அமீர் மஹால்அறிந்த இடம் அறியாத விஷயம்

‘‘ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜகுல திலக, ராஜ குலோத்துங்க, ராஜ பராக்கிரம...’’ என முழக்கங்கள் ஒலிக்க, தனது சகாக்களுடன் திவான் நவாப்ஷாடா முகமது ஆசிப் அலி வருவார் எனக் காத்திருந்தோம். கிடைத்த இடைவெளியில் அரண்மனையை ஒரு ரவுண்ட் அடித்தோம். எங்கே? ராயப்பேட்டை பாரதி சாலையில் வீற்றிருக்கும் ‘அமீர் மஹாலி’ல். ஆற்காடு நவாப்கள் பற்றி படித்திருப்பீர்கள். ஒரு காலத்தில் தென்னிந்தியா முழுவதையும் ஆண்டவர்கள். அவர்களின் வாரிசுகள்தான் இப்போது அமீர் மஹாலில் வசிக்கிறார்கள். ஆனால், நவாப்கள் என்றில்லாமல் ‘ஆற்காடு இளவரசர்கள்’ என்கிற பெயரில். மஹாலின் அழகை வெளி உலகுக்குக் காண்பிக்கும் இரண்டு சிகப்பு நிற கோபுரங்கள் கொண்ட பெரிய நுழைவாயில்.

கோபுரத்தின் உச்சியில் பிறைநிலா டிசைன் அழகு. நடுவில் இரண்டு கோபுரங்களையும் இணைக்கும் மரத்தாலான அறை. அதன் மேலே பறக்கிறது நம் தேசியக் கொடி.‘‘ஆர் வேணும் சார்..?’’ நுழைவாயிலில் நின்றிருந்த செக்யூரிட்டி தடுமாறுகிற தமிழில் கேட்டார்.‘‘ஆசிப் அலி சாரைப் பார்க்கணும். அனுமதி வாங்கியாச்சு...’’ என்றதும், வலதுபக்கமாக போகும்படி கைகாட்டினார். மெல்ல நடந்தோம். வரிசையாக மரங்கள். குளுகுளுவென இருக்கிறது இடம். கொஞ்ச தூரத்தில் ஐந்தாறு பீரங்கிகள் கம்பீரமாக நிற்கின்றன. ஆங்கிலேயர்கள் ஆற்காடு இளவரசருக்கு பரிசாகக் கொடுத்தவை என்கிறது அதிலுள்ள குறிப்புகள்.

அங்கிருந்து மஹாலின் அழகுத்தோற்றம் ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. நுழைவாயிலில் இருந்த பெரிய போர்ட்டிகோவில் இரண்டு சொகுசு கார்கள் அடுத்தடுத்து நின்றிருந்தன. அங்கிருந்த ஒருவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும் நமக்காகவே காத்திருப்பது போல உள்ளே அழைத்துச் சென்றார். சிறிய வராண்டாவை அடுத்து நீண்ட வரவேற்பறை. பேரமைதி தவழ்கிறது. சாண்ட்லியர் விளக்குகளால் மஞ்சள் வெளிச்சம் பளீர் என்றிருந்தது. நடந்து செல்லும் வழியெங்கும் சிகப்புக் கம்பளம். தவிர, அமரும் இடங்களை வெவ்வேறு டிசைன்களாலான கம்பளங்கள் அலங்கரித்தன. அந்த அறை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பிரமாண்டமான தூண்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.

முதல் பகுதியின் இருபுறமும் சோபா செட்கள். அதனருகே கோர்ட்டில் இருப்பது போல சாட்சிக் கூண்டுகள். ஒருகாலத்தில் அரசர் முன் இந்த இடத்தில் வழக்குகள் நடந்துள்ளன. வலதுபக்க அறையில் இளவரசரின் அலுவலகமும், இடதுபக்கம் அவரின் தனி அறையும் உள்ளன. சுற்றிலும் புகைப்படங்கள். முன்னாள் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், கவர்னர்கள், முதல்வர்கள் அமீர் மஹாலுக்கு வந்தபோது எடுக்கப்பட்டவை. ஒரு சோபா செட்டில் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் திவானின் உதவியாளர் ஒருவர் நம்மை மாடிக்கு அழைத்துப் போனார். படிக்கட்டுகள் அருகே இரண்டு புறங்களிலும் இருந்த பல்லக்குகள் சிலிர்க்க வைத்தன.

