ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 62

மூடநம்பிக்கைக்கு எதிராக சின்னக்குத்தூசி எழுதும் கட்டுரைகளில் குறும்பும் கேலியும் கொப்பளிக்கும். விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட போதிலும் இன்னமும் ஜோதிடம், ஜாதகம், எண் கணிதம் என்பதில் மக்கள் காட்டிவரும் ஆர்வத்தை அவர் ஒருபோதும் ஆதரித்ததில்லை. 96ல் ‘தலைவர்களை ஏமாற்றும் ஜோதிடப்புலிகள்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் இருந்த ஜோதிடப்புலி சிவானந்த சிவயோகி ராஜேந்திரா என்பவரைப் பற்றிய கட்டுரை அது. அந்த சாமியார் வைத்திருந்த மடத்திற்குப் பெயர் ‘கோடி மடம்’.

150 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மடத்தில் வாழ்ந்த சாமியார் ஒருவர் எழுதி வைத்துவிட்டுப் போன ஓலைச்சுவடியிலிருந்து எதிர்காலத்தை கணித்துத் தருவதாகச் சிவயோகி அளந்த கதையை நம்பி, இந்தியாவிலுள்ள பெரிய தலைவர்களெல்லாம் அந்த சாமியாரைச் சந்தித்து ஆசியும் அறிவுரையும் பெறக் காத்துக்கிடந்திருக்கிறார்கள்.‘‘தன்னிடமுள்ள கிரந்த புத்தகத்தில் எதிர்கால அரசியல் நிகழ்வுகளும் எழுதப்பட்டுள்ளன...’’ என்ற அவர், வாய்க்கு வந்ததையெல்லாம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.‘கோடி மடம்’, அகில இந்தியாவையும் ஆட்டிப்படைத்திருக்கிறது. நரசிம்மராவும் இந்திராகாந்தியும்கூட அவரிடம் ஆலோசனை பெறுவதாக பத்திரிகைகளும் தம் பங்குக்குப் புரளியைக் கிளப்பிவிட, சாமியாரின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.

‘நடக்கப்போவதை முன்கூட்டியே தெரிவித்துவிடுகிறார்’ என்று புகழப்பட்ட அந்த சாமியார் தனக்குக் கிடைத்த திடீர் வாழ்வால் கோடியில் புரண்டிருக்கிறார். ‘கோடி மடம்’ எனும் பெயருடைய அம்மடத்தில் கோடிக்கணக்கில் பணம் குவிந்திருப்பதை வருமான வரித்துறை மோப்பம் பிடித்திருக்கிறது. அந்நிலையில், திடீரென்று ஒருநாள் அச்சாமியாரிடம் விசாரிக்க வருமான வரித்துறையினர் வந்திருக்கிறார்கள். யார் யாரையோ விசாரித்து அவர்களுக்கு நடக்க இருப்பதைக் கணித்த சாமியார், தனக்கு நடக்கப்போவது என்ன எனத் தெரியாமல் இருந்திருக்கிறார். இந்தச் சம்பவத்தை சின்னக் குத்தூசி, குறும்பும் எள்ளலும் தொனிக்க அக்கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

‘‘எமர்ஜென்சியைக் கொண்டுவந்த இந்திராகாந்திக்கே ஆலோசனை சொல்வதாகக் கூறிய ஜோதிடப்புலி, இந்திராகாந்தி இறுதியில் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாவார் என்பதை ஏன் சொல்லவில்லை..?’’ என்றும் அக்கட்டுரையில் கேட்டிருக்கிறார்.‘‘ஒருவேளை கிரந்தப் புத்தகத்தில் அத்தகவல் இடம்பெற்றிருந்தால் அந்த உண்மையை மறைத்த குற்றத்திற்காக அவரையும் கைது செய்யலாம் தானே..?’’ என்னும் விதத்தில் அக்கட்டுரை போகும். “கைலாச மலர் வாடும். பஞ்சரத்தினக் கிளி பறந்துபோகும். நாலாத் திசையிலும் குழப்பம் மேலோங்கும். மொட்டு விரியும். முத்துக்கள் உடையும்...” என்று கிரந்தப் புத்தகத்தில் இருப்பதாக நரசிம்மராவிடம் சிவயோகி சொன்னதாக ஒரு தகவல்.

