஸில் எப்போது வேண்டுமானாலும்  ஆண்டுக்கணக்கில் அமெரிக்க சிறைகளில் காலம் தள்ள வேண்டுமென்ற நெருக்கடி இவருக்கு இருந்துகொண்டே இருந்தது. இன்னொரு முக்கியமான  விஷயம்.

மூன்று அத்தியாயங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையிலேயே அதிபர் பதவிக்கு நின்ற லூயிஸ் கார்லோஸ் கேலன் படுகொலை  செய்யப்பட்டதை வாசித்திருந்தோம், நினைவிருக்கிறதா? பாப்லோதான் கொன்றார் என்றுதான் ஊர் உலகமெல்லாம் நம்பிக் கொண்டு இருந்தது. 1889ல்  நடந்த அந்தப் படுகொலை வழக்கில் 2016ல் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றில், 30 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றவர் யார் தெரியுமா? அப்போதைய  கொலம்பிய பாதுகாப்புத் துறை ஜெனரலாக இருந்த மைகுவேல் மாஸா. வேலியே பயிரை மேய்ந்திருக்கிறது.


(மிரட்டுவோம்)
ஓவியம் : அரஸ்