கடிகார வீடு
- ப்ரியா
சென்னை கோடம்பாக்கத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ளது ராபர்ட் கென்னடியின் வீடு. வாசல் கதவைத் திறந்த அடுத்த நிமிடம் ஆச்சர்யத்தில் மெய்மறக்கிறோம். காரணம், சுவர் முழுக்க பொருத்தப்பட்டிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிகாரங்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தை காண்பிக்கின்றன; ஒவ்வொரு கண்டத்தின், நாட்டின் காலத்தை சுட்டிக் காட்டுகின்றன. இவை அனைத்தையும் தன் குழந்தை போல் பராமரிக்கிறார் ராபர்ட் கென்னடி. கம்ப்யூட்டர் சார்ந்த தொழிலைச் செய்து வரும் இவர், அடிப்படையில் பழமை விரும்பி; கடிகார சேகரிப்பாளர். இங்கிலாந்து, ஜெர்மன், அமெரிக்கா... என பல நாடுகளைச் சேர்ந்த பழங்கால கடிகாரங்களை தேடித் தேடி சேகரிக்கிறார்.
 அனைத்தும் சாவி கொடுத்தால் மட்டுமே இயங்கக் கூடியவை. பேட்டரியால் இயங்கக் கூடிய எலக்ட்ரானிக் கடிகாரங்கள் ஒன்று கூட இல்லை. மட்டுமல்ல, ஒவ்வொரு கடிகாரமும் குறைந்தது 300 ஆண்டுகளுக்கு முந்தையவை! ‘‘எங்க வீட்ல பழங்கால பெண்டுல கடிகாரம் இருந்தது. அப்பா தினமும் அதை துடைச்சு சாவி கொடுப்பார். ஒவ்வொரு முறை சாவி கொடுக்கும்போதும், ‘இது தாத்தாவோடது’ என்பார். 1910ல மூணார் எஸ்டேட்டுல முதன்மை கிளர்க்கா தாத்தா இருந்தார். அவர் சேவையைப் பாராட்டி வெள்ளைக்காரர் ஒரு காரும், கடிகாரமும் பரிசா கொடுத்தார். அதனாலயே, ‘துரை கொடுத்தது’னு அப்பா அடிக்கடி சொல்வார்.
 அப்ப எனக்கு 8 வயசு இருக்கும். துபாயிலிருந்து வந்த அப்பாவின் நண்பர் ஒரு பேட்டரி கடிகாரத்தை பரிசா கொடுத்தார். ‘சாவி போட வேண்டாம். பேட்டரில ஓடும்’னு சொன்னார். அப்பாக்கு ஒரே ஆச்சரியம். தாத்தா கடிகாரம் இருந்த இடத்துல புது கடிகாரம். ‘தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாறணும்’னு அப்பா சொன்னார். தாத்தா கடிகாரத்தை தூக்கிப் போட மனசில்லாம அதை என் அறைல மாட்டினேன்...’’ என்று சொல்லும் ராபர்ட் கென்னடி, இப்போதும் அதை பொக்கிஷமாக வைத்திருக்கிறார்.‘‘அதுதான் என் சேகரிப்புல முதல் கடிகாரம். ஒரு நாள் என் நண்பன் வீட்ல இருந்த இரண்டு கடிகாரங்களைத் தூக்கிப் போட்டாங்க. அதை நான் எடுத்து ரூ.10 செலவுல சரிபண்ணினேன்.
 ‘எனக்கு கிறுக்குப் பிடிச்சிருக்கு’னு அப்பா சொன்னார். இதுக்கு அப்புறம்தான் கடிகாரங்களை சேகரிக்கணும்னு தோணிச்சு. காரணம், நண்பன் வீட்ல இருந்து கிடைச்ச கடிகாரங்களோட இயக்க அமைப்பு. வீட்ல வந்து அதைப் பிரிச்சுப் பார்த்தேன். இரண்டு கடிகாரங்களும் ஒரே நேரத்தைக் காட்டினாலும் மெக்கானிசம் வேற வேறயா இருந்தது. பார்க்கப் பார்க்க பிரமிப்பா இருந்தது. 1987ல பி.எஸ்சி பிசிக்ஸ் முடிச்சுட்டு முதுகலை படிப்புக்காக சென்னை வந்தேன். வீட்ல செலவுக்கு மாசம் ஆயிரம் ரூபா அனுப்புவாங்க. அதுல மிச்சம் பிடிச்சு கடிகாரங்கள் வாங்க ஆரம்பிச்சேன். அந்த வகைல, படிப்பு முடிச்சப்ப 14 கடிகாரங்கள் சேர்த்துட்டேன். வீட்ல ‘குப்பை சேர்க்கறேன்’னு திட்டினாங்க.
