டீ கடை பென்ச் தான் சமூகத்தின் கண்ணாடி!



‘‘சாமான்ய மக்கள் புழங்குகிற இடம் ‘டீக்கடை பென்ச்’. அங்கேதான் சமூகத்தின் அத்தனை அவலங்களும் முன்வைக்கப்பட்டு, தீர விசாரிக்கப்படுகின்றன. பொய்யும், மெய்யும் ஏதெனப் புரியாமல் உலவுகிற இடமும் அதுதான். அதிகமும் புறம்பேசிச் சிரிக்கிற செய்திகளும், அந்தரங்கங்களை வெளியே வைக்கிற இடமும் அதுவேதான். அங்கே நடக்கிற நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, சமூகம் சார்ந்த காதலை, காமெடி கலந்து சொல்லியிருக்கோம். அதிகமும் சாதாரண மக்களுக்கு நெருக்கமாக இருக்கிற படம்...’’ தனது ‘டீக்கடை பென்ச்’ படம் பற்றி சுவாரஸ்யமாக பேசத்தொடங்குகிறார் அறிமுக இயக்குநர் ராம் ஷேவா.

‘டீக்கடை பென்ச்’ என்பது அதிகம் புழக்கத்தில் இருக்கிற வார்த்தை. இதில் ஒரு சினிமாவிற்கான கதை இருந்ததா..?
சின்ன வயதிலிருந்தே நான் வியந்து, ஞாபகங்களையும், கேள்வி ஞானத்தையும், கத்துக்கிட்ட இடம். பெரும்பாலும் அங்கே போய் உட்கார்ந்து இருக்கிற ஆளை அவ்வளவாக யாரும் மதிக்கிறதில்லை. ‘வேலை வெட்டியில்லாமல் உட்கார்ந்திட்டு இருக்காங்க பாரு’ என்பதற்கு மேல் அதில் தெரிஞ்சுக்க எதுவும் இல்லைன்னு நினைப்பாங்க.

ஆனால், அது இல்லை உண்மை. எங்கேயோ நடந்த சம்பவம் கண்ணும், காதும் வச்ச மாதிரி ஒரு கதையா உருமாறுகிற அந்த இடத்தை நான் நிறைய தடவை கடந்து வந்திருக்கேன். யாரோ பேசின வார்த்தைகள், எங்கேயோ கசிந்த கண்ணீர், நண்பர்கள் அரட்டைகளில் பேசிச் சிரிச்ச காமெடி, ஓவர் உற்சாகத்தில் ஆடிப்பாடின பாட்டுனு எவ்வளவோ சந்தோஷமான விஷயங்கள் இருக்கு. நிச்சயமாக உண்மைக்கு நெருக்கமாக எதையும் சொல்லலை. இதுவே உண்மைதான். பாஸிட்டிவ்வாக இதிலிருந்து மேலே வந்த ஆட்களைப்பத்தி சொல்லியிருக்கேன்.

எப்படியிருக்கும் படம்..?
அருமையான காதலும் இருக்கு. யதார்த்தமான வாழ்க்கையும் இருக்கு. நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்துபோகிற ஒவ்வொரு எளிய மனிதனுக்குள்ளும் ஒரு கதை இருக்கு. அவனை இன்னும் கூர்ந்து பார்த்தால் அவனே ஹீரோ ஆகிடுவான். நான் வாழ்க்கையில் சந்தித்த பல சுவாரஸ்யமான கேரக்டர்களை இந்தப்படத்தில் வேறு வேறு கேரக்டர்களாக வைத்திருக்கிறேன். நம்ம எல்லைக்குள் இருந்தாலும், நம்ம கண்ணுக்குத் தட்டுப்படாத உணர்வுகளின் குவியல்தான் இந்த ‘டீக்கடை பென்ச்’.கமர்ஷியலாகவும், ரசனையாகவும், உண்மையாகவும் ஒரு வாழ்க்கையைச் சொன்னால் அதில் எல்லோரும் தன்னைப் பொருத்திப்பார்ப்பாங்க. அதுவே வெற்றிக்கு பக்கமான விஷயமாகக் கருதுகிறேன்.

ஹீரோ ராமகிருஷ்ணாவின் பரம்பரை சொத்து ஒன்றை நாயகி தருஷி தெரியாமல் எடுத்துக்கொண்டு போய்விடுகிறார். அதைப்பற்றி கேட்கப் போக மோதல். பின்பு அதுவே காதலாக மாறுகிறது. அப்புறம் ராமகிருஷ்ணா தலைமையில் நண்பர்கள் கூடி காதல் வலையில் வீழ்ந்துவிடக்கூடாது என்று சபதம் ஏற்று, அதன்படி வாழ்ந்து காட்டுவோம் எனத் தீர்மானிக்கிறார்கள். இதில் ராமகிருஷ்ணா மட்டும் காதலில் விழ, நட்பு வென்றதா, காதல் கைகூடியதா என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கேன்

இதில் ராமகிருஷ்ணா எப்படி..?
சேரனின் மாணவர் அவர். கிராமத்து வீச்சு, அந்த அழகு அவர்கிட்டே இயல்பாக இருக்கும். விளையாட்டுப் பையன் மாதிரியும், காதலுக்கு ஏற்ற மாதிரியும், துள்ளல் இளமையில் நன்றாகப் பொருந்தினார். அவருக்கு தருஷி இணையாக வருகிறார். இரண்டு பேருக்குமான ஒட்டுதல் படத்தில் அழகா வருது. உணர்வுக்கு உண்மையாக ஒரு படம் எடுத்திருக்கேன். மனசு விட்டு சிரிச்சா ஒரு துளி கண்ணீர் வரும்ல, அதுமாதிரி சில நெகிழ்ச்சியான இடங்களும் இருக்கு. எல்லாத்தையும் நகைச்சுவை கோட்டிங் போட்டுக் கொடுத்தால் சுவாரஸ்யமாக இங்கே ரசிப்பாங்க. அப்படியான முயற்சிதான் இந்த ‘டீக்கடை பென்ச்’. இந்தக்கதைக்கு எது உண்மையோ, எது நேர்மையோ... அவ்வளவுதான் படம்.

என் படம் என்னென்ன அனுபவங்களைத் தரணும்னு எனக்குள்ளே ஒரு கருத்திருக்கு. அதுக்கு தகுதியாக வந்திருக்கு இந்தப்படம். அருமையான பாடல்களாக ஸ்ரீசாய் தேவ் கொடுத்தார். அருமையான இடங்களைத் தேர்ந்தெடுத்து, சுயம் கெடாமல் வெங்கடேஸ்வர்ராவ் படம் பிடித்தார். தயாரிப்பில் தலையிடாமல், சுதந்திரமாக உலாவ வி.ஜே.ரெட்டி, எஸ்.செந்தில்குமார், என்.செந்தில்குமார் வழிவகை செய்தார்கள். எல்லாம் நல்லபடியாக அமைந்தால், நம் எண்ணங்களை நினைச்சபடி கொண்டுவர எந்த பிரச்னையும் இருக்காது. அப்படியே வந்திருக்கு படம். 

- நா.கதிர்வேலன்