உலகம் சுற்றலாம் வாங்க..!



பட்ஜெட் டூர் - ஸ்பெஷல் ரவுண்ட் அப்

‘எந்நேரமும் வேலை... வேலை. எங்காவது ஓடிப்போகணும் போல இருக்கு. கண்ணுக்குக் குளிர்ச்சியா, மனசுக்கு மகிழ்ச்சியா, பர்ஸுக்கும் பட்ஜெட்டா ஏதாவது ஸ்பாட் இருந்தா சொல்லுங்களேன்?’ இப்படி கேட்கும் பட்ஜெட் பத்மநாபன்களுக்காகவே இயற்கை சில அற்புதமான இடங்களை உருவாக்கியுள்ளது. டூர் எல்லாம் சம்மரில்தான் போக வேண்டும் என்று யார் சொன்னது? இந்தக் கட்டுரையைப் படித்ததும் அடித்துப் பிடித்து அங்கு செல்ல வேண்டுமென நினைப்பீர்கள். ஃபீல் ஃப்ரெஷ் என நம் மனதை நிறைத்து, உணர்வைப் புதுப்பிக்கும் இந்த இடங்களுக்குச் சென்றுவந்தால் பணியிடத்தில் கிரியேட்டிவிட்டி ரேட்டிங் குப்பென்று மேல் ஏறும்!

இல்கா கிராண்டே, பிரேசில் (Brazil, Ilha Grande Island)
அட்லாண்டிக் மழைக் காடுகளின் பொக்கிஷமான அரிய பறவைகள், பவளப் பாறைகளைக் கொண்ட தீவு இல்கா கிராண்டே. இந்தத் தீவில் 62.5% மாநில பூங்காதான். ஆர்கா உள்ளிட்ட சுறா, டால்பின் மீன்கள் அதிகம் வாழும் பகுதி இது. 87% பாதுகாக்கப்பட்ட தீவுப் பகுதியில் அருவிகள், அமைதியான பீச்சுகள் என மனதை நெகிழ்த்தும்.

ஹைலைட்ஸ்: அருவிகள், மலைத்தொடர்கள், கடற்கரைகள் என சுற்றிப்பார்க்க அலுக்காத இடம். கார், ஏடிஎம், மின்சாரம், செல்போன் என எந்த வசதிகளும் இல்லாத இடம் என்பதால் உங்களின் டென்ஷன் உடனே குறையும்.
பட்ஜெட்: ரூ.1,00,366 (ஓர் இரவுக்கு).
ரூட்: ரியோ டி ஜெனிரோவிலிருந்து ஆங்க்ரா டாஸ் ரெய்ஸ்க்கு இரண்டு மணிநேர பயணம். பின் படகில் ஏறினால் தீவை அடையலாம்.

பிரதர் தீவு, பிலிப்பைன்ஸ் (Philippines, Brothers Island)
பிலிப்பைன்ஸ் ட்ரிப்பை மறக்க முடியாததாக மாற்றுவது இதன் வைர மணல்வெளி பீச்களும், நீலநிற கடல்நீரும்தான். எல்நிடோவில் அமைந்துள்ள பிரதர் தீவு, எரிமலை லாவாவில் உருவான பாறைகளால் சூழப்பட்டுள்ளது சிறப்பு.

பட்ஜெட்: ரூ.19,527 (ஓர் இரவுக்கு).
ரூட்: மணிலாவிலிருந்து சென்ட்ரல் பலவான் செல்லலாம். அங்கிருந்து 6 மணிநேரம் பயணித்து எல்நிடோ சென்று படகு பிடித்தால் 2 மணிநேரத்தில் பிரதர் தீவு உங்களுக்கு வெல்கம் சொல்லும்.

பறவைத்தீவு, சீசெல்ஸ் (Bird Island, Seychelles) 
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சீசெல்ஸில் 5 கி.மீ.நீள அமேஸிங் பீச் உங்கள் மனதுக்கு சிறகு முளைக்கச்செய்யும். மொத்தம் 115 தீவுகளைக் கொண்டுள்ள காம்போ தேசம் இது. அல்டாபிரான் ஆமைகள், குளங்களில் உள்ள டால்பின்கள், மண்டாரே மீன்கள் என குஷியாக ஃபேமிலி, நண்பர்களோடு கண்டு ரசித்து, ஆடிப்பாடுவதற்கு ஏற்ற அசத்தல் ஸ்பாட் இது.

