ராஜா கல்யாண வைபோகமே...



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

 


     பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் & டயானா தம்பதியின் மூத்த மகனான வில்லியமுக்கும், அவரது நீண்ட நாள் காதலி கேட் மிடில்டனுக்கும் வரும் 29ம் தேதி திருமணம். டயானாவின் திருமணத்துக்குப் பிறகு இங்கிலாந்து மட்டுமின்றி, உலகம் முழுவதும் மக்களால் அதிகளவில் பரபரப்பாகப் பேசப்படும் திருமணம் இது.

சாதாரண பொதுஜனத்தின் திருமணமே பார்த்துப் பார்த்து நடக்கும் எனும்போது, இளவரசரின் திருமணம் எப்படி நடக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இளவரசியின் திருமண ஆடையைத் தூக்கிவரும் குழந்தைகள் முதல், (பாரதிராஜா படத்தில் கதாநாயகியின் வெள்ளை உடையை சிறுமிகள் தூக்கிக் கொண்டு வருவார்களே... அதேதான்!) விருந்தில் வைக்கப்படும் உணவு வகைகள் வரை ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து செய்யப்படுகிறது.

செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் இளவரசர் வில்லியம் சேர்ந்தபோது, அதே கல்லூரியில் முதலாமாண்டு மாணவியாக வந்து சேர்ந்தவர்தான் கேத்தரீன் கேட் மிடில்டன். பார்த்தவுடனேயே... இருவர் மனதிலும் ஆயிரம் பட்டாம்பூச்சிகள். அதன்பின்னர் இருவரும் ஒரே அறையைத் தேர்ந்தெடுத்து 2 ஆண்டுகள் தங்கியிருந்து படிப்பை முடித்தனர்; காதலைத் தொடர்ந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி நிச்சயதார்த்த விழா எளிமையாக நடந்தது. வரும் சுபயோக சுபதினமான 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருமணம் நடக்கிறது.
அன்று இங்கிலாந்து முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளை பி.பி.சி டிவி, இணையதளம் ஆகியவை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. உலகம் முழுவதும் 100 கோடிப் பேர் இதைக் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine

Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


  இந்தத் திருமணம் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் நடக்கிறது. சமீபகாலமாக இங்கு பல்வேறு அரச குடும்பத்து திருமணங்கள் நடந்துள்ளன.
திருமணச் செலவு முழுவதையும் அரச குடும்பம் ஏற்றுக் கொண்டாலும், இதற்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் செலவுகளை அரசு ஏற்றுக் கொள்கிறது. திருமணத்துக்கு வரும் பரிசுகளைப் பெற்றுக் கொள்வதற்காக வில்லியம் & கேட் மிடில்டன் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. திருமண பரிசுப் பொருட்கள், ரொக்கம் அனைத்தும், பல்வேறு நற்பணிகளுக்காக செலவழிக்கப்படும்.

திருமண நிகழ்ச்சி ஏப்ரல் 29ம் தேதி காலை 8.15 மணிக்கு தொடங்குகிறது. பல்வேறு மாகாண ஆளுநர்கள், இங்கிலாந்து ராணியின் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளின் பிரதமர்கள், பல்வேறு நாட்டு தூதர்கள் முதலில் வருவார்கள். 10.15 மணிக்கு மணமகன் வில்லியம், தன்னுடைய தம்பி ஹாரியுடன் தேவாலயத்துக்கு வருவார். அதைத் தொடர்ந்து மணமகள் கேட் மிடில்டன், அவரது குடும்பத்தினர், ராஜ குடும்பத்தினர் வருவார்கள். 10.45 மணிக்கு ராணி இரண்டாம் எலிசபெத் தனது கணவருடன் வருவார்.

