பேரிமத்தளம்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண்விடு தூம்பு, நிசாரளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுனிச்சம், விரலேறுபாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை என அக்கால தோற்கருவிகளை வரிசைப்படுத்துகிறார் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார். பிற சங்க இலக்கியங்களில் 30க்கும் மேற்பட்ட தோற்கருவிகள் இடம்பெற்றுள்ளன.

மரம், தோல், வடிவம், வார்ப்பில் சிற்சில வேறுபாடுகள் கொண்டவை இவை. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான இசையைத் தருபவை. இசையை சிதைக்காமல் குவிக்கும் மரங்களையும், அடியைத் தாங்கி ஒலியை உமிழும் விலங்குகளின் தோலையும் இனம்கண்டு, அவற்றை வடிவப்படுத்தி வார்த்து இசைத்த நம் மூதாதைகளின் அறிவு வியக்க வைக்கிறது.

தொல்காப்பியம், பஞ்சமரபு போன்ற தொல்தமிழ் நூல்களில் இடம்பெற்றுள்ள இசை இலக்கணங்களும் சிலிர்க்க வைக்கின்றன.

கல்லும் மண்ணும் குவிந்துகிடக்கும் குறிஞ்சி நிலத்துக்கு தொண்டகப் பறையும், குறிஞ்சி யாழும். செடியும், கொடியும் சூழ்ந்துகிடக்கும் முல்லை நிலத்துக்கு ஏறுகோட்பறையும், முல்லை யாழும். வறட்சியும், வளமும் சேர்ந்திருக்கும் மருத நிலத்துக்கு நெல்லரிக்கிணையும், மருத யாழும். நீரும், ஊரும் பிணைந்து கிடக்கும் நெய்தல் நிலத்துக்கு மீன்கோட்பறையும், விளரி யாழும். வெம்மையும், வறுமையும் பரவிக்கிடக்கும் பாலை நிலத்துக்கு துடிப்பறையும், பாலை யாழும். மண்ணின் தன்மைக்கேற்ப வாழ்க்கை. வாழ்க்கையின் தன்மைக்கேற்ப இசை. உணவு, உறக்கம் போலவே தமிழனுக்கு இசையும் அன்றாடத் தேவையாக இருந்தது. அதன் வெளிப்பாடே எண்ணக்குறையாத இசைக்கருவிகள். அள்ளக்குறையாத பண்கள்.

மிக துரதிர்ஷ்டவசமான சரித்திரச் சோகமாக, ஈராயிரம் ஆண்டு தமிழக வரலாறு இப்போது இறங்குமுகமாகவே இருக்கிறது. மனிதர்களை மட்டுமின்றி, விலங்கினங்களையும் ஈர்த்த அந்த அற்புத வாத்தியங்களையும், இசை மரபையும் இழந்து நிற்கிறது தமிழினம். மிஞ்சியிருக்கிற சிலவும் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. அப்படி முடிவெய்தும் நிலையில் இருக்கிற தோலிசைக் கருவிகளில் ஒன்றுதான் பேரிமத்தளம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மட்டுமே இக்கருவியைக் காணமுடிகிறது. மிருதங்கத்தை விட சற்று நீளமாக, சுத்த மத்தளத்தை விட சுற்றளவு குறைவாக உள்ள இந்த பேரிமத்தளம் பெருமாளின் உருவாகவே கருதப்படுகிறது. வைரம் பாய்ந்த பலாக்கட்டையால் செய்யப்பட்டு, ஆட்டுத்தோல் போர்த்தப்பட்டுள்ளது. ஓரடி நீளம் கொண்ட அரளிக்குச்சியால் ஒருமுகத்தில் மட்டுமே வாசிக்கப் படுகிறது.

‘‘இம்மத்தளத்தில் ஒலிக்கும் இசை அதிர்வூட்டும் பேரிசை என்பதால் பேரிமத்தளம் என்று பெயர் வந்தது’’ என்கிறார் ரங்கநாதர் கோயிலில் இக்கருவியை வாசிக்கும் வாசு.

