காற்றின் கையெழுத்து





  குரலை இழந்த குயில்

‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்’ என்பார்கள். குழந்தையும் தெய்வமும் இல்லாத இடத்தில் நின்று கொண்டிருக்கிறார் சின்னக்குயில் சித்ரா. தனது பனிக்குடத்தில் சுமந்த தேவதையை நீச்சல்குளத்தில் இழந்து விட்டார்.

‘கண்ணுக்குள் நிலவு’ படத்தில், இசைஞானி இளையராஜா இசையில் ஒரு தாலாட்டுப் பாட்டு எழுதினேன். சித்ராதான் பாடினார்.

‘சின்னஞ்சிறு கிளியே
தேயாத வெண்ணிலவே
தோள் மீது தொட்டில் கட்டி
நான் வளர்த்த சூரியனே
துளி சோகம் கண்டால்
உந்தன் கண்ணில்
புயல் வீசும் கண்ணா
எந்தன் நெஞ்சில்
அறிவாயோ...’

என்று பாடும்போது அவரை அறியாமலேயே அவரது கண்கள் ஈரமாகி இருந்தன. இந்த மெல்லிய உணர்வுகள் எப்போதும் அவரிடத்தில் இருக்கும்.பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குறிஞ்சி மலராகக் கிடைத்தவள் நந்தனா. இப்போது பூவை இழந்த காம்பாகத் துவண்டு நிற்கிறார் சித்ரா.

பிள்ளை இல்லாத அன்னையும் அன்னை இல்லாத பிள்ளையும்தான் உலகில் மிகவும் துயரமானவர்கள். சித்ராவின் துயரத்தைக் காலம்தான் ஆற்ற வேண்டும்.

செய்கூலியும் சேதாரமும்

உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியில் தெரியாத பெரிய பெரிய வீடுகளும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளும் சென்னையில் பெருகிக்கொண்டே இருக்கின்றன. ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் குறிப்பிட்ட ஒரு வணிகக் குலத்தைச் சார்ந்தவர்களே பெரும்பாலும் இங்கு வசிக்கிறார்கள்.

இந்த வீடுகளில் வீட்டுவேலை பார்க்கிற பெண்கள் ஒரு தனிஜாதியாகவே உருவாகி வருகிறார்கள். அவர்களின் குலத்தொழிலாக அது மாறிவருகிறது. பெரும்பாலும் அந்தச் சுற்றுப்புறங்களில் வாழ்கிற தலித் மக்களாக அவர்கள் இருக்கிறார்கள். அதைவிட்டால் சென்னைக்கு அருகிலிருக்கும் கிராமங்களிலிருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள்.

இந்த மண்ணின் மைந்தர்களுக்குச் சொந்தமாக ஒருபிடி மண்கூட இல்லை. அவர்களுக்குத் தெரிந்த விவசாயக்கூலி வேலைகளையும் பார்க்க முடிவதில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபோட்டுக் கொண்ட நிலங்களில் நவீன தொழில்நுட்பமும் அவற்றுக்குத் தேவையான உற்பத்தியும் அந்த எளிய மனிதர்களை வாழ்க்கைக்கு வெளியே விரட்டி விட்டது. அவர்கள் ஊருக்கு வெளியே வந்து பிழைப்பைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறுவயதில் மார்வாடிக் கடைகளைக் கடக்கும் போதெல்லாம், கடைகளில் நம் பெண்களின் பட்டுச் சேலைகளை, பண்டம் பாத்திரங்களைப் பார்த்திருக்கிறேன். இதைக்கூடவா அடகு வைப்பார்கள் என்று யோசித்திருக்கிறேன். அடகு வைத்த அந்தக் கறுப்பு முகங்களின் அடையாளங்களைத் தேடியிருக்கிறேன். இன்று நம் பெண்களே அந்த வீடுகளில் அடகுப்பாத்திரங்களாக அடைந்து கிடக்கிறார்கள்.

