மழைச் சத்தம்



சென்ற வாரத் தொடர்ச்சி...

ஒரு மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்தும் அர்ச்சனா வரவில்லை. இனி காத்திருப்பது வீண் என்று நான்  மண்டபத்திலிருந்து இறங்கியபோது, மண்  சாலையில், பிங்க் நிற சேலையில், கறுப்புக் குடையுடன் ஓர் உருவம் வருவது தெரிந்தது. குடை பாதி முகத்தை மறைத்திருந்தது. அந்த உருவம்  மண்டபத்தை நோக்கித் திரும்ப... என் மனம் தத்தளிக்க ஆரம்பித்தது. அவளாகத்தான் இருக்கவேண்டும். மெல்ல அந்த உருவம் நெருங்க... குடை  லேசாக உயர... அர்ச்சனாதான். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். முதலில் சற்றுத் தயங்கிய அவள் கால்கள், இப்போது வேகமாக என்னை நோக்கி  நகர்ந்தன. அவள் நெருங்க நெருங்க... என் இதயத்தின் துடிப்பு அதிகரித்துக்கொண்டேயிருந்தது.

மழையில் நனைந்தபடி அர்ச்சனாவை நோக்கி நடந்தேன். அர்ச்சனா என் அருகில் நெருங்கியவுடன் நின்றாள். குடையை மீறி அவள் முகத்தில் சுள்  சுள்ளென்று சாரல் துளிகள் விழுந்து கொண்டிருந்தன. அவ்வளவு நெருக்கத்தில் அவளை இத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்ததும், சந்தோஷத்திலோ  அல்லது துக்கத்திலோ எனது கால்கள் வெடவெடவென்று நடுங்கின. என்னைப் பார்க்கப் பார்க்க அர்ச்சனாவின் கண்கள் கலங்கி, ஒரு சொட்டு நீர்  வழிந்து அவள் கன்னத்து மழைநீரோடு கலந்தது. நான் ஒரு வார்த்தை கூட பேசத் தோன்றாமல் அவள் முகத்தையே உற்றுப்  பார்த்துக்கொண்டிருந்தேன். காலச்சிற்பி அவள் உடலைச் செதுக்கி, சின்னஞ்சிறு மாற்றங்கள் செய்திருந்தான்.

முன்பை விட சற்றே பூசினாற்போல் உடம்பு. கண்களின் கீழ் லேசாக கருவளையங்கள். நெற்றி வகிட்டுக் குங்குமம் மழைநீர் பட்டு லேசாகக்  கலைந்திருந்தது. சில வினாடிகள் நீடித்த மௌனத்திற்குப் பிறகு, ‘‘அர்ச்சனா... எப்படி இருக்க?” என்ற என் குரல் தளுதளுத்தது. ‘‘ம்... நீ?” என்றவளின்  கண்களில் நீர் முட்டிக்கொண்டு வழிய... அவள் ஆற்றுப் பக்கம் திரும்பி கண்களைத் துடைத்துக் கொண்டாள். மழை நன்கு வலுக்க... நாங்கள் நடந்து  யாருமற்ற மண்டபத்தில் ஏறிக்கொண்டோம். காவிரியில் விழுந்து சிதறிக் கொண்டிருந்த மழைத்துளிகளை இருவரும் பார்த்துக்கொண்டே நின்றோம்.  திரும்பி அர்ச்சனாவைப் பார்த்தேன். என்னுள் ஒரு பெரிய அலையடிப்பது போல் இருந்தது.

‘என்னுடன் இருக்கும்போதெல்லாம் என் கைவிரல்களில் நீ சொடக்கெடுத்தபடி பேசிய நிமிடங்கள் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறதா அர்ச்சனா? நீ என்  கண் பொத்தி விளையாடிய கைவிரல் சூடு, இன்னும் குளிராமல் இருப்பதை நீ அறிவாயா அர்ச்சனா?’ ‘‘என்ன... ஒண்ணும் பேசமாட்டேங்கிற...” என்று  மௌனத்தைக் கலைத்தாள். ‘‘நீ வரமாட்டன்னு நினைச்சேன்...”  ‘‘ஆக்சுவலா உன்னைப் பாக்கக்கூடாதுனுதான் நினைச்சுகிட்டு வந்தேன். ஆனா, இங்க  வந்து கார்ல மண்டபத்தைத் தாண்டி போறப்பவே தவிச்சுப் போயிட்டேன். சரி... இந்த மூணு நாளைக்குள்ள மழை பெஞ்சா வருவோம். இல்லன்னா  விட்டுடுவோம்ன்னு இருந்தேன். ஆனாலும் கண்ணு வானத்தைப் பாத்து ஏங்கிகிட்டேயிருந்துச்சு..!” ‘‘உன் ஹஸ்பெண்ட் வந்துருக்காரா?” என்றபடி நான்  ஒரு தூணோரத்தில் அமர... அர்ச்சனா என் எதிரில் அமர்ந்து கொண்டாள்.

