இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?



பா.ராகவன் - 32

எடைக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்கள் ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐந்நூறு கலோரி அளவுக்குச் சாப்பிடலாம் என்று பார்த்தோம். இதில் மாவுச் சத்துள்ள உணவுப் பொருள்கள் அதிகபட்சம் நாற்பது கிராமுக்குள் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்வது நல்லது என்று பார்த்தோம். அந்த நாற்பது கிராமுமே காய்கறிகளில் இருந்துதான் வரவேண்டும்; தானியங்களில் இருந்தோ பழங்களில் இருந்தோ அல்ல என்று பார்த்தோம். நெய், வெண்ணெய், பனீர் மற்றும் பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் இனங்களில் இருந்து சைவ உணவாளர்கள் கொழுப்புச் சத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று பார்த்தோம். இவ்வளவையும் பார்த்துவிட்டு வைட்டமின்கள் மற்றும் மினரல்களைப் பற்றிப் பார்க்காதிருக்கலாமா?

நான் ஒரு வேள்வி போலச் சாப்பிட்டுக்கொண்டிருந்த காலத்தில் இந்த கார்ப், கொழுப்பு, வைட்டமின் வகையறாக்களைப் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. நாக்குக்குப் பிடித்தால், அதன் பெயர் உணவு. அவ்வளவுதான். பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒன்றும் பெரிய தப்பில்லை. ஆனால், நடுத்தர வயதைக் கடக்கும்போது உடம்பானது சற்று சண்டித்தனம் செய்ய ஆரம்பிக்கும். மிகவும் எளிதாக, அடிக்கடி சோர்வு என்பதில் ஆரம்பிக்கும். அப்புறம், நடந்தால் முட்டி வலிக்கும், மூச்சு வாங்கும். காலை பத்து மணிக்கு ஆபீசுக்குப் போய் உட்கார்ந்ததும் ஒரு அரை மணி தூங்கினால் தேவலாம் போலிருக்கும்.

பேப்பர் படித்தால் எழுத்துகள் சரக்கடித்துவிட்டு வந்து உட்கார்ந்தாற்போல நடுங்கித் தெரியும். திடீரென்று பல் சொத்தை உண்டாகும். ஒன்றுமே இல்லாவிட்டாலும், உடல் சற்றுத் தளர்ந்துவிட்டாற்போல சமயத்தில் தோன்றும். இன்னதுதான் என்றில்லை. எல்லாமே எல்லோருக்கும் இருக்கும் என்பதும் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் வரலாம். வயதானால் வரத்தானே செய்யும் என்பீர்களானால் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், வயதானாலும் வலு குன்றாதிருக்க வழிகள் உள்ளன என்பதைச் சொல்லிவிட வேண்டுமல்லவா? மேற்படி திடீர் இம்சைகளின் காரணம், வைட்டமின் மற்றும் மினரல் குறைபாடுகள். இவை ஏன் ஏற்படுகின்றன என்றால் எனக்குத் தெரியாது. மிக எளிய பதிலாக ஒன்றைச் சொல்லலாம்.

நாம் உட்கொள்ளும் உணவில் போதிய நுண் ஊட்டச்சத்துகள் குறைவாக இருப்பதால் வரலாம். பேலியோ என்றில்லை. எந்த டயட் முறையானாலும் சிலவற்றைக் கழித்துக் கட்டி, வேறு சில உணவுப் பொருள்களை மட்டுமே தொடர்ந்து எடுப்பதன்மூலம்தான் எடைக்குறைப்பு நிகழ்கிறது. இப்படிக் கழித்துக் கட்டும் சங்கதிகளில் சில சத்து களும் இருக்கும். அது நமக்குக் கிடைக்காது போய்விடும். பேலியோவையே எடுத்துக்கொள்வோம். இதில் நமக்குப் பழங்கள் கிடையாது. ஆப்பிள், பப்பாளி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களில் நிறைய சத்துகள் உண்டு. என்ன பிரச்னை என்றால் சத்துகளைக் காட்டிலும் சர்க்கரை அவற்றில் அதிகம் என்பதால் - அது எடைக் குறைப்புக்கு ஜென்ம விரோதி என்பதால் - பேலியோவில் அவற்றைத் தவிர்க்கச் சொல்லுவார்கள்.