ஆங்கிலேயர் திருமணங்களில் மணமகன் தோழன், மணமகள் தோழிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இளவரசர் வில்லியம் தனது தம்பி ஹாரியையே ‘பெஸ்ட்மேனாக’ தேர்ந்தெடுத்துள்ளார். அதேபோல் கேட் மிடில்டன் தனது சகோதரி பிப்பாவையே ‘மெய்ட் ஆப் ஹானராக’ தேர்ந்தெடுத்துள்ளார். மணமகளின் திருமண ஆடையை ஏந்தி வர, 3 வயது நிரம்பிய 2 சிறுமிகளும், 7 மற்றும் 8 வயதான 2 சிறுமிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 4 இசைக்குழுவினர் திருமண இசையை வாசிக்கின்றனர்.

காலை 11 மணிக்கு பாதிரியார் ஜான் ஹால் திருமண அறிவிப்பை வெளியிட, அதைத் தொடர்ந்து கேன்டர்பரி ஆர்ச்பிஷப் ரோவன் வில்லியம்ஸ் திருமணத்தை நடத்தி வைப்பார். நிச்சயதார்த்தத்துக்கு தனது தாய் டயானாவுக்கு தந்தை சார்லஸ் அணிவித்த அதே மோதிரத்தையே கேட் மிடில்டனுக்கு வில்லியம் அணிவித்தார். ஆனால், திருமணத்துக்கு ஸ்பெஷலாக செய்த மோதிரத்தை அணிவிக்கிறார். வெல்ஸ் கோல்டு எனப்படும் வெள்ளை தங்கத்தாலான மோதிரம் இது. இதில் ராஜ குடும்பத்தின் கஜானாவில் இருந்து மிகச்சிறிய அளவிலான தங்கம் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மணமகள் கையால் அவர் திருமண மோதிரத்தைப் பெறுவதில்லை என்று முடிவு செய்துள்ளார். ஏற்கனவே, அவரது தாத்தா பிலிப், தந்தை சார்லஸ் ஆகியோரும் இதுபோன்று திருமண மோதிரம் அணியவில்லை.

திருமணம் முடிந்தவுடன் அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் மணமக்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு புறப்படுகின்றனர். வழிநெடுக மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் 2 ஆயிரம் பேர் அமரலாம். ஆனால், 1,900 பேருக்கு மட்டும் ராஜ குடும்பத்தில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இது தங்கள் உறவினர்கள் உள்பட, உலகம் முழுவதும் உள்ள மிக, மிக முக்கியமான பிரமுகர்களுக்கு மட்டுமே. அதைத் தொடர்ந்து மதியம் பக்கிங்ஹாம் அரண்மனையில் நடக்கும் விருந்துக்கு 600 பேரும், இரவு விருந்துக்கு 300 பேரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

பக்கிங்ஹாம் அரண்மனை வந்தடைந்தவுடன், கிழக்குப் பகுதியில் உள்ள மாடத்திலிருந்தபடி பொதுமக்களின் வாழ்த்துகளை மணமக்கள் பெறுகின்றனர். அதைத் தொடர்ந்து ராணி இரண்டாம் எலிசபெத் அளிக்கும் விருந்தில் பங்கேற்கின்றனர். இரவு விருந்தை மணமகன் வில்லியம் அளிக்கிறார்.

வில்லியம் திருமணத்துக்காக இங்கிலாந்து அரசு, புதிய 5 யூரோ மதிப்பு நாணயத்தை வெளியிடுகிறது. வில்லியம் & கேட் மிடில்டன் உருவம் கொண்ட தட்டு, டீ கப், மோதிரம் உள்ளிட்ட பல பொருட்களை தனியார் நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளன. இவற்றின் மூலம் 44 மில்லியன் யூரோ அளவுக்கு வர்த்தகம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ குடும்பத்தின் திருமண நிகழ்ச்சிக்காக இங்கிலாந்தே ஒரு வாரமாக விழாக்கோலம் பூண்டுள்ளது.
 ஜே.எஸ்.கே.பாலகுமார்