சிம்புவுடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்...கூல் கார்த்திகா



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

 
                 ராதா மகள் கார்த்திகா தமிழ் சினிமாவில் அரங்கேறி விட்டார். ‘கோ’ படம் பார்த்த யாராவது, ‘‘உங்கம்மா அளவுக்கு நீங்க நடிக்கலை...’’ என்றுகூட சொல்ல வேண்டாம், ‘‘அம்மாவை விட சூப்பரா நடிச்சுக் கலக்கிட்டீங்க...’’

என்றோகூட கார்த்திகாவிடம் சொல்லி பெண்ணை வருத்தப்பட வைத்து விடாதீர்கள்.

விஷயம் இதுதான். படம் ரிலீசாவதற்கு முதல் நாள் கண்ணில் கண்ட அத்தனை பேரிடமும் கார்த்திகா கனிவுடன் வேண்டிக்கொண்டது, ‘‘படத்தில என் நடிப்பை மட்டும் விமர்சியுங்க. அம்மாவை கம்பேர் பண்ணாதீங்க...’’ என்பதுதான். அந்த ஒரு வரி வேண்டுகோளுக்கு அவர் பயன்படுத்திய ‘ப்ளீஸ்’கள் மட்டும் ஒரு டஜன் தேறும். அதற்கு அவர் சொன்ன காரணம், ‘‘நான் ‘ராதா மகள்’ங்கிறது எனக்கான அடையாளம் மட்டும்தான். அது அறிமுகத்துக்கு உதவுச்சு. ஆனா அந்த காரணத்தாலேயே எனக்கு பட வாய்ப்புகள் குவியும்னோ, என்னை எல்லாரும் ஏத்துக்குவாங்கன்னோ இல்லை. என் தனிப்பட்ட திறமை மட்டும்தான் எதிர்காலத்தை முடிவு செய்யும்...’’ சினேகம் சிந்திய கண்களுடன் அப்படிக் கேட்டதைப் பார்த்த எவருக்கும் புரிந்துவிடும் ‘கார்த்து’வின் மனது.

கார்த்து..?

அப்படித்தான் அம்மா ராதா கார்த்திகாவை அழைக்கிறார். ‘‘எனக்கு ஒரு பாரதிராஜா மாதிரி கார்த்துவுக்கு கே.வி.ஆனந்த் கிடைச்சார்...’’ என்று தன் அகன்ற முகம் மலர மகளை பெருமிதத்துடன் பார்த்தார், சந்தர்ப்பம் வாய்த்தால் மகளுடன் நடிக்கத் தயாராக இருக்கும் அம்மா ராதா. ‘அக்கா’வாக நடிக்கக் கேட்டால் உடனே ஓகேயாம்... (அதானே..?)

‘கோ’வில் பத்திரிகையாளராக வரும் கார்த்திகா, உண்மையில் படித்துக்கொண்டிருப்பது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சிலபஸில் பிசினஸ் எகனாமிக்ஸ். எதிர்காலத்தில் அப்பா கேரளாவில் நடத்தும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் எம்.டியாகப் பார்க்க நேர்ந்திருக்கும் கார்த்துவை. ரசிகர்கள் செய்த புண்ணியம், அதற்கு முன்பாகவே வெண்திரையில் புதுநிற தேவதையாகிவிட்டார்.

‘எப்படி இருக்கு சினிமா..?’’

‘‘சினிமால எப்படி இருக்கணும்னு பங்க்சுவாலிட்டி முதலான விஷயங்களை முதல்லயே அம்மா கத்துக்கொடுத்திட்டதால ஷூட்டிங்ல நல்ல வரவேற்புதான். இதே வரவேற்பை ரசிகர்களும் தருவாங்கன்னு நினைக்கிறேன்...’’ என்கிற கார்த்திகாவிடம், ‘‘முதல்ல ‘கோ’ படத்தில சிம்பு நடிக்கிறதா இருந்தது. உங்களை மாத்தச் சொன்னதாலதான் அவரே பிறகு நடிக்காம போனதாவும் சொன்னாங்களாமே?’’ என்றால், ‘‘நான் நடிக்க ஒத்துக்கும்போது யார் ஹீரோன்னுகூட கேட்கலை. பிறகுதான் சிம்புன்னு டைரக்டர் சொன்னார். பிறகு ஒருநாள் ஜீவாதான் ஹீரோன்னாங்க. யார் ஹீரோவா இருந்தா எனக்கென்ன..? இது எனக்கு முதல் படம். ஜீவா பெரிய ஹீரோதான். படத்தில ஹாரிஸ் இசை இருக்கு. எல்லாத்துக்கும் மேல கே.வி.ஆனந்த் சார் இருக்கார். இதுக்கும் மேல ஒரு அறிமுக நடிகைக்கு என்ன வேணும்..?’’ என்று சிரித்தார்.

‘‘அடுத்து சிம்பு கூட ஜோடியா ஒரு படம் வந்தால்..?’’

‘‘அவர்கூட எனக்கு சண்டையா என்ன..? பெரிய ஆர்ட்டிஸ்ட் அவர். சூப்பர் டான்சர். அப்படி அவர் கூட நடிக்க இன்னொரு ஆஃபர் வந்தா நடிக்க ஆர்வமா இருக்கேன்..!’’ என்று மில்லிமீட்டர் பாசாங்கு தெரியாமல் கூலாகச் சிரிக்கிறார் கார்த்திகா.
குட் கேர்ள்..!

வேணுஜி