இரவு ரயில்



இரவுக்கு ஆயிரம் கண்கள்

நிலவொளி வெளிச்சத்தில் தங்கத்தைப் போல ஒளிர்கிறது சென்னைக் கடற்கரை ஸ்டேஷன். மக்கள் சாரை சாரையாக இரண்டாவது நடைபாதையில்  நின்றுகொண்டிருந்த ரயிலை நோக்கி விரைந்தனர். நள்ளிரவு 1.20 மணி. யானையின் பிளிறலைப் போல விசில் சத்தம் காதைப் பிளக்க, தட்... தட்...  என்று ஒலியை எழுப்பி புறப்பட்டது அந்த ரயில். பெரம்பூர், அம்பத்தூர், திருவாலங்காடு வழியாக அரக்கோணம் செல்கின்ற அதில் ஆச்சர்யங்கள்  நிறைந்திருக்கின்றன. பின்னி மில்லில் வேலை செய்தவர்கள் இரவுப்பணி முடிந்து வீடு திரும்புவதற்காக விடப்பட்டது இந்த ரயில். சென்னைப்  புறநகர்வாசிகளுக்காக காத்திருக்கும் கடைசி ரயிலும் இதுதான்.

‘‘கிண்டில இருக்கற ஒரு பார்ல வேலை செய்றேன். வேலை முடிய நைட் 11.30 மணி ஆகிடும். வீடு கடம்பத்தூர்ல இருக்கு. இந்த நேரத்துல பஸ்  எதுவும் இல்ல. கோடம்பாக்கத்துக்கு வந்து அங்கிருந்து லோக்கல் ட்ரெய்ன் பிடிச்சு பீச் ஸ்டேஷனுக்கு வரவும், இந்த ரயில் கிளம்பவும் சரியா இருக்கும்.  நாலு வருஷங்களா வீட்டுக்கு இதுலதான் போயிட்டு இருக்கேன்...’’ என்கிற சுகுமாரனைப் போல் நள்ளிரவில் பணி முடிந்து வீடு திரும்புபவர்கள்,  கடைசிப் பேருந்தை தவற விட்டவர்கள், வெளியூருக்குச் செல்பவர்கள் என ஆயிரக்கணக்கானவர்களை அரவணைத்து அவர்கள் செல்ல வேண்டிய  இடங்களுக்குப் பத்திரமாக கொண்டுபோய்ச் சேர்க்கிறது இந்த ரயில்.

இதில் டிக்கெட் பரிசோதகர் யாரும் வருவதில்லை. காவல்துறையின் கண்காணிப்பும் இல்லை. இருந்தாலும் இரவின் துணையுடன் எந்த  அசம்பாவிதமும் நிகழாமல் மின்னல் வேகத்தில் பறக்கிறது இந்த ரயில். கடற்கரையிலிருந்து திருவாலங்காடு வரை மக்கள் ஏறுவது, இறங்குவதைத்  தவிர எந்த சலனமும் இல்லை. ஆனால், திருவாலங்காடு நடைபாதையில்... ‘‘இந்த ரயில்தான் தம்பி எனக்கு சோறு போடுற சாமி. ஒரு நாளைக்கு  இந்த ரயில் வரலைன்னா... அன்னைக்கு பொழைப்பே போச்சு...’’ நன்றியுணர்வு மிளிர பேசுகிறார் முனியப்பன். திருவாலங்காடு ஸ்டேஷன்  நடைபாதையில் நள்ளிரவிலும் கடை பரப்பி தன் மனைவியுடன் இணைந்து காய்கறி, கீரை விற்றுக் கொண்டிருக்கிறார்.

‘‘மோசூர், மணவூர்ல தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கேன். அங்க விளையற காய்கறி, கீரைகளை பறிச்சிட்டு நைட் 2.00 மணிக்கு இந்த  ஸ்டேஷன்ல ஆஜராவேன். மனைவி எனக்கு முன்னாடியே வந்துடுவாங்க. பிளாட்பாரத்துல கடையைப் போட்டுட்டு அரக்கோணம் ரயிலுக்காக  காத்திருப்போம். சரியா 3.00 மணிக்கு அந்த ரயில் இங்க வந்து சேரும். இந்த இடத்துல இறங்குறவங்க எங்க கிட்டதான் கீரையும், காய்கறியும்  வாங்கிட்டுப் போவாங்க. உள்ளூர்ல இருக்குற கடைக்காரங்களும் கீரை வாங்க வருவாங்க. பகலை விட இந்த நேரத்துல வியாபாரம் நல்லாயிருக்கும்...’’  என்கிற முனியப்பன் இருபது ரூபாய்க்கு நான்கு கட்டு அரைக்கீரையை அள்ளிக் கொடுக்கிறார்.

காய்கறிகளையும் எடை போடாமல் கைகளில் வாரி வழங்குகிறார். ‘‘நாலு மணிக்கெல்லாம் மக்கள் கூட்டம் இங்க அலைமோதும். எல்லோரும் பரபரப்பா  இருப்பாங்க. நடைபாதைல கடை போட முடியாது. அதனால அரக்கோணத்திலிருந்து வேளச்சேரிக்குப் போற ரயில்ல ஏறி பெரம்பூருக்குப் போவோம்.  வழில கீரையை சின்னச் சின்ன கட்டுகளாக கட்டுவோம். காய்கறிகளைப் பிரிச்சு பாக்கெட்ல போடுவோம். 5.30க்கு பெரம்பூர் போயிடுவோம். எட்டு  மணிக்குள்ள வியாபாரத்தை முடிச்சுட்டு வீடு திரும்ப 11 மணி ஆகிடும். சாப்பிட்டு தூங்கி எந்திரிச்சு மறுபடியும் நைட்ல காய்கறி, கீரை பறிக்க  போவோம். இதுக்கு இடைல தோட்டத்தையும் கவனிச்சுக்கணும்.