கணவனால் கைவிடப்பட்டுக் குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டிய ஒரு பெண், ஒரு பெரிய வீட்டில் வேலைக்குச் சேர்ந்தாள். முப்பது வருடங்களுக்குப் பிறகும் முதலாளி அவளது குடும்பத்தைப் பற்றி நினைக்கவே இல்லை. தனது மூன்று பெண் பிள்ளைகளையும் அந்த வீட்டுக்குக் கூட்டிச் சென்று பழக்கிய அவள், அங்கேயே அவர்களை ஒப்படைத்துவிட்டு காசநோயில் இறந்து போனாள். விசுவாசமான அந்த வேலைக்காரிகளில் இரண்டுபேர் இப்போது முதிர்கன்னிகள்.

இவர்களுக்குத் திரும்பிப் பார்க்க நினைவுகள் இல்லை; விரும்பிப் பார்க்கக் கனவுகளும் இல்லை. பங்களாக்களின் பூச்செடிகளுக்கு ஊற்றும் தண்ணீரில் அவர்களது கண்ணீர் கலந்து கிடக்கிறது. வீட்டைக் கூட்டித் தள்ளும்போது, உதிர்ந்து கிடக்கும் தங்கள் புன்னகைகளையும் அவர்கள் பெருக்கித் தள்ளுகிறார்கள்.

இப்படிப்பட்ட கீழ்நிலைச் சமூகத்தின் அடுத்தடுத்த தலைமுறைகள் சாராயத்துக்கும் சூதாட்டத்திற்கும் இடையில் தள்ளாடுவதே வாழ்வின் இயக்க விதியாக மாறிப் போகலாம்.
நமது கேழ்வரகு ரொட்டியை இத்தாலியின் ‘பீட்சா’ கிண்டலடிக்கிறது. நமது இளநீரை அமெரிக்காவின் கொக்ககோலா கேலி செய்கிறது. இந்த மண்ணையும் மண்ணின் உணவையும் பண்பாட்டையும் மறந்து, பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை செய்கிற மனிதர்களே இங்கு வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலை உருவாகும்போது, தமிழ் மட்டுமே அறிந்து தமிழர்களாக மட்டுமே வாழ நினைக்கிற நாம் என்ன செய்யப் போகிறோம்?

‘பயன்படுத்து; தூக்கியெறி’ என்பது பன்னாட்டு நிறுவனங்களின் பண்பாட்டுச் சுலோகம். குடித்து முடித்து எறியப்படும் கொக்ககோலா டின்களாக & மூன்றாம் உலக நாடுகளில் கொண்டுவந்து கொட்டப்படும் ரசாயனக் கழிவுகளாகத்தான் ஏழைகள் எப்போதும் இருக்கிறார்கள். கவிஞர் அப்துல் ரகுமான் சொன்னதுதான் சரி.

நல்ல வேளை
வறுமைக் கோடாவது கிடைத்தது.
இல்லையென்றால்
இதன் கீழ் வாழ்பவர்கள்
வேறு எதன்கீழ் வாழ்வார்கள்?’

புறக்கணிக்கப்பட்டவர்களின் நிர்வாணம்

கூவாகம் திருநங்கைகளின் திருவிழாக் கூட்டம் கூடிக் கலைந்துவிட்டது.

ஒருநாள் மணமகள் அலங்காரம்; மறுநாள் விதவையின் அலங்கோலம். தங்களது தீராத சோகத்தைச் சமநிலைப்படுத்திக் கொள்ளத்தான் இந்தச் சடங்குகள்.அதை நினைத்தபோது எனக்கு ஒரு காட்சி தோன்றியது. அவர்களிடமிருந்து அறுத்தெறியப்பட்ட தாலிகள் அவர்களைப் படைத்த கடவுளின் கழுத்தை இறுக்குவது போலவும், உடைத்து நொறுக்கப்பட்ட வளையல் துண்டுகள் தெறித்து அவனது முகத்தில் ரத்தம் வழிவது போலவும் இருந்தது.

