நீங்கள் டோனி ஆக ரெடியா?



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

 
                   ஹர்பஜனுக்கும் ஸ்ரீசாந்துக்கும் சரிப்பட்டு வராது என்ற சூழல் உருவான பிறகு... மைதானத்தில் வைத்தே ஹர்பஜன் ஸ்ரீசாந்தை அடிக்க, குழந்தை போல ஸ்ரீசாந்த் அழுத பிறகு... இனி இந்திய டீமில் இருவரில் ஒருவருக்குத்தான் இடம் இருக்கும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் இருவரையும் இணைத்து, ஒரு போட்டியில் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து ஆடும் வகையில் செய்தார் டோனி!

கடந்த 2010 நவம்பரில் நியூசிலாந்து அணி இந்தியாவில் பயணம் செய்தது. ஐதராபாத் நகரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி. முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்டிங் வரிசையின் கடைசி பேட்ஸ்மேனான டோனி அவுட் ஆனபோது ஏழு விக்கெட்டுகளுக்கு 336 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சமன் செய்யவே இன்னும் 14 ரன்கள் வேண்டும் என்ற நிலை. அடுத்து ஹர்பஜன், ஜாகீர், பிராக்யான் ஓஜா, ஸ்ரீசாந்த் என்று பவுலர்கள்தான் இருக்கிறார்கள். எளிதாக சுருண்டுவிடும் என்ற நிலைமை. அதற்கு ஏற்ப ஜாகீரும் ஓஜாவும் அவுட் ஆக, அடுத்து களமிறங்கினார் ஸ்ரீசாந்த்.

எதிர்முனையில் தன்னை கன்னத்தில் அறைந்த ஹர்பஜன்... அரை சதம் அடிக்க இன்னும் ஐந்து ரன்கள் வேண்டும் என்ற நிலையில் இருந்தார். ஸ்ரீசாந்த் தயவில் அரை சதமாவது அடிப்பாரா ஹர்பஜன் என்ற நிலையை மாற்றி, ஹர்பஜனை செஞ்சுரி வரைக்கும் கொண்டு சென்றார் ஸ்ரீசாந்த். 111 ரன்கள் குவித்து தன்னுடைய சரித்திரத்தில் இரண்டாவது செஞ்சுரியை அடித்தார் ஹர்பஜன். அதற்குக் காரணம் ஸ்ரீசாந்த்.

சண்டைக் கோழிகளாக இருந்த இருவருக்குள் எப்படி சாத்தியமானது இந்த கெமிஸ்ட்ரி? அதற்குக் காரணம், டோனி. இந்திய அணி விளையாடுவதற்காகச் சென்ற இடங்களில் எல்லாம் ஹர்பஜனையும் ஸ்ரீசாந்தையும் ஒரே அறையில் தங்கவைத்தார் டோனி. ஹனிமூன் செல்லும் தம்பதி ஒரே அறையில் இருப்பதால் அதிக புரிதல்களை அடைகிறார்கள் என்ற அடிப்படையை களத்திலும் செயல்படுத்தினார். இறுக்கம் தளர்ந்து நெருக்கம் உருவானது. தனிநபர்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை... ஆனால் அவர்கள் ஒன்றுகூடி வெற்றிக்காக உழைக்கும்போது அணிக்குள் சுமுகமான உறவு இருக்க வேண்டும். ஏதேனும் சிக்கல் எழுந்தால் சரிசெய்ய வேண்டியது தலைவனின் கடமை.

இந்த சமாதானத்தால் இருவருக்கும் மட்டுமல்ல... அணிக்கும் நன்மை. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை வெல்ல அந்தப் போட்டியை சமன் செய்ததுதான் காரணமாக அமைந்தது. அதுதான் ஒரு தலைவன் செய்ய வேண்டிய விஷயம்.

தலைவனின் தன்மை தனக்குக் கீழே இருப்பவர்களை ஒன்றிணைத்து வைப்பதில் மட்டுமல்ல... வெற்றியைக் கொண்டாடுவதிலும் இருக்கிறது. உலகக் கோப்பையை வென்றதும் டோனி நடந்துகொண்ட விதமே அதற்கு சாட்சி! கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து கோப்பையை வென்ற பிறகு எல்லோருடைய கவனமும் கொண்டாட்டத்துக்குப் போய்விட்டது. சச்சினைத் தலையில் தூக்கிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்கள்; பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனைக் கொண்டாடினார்கள். டோனி ஆளையே காணோம்!

பரிசளிப்பின்போது பளிச்சென்ற சிரிப்போடு முன்னே வந்தார் டோனி. ‘இந்த வெற்றியை சச்சினுக்கு அர்ப்பணிக்கிறோம்’ என்பதை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொன்னால் போதாது. அதை அர்த்தப் படுத்தவும் வேண்டும். அந்த இடத்தில் டோனியும் இருந்திருந்தால் அவரையும் தூக்கிக் கொண்டாடி இருப்பார்கள். அப்போது சச்சினுக்கான முக்கியத்துவம் குறைந்திருக்கலாம். ‘அது கூடாது... இது சச்சின் கொண்டாடப்பட வேண்டிய தருணம்’ என்பதை டோனி உணர்ந்திருந்ததால் டிரஸ்ஸிங் ரூமுக்குள் ஒதுங்கிக் கொண்டு சச்சினுக்கு வழிவிட்டார்.

அதுதான் தலைவன் செய்ய வேண்டிய விஷயம்... வெற்றி உங்கள் உழைப்பால், உங்கள் வியூகத்தால், உங்கள் முயற்சியால் விழைந்திருக்கலாம். ஆனால், இத்தனை காலம் உழைத்த சீனியருக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள்... அதுவும் வெற்றி கிடைத்த தருணத்திலேயே கொடுத்துவிடுங்கள். அந்தக் கணத்தில் உங்கள் வெற்றி மீது நிழல் படிந்தது போலத் தெரியலாம்... ஆனால், நாளைய சரித்திரத்தில் உங்கள் பெயர் அழுத்தமாகப் பதிக்கப்படும். டோனியுடையதைப் போல!
 (தொடரும்)
 சி.முருகேஷ்பாபு