‘‘இல்ல... அவருக்கு பாரிஸ்ல ஒரு கான்ஃபரன்ஸ். பசங்கள மட்டும் அழைச்சுட்டு வந்தேன். தெரியும்ல... எனக்கு ரெண்டு பையனுங்க...” ‘‘ம்... ஜோதி  சொன்னா. எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு...” என்ற நான் சில வினாடிகள் இடைவெளிவிட்டு, ‘‘அப்புறம் அர்ச்சனா... லைஃபெல்லாம் எப்படிப்  போகுது?” என்றேன். ‘‘ம்... போவுது. உன்னைப் பார்க்கப் பார்க்க கில்ட்டியா இருக்கு. காதலிக்கிறப்ப என்னென்னவோ பேசினேன். எங்க வீட்டுல  எதிர்த்தவுடனே உன்னை அம்போன்னு விட்டுட்டு, வேற ஒருத்தரக் கல்யாணம் பண்ணிகிட்டேன். என் மேல இன்னும் உனக்கு வெறுப்பிருக்கா  அருண்?” சில வினாடிகள் அவளை உற்றுப் பார்த்த நான், ‘‘அர்ச்சனா... நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கலன்னாலும், அந்தக் காதல்ல எந்த பொய்யும்  கிடையாது. அதனால உன் மேல வெறுப்புல்லாம் ஒண்ணுமில்ல.

கொஞ்சம் வருத்தம்தான். இந்தியா மாதிரியான சாதி, மத, அந்தஸ்து வித்தியாசம் பாக்கிற தேசத்துல, காதல்ங்கிறது பெரும்பாலான பேருக்கு இங்க  வெறும் கனவுதான். ஆனா, உனக்கு கல்யாணமாயி சரியா நாலு மாசத்துல எனக்கு கவர்மென்ட் வேலை கிடைச்சிடுச்சு. அப்பதான் நீ ஒரு ஆறு மாசம்  காத்திருந்தாக் கூட நம்ம ஒண்ணு சேந்திருக்கலாமேன்னு தோணுச்சு. சரி விடு. என்ன பேசினாலும் நடந்தத எல்லாம் மாத்திட முடியுமா என்ன?”  “என்னை எப்பவாவது நினைச்சுப்பியா?” “ம்... மிக்ஸி ஓடற சத்தம், வாஷிங் மெஷின் ஓடற சத்தத்துக்கு நடுவுல ஹிந்துஸ்தானி ம்யூசிக் கேட்கிற  மாதிரி, அப்பப்ப உன்னை நினைச்சுப்பேன்.

நீ?”  ‘‘ம். டிவில ‘செவன் ஜி ரெயின்போ காலனி’ பாட்டு போட்டா உயிர் போயிட்டு, உயிர் வந்துடும். ‘நினைத்து நினைத்துப் பார்த்தால்...’ல ஒரு லைன்  வரும் பாரு... அதைக் கேட்டன்னா, வீட்டுல யாருமில்லன்னா கண்ணு கலங்கிடும்...” ‘‘என்ன லைன்?” என்ற நான், “‘தோளில் சாய்ந்து கதைகள் பேச...  நமது விதியில் இல்லை...’ சரியா?” என்றேன். ‘‘எப்படி கரெக்டாச் சொல்ற? உனக்கும் கண்ணு கலங்குமா?” ‘‘கலங்காது. அந்த லைன கேக்குறப்ப உன்ன  நினைச்சுக்குவேன்...” ‘‘அதானே பாத்தேன். இத்தனை வருஷம் கழிச்சு என்னைப் பாக்குற... கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வந்துச்சா? நான்  என்னல்லாம் நினைச்சுகிட்டு வந்தேன் தெரியுமா? என்னைப் பாத்தவுடனே நீ ஓன்னு கதறிக் கதறி அழுவ.

