நம்பி வாங்க... வாய்விட்டு சிரிங்க



கலகலப்பு 2 ஸ்பெஷல்

‘கலகலப்பு-2’ எதிர்பார்ப்பு ஜுரம் கோலிவுட்டை கொதிக்க வைக்க, படு ரிலாக்ஸில் இருக்கிறார் சுந்தர்.சி. எப்பவும் மனதை அரவணைக்கிற இயக்குநர். ஒளி குறைந்து குளிர் கூடியிருந்த காபி ஹவுசில் கூடிப் பேசினோம்.‘‘நிஜமாகவே ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும் ‘மக்களுக்கு என்ன பிடிக்கும், எப்படிச் சொல்லணும்’னு ஒரு சின்ன தயக்கத்திற்குப் பிறகுதான் தொடங்குவோம். படத்தோட வெற்றி நிச்சயம் நம் கைகளில் இல்லை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. உண்மையில் ஆடியன்ஸ்தான் தெய்வம் மாதிரி. தெய்வம் என்ன நினைக்குதுன்னு நம்ம யாருக்கும் தெரியாது.

எப்பவும் நான் நகைச்சுவையை ரொம்ப உயர்வா நினைச்சு வந்திருக்கேன். ஒரு மனுஷன் எவ்வளவு கவலையா இருந்தாலும் மலர்ந்து சிரிக்க வைக்கிற அருமருந்து காமெடி. ஜீவா, ஜெய், சிவா, யோகி பாபு, சதீஷ், மனோ பாலா, விடிவி கணேஷ், நிக்கி, கேத்ரீன் தெரசானு அள்ள அள்ளக் குறையாத பெரும் கூட்டம் இருக்கு. அவங்க வந்து போகிற இடங்களும், அதற்கான நேர்த்தியும் இருந்துவிட்டதுதான் இப்போ எனக்கு சந்தோஷம்...’’கலகலப்பாகப் பேசுகிறார் இயக்குநர் சுந்தர்.சி.

‘கலகலப்பு-2’வை பெரிய பரபரப்பில் வைச்சிருக்கீங்க...
படத்தோட பக்கா பேக்கேஜ், காமெடிதான். கலர்கலப்புன்னு கூட சொல்லலாம். உண்மையிலேயே முழு நீள காமெடி. ‘கலகலப்பு’ ஒன்றை விட இதில் பெரிய கேன்வாஸ். சினிமாவில் அழகியல் முக்கியம்னு நினைப்பேன். ஃப்ரேம் முழுக்க ஜிலுஜிலுன்னு இருக்க பிரியப்படுவேன். படத்திற்கு செலவு பண்ண எவ்வளவு ஆனாலும் சரின்னு ரெடியா இருப்பேன். ஆனால், அது ஸ்கிரீனில் தெரியணும். வெட்டிச் செலவு என் வரலாற்றிலேயே கிடையாது. சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை. இருக்கிற உலகத்தை மறந்திட்டு ஒரு புது உலகத்திற்கு கூட்டிட்டுப் போற விஷயம். இதில் என்னன்னா கதைக்களம் காசியில் நடக்குது.

காசினா நமக்குத் தெரிந்தது அகோரிகள், உயிரிழந்தவர்களை எரிக்க தயாராக வைத்திருக்கிற காட்சிகள், பிணங்கள் மிதக்கிற பேராறுன்னு பழகிட்டோம். அதையெல்லாம் விட காசி ரொம்ப அழகான நகரம். மனசிற்குள் வந்து நிற்கிற இடங்கள் நிறைய இருக்கு. பழமையும், ஆத்மார்த்தமும், நளினமும், பழைய மரபும், அருமையாக இசைந்து நிற்கிற இடம். நாம் காசியின் வேண்டத்தகாத முகத்தை மட்டும் காட்டிட்டோம். இப்ப அருமையான இடங்களை வேற ரகத்தில் தேர்ந்தெடுத்து உலவ விட்டிருக்கிறோம். நிச்சயம் இந்தக் காசி புதுசு. இது தவிர புனே, ஹைதராபாத், காரைக்குடினு விதவிதமான பயணங்கள், லொகேஷன்கள் வேற இருக்கு.

ஜீவா, ஜெய், சிவான்னு காமெடிக்கு நல்ல ‘செட்’ உருவாகி விட்டதே!
‘கலகலப்பு’க்குப் பின்னாடி ஒரு முடிவு செய்தேன். நமக்கு பிடிச்ச ஒரு ஸ்கிரிப்ட் பண்ணுவோம். அதற்கு பொருத்தமானவர்களைத் தேடுவோம். அதற்கு பெரிய ஹீரோவாக இருந்தாலும் பார்ப்போம்னு நினைச்சேன். முன்னாடியெல்லாம் புரொடியூசர் ‘இந்த ஹீரோ கால்ஷீட் இருக்கு. படம் பண்ணுங்க...’னு சொல்வார். செய்வோம். இதில் நாங்களே புரொடியூசர். காசியில் மேன்ஷன் வச்சிருக்கிற, கொஞ்சம் நார்த் இண்டியன் சாயல் இருக்கிற ஹீரோ. உடனே ஜீவா மனசில் வந்தார்.