 “கைலாச மலர் வாடும் என்றால் காங்கிரஸ் தோற்கும் என்றும், பஞ்சரத்தினக் கிளி பறந்துபோகும் என்றால் இந்தியாவுக்கு ஆபத்துவரும் என்றும், மொட்டு விரியும் என்றால் தாமரை ஆட்சிக்கு வரும் என்றும், முத்தாரம் உடையும் என்றால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத குழப்ப நிலை...’’ என்றும் சாமியார் நரசிம்மராவிடம் சொல்லியிருக்கிறார். அறிவுக்குப் பொருந்தாமல் அவர் சொன்னது ஒன்றுகூட நடக்கவில்லை. இருந்தும், அதுவெல்லாம் நடக்குமென்று நம்பிய நரசிம்மாராவ் போன்ற தலைவர்களின் தகுதியை சின்னக் குத்தூசி அக்கட்டுரையில் சந்தேகித்திருக்கிறார்.

‘‘சாதாரண மனிதர்களை ஏமாற்றினால் மோசடி சட்டத்தில் உள்ளே தள்ளும் அரசு, பெரும் பெரும் தலைவர்களை ஏமாற்றும் சாமியார்களின் காலடியில் விழுந்து கிடக்கிறதே...’’ என்றும் அக்கட்டுரையில் கவலைப்பட்டிருப்பார். அதேபோல, சின்னக்குத்தூசியும் பத்திரிகையாளர் ஞாநியும் இணைந்து, காஞ்சி காமகோடி பீடாதிபதியை எடுத்த நேர்காணல் நூல் இன்றும் பலரால் வாசிக்கப்பட்டு வருகிறது. ஆன்மிக வியாபாரத்தைச் செய்துவரும் சாமியார்களின் போலி முகத்தைத் தோலுரிப்பது என்றால் அவருக்கு அப்படியொரு ஆனந்தம் இருந்திருக்கிறது. திருச்சியில் பெரியார் நடத்தி வந்த ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் பயின்ற சின்னக் குத்தூசி, இறுதிநாள்வரை பெரியாரின் சமூகப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியராகவே தன்னைத் தகவமைத்திருக்கிறார்.

சமையல்வேலை செய்துவந்த தந்தைக்கும் வீட்டுவேலை செய்துவந்த தாய்க்கும் மகனாகப் பிறந்த அவருக்கு, சொந்த வீடோ அந்த வீட்டில் சமையல் செய்து உண்ணும் வாய்ப்போ இல்லாமல் போனதுதான் இயற்கையின் முரண். அவருடைய நெடிய வாழ்வில் காலத்திற்கேற்ப கருத்துகளையும் பாதைகளையும் மாற்றிக்கொண்ட எத்தனையோ அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறார். காமராஜரை ஒழிக்க ராஜாஜி தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்ததையும், அதே ராஜாஜி, தி.மு.க.வை தோற்கடிக்க ‘‘நானும் காமராஜரும் வேறு வேறு அல்ல...’’ என்றதையும் ஒரு மாதிரியாக சின்னக் குத்தூசி பார்த்திருக்க வாய்ப்பில்லை. அண்ணாவைப் புகழ்ந்த கண்ணதாசன் ஒருகட்டத்தில் காமராஜருக்காக அண்ணாவை ஏசியதையும், அதே கண்ணதாசன் காமராஜரை ‘சோஷலிச விரோதி’ என்றதையும் காலத்தின் விளையாட்டென்று அவர் கருதியிருக்கலாம்.

கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நிகழ்ந்த உறவையும் பிணக்கையும் அண்ணாவுக்கும் பெரியாருக்கும் நடுவிலே இருந்த முரண்பாட்டையும் அருகிலிருந்து பார்க்கக்கூடிய அசந்தர்ப்பம் சின்னக்குத்தூசிக்குக் கிடைத்திருக்கிறது. மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் அவ்வப்போது அலசி ஆராய்ந்துவந்த சின்னக் குத்தூசி, ஒரே நிலையில் தன்னை இருத்திக்கொள்ள திராவிடத்தைக் கொழுக் கொம்பாகப் பற்றியிருக்கிறார். இல்லையென்றால், அவருமே ‘அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை’ என்ற வழமையான சமரசத்திற்கு ஆட்பட நேர்ந்திருக்கும். சின்னக்குத்தூசியின் சலனமற்ற மனநிலை சகல நிலைகளையும் தாண்டி மேலெழும்பும் சக்தியைக் கொடுத்திருக்கிறது.

தம்முடைய தடத்தை அழித்துக்கொண்டு சமூகப் பாதையில் பயணிப்பவர்கள் இன்றைக்கு எத்தனைபேர் என்பது கேள்விக்குறி. பல பத்தாண்டுகளில் ஒரு துருவத்திலிருந்து இன்னொரு துருவத்திற்கு நகர்ந்துவிடுபவர்கள் உண்டு. ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட்டாக தன்னை அறிவித்துக்கொண்ட எழுத்தாளர் ஜெயகாந்தன், கம்யூனிஸ்ட்டுகள் அப்போது தீவிரமாக எதிர்த்துவந்த காங்கிரஸில் போய்ச் சேர்ந்தார். சுதந்திரச் சிந்தனையுடைய அவர் அதற்கான காரணங்களையும் நியாயங்களையும் பல மேடைகளில் விளக்கியிருக்கிறார். கூடுதலாக ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்னும் நூலில் எழுதியுமிருக்கிறார்.

ஆனாலும்கூட, அவரை அணுகுவதில் பலருக்கும் சிரமம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வார் எனத் தெரியாததால் பெரிய பெரிய அரசியல் தலைவர்கள்கூட அவரிடம் ஜாக்கிரதையைக் கடைப்பிடித்திருக்கிறார்கள். அப்படியான ஜெயகாந்தனிடம் சின்னக்குத்தூசி அறிமுகமான விதம் சுவாரஸ்யமானது. ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்குமுன்பு, அப்போதைய திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அமைந்திருந்த ‘ஸ்டார் பிரசுரம்’ அலுவலகத்தில் ஜெயகாந்தன் இருந்திருக்கிறார். அச்சாக இருந்த தன்னுடைய நாவலுக்கு மெய்ப்புத் திருத்திக்கொண்டிருந்த அவரிடமே, “ஜெயகாந்தனைச் சந்திக்க வேண்டும்...” என்றிருக்கிறார் சின்னக்குத்தூசி. சற்றே மிடுக்கான தோரணையில் தலை நிமிர்ந்திருக்கிறார், ஜெயகாந்தன்.

வந்திருப்பவர் யாரென்று தெரியாததாலும், மெய்ப்பு திருத்தும் பணியை முடிக்காததாலும் கோபத்துடன், “நான்தான் ஜெயகாந்தன். என்னவேண்டும்..?” என்று கேட்டிருக்கிறார். உடனே சின்னக்குத்தூசி, ‘‘அப்பாத்துரையாருக்காக நன்றி சொல்ல வந்தேன்...” என்றிருக்கிறார். “அப்பாத்துரையாருக்கு நன்றி சொல்ல ஏன் என்னிடம் வந்தீர்கள்..?” என்கிறார் ஜெயகாந்தன்.“தமிழ் எழுத்தாளர் சங்கத் தேர்தலில் ‘பன்மொழிப் புலவர்’ கா.அப்பாத்துரையார் வெற்றி பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்து நின்ற பிரபல விமர்சகர் க.நா.சுப்ரமணியமே ஜெயிப்பார் என்றே திராவிட இயக்கத்தைச் சேர்ந்த நாங்களும் நினைத்திருந்தோம். ஆனால், நீங்களும் அத்தேர்தலில் போட்டியிட்டதால் வாக்குகள் பிரிபட்டு, ஒரு வாக்கில் அப்பாத்துரையார் ஜெயித்திருக்கிறார்.