 இதுக்கு இடைல புதுச்சேரில வேலை கிடைச்சது. பொக்கிஷங்களைத் தூக்கிட்டு கிளம்பினேன். பாண்டிச்சேரி கடற்கரைச் சாலை ஓரங்கள்ல நிறைய உணவகங்கள் இருக்கும். பிரெஞ்சு காலனி என்பதால் பழங்காலக் கடிகாரங்கள் அங்க இருக்கும். அவங்ககிட்ட நட்பா பழகி அந்த கடிகாரங்களை வாங்கினேன். அடுத்து சென்னைக்கு மாற்றம். பொக்கிஷங்களைத் தூக்கிட்டு வந்து சேர்ந்தேன்...’’ என்று சொல்லும் ராபர்ட் கென்னடி, திருமணத்துக்குப் பின் கடிகாரங்களை வைப்பதற்காகவே தனி வீடு வாங்கியுள்ளார்! ‘‘1993ல கல்யாணமாச்சு. வேலையை விட்டுட்டு சொந்தமா தொழில் செய்ய ஆரம்பிச்சேன். கல்யாணமானப்ப என் மனைவி சீர் கொண்டு வந்தாங்களோ இல்லையோ நான் கடிகாரங்களை என் சீரா கொண்டு வந்தேன்!வீட்டுப் பரண், கட்டிலுக்கு கீழனு அடுக்கி வைச்சேன்.
இதனாலயே என் மனைவிக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வந்தது. ஒருமுறை பசங்களுக்கு ஃபீஸ் கட்ட வேண்டிய பணத்துல கடிகாரம் வாங்கிட்டேன். பெரிய பிரச்னையாகிடுச்சு. அப்பாதான் சமாதானம் செய்தார். கிட்டத்தட்ட என்னை பைத்தியக்காரன்னே வீட்ல முடிவு கட்டிட்டாங்க. ‘நேரத்தை வீணாக்கறேன்’னுதான் வீட்ல புலம்பிட்டிருந்தாங்க. எனக்குமே குற்ற உணர்வா இருந்தது. இணையம் பரவலான பிறகுதான் இதனோட மதிப்பே தெரிஞ்சுது. சர்வதேச அளவுல அருங்காட்சியகம் கூட இதுக்குனே இருக்கு. தினமும் குறைஞ்சது நான்கு மணி நேரங்களாவது கடிகாரங்களோட செலவிடறேன். சிலது திடீர்னு ஓடாது. அதை உடனுக்குடன் சரி செய்யணும்.
என் பிள்ளைகளால இதுக்குனு நேரத்தை ஒதுக்க முடியாது. அதனாலதான் இந்த பொக்கிஷங்களை பாதுகாக்க அருங்காட்சியகம் தொடங்கணும்னு நினைக்கறேன். என்கிட்ட பொருள் இருக்கு. தேவை இடம். யாராவது கொடுக்க முன்வந்தா நல்லா இருக்கும்...’’ என்று சொல்லும் ராபர்ட் கென்னடி, தன்னிடமுள்ள பெரும்பாலான கடிகாரங்களை பழைய பேப்பர் / இரும்புக் கடைகளில்தான் வாங்கியுள்ளார். ‘‘ஆக்சுவலா ஒவ்வொண்ணும் பல லட்சங்கள் மதிப்புடையது. ஆனா, அவ்வளவு விலை கொடுத்து எல்லாம் எதையும் நான் வாங்கலை. நாடு நாடாகவும் அலையலை. என்கிட்ட இருக்கிற 2200 கடிகாரங்கள்ல பெரும்பாலானவை தமிழ்நாட்டு பழைய பேப்பர் கடைகள்ல வாங்கினதுதான்.
 உடைஞ்ச நிலைல இருக்கும். கண்டிப்பா யாரும் தொட்டுக் கூட பார்க்க மாட்டாங்க. சிலதுல மோட்டார் இருக்காது. இன்னும் சிலதுல கதவு இருக்காது. முட்கள் சுத்த சக்கரம் இருக்காது. இதையெல்லாம் வாங்கி சரி செய்வேன். கடிகார சக்கரத்துல இருக்கிற பற்களை டிரையல் அண்ட் எரர் முறைல கைகளாலதான் தயாரிப்போம். முதல்ல 82 கட் வர்றா மாதிரி சக்கரம் தயாரிப்போம். அது வேகமா ஓடும். குறைச்சா மெதுவா சுத்தும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சரியாக்குவோம். இந்த சக்கரங்களை சரிசெய்யவே 20 நாட்களுக்கு மேல ஆகும். எல்லா கடிகாரங்களும் குறைஞ்சது இருநூறு வருட பழமையானது. ஸோ, மெக்கானிசம் தெரியாது. நாமாதான் கத்துக்கணும். எல்லாமே கையால செய்யப்பட்டது.