படிகளில் மேலேற சினிமாக்களில் வருவது போல இருபுறமும் இரண்டு நீளத் துப்பாக்கிகளும், தூண்களில் மாட்டப்பட்டிருக்கும் கைத்துப்பாக்கிகளும் பயமுறுத்தின. துப்பாக்கிகளின் கீழே முன்னாள் பிரதமர் நேரு, பிரின்ஸ் உடன் நிற்கும் பழைய புகைப்படம். மேலேறினோம். இங்கேயும் நீண்ட அறை. தர்பார் ஹால். நடுவில் அரசருக்கான பீடம். சுற்றிலும் சோபாக்கள். மேற்கத்திய கம்பளங்களால் அறை நிறைந்திருக்கிறது. தவிர, நவாப்கள், இளவரசர்களின் ஓவியங்கள் சுவற்றில் மாட்டப்பட்டிருக்கின்றன. முதல் பத்தியில் குறிப்பிட்டபடி எந்த முழக்கமும் இல்லாமல் எளிமையாக வந்தார் திவான். நீல நிற குர்தாவில் மிடுக்காகத் தோற்றமளித்தவர், கனிவான குரலில் ‘‘சொல்லுங்க என்ன வேணும்..?’’ என்றார்.

‘‘அமீர் மஹால் பற்றி..?’’ என்றதும், மெல்லிய புன்னகையோடு ஆரம்பித்தார்.‘‘1690ல் முதல் நவாப் ஆஃப் கர்நாடிக் பட்டம் உருவாக்கப்படுது. ‘கர்நாடிக்’ என்பது தென்னிந்தியாவின் மிகப் பெரிய நிலப்பரப்பு. கிழக்கு மலைத் தொடர், மேற்கு மலைத் தொடர், கோரமண்டல் கடற்கரை முதல் ஆந்திராவின் குண்டூரிலிருந்து கன்னியாகுமரி வரை அது பரவியிருந்துச்சு. அதை நவாப்கள் ஆண்டாங்க. பல நல்ல விஷயங்களை மக்களுக்கு  செஞ்சாங்க. குறிப்பா, வாலாஜா நவாப் காலம் சிறப்பானதுனு சொல்லலாம். அந்நேரம், பிரிட்டிஷ் அரசின் வளர்ச்சி மேலோங்க நவாப்களின் எல்லா அதிகாரங்களையும் அவங்க எடுத்துக்கிட்டாங்க.

ஆனா, நவாப் என்கிற டைட்டில் மட்டும் அப்படியே தொடர்ந்துச்சு. 1855ல் 12வது நவாப்புக்குப் பிறகு வாரிசு இல்லை. அதனால, ‘Doctrine in Lapse’ சட்டப்படி நவாப் பதவியை அழிச்சிட்டாங்க. அப்புறம், அவரின் சித்தப்பா பிரிட்டிஷ் அரசுகிட்ட முறையிட்டதும், விக்டோரியா மகாராணி புதிய டைட்டில் தந்தாங்க. அதுதான் ‘பிரின்ஸ் ஆஃப் ஆற்காடு’...’’ என்றவர், ‘‘என்ன சாப்பிடுறீங்க..?’’ என்றார். அடுத்த சில நொடிகளில் கண்ணாடிக் கோப்பைகளில் ‘டீ’ தருவித்தவர், ‘‘நவாப்கள் எல்லோரும் சேப்பாக்கம் மாளிகையில்தான் வசிச்சாங்க. 120 ஏக்கர் கொண்ட பெரிய மாளிகை அது.

அதையும் பிரிட்டிஷ் அரசு எடுத்துடுச்சு. 1867ல் பிரின்ஸ் ஆஃப் ஆற்காடு உருவானதும் எங்களுக்கு அமீர் மஹால் பில்டிங் கொடுத்தாங்க. ஆசீம் ஜா முதல் இளவரசர். என்னுடைய ஃபாதர் எட்டாவது பிரின்ஸ் ஆஃப் ஆற்காடா இருக்கார். முஸ்லீம் ஆட்சியாளர்களா இருந்தாலும் பல கோயில் திருப்பணிகளை செய்திருக்காங்க. கிட்டத்தட்ட 350 கோயில்களுக்கு நிலங்களை தானமா கொடுத்திருக்காங்க. கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்துக்கு நவாப்தான் நிலம் கொடுத்தார். ஸ்ரீரங்கம் கோயில், அரசியல் போர் காரணமா இரண்டு படைகளால பாதிக்கப்பட்டுச்சு. பிறகு, அந்தக் கோயிலை நவாப் மறுசீரமைப்பு செஞ்சு நிறைய நிலங்களை தானமா கொடுத்தார்.