நீங்கள் போட்டியிடாது போயிருந்தால் எங்களுக்குத் தோல்வியே கிடைத்திருக்கும். எனவேதான், அப்பாத்துரையாரின் வெற்றிக்கு மறைமுகமாக உதவி செய்த உங்களுக்கு நன்றி தெரிவிக்க வந்திருக்கிறேன்...” என்றதும் ஜெயகாந்தன் குஷியாகி மெய்ப்பு திருத்தும் பணியை அப்படியே விட்டுவிட்டு, “காஃபி குடிக்கப் போவோமா...” என்று சின்னக்குத்தூசியுடன் கிளம்பியிருக்கிறார். அதன்பின் ‘வைத்தா அய்யர்’ கடையில் கதம்ப பஜ்ஜியைப் பற்றியும் ஓலை பக்கோடாவைப் பற்றியும் இருவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்ததைச் சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம்.

ஜெயகாந்தனின் அறிமுகத்திற்குப் பிறகுதான் சின்னக்குத்தூசி ‘சொல்லின் செல்வர்’ ஈ.வெ.கி.சம்பத் நடத்தி வந்த ‘தமிழ்ச்செய்தி’யில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஜெயகாந்தனின் சிபாரிசினால் என்று புரிந்துகொள்ள வேண்டாம். ‘தமிழ்ச்செய்தி’யில் வேலைக்குச் சேர்ந்ததால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஜெயகாந்தனைச் சந்திக்கும் வாய்ப்பு சின்னக்குத்தூசிக்கு அடிக்கடி கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தனின் மடத்தையும் அம்மடத்திற்கு வரும் ஆளுமைகளையும் சின்னக்குத்தூசி ‘சத்தியத்துக்கு ஞானபீடம்’ எனும் கட்டுரையில் விவரித்திருக்கிறார். பழகப் பழக ஜெயகாந்தனும் சின்னக்குத்தூசியும் நெருங்கிய தோழர்களாக மாறியிருக்கிறார்கள்.

“பிராமணர் பிராமணரல்லாதார் பிரச்னையை எல்லாம் என்னிடம் கொண்டு வராதீர்கள்...” என்று தொடக்கத்தில் சின்னக் குத்தூசியைக் கடிந்துகொண்ட ஜெயகாந்தன், ஒரு கட்டத்தில் அவரது அழைப்பை ஏற்று தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். அதுவரை அரசியல் கட்சி மேடைகளில் ஜெயகாந்தன் கலந்துகொண்டதில்லை. அரசியல் பேசும் இலக்கியவாதியாக இருந்திருக்கிறாரே தவிர, அரசியல் கட்சி மேடையில், அதுவும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசியிருக்கவில்லை. காமராஜரின் வேண்டுகோளுக்கிணங்க ஜெயகாந்தனை அழைக்கச் சொன்னது ஈ.வெ.கி.சம்பத் என்பதுகூட ஜெயகாந்தனுக்கே பின்னால்தான் தெரிந்திருக்கிறது. முன்கூட்டியே திட்டமிட்டு ஒருவரை அணுகவும், அவருடைய நன்மதிப்பைப் பெறவும் சின்னக் குத்தூசி முயன்றதில்லை.

