குட்டி விவசாயி!



கோடை விடுமுறையில் குழந்தைகள் என்ன செய்வார்கள்? சம்மர் கேம்ப் செல்வார்கள். ஏதேனும் விளையாட்டை கற்றுக்கொள்வார்கள் அல்லது  மொபைலுடன் பொழுதைக் கழிப்பார்கள். ஆனால், கடலூரைச் சேர்ந்த ஜெய் செந்தில் - நித்யா தம்பதியரின் ஏழு வயது மகள் அக்‌ஷயாவோ காலை  முதல் இரவு வரை விவசாயம் செய்கிறார்!

‘‘இதுதான் என் சொந்த ஊர். எம்.டெக் படிச்சுட்டு ஒரு கல்லூரில வேலை பார்த்தேன். விவசாய ஆசை உள்ளுக்குள்ள இருந்துகிட்டே இருந்தது. அதுவே  முழுநேர விவசாயியா என்னை மாத்திடுச்சு. நித்யா சென்னையை சேர்ந்தவங்க. டயட்டீஷியன்...’’ என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட ஜெய்  செந்தில், நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பேச ஆரம்பித்ததுதான் தன்னை இயற்கை விவசாயம் பக்கம் திருப்பியது என்கிறார். ‘‘இன்னைக்கு சம்பா,  கருப்பரிசி, மாப்பிள்ளைப் பொன்னி, காட்டு யானம்னு பல பயிர்களை இயற்கை முறைப்படி விவசாயம் செய்யறோம்.

இதுபோக மீன், கோழி, ஆடு, மாடு வளர்ப்பு, இயற்கை முறைல உரம் தயாரிப்புனு இன்னொரு பக்கம் போயிட்டிருக்கு. அப்புறம் ஃப்ரெண்ட்ஸோட  சேர்ந்து செக்குல எண்ணெய் எடுத்து, காய்கறிகளை விளைவிச்சு சென்னைல விக்கிறோம்...’’ என பட்டியலிட்டவர் தன் மகள் அக்‌ஷயா குறித்து  உற்சாகமாக பேசத் தொடங்கினார். ‘‘ஒரு வயசுலேந்தே செடிகளுக்கு தண்ணீர் ஊத்த ஆரம்பிச்சுட்டா. வளர வளர இவ ஆர்வம் அதிகமாச்சு. தன்  கையாலேயே நெல்லிக்காய் மரம் ஒண்ணு வெச்சு அதை பராமரிக்க ஆரம்பிச்சா.

இப்ப ஏர் உழுதல், நாத்து நடவு, விதை நெல் பராமரிப்பு, விதைத்தல், அறுவடை, கோழி, மீன், மாடு, ஆடு வளர்ப்புனு எல்லாத்தையும் எங்க உதவி  இல்லாம அக்‌ஷயாவே செய்யறா. மாட்டு மடில இருந்து பால் கறக்கறதும் இவதான். இப்படி வளர்ந்தா படிப்புல கவனம் போகாதுனு சொல்வாங்க.  ஆனா, பள்ளில டாப்பா இருக்கா. சென்னைலதான் 2வது படிக்கிறா. டீச்சர்ஸ் எல்லாம் பாராட்டறாங்க. லீவ் விட்டா உடனே கிராமத்துக்கு வந்து வயல்  வேலைகள்ல இறங்கிடறா.

இயற்கையான கிராமத்து வாழ்க்கையும் நகர வாழ்க்கையும் சேர்ந்து அக்‌ஷயாவை பக்குவப்படுத்துதுனு நினைக்கறேன். இப்ப தற்காப்புக் கலைகளையும்  கத்துக்கிட்டு வர்றா...’’ என ஜெய் செந்தில் முடிக்க... துள்ளிக் குதித்தபடி அக்‌ஷயா பேச ஆரம்பித்தார். ‘‘இந்த வயல்வெளிதான் எனக்குப் பிடிச்சிருக்கு.  இங்க வந்தா ஆடு, மாடு, கோழினு ஜாலியா இருக்கலாம். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இங்க வரணும்னு விரும்பறாங்க. கூட்டிட்டு வரணும்...” என்னும்  அக்‌ஷயாவின் எதிர்காலம் குறித்து அவரே தீர்மானிக்கட்டும் என்கிறார்கள் ஜெய் செந்திலும் நித்யாவும்.  

ஷாலினி நியூட்டன்
படங்கள்: இரா.ரெங்கப்பிள்ளை