இதில் இழக்கும் சத்துகளை நாம் வேறு எதில் பெறுவது? உருளைக் கிழங்கை எடுத்துக்கொள்ளுங்கள். வைட்டமின் சி, பி6, மக்னீசியம், பொட்டாசியம் என்று எவ்வளவோ சத்து இதில் உண்டு. ஆனால், நூறு கிராம் உருளைக்கிழங்கில் பதினேழு கிராம் கார்போஹைடிரேட்டும் உண்டு. உலகில் எந்த ஜீவராசியாவது வெறும் நூறு கிராம் உருளைக்கிழங்கோடு நிறுத்திக்கொள்ளுமா? சமைக்கிற விதத்தில் சமைத்தால் குறைந்தது அரைக்கிலோ சரக்கு உள்ளே போய்விடும். இதனாலேயே பேலியோவில் உருளைக்கிழங்கு கூடாது (வெங்காயம், பூண்டு தவிர நிலத்துக்கு அடியில் விளையும் எதுவுமே கூடாது. போனால் போகிறது, கேரட், முள்ளங்கி). அரிசியில்கூட ஐந்து சதம் வைட்டமின் பி6 இருக்கிறது தெரியுமா?

உட்கார்ந்து கூகுள் செய்து பாருங்கள். நாம் என்னவெல்லாம் சாப்பிடுகிறோம், எது எதில் இருந்து என்னென்ன வைட்டமின்களும் மினரல்களும் நமக்குக் கிடைக்கின்றன என்பது தெரியவரும். இந்த நுண் ஊட்டச்சத்துகள் குறையும்போது உடம்பு கொஞ்சம் ஆட்டம் காண ஆரம்பிக்கும். பெரிய பரிசோதனைகளே வேண்டாம். நம்மாலேயே தளர்ச்சியை உணர முடியும். அம்மாதிரி சந்தர்ப்பங்களில் சப்ளிமெண்டுகள் மூலம் இந்த வைட்டமின் குறைபாடுகளைச் சரிக்கட்ட முடியும். கார்ப் அளவுக்கு, கொழுப்பளவுக்கு இதெல்லாம் மிக அதிகம் தேவைப்படுகிற சரக்கில்லைதான். ஆனாலும் தேவை, தேவைதான். உதாரணமாக, உங்களுக்கு அடிக்கடி கை கால்கள் மரத்துப் போகிற மாதிரி தெரிகிறதா? தூங்கும்போது கால் ஆடுசதையில் குறக்களி பிடித்துக்கொண்டு படுத்துகிறதா?

சந்தேகமேயில்லை, மக்னீசியம் குறைபாடு. இரண்டே வழிகள்தான் இதற்கு உண்டு. ஒன்று, உண்ணும் உணவில் மக்னீசியம் அதிகம் இருக்க வேண்டும். அல்லது மக்னீசியம் சப்ளிமெண்டை டாக்டரிடம் கேட்டுச் சாப்பிட வேண்டும். சைவ பேலியோவில் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தால் தன்னால் சரியாகிவிடும். ஏனென்றால் பாதாம் ஒரு மக்னீசியக் கடல். அப்படியும் போதவில்லை என்றால் சப்ளிமெண்டைத் தவிர வேறு வழியில்லை. நமது பெண்களுக்கு சர்வ நிச்சயமாக இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கும். பரிசோதனையே இல்லாமல் இதனைச் சொல்ல முடியும். அதே போல் ஆண்கள் பெண்கள் பேதமே இல்லாமல் நகர்ப்புற வாசிகள் அனைவருக்கும் வைட்டமின் டி குறைபாடு இருக்கும். இதற்கும் பரிசோதனை அவசியமில்லை.