இயல்பாகவே அவரை எவருக்கும் பிடித்திருக்கிறது. பிறர் மனம் கோணாமல் நடந்துகொள்வது அவர் இயல்புகளில் ஒன்று. இரத்த உறவென்று சொல்லிக் கொள்ள ஒருவரும் இல்லாத நிலையில், வயது வித்தியாசமில்லாமல் பலரும் அவரைக் கொண்டாடியது அந்த இயல்பால்தான். ஒரு மகனுக்கும் மேலாக அவரைக் கவனித்துக்கொண்ட அண்ணன் ‘நக்கீரன்’ கோபால், சின்னக்குத்தூசியின் கைபிடித்து நடந்தவர். உடல் உபாதையில் துடித்தழுத வேளையிலெல்லாம் அவருக்கு ஆறுதல் சொல்லவும், அவர் வலியை தமதாக்கிக் கொள்ளவும் ஏராளமான பத்திரிகையாளர்கள் சின்னக்குத்தூசியைச் சூழ்ந்திருந்தார்கள். உடன் இருப்பவர்களுக்கு தொந்தரவு தருவதாக நினைத்துக்கொண்டு, தன்னைக் கருணைக்கொலை செய்துவிடச் சொல்லி அவர் கெஞ்சியதை, பிரதிபா லெனினும், ஜெயசுதா காமராஜும் தங்கள் அஞ்சலிக் கட்டுரைகளில் எழுதியிருக்கிறார்கள்.

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் அவர் பற்றிய நினைவுகளைப் பகிரும்பொழுது, “அவர் மட்டும் சார்பு நிலை இல்லாத பத்திரிகையாளராய் இருந்திருப்பாரேயானால் இந்த நாடும் தன்னைப்போன்ற பத்திரிகையாளர்களும் கூடுதலாகப் பலனடைந்திருப்போம். சார்பு நிலை காரணமாக அவர் பேசாமல் தவிர்த்த உண்மைகள், கருத்துகள், சம்பவங்கள் விலைமதிப்பற்றவை...” என்றிருக்கிறார். அது அவருடைய ஆதங்கம் மட்டுமில்லை. சின்னக்குத்தூசியை இன்னமுமே தங்கள் இதயத்தில் சுமந்துகொண்டிருக்கும் பலபேருடைய ஆதங்கமும் அதுதான். நடுநிலை என்பதில் நம்பிக்கையில்லாத யாரையும் காலம் கடைசியில் கொண்டுவந்து நிறுத்தும் இடம் இதுதானோ? ஒவ்வொரு துறையிலும் ஒருசிலரே விமர்சனமாகவும் உதாரணமாகவும் மாறுகிறார்கள்.

சின்னச் சின்ன சமரசங்கள் செய்தாவது வாழ்வை நடத்தும் கட்டாயத்திலிருக்கும் நமக்கு, ஒருவர் இறுதிவரை சமரசமில்லாமல் வைராக்கியத்தோடு வாழ்ந்தார் என்பதைக் கேட்க ஆச்சர்யம் ஏற்படுகிறது. ‘எல்லாமே மாறுதலுக்குட்பட்டதுதான்’ என மார்க்சியவாதிகள் கூறினாலும், அறமும் விழுமியங்களும் மாறுவதேயில்லை. அறத்துடன் வாழ்ந்து மறைந்த சின்னக்குத்தூசி கருத்துகளால் விமர்சிக்கப்பட்டாலும், காலங்களால் கெளரவிக்கவேபடுவார். இப்பொழுதும் சின்னக்குத்தூசி வசித்து வந்த திருவல்லிக்கேணி வல்லப அக்ரஹாரத் தெருவைக் கடந்து செல்கையில், ஒரு மாபெரும் இயக்கத்தின் நினைவுத் தடத்தைப் பார்க்கமுடிகிறது. தடங்கள் அங்கேயே நின்றுவிடுகின்றன. கால்களே பயணிக்கின்றன.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்