அங்க போனீங்கன்னா நவாப் தோட்டம் இருப்பதை இன்னைக்கும் பாக்கலாம். அதேபோல சர்ச், காலேஜ், ஸ்கூல் கட்ட இடங்கள் தந்திருக்கார். சென்னை அண்ணா சாலையிலுள்ள ‘மதராஸ-இ-ஆசம்’ பள்ளியை முதல்ல உருவாக்கியது நவாப்தான். அப்புறம்தான் அதை பிரிட்டிஷ்காரங்க நடத்தினாங்க...’’ என ஆசிப் அலி பழைய நினைவுகளைப் பகிரும் போது, அவர் மனைவி சீமா அகமது வந்து சேர்ந்தார். அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திவிட்டு, சுற்றிலும் இருந்த முன்னோர்களின் ஓவியங்களைப் பற்றி சிலாகித்தார்.‘இவர்தான் நவாப் வாலாஜா. வாலாஜா ரோடு, வாலாஜா நகரம்னு பல இடங்கள் இவர் பெயர்லதான் அமைஞ்சிருக்கு.

அப்புறம், இவர் நான்காவது பிரின்ஸ் ஆஃப் ஆற்காடு முகமது முனவர் கான் பகதூர். அவருடன் கன்னிமாரா பிரபு இருக்கார்...’’ என்றபடியே டைனிங் ஹால் பக்கமாக அழைத்துப் போனார். நூறு பேர் அமரும் பெரிய உணவறை. இங்குள்ள உணவருந்தும் தட்டுகள் பெல்ஜியத்திலிருந்து கொண்டுவரப்பட்டவை. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு கீழிறங்கினோம்.‘‘இந்தப் பல்லக்கை கல்யாணத்தின் போது பயன்படுத்துவோம். அப்புறம், பின்னாடி என்னுடைய தம்பிக்கான வீடு இருக்கு. அவர், சவுதியில பிசினஸ் பண்றார். அவர் பெயர் நவாப்ஷாடா முகமது நாசர் அலி. அவர் மனைவி ஆசியா ஜெநப். தம்பிக்கும் எனக்கும் மூணு மூணு கொழந்தைகள். எங்களுக்கு இன்னைக்கும் சவுதியுடன் தொடர்பு இருக்கு. மக்காவில் ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் வச்சிருக்கோம்.

இங்கிருந்து நிறையப்பேர் அங்க போய் தங்குவாங்க. மதம் சார்ந்து தனியா ஓர் அறக்கட்டளை நடத்திட்டு வர்றோம். தவிர, ‘ஆற்காடு ஃபவுண்டேஷன்’ மூலமும் நிறைய உதவிகள் செய்றோம். இதுல கல்வி, வயதானவர்களுக்கான ஹோம்னு ஆறு பிரிவுகள் இருக்கு. இதுவரை வீடு இல்லாத 1100 பேர்களை வெவ்வேறு ஹோம்ல சேர்த்திருக்கோம். வெள்ளப்பாதிப்பின்போது இங்கிருந்து 200 டன் உணவுப் பொருட்களை அனுப்பி வைச்சோம். அப்புறம், சென்னையில் தினமும் 10 ஆயிரம் பேர் ‘ஃப்ரஷ்’ உணவை வேஸ்ட் பண்றாங்கனு தெரிந்தது. அந்த உணவை வாங்கி அனாதை இல்லங்களுக்கு கொடுக்குறோம். ஸ்காலர்ஷிப்புக்கு யார் அணுகினாலும் உதவி செய்திட்டு வர்றோம்.

எங்களால முடிஞ்சதை மதச்சார்பற்று பண்ணிட்டு இருக்கோம். தொடர்ந்து பண்ணுவோம்...’’ என்றபடியே விடைகொடுத்தனர் திவானும் அவரது மனைவியும். அருகிலுள்ள தொழுகைக் கட்டடத்தைத் தாண்டி பின்னால் சென்றோம். அமீர் மஹாலில் பணிபுரிபவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகள். தவிர, மஹாலின் இன்னொரு ஓரத்திலும் வீடுகளைக் காணமுடிகிறது. இதனுள் அனைத்து மதத்தையும் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 600 பேர் வசிக்கின்றனர். மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் ஒரு குட்டிக் கிராமம் போல இருக்கிறது அந்த இடம்.


