மாணவர்களுக்கு வரலாற்றைச் சொல்ல நாணயங்களே எளிதான வழி!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

 


     இந்த ‘அரிய’ பணியை 25 ஆண்டுகளாக செய்து வருகிறார் வெங்கடாசலம். முதல் வகுப்பைக்கூட தாண்டாத இவர், தனது செல்லா காசுகளை எடுத்துக்கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். இந்தக் காசுகளில்தான் நம் வரலாறே அடங்கியுள்ளது என சிலிர்க்கிறார்.

‘‘நான் படித்ததெல்லாம் மக்கள் மத்தியில்தான். மில்லில் வேலைக்கு சேர்ந்த பிறகுதான் நாணயம் சேகரிப்பு பற்றி தெரிந்து கொண்டேன். படிக்காத நாம எதையாவது சாதிச்சோம்னு இருக்கணும். அந்த ஆசைக்காக கையில் இருக்கும் பணத்தில் பழைய நாணயங்களை வாங்கிக் குவிக்கிறேன்.

நொய்யல் ஆற்றங்கரையில் நாணயங்களைத் தேடித் திரிகிறேன். அந்தக் காலத்தில் வயதானவர்களைப் புதைக்கும் போது, அவர்கள் வைத்திருந்த காசையும் புதைக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இடுகாடுகளிலும் என் நாணயத் தேடல் தொடர்கிறது.

நாணய சேகரிப்பு நல்ல நண்பர்களையும் படித்தவர்களையும் எனக்கு அறிமுகம் செய்தது. இதன் வழியாக நான் சேமித்த நாணயங்களின் வரலாறு பற்றி தெரிந்து கொண்டேன். தொடக்கத்தில் வறுமையின் காரணமாக வீட்டில் எதிர்ப்பு. சமூகத்தில் எனக்குக் கிடைத்திருக்கும் நல்ல பெயரை உணர்ந்து கொண்ட பின்னர் வீட்டிலும் ஒத்துழைப்பு கிடைத்தது.

70 நாடுகளின் தபால்தலைகள் என்னிடம் உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் வெளியிட்ட 750 வகை நாணயங்களையும் தேடிப் பிடித்து வாங்கியிருக்கிறேன். 80&க்கும் அதிக பள்ளிகளில் கண்காட்சி நடத்தியுள்ளேன். சேலம் பாரமஹால் நாணய வியல் கழகத்தில் என் முயற்சிக்கு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் கிடைத்தது. நாணயங்கள் பற்றிய உண்மையான வரலாறுகளைத் தேடித்தேடி மாணவர்களிடம் சேர்க்கிறேன். நாணயங்களையும் தபால்தலைகளையும் பராமரிக்கவே மாதம் ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.

இப்போது டெல்லி போன்ற இடங்களில் பழங்கால நாணயங்களைப் போலவே போலிகளைத் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதனால் உண்மையான வரலாறு மறைக்கப்பட வாய்ப்புள்ளது. இது போன்ற தவறுகள் தொடராமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேகரிக்கப்பட்ட நாணயங்கள் குறித்த கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் மத்தியில் வரலாற்றைச் சொல்ல நாணயங்கள் எளிதான வழியாக இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதப் பிறவியாகத் தோன்றி ஏதோ ஒன்றை சாதித்து விட்டோம் என்ற நிறைவு கிடைத்துள்ளது. என் வாழ்க்கையின் சேமிப்பு இந்த செல்லாக் காசுகள் மட்டுமே’’ என்று பூரிக்கிறார் எளிய மனிதர் வெங்கடாசலம்!
 ஸ்ரீதேவி
படங்கள்: செல்வன்