குடகுமலைச் சாரல்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

 


     இந்தியாவின் பல மாநிலங்களிலும் பரந்து விரிந்திருக்கின்றன மேற்குத் தொடர்ச்சி மலைகள். கர்நாடகாவில் இம்மலையின் மீது உருவாகியிருக்கும் மாவட்டம் குடகு என்கிற கூர்க். தேக்கு, சில்வர் உட், பாக்கு, கமுகு... இன்னும் பெயர் தெரியாத உயர் மரங்கள் சூழ்ந்த வனம். மரங்களின் அடியில் காபிச் செடிகள். மரங்களின் மேலே மிளகுக்கொடிகள். ஆழ்ந்த பச்சை, பச்சை, இளம் பச்சை என்று பச்சை நிறத்தில் ஏகப்பட்ட வகைகள் கண்களுக்கு ஜாலம் காட்டுகின்றன.

கோயில் உலா

 கூர்க்கின் தலைநகர் மடிக்கேரி. இங்கு மிகப்பெரிய வீடுகள், பங்களாக்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், கடைகள், தங்கும் விடுதிகள் இருக்கின்றன. மேடு பள்ளம் நிறைந்த சரிவுச் சாலைகளில் பயணம் செய்வது த்ரில் அனுபவம்.

மடிக்கேரியின் முக்கிய கோயில் ஓம்காரேஸ்வரா. 1820ம் ஆண்டு லிங்கராஜேந்திரா என்ற மன்னர் கட்டியது இது. அரசியல் காரணங்களுக்காக ஒரு பிராமணரை அவர் கொன்றார். அதனால் அவருக்குப் பல தொல்லைகள். அவற்றிலிருந்து தப்பிக்க சிவன் கோயில் கட்டுமாறு அறிவுறுத்தப்படுகிறது. காசியில் இருந்து லிங்கம் கொண்டு வந்து கோயிலைக் கட்டினார் மன்னர். வாசலில் குளம். உள்ளே சென்றால் சிவன்.

உட்காருங்கள் ராஜாவே!

மடிக்கேரி நகரின் மத்தியில் ‘ராஜா சீட்’ என்று ஓரிடம். பல வண்ண மலர்கள், பசும்புல்வெளிகளைக் கடந்தால் அட்டகாச வியூ பாயின்ட். மணிக்கணக்கில் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம். அருகில் டாய் ட்ரெயின். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட கோட்டையும் பார்க்க வேண்டிய இடம். இங்கு சிறிய அருங்காட்சியகம் உண்டு.

திரிவேணி சங்கமம்

மடிக்கேரியில் இருந்து 33 கி.மீ. தூரத்தில் இருக்கிறது பாகமண்டலா. இங்கு காவிரி, கன்னிகா, சுஜோதி என்ற மூன்று நதிகளும் சங்கமமாகும் ‘திரிவேணி சங்கமம்’ அமைந்திருக்கிறது. இறங்கி தீர்த்தமாடிவிட்டு வெளியே வந்தால், எதிரே பாகண்டேஸ்வரா கோயில். விஷ்ணு, முருகன், கணபதி மூவரும் இருக்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு வரும் கூர்க் பெண்கள் அவர்களுக்கே உரிய பாரம்பரிய வடிவில் புடவை கட்டிக்கொள்கிறார்கள். வாசலில் உள்ள கடைகளில் கறுப்பு வளையல்கள் வாங்கி அணிகிறார்கள். தேங்காய், பீன்ஸ், தென்னங்குருத்து போன்றவற்றால் அர்ச்சனை செய்கிறார்கள்.

தலைக்காவேரி தரிசனம்

பாகமண்டலாவில் இருந்து மலையேறி பயணம் செய்தால் தலைக்காவிரி. அகலமான படிகளில் ஏறிச்சென்றால் காவிரி உற்பத்தியாகும் புனிதத்தலம். சதுரக் குளம் நிறைய பச்சை வண்ண தண்ணீர். அதில் குளித்து, வழிபடுவதற்கு வரிசையாக மக்கள் நிற்கிறார்கள். மிகப்பெரிய நதியான காவிரி மிகச்சிறிய இடத்தில் உற்பத்தியாவது வியப்பைத் தருகிறது. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை படிகள். சுமார் 250 படிகளைக் கடந்து மேலே சென்றால் மிக மிக அழகான இயற்கைக் காட்சி.

மீண்டும் மடிக்கேரி பயணம். மடிக்கேரியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் அபே நீர்வீழ்ச்சி. சுமார் அரை கி.மீ. தூரம் கீழ் நோக்கி இறங்கினால் ஆர்ப்பாட்டம் இன்றி கொட்டுகிறது அருவி. அங்கு மிக நீண்ட தொங்கு பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. நின்று நீர்வீழ்ச்சியை ரசிக்கலாம்.

கூர்க் காபி!

காபித் தோட்டத்தில் ஓர் உலா... முல்லைப்பூக்களைப் போல இருக்கின்றன காபி பூக்கள். காபி மரமாக வளரும் என்றாலும், பறிப்ப தற்கு வசதியாக ஆள் உயரத்துக்கே வளர விடுகிறார்கள். அதனால் காபியின் தண்டுப்பகுதி மரம் போல இருந்தாலும் செடி போலவே காட்சி தருகிறது. ஆழ்ந்த சிவப்பு வண்ணத்தில் காபி பழம் அந்தச் செடிக்கு ஓர் அழகைத் தருகிறது. பழங்களைக் காயவைத்து, தோலை உரித்து, கொட்டைகளை வறுத்து, பொடி செய்தால் அருமையான காபிப் பொடி தயார்.

எங்கே? எப்படி?

 மைசூர் அல்லது மங்களூர் வரை ரயில் பயணம். அங்கிருந்து மூன்று மணி நேரப் பேருந்து பயணத்தில் மடிக்கேரி. சுமார் 100 கி.மீ. தூரம். ரூ.100&க்குள் பஸ் கட்டணம்.

 சராசரியாக 2+2 பேர் குடும்பம் தங்குவதற்கு தினம் ரூ.1000 கட்டணம். உணவு மலிவு விலைதான்.

 காபி, மிளகு, ஏலக்காய், பட்டை, ஆரஞ்சு, தேன், தேனில் ஊறி உலர்ந்த நெல்லி, உலர்ந்த பைன் ஆப்பிள் ஆகியவை வாங்கலாம்.

 சுற்றிப் பார்க்க ஆட்டோக்கள், மினி பஸ்கள், பஸ்கள், டாக்சிகள் கிடைக்கின்றன. டாக்சிக்கு ஒருநாள் கட்டணம் சுமார் ரூ.2000.

 ட்ரெக்கிங், ரேஃப்டிங், கேம் ஃபயர் வசதிகள் உண்டு.

 காடுகளை அழித்து பணப்பயிர், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யப்படுவதால் குடகின் குளிர் குறைந்துவிட்டது. மழை பெய்தால் மட்டுமே ஜில்... மற்ற நாட்களில் வெயில் (28 டிகிரி செல்சியஸ் வரை). ஊட்டி, கொடைக்கானல் போன்று வெடவெட குளிர் எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். கோடை நீங்கினால் குளிர் கூடும் (11 டிகிரி).

குடகு மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது குஷால் நகர். அங்கே யானைகள் முகாம், இயற்கை பூங்கா, கால் நனைக்க ஒரு காவிரி, வண்ணம் கொஞ்சும் புத்த மடம் என ஆச்சரியங்கள் ஏராளம். அவை அடுத்த வாரம்!
 வள்ளி