காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 43

பாப்லோ கூட்டிய கூட்டம் எவ்விதமான உறுதியான தீர்வையும் எட்டாமல் குழப்பத்தோடு கலைந்தது. விருந்தினர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். நடுநிசி தாண்டும் பொழுதில், அந்த பண்ணை வீட்டு வாசலில் கருப்புநிற பென்ஸ் கார் ஒன்று சரேலென்று வந்து நின்றது. யாரோ முக்கியஸ்தர் ஒருவர் பாப்லோவை பார்க்க வருகிறார் என்று செக்யூரிட்டிகள் பரபரப்படைந்தனர். ஓடிச்சென்று கார் கதவை திறக்க முற்பட்டனர். அவர்களுக்கு வாய்ப்பு தராமல் அந்த கதவே திறந்தது. தேவலோகத்தில் இருந்து நேராக விசா வாங்கி வந்தவள் போல நாகரிக உடை உடுத்திய மங்கை ஒருவள் மிடுக்காக இறங்கினாள்.

“இங்கே டாக்டர் ஹெர்ணாண்டஸைப் பார்க்க வேண்டும்...” என்றாள்.“அப்படி யாரும் இங்கில்லையே?”“இல்லை. அவர்தான் மலர்க்கொத்துகளை ஆர்டர் செய்திருக்கிறார். டெலிவரி செய்ய வந்திருக்கிறேன்!”‘‘...’’“மன்னிக்கவும். தவறான முகவரிக்கு வந்துவிட்டேன்...” தேவதை மீண்டும் காருக்குள் ஐக்கியமானாள். சர்ரென்று ரிவர்ஸ் எடுத்த கார், நாலு குதிரை பாய்ச்சலில் பாய்ந்து மறைந்தது. தூர நின்று இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பாப்லோ, திடீரென உஷாரானார். “ஏதோ பிரச்னை. எல்லாரும் தயாராகுங்கள்...” என்று கத்தினார்.

அருகில் நின்றிருந்த பாப்லோவின் சகா குஸ்டாவோ, “யாரோ ஒருவருக்கு மலர்கள் கொண்டு வந்திருக்கிறாள். தவறுதலாக இங்கே வந்திருக்கக்கூடும். ஏன் பதறுகிறாய்?” என்று நிதானமாகக் கேட்டார். “அட முட்டாளே! கொலம்பியாவில் பூக்காரி எவளாவது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வந்து டெலிவரி செய்து பார்த்திருக்கிறாயா, கேள்விப்பட்டாவது இருக்கிறாயா? அதுவுமில்லாமல் நடுநிசியில் பூக்களை ஆர்டர் செய்யும் மடத்தனமான காதலன் இங்குண்டா?” “ஒருவேளை அந்த கார், அந்த பூக்காரியின் முதலாளியுடையதாக இருக்கலாமே?”

“நாம் நகரத்தை விட்டு இவ்வளவு தூரம் தள்ளி வந்திருக்கிறோம். அக்கம் பக்கத்தில் வேறு பண்ணைகளே இல்லை. அதுவுமின்றி டாக்டர் ஹெர்ணாண்டஸ் என்கிற பெயரை என் வாழ்நாளில் கேள்விப்பட்டதும் இல்லை...” என்று பதிலளித்த பாப்லோ, பாதுகாவலர்களை நோக்கிச் சொன்னார்.“உஷாராக இருங்கள். இங்கிருக்கும் விருந்தினர்கள் அத்தனை பேரும் கிளம்பிய பிறகும், நீங்கள் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்துக் கொண்டிருங்கள். ஏதேனும் வில்லங்கமாக தென்பட்டால் எச்சரிக்கை எழுப்பும் முகமாக வானத்தை நோக்கி சுடுங்கள்...” பாப்லோ சொல்லிவிட்டு, உறங்குவதற்காக மாடிக்குச் சென்றார்.

குஸ்டாவோவும், மற்றவர்களும்கூட அவரவர் அறைக்குச் சென்று விட்டார்கள். அதிகாலை இரண்டு மணி. ‘டுமீல்... டுமீல்... டுமீல்...’ துப்பாக்கிச் சத்தம் அந்த பிராந்தியத்தையே எழுப்பியது. அவசர அவசரமாக பண்ணை வீடு ஒளிபெற்றது. இரவு ஆடை அணிந்திருந்த பாப்லோ, தன்னுடைய வின்செஸ்டர் ரக துப்பாக்கியை கையில் ஏந்தியவாறே வேகவேகமாக படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார். “நான்தான் சொன்னேனே... ஏதோ வில்லங்கமென்று…”பண்ணை வீட்டின் பின்புறமாக இருந்த கம்பிவேலியைத் தகர்த்துவிட்டு பாப்லோவும், அவரது சகாக்களும் ஓடத் தொடங்கினார்கள். இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக துப்பாக்கியை முழக்கியவாறே சில பாதுகாவலர்களும் பின் தொடர்ந்தார்கள்.

இருளிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் இவர்களை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தன. பாப்லோவின் சகோதரன் ராபர்ட்டோவின் முகத்தில் ரத்தம். காலிலும் குண்டு பாய்ந்து நொண்டிக்கொண்டே வந்தார். அவர்களை போலீசும், ராணுவமும் சுற்றி வளைத்திருப்பது புரிந்தது. “நாம மாட்டிக்கிட்டோம் பாப்லோ...” என்றார். “வாயை மூடு. இப்படி அபசகுனமாக நினைத்தாலே போதும். தப்பிக்கும் எண்ணம் வராது...” பாப்லோ முகத்தில் எந்த சலனமுமில்லாமல் சொன்னார். சகோதரனைத் தோளில் தாங்கிக் கொண்டு, நடக்கத் தொடங்கினார். ஒரு மேட்டினை சிரமப்பட்டு ஏறிய பிறகு, நெடுஞ்சாலை வந்தது.

அவர்களை நோக்கி வேகமாக ஒரு கார் வந்தது. போலீசாக இருக்குமோவென்று காரை நோக்கி துப்பாக்கிகளை நீட்டினார்கள். அதிர்ஷ்டவசமாக பாப்லோவின் சகா ஒருவன்தான் அந்த அமளியிலும் சமயோசிதமாக காரைக் கிளப்பி வந்திருந்தான். பாப்லோ, குஸ்டாவோ, காயமடைந்த ராபர்ட்டோ மூவரும் அந்த காரில் ஏறினார்கள். மற்றவர்கள் இருளில் மறைந்தார்கள். அந்த தாக்குதலில் பாப்லோவின் ஆட்கள் சிலர் காயமடைந்து தப்பிக்க முடியாமல் மாட்டினார்கள். மிக ரகசியமாக நடத்தப்பட்ட இந்த சந்திப்பு பற்றிய விவரங்கள் எப்படி கொலம்பிய அரசுக்குத் தெரிந்தது? கருப்பு நிற பென்ஸ் காரில் வந்த பெண் வேவு பார்க்கத்தான் வந்திருக்கிறாள்.

சந்திப்புக்கு வந்திருந்த ஒவ்வொரு வரும் பாப்லோவின் விசாரணை வளையத்துக்குள் வந்தார்கள். அன்பாகவும், அதட்டலாகவும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் பாப்லோ நேரடியாகவே தொலைபேசியில் பேசினார். ஓர் ஆரம்பநிலை போதைக் கடத்தல் ஆள்தான் மாட்டினான். அவனுடைய கழுத்தில் கத்தியை வைத்ததுமே மொத்தத்தையும் கக்கினான். பாப்லோவை கொல்லும் பொறுப்பு கர்னல் காசடீகோ டொராதோ என்கிற போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அவர் மாதந்தோறும் கணிசமான தொகையைச் செலவழித்து, பாப்லோ குறித்த சிறிய துப்புகளைக் கூட விடாமல் சேகரித்து வந்திருக்கிறார்.

காசடீகோவின் ஏற்பாட்டின் பேரில்தான் அன்று பண்ணை வீட்டின் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. விஷயத்தை ஒப்பித்ததுமே காட்டிக் கொடுத்த கைக்கூலிக்கு என்ன பரிசோ, அதை உடனடியாகத் தந்துவிட்டார் பாப்லோ. அதாவது பாவத்தின் சம்பளம் மரணம். கர்னலுக்கு உடனடியாக தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். “அன்புள்ள கர்னல், உங்கள் ராஜ விசுவாசத்தை மெச்சுகிறான் இந்த பாப்லோ. நீங்கள் இப்போது என்னை கொல்லுவதற்காக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு என்னுடைய சார்பில் என்ன கொடுக்கப் போகிறேன் என்பதை இந்நேரம் யூகித்திருப்பீர்கள்...”மிகவும் நாகரிகமான நடையில் எழுதப்பட்ட இந்த மிரட்டலை வாசித்ததுமே கர்னல் கலங்கிப் போனார்.

மேல்மட்டத்தில் இருந்தவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி வேறு ஒரு தண்ணியில்லா காட்டுக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு தப்பித்தார். ஆனால் - பல வருடங்களுக்குப் பிறகு, பாப்லோவெல்லாம் காலமான பிறகு அந்த கர்னல் அடையாளம் தெரியாதவர்களால் சுடப்பட்டு மரணமடைந்தாராம்! அந்த பண்ணை வீடு தாக்குதல் நடந்த அதே நேரத்தில் கொலம்பியாவின் பெரிய கார்டெல் உரிமையாளர்களான ஓச்சோ, கில்பெர்ட்டோ ரோடிக்யூஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கைது ஆகியிருக்கிறார்கள். பாப்லோவின் உறுதிமொழியை ஏற்று கொலம்பியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் ஆங்காங்கே விமான நிலையங்களில் கைதானது போதை உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

‘பாப்லோவெல்லாம் அவ்ளோதான். சப்பை ஆயிட்டாரு...’ என்று கீழ்மட்டத்தில் பேசிக்கொண்டார்கள். கைதானவர்கள் ஸ்பெயின் ஜெயிலில் தள்ளப்பட்டார்கள். அவர்கள் தங்கள் நாட்டின் குற்றவாளிகள்; தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்பெயின் அரசை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. தங்கள் நாட்டு குடிமக்கள் என்பதால் தங்களிடம் ஒப்படைக்குமாறு கொலம்பியாவும் கேட்டுக் கொண்டிருந்தது. யாரிடம் ஒப்படைப்பது என்று ஸ்பெயின் குழம்பியிருந்த நேரத்தில் பாப்லோவின் பணம் விளையாட ஆரம்பித்தது.

(மிரட்டுவோம்)

ஓவியம் : அரஸ்