பி12 குறைபாடு பலருக்கு நேரும். இதெல்லாமே நமது வாழ்வு முறை சார்ந்த சிக்கல்கள். ஒவ்வொரு வேளை உணவிலும் என்னென்ன நுண் ஊட்டச் சத்துகள் உள்ளன என்று கணக்குப் போட்டா உண்ண முடியும்? இதற்குத்தான் சப்ளிமெண்டுகள் உதவும். என்ன ஒன்றென்றால் எந்த வைட்டமின் சப்ளிமெண்டையும் டாக்டர் ஆலோசனை இல்லாமல் எடுக்கக்கூடாது. குறிப்பாக எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கும்போது நம் இஷ்டத்துக்குக் கண்டதை எடுப்பது பேஜாராகும். முறைப்படி ரத்தப் பரிசோதனை செய்யும்போது நமக்கு என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்பது தெரியவரும். உணவின்மூலம் எதையெதைச் சரிக்கட்ட முடியும், எது எதற்கு சப்ளிமெண்டுகள் அவசியத் தேவை என்பதை அப்போதுதான் அறிய முடியும்.

எந்த ஓர் எடைக்குறைப்பு டயட்டிலும் ஆரம்பக்கட்டத்தில் தலை முடி கொட்டுவது நிகழும். பயந்துவிடாதீர்கள். இதற்கும் பயோடின் சப்ளிமெண்ட் உண்டு. என்ன ஒன்று, இந்த சப்ளிமெண்ட் வகையறாக்களெல்லாம் வாடகைத்தாய் மாதிரிதான். உணவின் மூலம் கிட்டாத எந்த ஒரு நுண் ஊட்டச்சத்தும் மாத்திரை வடிவில் உள்ளே போகும்போது அத்தனை முழுமையான பலன் தரும் என்று சொல்ல முடியாது. நீங்கள் நிறைய ஆண்ட்டி பயாடிக்குகள் எடுப்பவராகவோ, மது அருந்துபவராகவோ இருந்தால் இந்த சப்ளிமெண்டுகளாலும் பிரயோஜனம் இருக்காது என்பதையும் இங்கே சொல்லிவிட வேண்டும். ஒரு சம்பவம் சொல்ல வேண்டும். நாலைந்து மாதங்களுக்கு முன் ‘பூனைக்கதை’ என்று ஒரு நாவல் எழுத ஆரம்பித்தேன்.

என் வழக்கமான பணிகளுக்கு அப்பால் தினசரி பத்து மணிநேர எழுத்து வேலை. நாலைந்து நாள் ஒழுங்காக எழுதினேன். அதன்பின் முடியாமல் போய்விட்டது. கடும் அசதி. உட்கார முடியாத உபாதை. பிரசவக்காரி போல ஒரு இடுப்பு வலி. இதைவிட என்னால் நம்ப முடியாத வியப்பு என்னவென்றால் பேலியோ தொடங்கிய நாளாக எனக்குப் பசியே கிடையாது. தினமும் ஒருவேளை உணவு மட்டும்தான். ஆனால், நாவல் வேலை தொடங்கியதில் இருந்து பிசாசு போலப் பசித்தது. முன்னர் ரெகுலர் கார்ப் உணவில் இருந்தபோது எப்படி இருந்ததோ அப்படி.

இது ஏதடா பேஜாராயிருக்கிறதே என்று கவலையாகிவிட்டது. வேலை கெடக்கூடாது; அதே சமயம் டயட்டில் இருந்தும் விலகக்கூடாது. என்ன செய்யலாம்? குடும்ப மருத்துவரிடம் போய்க் கலந்தாலோசித்து ஒரு கோர்ஸ் பி12 இஞ்செக்‌ஷன் எடுத்துக்கொண்டேன். ஒருவேளை உணவை இருவேளையாக்கினேன். வைட்டமின் டிக்கு சப்ளிமெண்ட் எடுத்தேன். தீர்ந்தது. உடம்பும் சொன்ன பேச்சைக் கேட்டது, நாவலையும் குறிப்பிட்ட காலத்தில் எழுதி முடித்தேன். என் தனிப்பட்ட அனுபவம், நுண் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் பெரும்பாலும் நமது பணிச்சுமை அதிகரிக்கும்போதுதான் தெரியவரும்!

(தொடரும்)