COFFEE TABLE



பணக்காரர்களுக்கான தேசம்
‘‘இந்தியாவில் ‘ஏழை - பணக்காரர்’ இடைவெளி அதிகரித்துவிட்டது. இதனால் பொருளாதார வளர்ச்சியின் பலன்களை சிலர் மட்டுமே அனுபவிக்கின்றனர். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக வளர்ச்சியடைகின்றனர். ஏழைகள் பரம ஏழைகளாக வீழ்ச்சியடைகின்றனர்...’’ - என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. மட்டுமல்ல, ‘‘கடந்த வருடம் இந்தியா உருவாக்கிய 73% சொத்துகள், மொத்த மக்கள் தொகையில் 1% மட்டுமே உள்ள பணக்காரர்களிடம்தான் உள்ளது...’’ என்று இந்தியாவின் பொருளாதார நிலையை அம்பலப்படுத்துகிறது பிரபல ஆய்வு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம். ‘‘சமநிலையற்ற வருவாய்தான் இந்தியாவின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது...’’ என்கின்றனர் நிபுணர்கள்.

கவிதைப் பெண்!
‘முகமூடி’ கதாநாயகி பூஜா ஹெக்டேவை நினைவிருக்கிறதா? இப்போது அவர் இந்தி, தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். விஷயம் அதுவல்ல. பூஜாவிற்கு கவிதைகள் மீது திடீர் காதல் பிறந்திருக்கிறது! சமீபத்தில் கலீல் ஜிப்ரானின் கவிதை ஒன்றை வாசித்தவர், தொடர்ந்து அவரது கவிதைகளை வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘‘அழகு என்பது முகத்தில் தெரிவதல்ல; அது இதயத்தில் தெரிவது...’’ என்ற கவிதை வரிகளில் இம்ப்ரஸ்ஸாகி அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் தட்டிவிட, ஒரு லட்சம் பேர் பூஜாவைப் பார்த்தும், கவிதையைப் படித்தும் வைரலாக்கிவிட்டனர்.

விடுப்புக் கடிதம்
பாகிஸ்தானில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் பாடங்களைப் பாட்டாக பாடுவதன் மூலம் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சுட்டியான சிறுவன் ஒருவன் தலைமையாசிரியர் முன் விடுப்புக் கடிதத்தைப் பாட்டாகப் பாடுகிறான். விடுப்புக் கடிதத்தில் உள்ள புள்ளி, கமா உள்ளிட்ட நிறுத்தற்குறிகளையும் சேர்த்து அவன் பாடியுள்ளதுதான் ஹைலைட். அந்தப் பாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. அச்சிறுவன் உண்மையிலுமே விடுப்புதான் கேட்கிறான் என்று நம்பி, ‘‘தயவுசெய்து அந்த சுட்டிப் பையனுக்கு லீவ் கொடுங்கள்...’’ என்று நெட்டிசன்கள் கமெண்ட்டுகிறார்கள்.

செல்ஃபி பிரியர்களுக்கான போன்
உலகளவில் கடந்த வருடம் அதிகம் விற்ற ஸ்மார்ட்போன்கள் வரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது ‘ஹூவாய்’.இதன் சமீபத்திய வரவுதான் ‘Huawei Honor 9 Lite’. பொதுவாக மற்ற நிறுவனங்கள் புதிய மொபைலை சீனாவில் அறிமுகப்படுத்திய பிறகு, இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்துதான் இந்தியாவிற்குக் கொண்டுவரும். ஆனால், ‘ஹூவாய்’ தாமதப்படுத்தாமல் ஒரு மாதத்துக்குள்ளாகவே இங்கே அறிமுகப்படுத்தியிருக்கிறது. 5.65 இன்ச் ஸ்கிரீன் சைஸுடன் 1080 x 2160 பிக்ஸல் டிஸ்ப்ளேயை உள்ளடக்கியது இந்த போன். முன்புற, பின்புற கேமரா 13 எம்பி. செல்ஃபி ரசிகர்களுக்கு ஏற்ற வசதியான மொபைல் இது. இணையத்தில் இதன் விலை ரூ.10,999 முதல் ஆரம்பிக்கிறது.

ஆப்தேவின் அக்கறை
ராதிகா ஆப்தே, பாலிவுட்டில் அக்‌ஷய்குமாருடன் நடித்த ‘Pad Man’ இம்மாதம் ரிலீஸ் என்பதால், மும்பையில் அதன் புரொமோஷனில் பரபரக்கிறார். கடந்த நியூ இயர் அன்று பிகினி காஸ்ட்யூமில் புத்தாண்டு வாழ்த்தை இன்ஸ்டா பக்கத்தில் குளுகுளுவென சொன்னவர், இப்போது சமூக சேவையிலும் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கிறார். கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ஆப்தே, ‘I’m a woman and my life matters. And so does the life of every woman in this country...’ என்று டுவிட்டியும் இருக்கிறார் அக்கறையாக!  

- குங்குமம் டீம்