கும்பகோணத்தில் வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்த, கொஞ்சம் இன்னோசென்ட், ஏமாளின்னு தேடினதும் ஜெய் தோணினார். ஃப்ராடு தனம் இருக்கிற மாதிரி ஒரு ஹீரோனு சொன்னவுடனே ஆட்டோமேட்டிக்கா சிவா. இப்ப படம் அருமையாக வந்திருக்கு. தாசில்தாராக நிக்கி... அதுவும் காரணமாகத்தான். கொஞ்சம் வடக்கத்திய முகம் வேணும். படகு ட்ரான்ஸ்போர்ட் பார்க்கிற பொண்ணு கேத்ரின் தெரஸா. படம் முழுவதும் உங்களை சீட்டில் உட்கார வைக்கிற தைரியம் எனக்கு இருக்கு.

உங்களுக்கு எப்பவும் ஆதிதான் மியூசிக்...
‘ஆம்பள’, ‘அரண்மனை’னு தொடர்ந்து வந்துகிட்டு இருக்கார். ஆனால், ஆதி இப்போ ஹீரோ. நான் தயாரிச்ச படத்திலேயே நடிச்சு இப்ப பெரிய இடத்துக்கு வந்திட்டாரு. சரி, சார் பிஸி.. வேற மியூசிக் டைரக்டரை போடலாம்னு நினைச்சேன். வாரத்திற்கு மூணு தடவையாவது நாங்க சந்திச்சிடுவோம். ‘யாரை மியூசிக் டைரக்டரா போடலாம்..?’னு அவர்கிட்டயே கேட்டேன். ‘ஏன் நான் பண்ணக்கூடாதா பிரதர்...’னு அவரே வாயை விட்டு கேட்டுட்டார். ‘நீங்க ஹீரோவாச்சே பிரதர்...’னு சொன்னால், ‘சும்மா இருங்க...’னு சொல்லிட்டு அழகழகா பாட்டு கொடுத்திருக்கார். தடதடன்னு உள்ளே போய் இசையில் புரண்டு எழுந்து ஆதி ட்யூன்களை அள்ளி வந்ததே அனுபவம்.

சிரிச்சுக்கிட்டே இருந்தாலும் டயர்ட் ஆகிடும். அதனால் நல்ல நகைச்சுவைக்குப் பிறகு நல்ல பாடல்கள் பெரிய ஆசுவாசம். காசி, புனேவில் போர்வாடா அரண்மனை, ஹைதராபாத், காரைக்குடினு விதவிதமா, கலர்கலரா, புதுசு புதுசா இடங்கள்ல பாடல் எடுத்திருக்கோம். என்னோட நிறைய படங்களை ஒளிப்பதிவு செய்திருக்கிற நண்பன் யூ.கே.செந்தில்குமார்தான் இதற்கும். பொதுவாக ஒரு படத்தை விக்கிறதுக்கு நல்ல நல்ல சீன்களைப் பொறுக்கி எடுத்து, வாங்குறவங்களுக்கு போட்டுக் காட்டுவாங்க. ஆனா, எனக்கு இரண்டரை மணி நேரம் ஓடுகிற முழுப்படமே அது மாதிரி இருக்கு.

தொடர்ந்து நகைச்சுவையில் நல்ல பெயர் வாங்கியது எப்படி..?
நான் எல்லாத்தையும் சந்தோஷமா பார்ப்பேன். அதுதான் என் வழி. டைரக்ட் செய்கிற படங்களில் அதிகப்படியான வன்முறையை தவிர்த்து விடுவேன். என் வாழ்க்கையில் நான் சந்தோஷமா இருப்பதையே என் படங்களும் பிரதிபலிக்கின்றன. நெகட்டிவா வாழ்க்கையைக் காட்டுவது எனக்கு எப்பவும் பிடிக்காது. ஆனா, மத்தவங்க அதை ஃபாலோ பண்ணுனா அதை தவறுன்னு சொல்ல மாட்டேன்.

ஒரு கிளாஸில் பாதி அளவு தண்ணீர் இருந்தால் அதை பாதி நிரம்பியிருக்குன்னு மட்டுமே சொல்வேன். பாதி காலின்னு சொல்ல மாட்டேன். எனக்கு அது நிறைவாக இருக்கு. இதுக்கு மேல நான் ஆசைப்படலை. நான் எப்பவும் என்னை என்டர்டெயினர்னு சொல்லிக்கவே பிரியப்படுவேன். வீட்டிலிருக்கிற ஆயிரத்தெட்டு கஷ்டங்களை மறந்திட்டு மக்கள் சிரிச்சிக்கிட்டு போகணும்ங்கிறது என்னோட எப்போதைக்குமான ஆசை.

பட்டு மரியாதை!
பாரம்பரியம் மிக்க பட்டு ஜவுளி விற்பனையில் முன்னணி வகிக்கும் ‘பாலம் சில்க்ஸ்’ கர்நாடக இசையைக் கவுரவிக்கும் வகையில் பட்டு ஜவுளிகளை வடிவமைத்துவருகிறது. கர்நாடக இசையின் கல்யாணி, காம்போதி, சங்கராபரணம், பைரவி, தோடி என்னும் உயிர் மீட்டும் ராகங்களின் பெயரில் பட்டு ஜவுளிகளை வடிவமைத்தார்கள். அதன் பார்டரில் நெய்யப்பட்டிருந்த கண்கவர் இசைக்குறிப்புகள் காண்போரை அசத்தின. இப்போது இசைக்கருவிகள், இசை மேடையில் கருவிகளுடன் பாடகர் இருப்பது போன்ற டிசைன்களில் அழகான பட்டுச் சேலைகளை வடிவமைத்துள்ளார்கள். ரூபாய் 10,000 முதல் 15,000 வரை உள்ள இந்த காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் நம் பாரம்பரியத்துக்கு செலுத்தப்பட்ட அழகான மரியாதை.

- நா.கதிர்வேலன்