அதனால உதிரிப் பாகங்களையும் கைலதான் செய்யணும். இதுக்குனே எனக்கு சிலர் இருக்காங்க. மோட்டார்ல ஆரம்பிச்சு நான் கேட்கறதை செய்து கொடுப்பாங்க. இதையெல்லாம் பாலீஷ் பண்ணி பளபளப்பாக்க விருப்பமில்ல. பழைய பொருட்கள், பழமை மாறாம இருக்கணும். அதுதான் அழகு...’’ என்றவர் தன் சேகரிப்புக்காக பல ஊர் பழைய பேப்பர் கடைகளில் பலநாட்கள் தவம் இருந்திருக்கிறார்.‘‘பொதுவா பழைய பேப்பர் கடை வியாபாரிங்க கொஞ்சம் கறாரா இருப்பாங்க. ஆரம்பத்துல கஷ்டப்பட்டேன். பேச மாட்டாங்க. பழக மாட்டாங்க. அவங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதும்தான் கடைக்குள்ளயே நம்மை அனுமதிப்பாங்க.
மாயவரத்துல ஒரு கடைல 20 கடிகாரங்கள் வரை இருக்கறதா கேள்விப்பட்டுப் போனேன். கடைக்காரர் நிறைய கேள்வி கேட்டார். ஆனா, கடைசி வரை காண்பிக்கவே இல்ல. தோல்வியோடு திரும்பினேன். 20 நாட்கள் கழிச்சு ஸ்வீட் பாக்கெட் வாங்கிட்டு திரும்பவும் போனேன். முதல்ல வாங்கலை. அப்புறம் என்ன நினைச்சாரோ... மனைவியை கூப்பிட்டு கடிகாரங்களை காட்டச் சொன்னார். எல்லாமே சூப்பர் பீசஸ்! அப்படியே அவர் சொன்ன விலைக்கு வாங்கிட்டேன்...’’ என்ற ராபர்ட் கென்னடி, ஒவ்வொரு கடிகாரமும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது என்கிறார்.‘‘சில கடிகாரத்துல மூணு சாவி கொடுக்கும் துவாரம் இருக்கும். பொதுவா அரை மணி; ஒரு மணிக்கு ஒருமுறைதானே மணி அடிக்கும்?
 மூணு துவாரங்கள் இருக்கற கடிகாரங்கள் கால் மணிக்கு ஒருமுறை மணி அடிக்கும்! சிலதுல பெண்டுலம் சின்னதா இருக்கும். இன்னும் சிலதுல பெண்டுலம் வெளியவே தெரியாது. பெண்டுல கடிகாரங்கள் நிலையா ஓரிடத்துல இருந்தாதான் ஓடும். அமைப்பு கொஞ்சம் மாறினாலும் ஓடாது. இது யதார்த்தம். ஆனாலும் நீர்மூழ்கிக் கப்பல்ல கடிகாரம் இருந்திருக்கு! எப்படி இது சாத்தியம்? கப்பல் நிலையா இருக்காதே... அசைந்து கொண்டே இருக்குமே... இதை கணக்குல வைச்சுதான் நீர்மூழ்கிக் கப்பல் கடிகாரத்தை உருவாக்கினாங்க.
இந்த ஃபார்மட்லதான் இப்ப நாம பயன்படுத்தற எலக்ட்ரானிக்ஸ் கடிகாரங்கள் தயாரிக்கப்படுது. பிக் பென், ஸ்காட்லாந்துல உள்ள பிரபலமான கடிகார நிறுவனம். அலாரம், டவர் கடிகாரங்களுக்கு இவங்கதான் ஃபேமஸ். இவங்க தயாரிச்ச அனைத்து ரக அலார கடிகாரங்களும் என்கிட்ட இருக்கு. அதே மாதிரி அமெரிக்காவின் செத் தாமஸ் நிறுவனம். இவங்க பெண்டுலம் மற்றும் டவர் கடிகாரங்களுக்கு புகழ்பெற்றவங்க. இவங்க தயாரிப்பும் என்கிட்ட இருக்கு...’’ என்ற ராபர்ட் கென்னடி, லிம்கா மற்றும் கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற விண்ணப்பித்திருக்கிறார்.
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|