நானும் உன்னைக் கட்டிப்பிடிச்சுகிட்டு அழலாம்னு வந்தேன். நீ என்னன்னா என்னைப் பாத்தவுடனே, டாக்டர் பேஷண்ட்கிட்ட கேக்குற மாதிரி...”  என்றவள் சட்டென்று குரலை மாற்றி நான் பேசியதுபோல், ‘‘அர்ச்சனா... எப்படி இருக்க?” என்று உற்சாகமாக நடித்துக் காட்டினாள். தொடர்ந்து அர்ச்சனா  எங்கள் இப்போதைய நிலை மறந்து, அந்த காதல் காலத்தில் இருப்பது போல் என் இடது கை மோதிர விரலைப் பிடித்து சொடக்கெடுக்க  முயற்சித்தபடி, ‘‘அட... அழக் கூட வேணாம். ரொமாண்டிக்கா ஒரு லுக்காச்சும் விடலாம்ல்ல? என்னடா... சொடக்கே வரமாட்டேங்குது...” என்றபடி என்  முகத்தைப் பார்த்தாள். ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான் அவளுக்கு, தான் பழைய அர்ச்சனா இல்லை என்பது ஞாபகத்துக்கு வர…. ‘‘ஸாரி... நான் பழைய நினைப்புல.... பழக்க தோஷத்துல...”  என்று கையைப் பின்னிக்கிழுக்க… நான் அவள் கைவிரல் நகங்களைப் பார்த்தேன். அப்படியே பிடித்திழுத்து, அந்த நகங்களைக் கடித்துக்கொண்டே  அவளிடம் பேசவேண்டும் என்ற ஆசையை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். சில வினாடிகள்  மழையில் நனையும் எதிர்க்கரையைப்  பார்த்துக்கொண்டிருந்தவள், ‘‘இப்ப மூங்கில் தோட்டம்ல்லாம் இல்லையா?” என்றாள். “ம்ஹும். மூங்கில் தோட்டம் இஞ்சினியரிங் காலேஜ் ஆயிடுச்சு.  காவிரிக் கரை குறுகிடுச்சு. வருஷத்துல ஆறு மாசம் தண்ணி ஓடினாலே பெருசு. அரசமரத்தடி படித்துறைய இடிச்சுட்டாங்க.

பிள்ளையார் கோயில் படித்துறைல இப்ப பிள்ளையார் கிடையாது. உன்னோட சேர்ந்து எல்லாம் போச்சு. ம்...” என்று பெருமூச்சுவிட்ட நான், “ஒண்ணு  மட்டும் இருக்கு...” என்று  ஜெர்கினுக்குள் கையை விட்டு அந்த ஃபோட்டோவை எடுத்தேன். “ஏய்…. என்னை மண்டபத்துல ஃபர்ஸ்ட் டைம் எடுத்த  போட்டோவா?” என்ற அர்ச்சனாவின் கண்களில் அப்படி ஒரு வெளிச்சம். வேகமாக நெருங்கி ஃபோட்டோவைப் பார்த்தாள். அவளருகில் நெருங்கி  அமர்ந்தபடி நானும் போட்டோவைப் பார்த்தேன். திரும்ப என்னிடம் கொடுத்தவள், “எப்படி உன் ஒய்ஃப் கண்ணுல படாம வச்சிருக்க?” என்றாள்.  “ஆபீஸ்ல வச்சுருக்கேன்...” “ஏய்… நான் உன் ஒய்ஃப பாத்ததில்ல.

அவங்க போட்டோ இருக்கா?”  “மொபைல்ல இருக்கு….” என்ற நான் மொபைல் கேலரியில் இருந்த என் மனைவியின் படத்தைக் காண்பித்தேன்.  “ஏய்…. செம அழகா இருக்காங்கப்பா… என்னை விட அழகில்ல?” என்று கேட்க... நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. தொடர்ந்து அவள், “உனக்கு  உன் ஒய்ஃப பிடிக்குமா?” என்றாள். “ம்… ரொம்பப் பிடிக்கும். கல்யாணமாயி ஆறு வருஷங்களாகுது. இன்னும் அவளப் பத்தி காதல் கவிதைல்லாம்  எழுதுவேன்...” என்றவுடன் அவள் முகம் லேசாக மாறியது. “என்னை ரொம்பப் பிடிக்குமா? அவங்கள ரொம்பப் பிடிக்குமா?” என்றாள். லேசாகச் சிரித்த  நான், “எனக்கு…. ஜெயமோகனையும் பிடிக்கும்.

