நிமிர்



அமைதிக்கும், பழிவாங்குவதற்குமான விளையாட்டே ‘நிமிர்’.மலையாளத்தில் ஹிட்டடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ தமிழ் வடிவம் அடைந்திருக்கிறது. மெல்லிய நீரோடையாக கதையைச் சொல்லிய விதத்தில் இயக்குநர் பிரியதர்ஷன் மனதைக் கவர்கிறார். மிகவும் அமைதியான போட்டோகிராஃபர் உதயநிதி ஸ்டாலின். யார் வம்பிற்கும் போகாமல், அழகான பார்வதி நாயரை காதலித்துக் கொண்டிருக்கிறார். போட்டோகிராஃபியில் ஒரு நல்ல நிலையை அடைய அவரது அப்பா மகேந்திரனே உதவுகிறார்.

பக்கத்து கடைக்காரர் எம்.எஸ்.பாஸ்கரின் அன்பு, அப்பாவின் வழிகாட்டல் என போய்க் கொண்டிருந்தவர் வாழ்க்கையில் கிடைத்த காதலும் தோல்வி அடைகிறது. எதிர்பாராத சண்டையில் பொது இடத்தில் வைத்து சமுத்திரக்கனி அவரை அடித்து அவமானப்படுத்திவிட, அவரை திருப்பி அடிக்கும்வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுக்கிறார். இதற்கிடையில் இன்னொரு காதல். சமுத்திரக்கனியின் தங்கை மீதே. சபதம் எடுத்துக் கொண்டபடி உதயநிதி, சமுத்திரக்கனியை அடித்தாரா? ஜெயித்தாரா? காதல் வெற்றியடைந்ததா? என்ற திருப்பமான முடிவே க்ளைமாக்ஸ்.

தங்கமான பையனாக உதயநிதி அச்சு அசலாகப் பொருந்துகிறார். சதா வேஷ்டி சட்டையுடன் ஓடியாடித் திரிகிற உற்சாகம், மற்றவர்களிடம் அன்பு பாராட்டுகிற குணம், அடிக்கடி மறைந்து இருந்து கொள்ளும் அப்பாவைத் தேடும்போது முகத்தில் இயல்பாக பரபரப்பு, துடிப்பு, நல்ல போட்டோகிராஃபிக்கு திரும்பும்போது கொடுக்கிற லயிப்பு என மனம் கவர்கிறார். சமுத்திரக்கனியிடம் அடி வாங்கும்போது கிடைக்கிற அவமானத்தை வெகு எளிதாகவும் அருமையாகவும் பார்க்கிறவர்களுக்கு கடத்துகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் பார்வதி நாயர் ரசிக்க வைக்கிறார். உயரமும், மிடுக்கும் அலுங்காமல் காதலை விட்டுத்தரும் போக்கிலும் நிறைவான நடிப்பு.

ஆனால், காதலை விட்டுத்தரும்போதும், பழைய காதலனை மீண்டும் மீண்டும் சந்திக்கிற சூழ்நிலையிலும் அவர் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் தவறுவது இயக்குநரின் தவறே. அடுத்த காதலியாக நமீதா பிரமோத் கச்சிதம். அந்தச் சின்னஞ்சிறிய விழிகளில் மேக்ஸிமம் உணர்ச்சி காட்டுகிறார். அவ்வப்போது தலைகாட்டினாலும் இயக்குநர் மகேந்திரன் அவரது பெரிய அனுபவத்தில் மிளிர்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் குணச்சித்திரபாங்கில் வெகு தூரம் கடந்து வந்துவிட்டார். கருணாகரன் அவ்வப்போது காட்சி தந்து நகைச்சுவை செய்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு இருவரையும் ரசிக்க முடிகிறது.

சமுத்திரக்கனியின் கேரக்டரைப் பார்க்கும்போது நல்லவரா? கெட்டவரா? என மயக்கம் ஏற்படுத்துகிறது. அவர் உதயநிதியோடு முரண்பட்டு சண்டைக்கு செல்வதற்கு காரணகாரியங்களே இல்லை. ஒரு கட்டத்தில் உதயநிதி அடி வாங்கியது நமக்கே மறந்துவிடுகிறது. தர்புகா சிவா, லோக்நாத்தின் இசை, பின்னணியில் கவனம் ஈர்க்கிறது. படத்தின் ஓட்டத்தை கூட்டியிருக்கலாம். என்.கே.ஏகாம்பரத்தின் கேமரா கிராமத்தின் அழகுப்பகுதிகளில் எல்லாம் அருமையாகச் சுழல்கிறது. நிதானமாக நல்ல கதைச்சூழலுக்கான களம் இருப்பதால் ‘நிமிர்’ தலை நிமிர்ந்து நிற்கிறது.                 

- குங்குமம் விமர்சனக்குழு