தமிழகத்தில் உள்ள பெருங்கோயில்களில் மும்மாதம் தேரோடும் சிறப்பு பெற்றது ஸ்ரீரங்கம் மட்டுமே. தை, பங்குனி, சித்திரை ஆகிய மூன்று மாதங்களிலும் ரங்கநாதனுக்கு பிரம்மோற்சவம் நடக்கிறது. இந்த உற்சவங்களுக்கான கொடியேற்றத்தின்போது இசைக்கலைஞர்களை கௌரவிப்பது நெடுங்கால மரபு. உற்சவ நாட்களில் பெருமாள் புறப்பாட்டுக்கு முன்பாக, நான்குபுறமும் உள்ள திசை மூர்த்திகளுக்கு பலி சாதிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

 அந்த சடங்குக்கு முன், நம்பெருமாள் முன்பு ஐந்துபடி நெல்லைக் கொட்டி, அதன்மேல் பேரிமத்தளத்தை வைத்து வழிபாடு நடத்தப்படும். உப்பு போடாமல், நிறைகட்டி வடிக்கப்பட்ட பொங்கல் சாதத்தால் நைவேத்தியம் செய்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படும். பின்னர், இக்கருவியை வாசிக்கும் கலைஞருக்கு காப்புக்கட்டி, பூணூல் அணிவித்து, புதுத்துண்டால் தலைப்பாகை அணிவிக்கப்படும். இச் சடங்கு நிறைவுற்றதும் பயபக்தியோடு இக்கருவியை வாசிக்கத் தொடங்குவார் அக்கலைஞர். ‘‘இந்த இசைக் கருவியின் சத்தம் துஷ்ட தேவதைகளுக்கு ஆகாது. நம்பெருமாளின் ஊர் உலாவின்போது துஷ்டதேவதைகள் இடைமறிக்காமல் இருக்கவே இதை வாசிக்கிறோம்...’’ என்கிறார் வாசு. உற்சவ காலம் முழுதும் காலை, மாலை வேளைகளில் இந்த மத்தளம் வாசிக்கப்படும். அதன் பிறகு, மீண்டும் வழிபாடு நடத்தி பாதுகாப்பாக வைத்துவிடுவார்கள்.

கோயில்களை வழிபடும் இடமாக மட்டுமின்றி, கலைக்கூடமாகவும் நிர்வகித்தார்கள் பழந்தமிழ் அரசர்கள். ஆடலும் பாடலும் கோயிலின் தன்மையை இன்னும் தெய்வீகம் ஆக்கின. காலம் இந்த மரபையெல்லாம் அழித்து விட்டது. கோயிலில் இசைபாடி வயிறு வளர்த்த பாணர்களும், ஆடல் கலைஞர்களும் வாய்ப்பற்று சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டனர். கோயிலுக்குள் வருமானக் கணக்கு எழுதத் தொடங்கிய பிறகு, இசைக்கருவிகள் பராமரிப்பும், கலைஞர்களுக்கான கூலியும் வீண்செலவானது. கருவிகள் மக்கிப்போக, கலைஞர்கள் வேறு தொழில் நாடினர்.
தற்போது ஒருசில பெரிய கோயில்களில் மட்டும் இசைக்கருவிகள் தட்டுத்தடுமாறி சுவாசித்துக் கொண்டுள்ளன. அக்கருவிகளையும் பராமரிக்க நிதியோ, மனமோ யாருக்கும் இல்லை. வாசிக்கும் மரபறிந்து, மதிப்பறிந்து வாசிக்கும் கலைஞர்களும் இல்லை. அடுத்த தலைமுறைக்கு இதில் எதுவும் மிஞ்சுமா என்பதும் கேள்விக்குறியே! 

ஐ.எஸ்.ஓ சான்றுகள் பெற்று கோயில்கள் நிறுவனங்களாகும் நவீனத்தின் உச்சத்தில், மரபைப் பற்றி பேசவும், கொண்டாடவும் யாருக்கும் நேரமில்லை என்பதுதான் யதார்த்தம்.
வெ.நீலகண்டன்
படங்கள்: கே.எம்.சந்திரசேகரன்