சாருநிவேதிதாவையும் பிடிக்கும்...” என்று கூற அவள் குழந்தை போல் அப்பாவித்தனமாகக் கண்களை வைத்துக்கொண்டு, “யாரு அவங்கல்லாம்?”  என்று அழகாகக் கேட்டபோது, எனக்கு ஜெயமோகனையும், சாருநிவேதிதாவையும் விட அர்ச்சனாவை அவ்வளவு பிடித்துப்போயிற்று. “ம்... இந்தி  எதிர்ப்பு போராட்டத்துல கலந்துகிட்டவங்க...” என்றேன் விளையாட்டாக. “இந்தி எதிர்ப்பு போராட்டம்ன்னா?” என்று அவள் தொடர்ந்து கேட்க... நான்  சத்தமாகச் சிரித்தேன். “ஏன் சிரிக்குற?” “என் அழகிய மக்குப் பெண்ணே... நீ அப்படியே என் ஒய்ஃப் மாதிரியே இருக்க...” என்றேன். “இல்ல... உன்  ஒய்ஃப்தான் என்னை மாதிரியே இருக்காங்க...” என்றவள் நான் சற்றும் எதிர்பாராதவிதமாக திடீரென்று அழ ஆரம்பித்தாள்.  

“ஏய்… என்னாச்சு?” அவள் பதில் ஒன்றும் சொல்லாமல் தொடர்ந்து அழுதாள். ‘‘என்ன இது... கண்ணத் துடைச்சிக்கோ...” ‘‘கர்ச்சீப் வச்சிருக்கியா?” என்று  என் கர்ச்சீப்பைக் கேட்டு வாங்கி அவள் தன் கண்களைத் துடைத்துக்கொண்டபோது ஏனோ தெரியவில்லை சந்தோஷமாக இருந்தது. “ஏன்டா... நான்  அழுவுறதப் பாக்குறப்ப கூட உனக்கு அழுகை வரலையா?” என்றாள் குழந்தை போல். சிரித்தேன். “வவ்வவ்வே…” என்று பழிப்புக் காட்டிய அர்ச்சனா,  “கல்நெஞ்ச இரும்பு மனசுடா... உன்னைப் பாத்தது சந்தோஷமாதான் இருக்கு. ஆனா கல்யாணமாயி, ரெண்டு குழந்தைங்க பெத்துட்டு, இப்படி பாக்குறத  நினைச்சா… மனசுக்குள்ள ஒரு குற்ற உணர்வு. உனக்கு?” ‘‘எனக்கும் கில்ட்டியாதான் இருக்கு...” பெருமூச்சுவிட்ட அர்ச்சனா தன் கையிலிருந்த  வாட்ச்சைப் பார்த்தாள்.

‘‘கிளம்புறேன். ஒன்னவர்ல வர்றேனு சொல்லிட்டு வந்துருக்கேன்...” என்றபடி எழ முயற்சிக்க, ‘‘ஒரு நிமிஷம்...” என்றேன். அவள் ‘என்ன?’ என்பது போல்  என்னைப் பார்த்தாள். ‘‘தப்பா நினைக்கலன்னா, என் விரல்ல ஒரு சொடக்கெடுத்துட்டுப் போறியா?” என்று கேட்டதும் அவள் கண்களில்  வெளிச்சம்.  என் முகத்தைப் பார்த்தபடி, எனது இடதுகை ஆட்காட்டி விரலில் சொடக்கெடுக்க முயற்சித்தாள். சொடக்கு வரவில்லை. அடுத்த விரல்... அடுத்த  விரல்... சொடக்கு வரவேயில்லை. ‘‘என்னடா...” என்று சிணுங்கிய அர்ச்சனாவின் முகத்தில் ஏமாற்றம். ‘‘ரெண்டு பேரு கையும் மழைல ஈரமா  இருக்குல்ல... அதான் வரமாட்டேங்குது.

நான் உன்கிட்ட பேசுறப்பல்லாம் ஒண்ணு பண்ணுவேனே… ஞாபகமிருக்கா?” “ம்….” என்று வெட்கப்பட்ட அர்ச்சனா தன் கைவிரல்களை நீட்டியபடி,  “தில்லிலருந்து கிளம்பறப்ப நகத்த வெட்டணும்னு நினைச்சேன். ஆனா, உன்னப் பாத்தாலும் பாப்போம்னு கட் பண்ணல….” என்று கூறியபோது நான்  அவள் கையைப் பிடித்து வேகமாக இழுக்க…. அவள் அப்படியே என் மடியில் சாய்ந்தாள். அவளை நிமிர்த்தி என் முழங்காலில் சாய்த்துக்கொண்டு  அவள் கைவிரல் நகத்தைக் கடித்துத் துப்பினேன். நகத்துண்டு அவள் கன்னத்தில் விழ….. நான் அந்த நகத்துண்டை எடுப்பதற்காக அவள் கன்னத்தில்  கைவைத்தபோது, அவள் தன் அழகிய அகன்ற கண்களால் உற்றுப் பார்த்தாள்.