பத்து வருஷங்களா இப்படித்தான் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு...’’ புன்னகைக்கிற முனியப்பனின் கரம் பற்றி ஆமோதிக்கிறார் அவரது மனைவி.  இவர்களின் இரண்டு மகன்களும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசிக்கிறார்கள். பட்டாபிராமிலிருந்து அரக்கோணம் வரைக்குமான பத்துக்கும்  மேற்பட்ட ஸ்டேஷன்களில் முனியப்பனைப் போன்ற காய்கறி வியாபாரிகள் பலர் நள்ளிரவிலும் உற்சாகமாக வியாபாரம் செய்வது ஆச்சர்யம். அந்த  நேரத்திலும் அவர்களுக்கான வாடிக்கையாளர்கள் இருப்பது அதிசயம். அடித்தட்டு மக்களுக்கு வாழ்வூர்தியாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த ரயிலில்  ஆதரவற்றவர்கள் உறங்குவதற்கான இடமும் இருக்கிறது.

ஆம்; இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு முதல் ஐந்து ஆதரவற்றவர்கள் ஏறிக் கொள்கிறார்கள். மூலையில் இருக்கும் இருக்கைகளைத்  தூங்குவதற்காகத் தேர்வு செய்து ஏறியவுடன் படுக்கிறார்கள். யாரையும் தொந்தரவு செய்வதில்லை. யாருடனும் பேசுவதுமில்லை. நாமாக பேசச்  சென்றாலும் பயந்து ஒதுங்குகிறார்கள். மட்டுமல்ல, ஒவ்வொரு நடைபாதையிலும் வீற்றிருக்கின்ற இருக்கைகளில் எண்ணற்ற மக்கள் கொசுக்கடியையும்  மறந்து உறங்குகின்றனர். சிலர் ஸ்மார்ட் போனில் மூழ்கிக்கிடக்கின்றனர். பகலில் கூட காலியான இருக்கைகளை ஏதாவது ஒரு நடைபாதையில்  பார்த்துவிடலாம். இரவில் அது சாத்தியமே இல்லை.

‘‘நைட்ல வேலை குறைவுதான். இருந்தாலும் கொஞ்சம் அசந்தா தூக்கம் வந்துடும். கட்டுப்படுத்த முடியாது. நேரமும் சீக்கிரமா போகாது. தனியா  இருக்க சலிப்பா இருக்கும். அதனால ஏதாவது புத்தகத்தை படிச்சுட்டு இருப்பேன். இல்லைன்னா மொபைலில் படம் பார்ப்பேன். பயணிகள் வந்து  ஏதாவது கேட்பாங்க. அவங்களுக்கு பதில் சொல்லுவேன். டிரெயின் கொஞ்சம் லேட் ஆச்சுன்னாதான் பிரச்னை. மத்தபடி ஒண்ணுமில்ல...’’ என்கிற பெயர்  சொல்ல விரும்பாத அந்த ஸ்டேஷன் மாஸ்டர் தன் பணியைக் கவனிக்கத் தொடங்கினார். அவர் கையிலிருந்த டார்ச் லைட்டிலிருந்து எழுந்த பச்சை  வண்ண வெளிச்சம் ரயில் ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருப்பதைச் சுட்டியது. ‘‘அப்பா வேலைல இருந்தப்ப இறந்துட்டார்.

அவர் வேலை எனக்கு கிடைச்சது. நைட் 2 மணி வரைக்கும் மக்கள் வருவாங்க. அவங்களுக்கு டிக்கெட் கொடுக்கணும். அப்புறம் கணக்கு  வழக்குகளைப் பாக்கணும். தூங்க முடியாது. மறுபடியும் 3.30க்கு மக்கள் வர ஆரம்பிப்பாங்க...’’ என்கிறார் ஒரு ஸ்டேஷனில் இருந்த கமர்ஷியல் கிளார்க்.  ‘‘நைட்ல லோக்கல் டிரெய்ன் ஓட்றது சிரமம். ரெண்டு மணி நேர பயணத்துல முப்பது இடங்கள்ல நிறுத்தணும். கொஞ்சம் அசந்தாலும் லேட் ஆகிடும்.  அப்புறம் மேலிடத்துக்கு புகார் போயிடும். அரக்கோணம் போற வரை பாத்ரூம் வந்தா கூட அடக்கிக்கணும். மழை வந்தா சரியா சிக்னல் கிடைக்காது.  அது இன்னமும் கஷ்டம்...’’ என்கிறார் அந்த ரயில் ஓட்டுநர். பின்னி மில் மூடப்பட்டு பல இரவுகள் கடந்துவிட்டன. ஆனாலும் அந்த ரயில் இன்னமும்  விழித்திருக்கிறது!

த.சக்திவேல்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்