அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?



இது விடுமுறை சீசன். வீட்டுக்கு வந்து டேரா போட ப்ளான் போடும் அழையா விருந்தினர்களை சமாளிக்க சில ஐடியாஸ்!

உப்பிட்டவரை...

‘வீட்டுச் சாப்பாடுதான் ரொம்பப் பிடிக்கும்...’ என்றபடி எத்தனை நாட்கள் தங்கப் போகிறோம் என்பதை சொல்லாமலேயே இருப்பவர்களை சமாளிக்க  வெளி சாப்பாடே துணை! ‘அடடா... சமைக்கறதுல நாங்க வீக். அதனால வீட்டுக்கு யார் வந்தாலும் வெளிலேந்துதான் நல்ல சாப்பாடு வாங்குவோம்...’  என்றபடி உங்கள் ஏரியாவில் இருக்கும் பாடாவதியான உணவகத்திலிருந்து உணவை வாங்கி வாருங்கள். ‘காரம் தூக்கலா இருக்கட்டும்...’ என சர்வரிடம்  சொல்லி அதன்படியே சாம்பார் உள்ளிட்ட சமாச்சாரங்களை வாங்க வேண்டும். விருந்தினர் முன்னால் சப்புக் கொட்டி சாப்பிடுங்கள். அடுத்த வேளை  உணவுக்கு உங்கள் வீட்டில் அவர்(கள்) இருக்க மாட்டார்(கள்)!   

பேயோடு தூங்கலாம்!

குறைந்தது மூன்று வாரங்களாவது தங்க வேண்டும் என்ற முடிவுடன் வருபவர்களைப் பார்த்ததும் கண்டுபிடித்து விடலாம். உடனே வீட்டில் இருக்கும்  ஒவ்வொருவரும் ரிலே ரேசில் ஒவ்வொருவரின் காதுகளிலும் எதையாவது முணுமுணுங்கள். ‘என்ன’ என்று விருந்தினர் கேட்பார். மெல்ல  ‘ராத்திரியானா ஜல் ஜல்னு சத்தம் கேட்குது... மல்லிகைப் பூ வாசனை வருது... கொலுசு சத்தம் விட்டு விட்டு கேட்குது...’ என பில்டப் கொடுங்கள்.  கூடவே ‘அங்கிள் / ஆண்டி ரொம்ப தைரியசாலி. இவங்க பக்கத்துல நைட்ல தூங்குங்க. பேய் உங்களை ஒண்ணும் பண்ணாது...’ என பிள்ளைகளிடம்  எடுத்துச் சொல்லுங்கள். நிச்சயம் அன்றிரவு விருந்தினர் உங்கள் வீட்டில் தங்க மாட்டார்!

காபி எக்ஸ்பர்ட்!

‘காபில வாசனையே இல்லையே...’ என நுழைந்தவுடன் நக்கல் அடித்து அலம்பல் செய்யும் அழையா விருந்தினர்களிடம் ‘உங்க கையால காபி  போட்டால் எட்டு ஊருக்கு மணக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். நல்ல பிராண்ட் பொடியை நீங்களே வாங்கிட்டு வாங்க. கூடவே காலைல எழுந்து பால்  பாக்கெட் வாங்கி கேஸ்ல காய்ச்சு காபி போடுங்க. நல்ல காபியை குடிக்காம எங்களுக்கும் நாக்கே செத்துப் போச்சு!’ என ஒரு போடு போடுங்கள்!
ஜெர்க்காகி நிச்சயம் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விடுவார்!

சேனல் கலாட்டா!

வந்ததும் வராததுமாக குழந்தைகளிடமிருந்து ரிமோட்டை பிடுங்கி சேனலை கண்டபடி மாற்றும் விருந்தினர்களை அவர்களது வழியிலேயே  சமாளிக்கலாம். விருந்தினருக்குத் தெரியாத மொழியில் இருக்கும் சேனலை ஓடவிட்டு, ‘இதுல வர்ற நிகழ்ச்சியை பார்க்கலைனா எங்களுக்கு தூக்கமே  வராது...’ என ஒருநாள் முழுக்க டிவியை ஓட விடுங்கள். நமக்கும் அந்த மொழி தெரியாது என்பதை விருந்தினர் உணரக் கூடாது. திடீரென்று ‘சபாஷ்...’  என கைதட்டுங்கள். சட்டென்று வாய்விட்டு சிரியுங்கள். போதும். இதன் பிறகு ஒருபோதும் உங்கள் வீட்டுக்கு அவர் வரவே மாட்டார்!

நீங்கதான் புலி!

‘நான் போனா யார் விடறாங்க.... ஒரு மாசமாவது தங்கிட்டுப் போங்கனு பிடிவாதம் பிடிக்கறாங்க...’ என என்ட்ரி கொடுப்பவர்களை சமாளிப்பது எளிது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ‘கடவுள் மாதிரி வந்திருக்கீங்க. என் பொண்ணு / பையன் கணக்குல வீக். நீங்களோ மேத்ஸ்ல  புலி. கொஞ்சம் புத்தில ஏறுகிறா மாதிரி சொல்லிக் கொடுங்க...’ என்றபடி பிள்ளைகளின் புத்தகங்களை அவர்கள் மடியில் போடுங்கள். ‘அர்ஜென்ட் வேலை இருக்கு... உடனே கிளம்பணும்...’ என தலைதெறிக்க ஓடிவிடுவார்!

எஸ்.ராமன்