அவள் நெற்றி வகிட்டிலிருந்த குங்குமம் மழை ஈரத்தில் பிசுபிசுவென்று இருந்தது. அதை நான் எனது  விரலால் மூக்கு வழியாக இழுத்து… அவளின்  கன்னத்துக்கு கொண்டு வந்து சுண்டு விரலால் சிவப்பாகக் கோலமிட்டேன். சில வினாடிகள் என்னைத் தாபத்துடன் பார்த்த அர்ச்சனா சட்டென்று  எழுந்துகொண்டாள். “டைமாவுது. கிளம்புறேன். போறதுக்குள்ள ஒரு முறை சொடக்கு எடுத்துடுறேன்...” என்று என் கைவிரலில் சொடக்கு போட  முயற்சித்தாள். சொடக்கு வரவில்லை. இருவரும் கைவிரல்களை நன்கு துடைத்துக் கொண்டோம். இப்போது அர்ச்சனா மீண்டும் முயற்சிக்க... சொடக்கு  விழவேயில்லை. அர்ச்சனாவின் முகம் அழுவது போல் மாறியது. ‘‘ஏய்... லூசு... ஈரத்துல வரமாட்டேங்குது. அவ்வளவுதான். நீ கிளம்பு...” என்று  எழுந்தேன்.

ஓரடி நடந்தவள் ‘‘கடைசியா ஒரு தடவ ட்ரை பண்ணலாம்...” என்று என் இடது கை நடுவிரலைப் பிடித்து, “புன்னைநல்லூர் மாரியம்மா தாயே…  சொடக்கு விழணும்...” என்றபடி வலுவாக இழுத்தாள். டக்கென்று சொடக்கு சத்தம் கேட்க… அர்ச்சனாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.  ‘‘கிளம்புறேன்...” என்று மண்டபத்திலிருந்து இறங்கிய அர்ச்சனா ஒரு வினாடி திரும்பிப் பார்த்தாள். பிறகு குடையை விரித்துக்கொண்டு வேகமாக  பெய்துகொண்டிருந்த மழைக்கு நடுவே நடந்து சென்றாள். மழை இன்னும் அதிகமாகி, இப்போது மழைச்சத்தம் சீரான லயத்துடன் காதை நிரப்பியது.  அவள் நடந்து புளியமரங்களைத் தாண்டி திரும்புவது வரை பார்த்துக்கொண்டே நின்றேன். அவள் பார்க்க ஆசைப்பட்ட கண்ணீர், இப்போது என்  கண்களில் நிற்காமல் வழிந்துகொண்டேயிருந்தது.

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

சைனீஸ் சங்கராபரணம்!

டுவிட்டரில் வெளியான இசை வீடியோ பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. மலேசியாவில் பிறந்த சீனரான சோங் சியு சென் சங்கராபரணம்  ராகத்தில் அவிழ்த்துவிட்ட பாட்டு அது. துல்லியமான குரலில் வெளிநாட்டுக்காரர் சங்கதிகள் குறையாமல் பாடுவதை இணைய உலகம் ஆச்சர்யத்துடன்  ரசித்துக்கேட்டு மகிழ்ந்து வருகிறது.

டால்பின் கொடூரம்!

சீனாவின் குவாங்டாங் பகுதியிலுள்ள பீச்சில், சுற்றுலாப் பயணி ஒருவர் தோளில் டால்பின் மீனை தூக்கிப்போட்டுக்கொண்டு காருக்கு கொண்டு  செல்லும் வீடியோ, வைரலாகி வருகிறது. விலங்கை கொன்று தோளில் தூக்கிச் செல்கிறார் என விலங்கு ஆர்வலர்கள் கொந்தளித்ததால் போலீஸ்  இதுகுறித்து விசாரித்து வருகிறது.

நாய்க்கு ட்ரோன்!

லக்னோவைச் சேர்ந்த ராஜ், சாக்கடைகளில் சிக்கிக்கொள்ளும் வளர்ப்புப் பிராணிகளைக் காப்பாற்ற எட்டு கிலோவில் ட்ரோன் விமானத்தை  தயாரித்துள்ளார். இதில் பொருத்தப்பட்ட நகம் போன்ற கருவிகளின் மூலம் இக்கட்டான இடங்களில்
மாட்டிக்கொண்டு முனகும் விலங்குகளை மீட்கலாம்.