அமீர் மஹால் டேட்டா

18 ஏக்கரில் விரிந்து கிடக்கிறது மஹால். இதை பிரிட்டிஷ் கட்டடக்கலை வல்லுனர் ராபர்ட் சிஸ்ஹோல்ம் இந்தோ சாராசெனிக் முறையில் வடிவமைத்திருக்கிறார். இப்போது ‘பிரின்ஸ் ஆஃப் ஆற்காடு’ நவாப் முகமது அப்துல் அலி, மனைவி சயீதா பேகத்துடன் கீழ்த்தளத்தில் வசிக்கிறார். அவரின்அம்மா ஜீலானி பேகமும், மகன்களும், மருமகள்களும் உடன் இருக்கின்றனர்.
* திவான் ஆசிப் அலி சாஃப்ட்வேர் நிறுவனமும், பில்டர்ஸ் கம்பெனியும் நடத்துகிறார். கிரிக்கெட் பிரியர், க்விஸ் மாஸ்டர், மியூசிக் கம்போஸர் எனப் பன்முகத் திறன் கொண்டவர்.
* ஒரு சிறிய கிரிக்கெட் கிரவுண்டும் இங்குள்ளது.
* உணவில் தனித்துவம் மின்னுகிறது. டீ, பிரியாணி, ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுகளைத் தயாரிக்க தனித்தனியான ஸ்பெஷலிஸ்ட்கள் உள்ளனர். அசைவத்தில் எவ்வளவு செய்கிறார்களோ அதே அளவு சைவத்திலும் பின்னி எடுக்கிறார்கள். இதில், ஆற்காடு பிரியாணி ரொம்ப ஸ்பெஷல். இதனாலேயே ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் ‘ஆற்காடு நவாப் ஃபுட் ஃபெஸ்டிவல்’ நடத்துகின்றன.
* மட்டன், சிக்கன் மற்றும் கடல் வகை உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். மாட்டு இறைச்சிக்குத் அந்தக் காலத்திலிருந்தே மஹாலில் அனுமதி கிடையாது. அதேபோல், ஆல்கஹாலுக்கும் தடா.
* இன்றைக்கும் இந்திய அரசின் ஓய்வூதியம் பிரின்ஸ் ஆஃப் ஆற்காட்டுக்கு வருடந்தோறும் அளிக்கப்படுகிறது.
* இப்போது மஹாலின் பெரிய பழுதுகளை மத்திய அரசின் பொதுப் பணித்துறை பராமரிக்கிறது.

நவாப் வரலாறு
‘‘நவாப்களின் காலம் என 18ம் நூற்றாண்டை  சொல்லலாம். இவர்கள் 17ம் நூற்றாண்டின் இறுதியில் வந்தாலும் கூட 18ம் நூற்றாண்டில்தான் முழுவதும் வியாபித்து இருந்தார்கள். இவர்கள் முகலாயப் பிரதிநிதிகள். அவுரங்கசீப் தனது எல்லைகளை விரிவுபடுத்தும் பொருட்டு தன் பிரதிநிதியாக இவர்களைத் தென்பகுதிக்கு அனுப்பி வைத்தார். 1640ம் ஆண்டு பீஜப்பூர், கோல்கொண்டா சுல்தான்கள், விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தனர். சிறிது காலத்தில் அவ்விரு சுல்தான்களின் ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டு வந்தார் அவுரங்கசீப். அந்நேரம், மராட்டியர்கள் செஞ்சி பக்கமாக இடம் பெயர, அவர்களை அடிபணிய வைக்க ஒரு படையை அங்கே அனுப்பினார் அவுரங்கசீப்.

மராட்டியர்களை முற்றுகையிட்ட அந்தப் படை, ஆற்காடு பக்கமாக முகாம்கள் அமைத்து தங்கியது. சில வருடங்களில் அந்த முகாம்கள் நகர வடிவம் பெற, நவாப்பின் தலைநகராக ஆற்காடு மாறியது. அவுரங்கசீப் மரணத்திற்குப் பிறகு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. காலப்போக்கில் நவாப்கள் சுதந்திரமாகச் செயல்பட ஆரம்பித்தனர்...’’ என்கிறார் ஆற்காடு நவாப்களின் வரலாறுகள் பற்றி அறிந்தவரும், கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை நாள் அன்று வாலாஜா அரண்மனையிலிருந்து பாரம்பரிய நடைப்பயணம் நடத்தி வருபவருமான கோம்பை எஸ்.அன்வர்.

- பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்