ஒருநாள் ஒரு திருமணத்திற்கு பரிசுப்பொருள் வாங்குவதற்காக கடையில் நின்றிருந்தேன். இரண்டு அரவாணிகள் உள்ளே வந்தார்கள். கடைக்காரர் அவசர அவசரமாக அவர்களைப் பணம் கொடுத்து வெளியேற்றினார். ‘ஏன் இந்தப் பதற்றம்’ என்று கேட்டேன். ‘காசு குடுக்கலேன்னா இங்கேயே புடவைய அவுத்துடுவாங்க சார்’ என்றார். இது குற்றம்தான் என்றாலும், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தங்களது நிர்வாணத்தையே அவர்கள் ஆயுதமாக ஏந்துகிறார்களோ என்று எனக்குப்பட்டது.

அரவாணிகள் என்றாலே பாலியல் தொழில் செய்கிறவர்கள்; பிச்சையெடுத்துப் பிழைக்கிறவர்கள் அல்ல. அவர்களை அதிர்ஷ்ட தேவதைகளாக நினைத்து, அவர்கள் கையால் தொழில் தொடங்கி, ஆசி வாங்கி அள்ளிக் கொடுக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

இந்த இரண்டு பார்வையும் நமக்குத் தேவையில்லை. அவர்களுக்கான மனித மதிப்பைத் தருவோம். ஆண்பால் பெண்பால் அல்லாத அவர்களின் பால் நமக்குள்ள ஏளனத்தைத் தூக்கி எறிவோம். புதிரான அவர்களது உடலை வேடிக்கை பார்ப்பதைத் தவிர்ப்போம்.

உடலுறவு வைத்துக் கொள்வது எல்லா உயிர்களுக்கும் இயற்கை தந்திருக்கிற உரிமை. அவர்களுக்கும் காதலர்கள் உண்டு; கணவர்களும் உண்டு. ஆனால், இந்திய அரசியல் சட்டம் ‘இயற்கைக்கு மாறுபட்ட பாலியல்’ என்று இந்த உறவை அங்கீகரிக்க மறுக்கிறது.

1997 & விழுப்புரத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வு மாநாடு. காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த ரவிதான் சிறப்பு விருந்தினர். ‘அலி’ என்ற கேலிக்குரிய சொல்லை அவர்தான் அரவாணியாக்கினார். (கூத்தாண்டவரின் மற்றொரு பெயர் அரவான்.) அரவாணியைத் திருநங்கையாக்கியவர் நர்த்தகி நடராஜ்.இன்னும் நிறைய தெரிந்து கொள்ள, தமிழில் வெளிவந்திருக்கும் இரண்டு நூல்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

1. அரவாணிகள் & உடலியல் / உளவியல் / வாழ்வியல். மகாராசன் தொகுத்தது.

2. உணர்வும் உருவமும். தமிழில் முதன்முதலாக அரவாணிகளைப் பற்றி அரவாணி ஒருவராலேயே (ரேவதி) எழுதப்பட்டது.

நூலில் ஓர் அரவாணியின் அனுபவம்...

‘நான் ஏழாவது படிச்சிக்கிட்டிருந்தப்போ ஒரு பையன் எனக்கு டெய்லி லவ் லட்டர் எழுதி எழுதிக் குடுப்பான். ஒரு லெட்டருல, ‘பிறக்கும்போது முளைக்காதது எது? அதை மறைப்பது எது? ஆறு கால் உள்ளது எது? அதற்கு ஆதாரம் எது? அதோட அழகு எது’ன்னு எழுதிக்குடுத்தான்.

எனக்கு அர்த்தம் தெரியாம எங்க ஸ்கூல் நீலா டீச்சர்கிட்டப் போயி, ‘டீச்சர் ஒரு கேள்விக்கு அர்த்தம் தெரியல’ன்னு சொல்லி அந்தப் பையன் எழுதியிருந்ததைச் சொல்லிக் கேட்டேன். அவங்க அதுக்கு,  ‘பிறக்கும்போது முளைக்காதது பல்; அதை மறைப்பது உதடு. ஆறு கால் உள்ளது பேன்; அதற்கு ஆதாரம் தலைமுடி; அதோட அழகு பூ’ன்னு சொன்னாங்க. நான் அவனுக்கு முத்தம் குடுத்தேன். அவன் எனக்குப் பூ குடுத்தான்.’
(சலசலக்கும்...)
பழநிபாரதி