ஹைலைட்ஸ்: மாஹே தீவிலிருந்து 105 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள பறவைத் தீவின் பவளப் பாறைகளுக்கு வயது ஜஸ்ட் 1,25,000 ஆண்டுகள்தான்! சிவப்பு நிற பவளப் பாறைகள் 5 கி.மீ., பீச்சில் 25 ஏக்கரில் பரவியுள்ளன. மே - அக்டோபர் சீசன் டைமில் பறவையியலாளர்கள் பைனாகுலரோடு வந்தால் 20க்கும் மேற்பட்ட அரிய பறவைகளைக் காணலாம். அல்டாபிரான் இனத்தின் மெகா சைஸ் ஆமையான எஸ்மெரால்டா வசிப்பது இந்த பறவைத் தீவில்தான்.
பட்ஜெட்: ரூ.27,000 (இருவர் ஓர் இரவுக்குத் தங்க).
ரூட்: மாஹே ஏர்போர்ட்டிலிருந்து விமான வசதி உண்டு.

வெஸ்டராய், நார்வே (Vesteroy  Island)
நார்வே நாட்டின் வாலர் தீவுக் கூட்டங்களில் உள்ள வெஸ்டராய் தீவு, நதி சூழ்ந்த மலை நிலம். இங்குள்ள சிறிய காட்டேஜ்களில் நாட்களை ஜாலியாக செலவு செய்யலாம். பசித்தால் படகில் துடுப்பைச் சுழற்றி காய்கறிகளை வாங்கி வந்து யாரின் தொந்தரவும் இன்றி ஜாலியாகச் சமைத்து, நிதானமாக உண்டு ரிலாக்ஸாக பொழுதைப் போக்கலாம்! 

ஹைலைட்ஸ்: மூன்று இயற்கைக் காடுகளைக் கொண்டுள்ள தீவு இது. மலைப்பகுதி, அதில் வீடு என்று அமைந்துள்ள வெஸ்டராய் தீவை நடந்து விசிட் செய்வது புதிய அனுபவம். Skjellsbuveten, BankerØdkollen ஆகிய மலைகள் பரபர த்ரில்லைத் தருகின்றன. சதுப்புநிலக் காடான Guttormsvauen, Lerdalen, Ilemyr ஆகியவற்றில் படகில் சென்று மீன் பிடிப்பதற்கான இடங்கள் அநேகம்.
பட்ஜெட்: ரூ.15,132 (ஓர் இரவுக்கு).
ரூட்: ஆஸ்லோ நகரிலிருந்து வாலருக்கு பஸ் அல்லது ஆஸ்லோ - ஃப்ரெட்ரிக்சாட் நகர் வரை ட்ரெயினில் பயணித்து, அங்கிருந்து வாலர் நகருக்கு பஸ் பிடிக்கலாம்.

போரா தீவு, குரோஷியா (Croatia, Bora Island)
கிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியா, அட்ரியாட்டிக் கடல்புறமாக அமைந்த நாடு. 1833ம் ஆண்டு கட்டப்பட்ட லைட் ஹவுஸைக் கொண்டுள்ள சிறிய தீவுதான் போரா. இதனை சில நிமிடங்களிலேயே காலார நடந்து பார்த்துவிடலாம். ஆனால், இங்கிருந்து சூரிய உதயம், அஸ்தமனம் பார்ப்பது பரவசமான அனுபவம். பிரிமன்துரா நகரிலிருந்து 2.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தீவு இது.

ஹைலைட்ஸ்: உறுதியான கல் வீட்டில் ஜாலியாகத் தங்கலாம். 35 மீட்டர் லைட்ஹவுஸ் தனி வசீகரம். இங்குள்ள வீட்டில் எட்டுப்பேர் தாராளமாகத் தங்கலாம். 
பட்ஜெட்: ரூ.11,600 (ஓர் இரவுக்கு).
ரூட்: புலாவிலிருந்து பிரிமன்துராவுக்கு பஸ் பிடித்து, பிரிமன்துராவில் படகு எடுத்து துடுப்பு போட்டால் 25 நிமிஷங்களில் தீவுக்கு வந்துவிடலாம்.       

- ச.அன்பரசு